ஜெயங்கொண்டம்,டிச.12- ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 7.12.2024 அன்று கராத்தே கலையில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பெல்ட் மற்றும் சான்றிதழ்களை வழங்கும் விழா மாலை 3 மணி அளவில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கா.சொ.க.கண்ணன் (சட்டமன்ற உறுப்பினர், ஜெயங்கொண்டம்) கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தார். மேலும் பொதுக்குழு உறுப்பினர் சி.காமராஜ், பள்ளியின் முதல்வர் இரா.கீதா ஆகியோரும் கலந்து கொண்டனர். பள்ளி முதல்வர் இரா.கீதா சிறப்பு விருந்தினருக்கு பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.
கராத்தே
தன்னம்பிக்கை, மன உறுதியை வளர்க்கவும், கவனத்தை மேம்படுத்தும், நினைவாற்றலை கூர்மைப் படுத்தும், உடல் மற்றும் மனதை சமநிலைப்படுத்தும் தற்காப்பு கலை கராத்தே. இக்கலையில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவ – மாணவிகள் பயிற்சி பெற்றனர். மாணவர்களின் நிலைக்கு ஏற்ப மஞ்சள், ஆரஞ்சு, பச்சை, நீலம், காப்பி போன்ற பல்வேறு வண்ணங்களில் பெல்ட் அணிவிக்கப்பட்டது.
கராத்தேவின் அறிவும் சாரமும் பெற்ற மாணவர்களுக்கு மஞ்சள் நிறமும், கராத்தேவால் தீவிரமாக ஈர்க்கப்பட்ட மாணவர்களுக்கு ஆரஞ்சும், பல்வேறு திறன்களை பெற்ற மாணவர்களுக்கு பச்சையும், பல்வேறு நுட்பங் களை அறிந்த மாணவர்களுக்கு நீலமும் மாணவர்களின் திறன்கள், சிந்தனை, உடல் வலிமை, உறுதித் தன்மையை குறிக்க காப்பி வண்ணமும் அணிவிக்கப்பட்டது. மாண வர்கள் தான் பயின்ற கலையை மகிழ்ச்சி யுடனும், ஆர்வத் துடனும் செய்து காண்பித்தனர்.
சிறப்பு விருந்தினர் தன்னுடைய சிறப்புரையில், இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் கராத்தே பயிற்சியை கற்றுக் கொள்வது சாலச் சிறந்தது. ஜப்பான் நாட்டில் தோன்றிய கலை இன்று உலகம் முழுவதும் பரவி காணப்படுகிறது.
பெண்கள் முக்கியமாக இக்கலையை கற்றுக் கொள்ள வேண்டும். பெரியார் பள்ளியில் மாணவிகளும் இப்பயிற்சியில் இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
பிளாக் பெல்ட் பெறும் வரை இப்பயிற்சியை மேன்மேலும் பயில வேண்டும் என கூறி பயிற்சி பெற்ற மாணவர்களை பாராட்டி சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார். மாணவர்களின் பெற்றோர்கள் மிகவும் பெருமிதத்துடன் கண்டுகளித்து மகிழ்ந்தனர்.