சென்னை, டிச.12- பிணை வழங்கிய 7 நாள்களில், சிறைகளிலிருந்து கைதிகள் விடுதலையாவதை உறுதிசெய்ய வேண்டும் என சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தர விட்டது.
பிணை கிடைத்தும் பிணைத்தொகை செலுத்த வழியின்றி சிறைகளில் இருக்கும் கைதிகளை வெளியே கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
பிணை கிடைத்தும் சிறைகளில் இருந்து வெளியே வர முடியாமல் இருப்பதாக செய்தி வெளியான நிலையில் சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்தது.
பிணை கிடைத்தும் வெளியே வர முடியாமல் தவிக்கும் கைதிகள் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய அரசு தரப்புக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அமா்வு ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அரசுத் தரப்பு வழக்குரைஞா்
ஆா்.முனியப்பராஜ் கூறியதாவது:
தமிழ்நாடு முழுவதும் பிணை கிடைத்தும் பிணைத் தொகையை செலுத்த முடியாமல் 22 தண்டனைக் கைதிகளும், 153 விசாரணைக் கைதிகளும் வெளியே வர முடியாமல் சிறைக்குள்ளேயே இருக்கின்றனா். மாவட்ட நீதிமன்றங்களில் இருந்து பிணை உத்தரவுகள் சிறைகளுக்கு தாமதமாக அனுப்பப்படுவதும் ஒரு காரணம். ஒன்றிய அரசின் திட்டத்தை பின்பற்றி ஏழை, எளிய கைதிகளுக்கு நிதியுதவி செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது என்றாா்.
நீதிபதிகள் உத்தரவு
இதையடுத்து நீதிபதிகள், பிணை கிடைத்த 7 நாள்களில் கைதிகள் விடுதலையாவதை உறுதி செய்யும் வகையில் உரிய நடவடிக்கைகளை மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு எடுக்க வேண்டும்”என அறிவுறுத்தினா்.
மேலும், “மாநிலம் முழுவதும் 800-க்கும் மேற்பட்ட கைதிகள், பிணை கிடைத்தும் சிறைகளிலிருந்து வெளியே வர முடியாமல் உள்ளதாகக் கூறப்படும் நிலையில், கைதிகளின் எண்ணிக்கை, அவா்களின் பின்னணி குறித்த விவரங்களை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மூலமாக சேகரித்து, அவா்களை பிணையில் விடுவிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளா் மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினா் செயலருக்கு உத்தரவிட்டுள்ளனா்.
அத்துடன், அரசின் உதவித் திட்டங்கள் மூலமாக பயன் அடைந்த கைதிகள் குறித்து விவரங்களை தமிழ்நாடு அரசும் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.