வைக்கம், டிச.12 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (12.12.2024) கேரள மாநிலம், வைக்கத்தில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற “வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியார் நூற்றாண்டு நிறைவு விழா”-வில், புதுப்பிக்கப்பட்ட தந்தை பெரியார் நினைவகம் மற்றும் பெரியார் நூலகத்தை திறந்து வைத்தார்.
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், வைக்கத்திலுள்ள மகாதேவர் கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களிலும், கோவிலுக்கு எதிரே உள்ள தெருவிலும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஈழவர்கள், தீயர்கள், புலையர்கள் முதலான சமுதாயத்தினர் நடந்து செல்லவே கூடாது என்னும் கொடிய தடை இருந்தது. அந்தத் தடையை நீக்கக் கோரி 1924-ஆம் ஆண்டு வைக்கம் போராட்டம் நடைபெற்றது.
வைக்கம், கேரள மாநிலத்தின் அன்றைய திருவாங்கூர் சமஸ்தானத்தில் அடங்கியிருந்த நகரமாகும். அந்நகரிலுள்ள மகாதேவர் கோவிலைச் சுற்றி அரசு அலுவலகங்கள், நீதிமன்றம் எல்லாம் இருந்தன.
எதிர்த்து போராட்டம்
ஈழவர் சமுதாயத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் மாதவன் என்பவர் தீண்டத்தகாதவர் என்பதால், அந்த நீதிமன்றத்திற்குள் செல்ல முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டது. இதனை எதிர்த்து வழக்குரைஞர் மாதவன், கேசவ மேனன், டி.கே.மாதவன், பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப் முதலான பலர் போராடினார்கள்.
போராட்டம் நடத்திய அனைவரையும் திருவாங்கூர் சமஸ்தான காவல் துறையினர் கைது செய்தனர். அதனால், போராட்டம் நின்றுவிடும் சூழ்நிலை உருவானது. அப்போது இறுதியாக கைதாகிச் சிறை சென்ற பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப், கேசவ மேனன் ஆகியோர் கையெழுத்திட்டு அப்போது, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த தந்தை பெரியாருக்குக் கடிதம் எழுதி, வைக்கம் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்தி வெற்றி தேடித் தேர வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தனர். அந்தக் கடிதம் கிடைத்ததும், 13.04.1924 அன்று வைக்கம் நகருக்கு வந்த தந்தை பெரியாரால் போராட்டம் தீவிரம் அடைந்தது.
கடுங்காவல் தண்டனை
தந்தை பெரியார் அவர்கள் அனைத்து மக்களிடமும் வைக்கம் போராட்டம் குறித்து தமது சீர்திருத்த, சமூக நீதிக் கருத்துக்கள் மூலம் பிரச்சாரம் செய்ததால், போராட்டத்தில் பெருந்திரளான மக்கள் திரண்டதைக் கண்டு பொறுக்க முடியாத நிலையில், திருவாங்கூர் காவல் துறையினர் தந்தை பெரியாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். முதல் முறை 1 மாதமும், இரண்டாவது முறை 4 மாதமும் கடுங்காவல் தண்டனை வழங்கி, தந்தை பெரியார் சிறையில் அடைக்கப்பட்டார்.
வைக்கம் நகரைச் சுற்றியிருந்த கிராம மக்களும் திரண்டு தொடர்ந்து போராடியதால் திருவாங்கூர் சமஸ்தான அரசு பணிந்து, மகாதேவர் கோவில் தெருக்களில் ஈழவர் முதலான வகுப்பார் நடந்து செல்வதற்கு இருந்த தடையை நீக்கி, எல்லோரும் செல்லலாம் என்று ஆணைபிறப்பித்தது.
“வைக்கம் வீரர்”
வைக்கம் போராட்டத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றதால் தந்தை பெரியார் “வைக்கம் வீரர்” எனப் போற்றப்பட்டார். வரலாற்று சிறப்புமிக்க இந்த வைக்கம் போராட்டம் நடைபெற்று நூறு ஆண்டுகள் ஆனதையொட்டி, “வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டினையொட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் 2023-ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் நாள் தொடங்கி ஓராண்டு காலம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்” என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சட்டமன்றப் பேரவையில் 30.03.2023 அன்று விதி 110-இன் கீழ் அறிவித்தார்.
அதன்படி, சென்னை, பெரியார் திடலில் 28.12.2023 அன்று நடைபெற்ற “வைக்கம் போராட்டம்” நூற்றாண்டு சிறப்பு விழாவில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ‘தமிழரசு’ அச்சகத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட “வைக்கம் போராட்டம் (1924-2023) நூற்றாண்டு மலரினை” தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட, கேரளா மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் பெற்றுக்கொண்டார். இவ்விழாவில், “பெரியாரும் வைக்கம் போராட்டமும்” என்ற நூலை கேரளா மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டார்.
நிதி ஒதுக்கீடு
வைக்கம் வீரர் தந்தை பெரியார் நினைவாக, அந்நகரில் தந்தை பெரியார் நினைவகமும், பெரியார் நூலகமும் தமிழ்நாடு அரசால் கட்டப்பட்டுள்ளது. தந்தை பெரியார் வைக்கம் போராட்டத்தில் பங்கேற்ற நூற்றாண்டு நிறைவினைக் கொண்டாடுவதற்காக வைக்கம் நகரில் உள்ள தந்தை பெரியார் நினைவகத்தையும், நூலகத்தையும் புதுப்பித்திட 8 கோடியே 14 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டார்.
அதன்படி, தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறையால் புதுப்பிக்கப்பட்ட தந்தை பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (12.12.2024) திறந்து வைத்தார். இப்பெரியார் நினைவகத்தில் ஒளிப்படக் காட்சிக்கூடம், திறந்த வெளி அரங்கம், சிறுவர் பூங்கா ஆகியவையும், நூலகத்தில், 5000-க்கும் மேற்பட்ட தமிழ், ஆங்கிலம் மற்றும் மலையாள மொழி புத்தகங்களும் இடம்பெற்றுள்ளன.
வைக்கம் விருது
அதனைத் தொடர்ந்து, 2024-ஆம் ஆண்டிற்கான வைக்கம் விருதினை கருநாடக மாநிலம், மைசூரு மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான தேவநூர மஹாதேவா அவர்களுக்கு, விருதுடன் அய்ந்து இலட்சம் ரூபாய்க்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கம் ஆகியவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
இவ்விழாவில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, சட்டத் துறை அமைச்சர் எஸ். இரகுபதி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு.முத்துசாமி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், கேரள கூட்டுறவு, துறைமுகங்கள் மற்றும் தேவஸ்தானத் துறை அமைச்சர் வி.என்.வாசவன், கேரள மீன்வளம், கலாச்சாரம் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் சஜி செரியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே. பிரான்சிஸ் ஜார்ஜ், தொல்.திருமாவளவன், அந்தியூர் செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் சி.கே.ஆஷா, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், கேரள மாநில அரசின் தலைமைச் செயலாளர் சாரதா முரளிதரன், பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு. இரா. வைத்திநாதன், கோட்டயம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜான் வி. சாமுவேல், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.