ஜாதி, தீண்டாமை ஒழிப்புக்காக நடைபெற்ற வைக்கம் போராட்டம்
ஒரு மாநில பிரச்சினையல்ல – மானுடப் பிரச்சினை!
சென்னை, நவ.12 வைக்கம் வெற்றி, ஜாதி, தீண்டாமை ஒழிப்புக்கு எவ்வளவு பெரிய விலை கொடுத்து ஆரம்பத்தில் தொடங்கியிருக்கிறார்கள்; அது எவ்வளவு நீண்ட போராட்டமாக வந்திருக்கிறது. இது எல்லை கடந்த ஒன்று. இது ஒரு மாநில பிரச்சினையல்ல; மானுடப் பிரச்சினை. அதனுடைய வெற்றி விழாதான் நாளைக்கு (12.12.2024) நடைபெறவிருக்கிறது. அவ்விழாவில் பங்கேற்கத்தான் நாங்களும் செல்கிறோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
நேற்று (11.12.2024) காலை சென்னை விமான நிலையத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேட்டியளித்தார்.
அப்பேட்டியின் விவரம் வருமாறு:
செய்தியாளர்: தந்தை பெரியார் எவ்வளவோ போராட்டங்களை நடத்தியிருக்கின்றார்; இப்பொழுது வைக்கம் நூற்றாண்டு விழா நாளை (12.12.2024) கேரள மாநிலம் வைக்கத்தில் நடைபெறவிருக்கிறது. அதில் பங்கேற்க நீங்களும் செல்கின்றீர்கள். அந்தக் காலகட்டத்தில் வைக்கம் போராட்டம் நடைபெற்ற பொழுது, பெரியாருடைய பங்கை எவ்வளவு முக்கிய மானதாக பார்க்கிறீர்கள்?
தொடர் போராட்டம்,
நெடிய போராட்டமாக நடைபெற்றது!
தமிழர் தலைவர்: இந்திய வரலாற்றிலேயே ஒரு மனித உரிமைக்கான, சமூகநீதிக்கான, ஜாதி, தீண்டாமை, நெருங்காமை, பாராமை ஆகிய வருணாசிரம தர்மக் கொடுமைகளை எதிர்த்து, முதன்முதலில் ஒரு பெரிய தொடர் போராட்டம், நெடிய போராட்டமாக நடை பெற்றது 1924 ஆம் ஆண்டு வைக்கத்தில்.
அது கோவில் நுழைவுப் போராட்டம் அல்ல. மாறாக, வைக்கத்தப்பர் என்று சொல்லக்கூடிய மகா தேவர் கோவி்ல் இருக்கக்கூடிய தெருக்களில்கூட, ஒடுக்கப்பட்ட ஜாதியினரான ஈழவர், புைலயர் மற்ற வர்கள் செல்லக்கூடாது என்று அன்றைக்கு ஸநாத னத்தின் பெயராலே தடுத்து நிறுத்தியிருந்தார்கள்.
அதை எதிர்த்து அங்கே ஒரு நிகழ்வு நடந்தது. ஈழவ சமுதாயத்தைச் சார்ந்த மாதவன் என்ற ஒரு வழக்குரைஞர் நீதிமன்றத்தி்ற்கு வாதாடச் சென்றார். அந்தத் தெரு வில்தான் நீதிமன்றம் இருந்த காரணத்தினால், ‘‘நீங்கள் எப்படி இந்தத் தெருவில் நுழைவீர்கள்?‘‘ என்று சொல்லி, அவரை அடித்து, கீழே தள்ளினார்கள்.
நாய்கள், பன்றிகள், கழுதைகள் போகலாம்; ஆறறிவு படைத்த
மனிதன் போகக்கூடாதா?
அதிலிருந்துதான், தீப்பொறியாகப் போராட்டம் கிளம்பி, வேறுபாடுகள் இல்லாமல், முற்போக்குச் சிந்தனையாளர்கள் உள்பட டி.கே.மாதவன் அவர்க ளின் முன்னெடுப்பில், பலரும் இணைந்து, பெரிய அளவிற்கு சத்தியாகிரகப் போராட்டத்தினை நடத்த வேண்டும். அந்தத் தெருவில், நாய்கள், பன்றிகள், கழுதைகள் போகின்றன; ஆறறிவு படைத்த மனிதன் ஏன் அந்தத் தெருவில் நடக்கக்கூடாது? அவனுக்கு உரிமையில்லையா? என்று கேட்டு அந்தப் போராட்டத்தி னைத் தொடங்கினார்கள்.
அப்பொழுது,திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தி்ல் மன்னராட்சி நடந்தது. அந்த சூழ்நிலையில், அதனை எதிர்த்து, மிகப்பெரிய அளவில் சத்தியாக்கிரகத்தைத் தொடங்குவதற்கு முயற்சித்தார்கள். ஜார்ஜ் ஜோசப், குரூர் நீலகண்டன் நம்பூதிரி போன்ற உள்ளூர் மக்கள் பெரிய அளவிற்கு அதற்கு முயற்சி எடுத்தனர்.
காங்கிரசு இயக்கத்தைச் சார்ந்தவர்கள் என்ற காரணத்தினால், காந்தியாரின் அனுமதியைப் பெற வேண்டும் என்று சொன்னார்கள். அப்பொழுது காந்தியார் அவர்கள் முதலில் அந்தப் போராட்டத்திற்கு அனுமதி கொடுக்கவில்லை. அதையும் தாண்டிதான், அந்தப் போராட்டத்தை மிகப்பெரிய அளவிற்கு நடத்தினார்கள்.
தந்தை பெரியாருக்குக் கடிதம்!
போராட்டம் நடத்திய அத்துணை பேரையும் அன்றைய அரசாங்கம் கைது செய்து சிறையில் அடைத்தது. இச்சூழ்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த தந்தை பெரியார் அவர்களுக்கு, சிறையிலிருந்தபடியே கடிதம் எழுதினார்கள்.
அந்தக் கடிதத்தில், நாங்கள் நடத்திய போராட்டத்தினை நீங்கள்தான் இங்கே வந்து தலைமை யேற்று தொடர்ந்து நடத்தவேண்டும். வெற்றிக்காகப் போராடவேண்டும் என்று சொன்னார்கள்.
உடனே தந்தை பெரியார் அவர்கள், அன்னை நாகம்மையார், பெரியாருடைய தங்கை கண்ணம்மையார், கோவை அய்யாமுத்து, நாகர்கோவிலைச் சார்ந்த எம்பெருமாள் ஆகியோரை அழைத்து, அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்தார்.
திருவிதாங்கூர் அரசரின்,
அரசு மரியாதையை
ஏற்க மறுத்த பெரியார்!
வைக்கத்திற்குத் தந்தை பெரியார் அவர்கள் சென்றபொழுது, திருவிதாங்கூர் அரசர், அரசு மரியாதை கொடுத்தார் பெரியாருக்கு. ஏனென்றால், திருவிதாங்கூர் அரசர் அவர்கள், டில்லிக்குச் செல்லும்பொழுது, ஈரோட்டில் உள்ள தந்தை பெரியாருடைய இல்லத்தில் தங்குவது வழக்கம். ஆனால், அந்த வரவேற்பை ஏற்காமல், ‘‘நான் இங்கே போராட வந்திருக்கின்றேன்; ஆகவே, உங்களுடைய வரவேற்பை ஏற்க முடியாது‘‘ என்று சொல்லி, போராட்டக் களத்தில், சத்தியாகிரகப் போராட்டம் நடத்தினார்.
அதனால், தந்தை பெரியார் அவர்களை கைது செய்து தண்டித்தார்கள். சிறையிலிருந்து வெளியே சென்றவுடன், மீண்டும் போராட்டத்தினைத் தொடரு வேன் என்றார் தந்தை பெரியார். தெருக்களில் ஒடுக்கப்பட்டோர் நடக்கின்ற உரிமை கிடைக்கும்வரை அப்போராட்டத்தைத் தொடருவேன் என்று சொன்னார்.
தந்தை பெரியாருக்கு 6 மாத சிறைத் தண்டனை அளித்து சிறைச்சாலையில் வைத்திருந்தனர். ஏறத்தாழ 74 நாள்கள் சிறைச்சாலையில் இருந்தார்.
வன்முறை தலைதூக்காத அளவிலும்,
கடுங்காவல் தண்டனை!
அந்தப் பிரச்சாரத்தினை மிகப்பெரிய அளவிற்குச் செய்தார்கள். போராட்டத்தினை வலுவுடைய சத்தி யாக்கிரகமாக ஆக்கினார் தந்தை பெரியார். வன்முறை தலைதூக்காத அளவிலும், கடுங்காவல் தண்டனையை தந்தை பெரியார் அவர்கள் அனுபவித்த நேரத்தில், இவரை அழிக்கவேண்டும் என்று ‘சத்ரு சங்கார யாகம்‘ நடத்தினார்கள். அரசர் மறைந்துவிட்டார். அந்த சூழ்நிலையில், ராணி பதவிக்கு வருகிறார்; மீண்டும், காந்தியாரை அழைத்து, அவரிடம் சமாதானம் பேசினார்.
பெரியார், நாராயண குரு போன்றவர்கள், அந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர். அப்பேச்சு வார்த்தையின் முடிவில், ‘‘அந்தத் தெருக்களில் நடப்ப தற்கு ஒரு பகுதியை நாங்கள் அனுமதிக்கிறோம்‘‘ என்று சொன்னார்கள்.
1924 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்!
அடுத்த கட்டத்திற்கு வரவேண்டும் என்று சொன்னவுடன், ஒரே ஆண்டாக அந்தப் போராட்டம் தொடர்ந்தது. அந்தப் போராட்டத்திற்குப் பிறகுதான், மிகப்பெரிய அளவிற்கு வெற்றிகரமாக 1924 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அந்த வெற்றியைப் பெற்றார்கள்.
மன்னை பத்மநாபன் தலைமையில், அன்னை நாகம்மையார் அவர்கள், கண்ணம்மையார் போன்ற வர்கள் அந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
தமிழ்க்கடல் திரு.வி.க. அவர்கள், இந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திய தந்தை பெரியாருக்கு ‘‘வைக்கம் வீரர்’’ என்ற பட்டம் கொடுத்தார். மிகப்பெரிய அளவிற்கு அந்தப் போராட்டம் நடந்த பிறகு, இறுதியில் அந்தத் தெருக்களில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் நடக்கக்கூடிய உரிமையைப் பெற்றனர்.
இன்றைய போராட்டங்களுக்கு
வித்தூன்றிய போராட்டம்–
வைக்கம் போராட்டம்!
இப்போது கோவில் நுழைவுப் போராட்டம், அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் வரையில் வந்திருக்கின்றது என்றால், இதற்கெல்லாம் வித்தூன்றிய ஒரு போராட்டம் வைக்கம் போராட்டமாகும்.
அதனுடைய நூற்றாண்டு நிறைவுவிழாவாக நாளை (12.12.2024) கேரள மாநிலம் வைக்கத்தில் நடைபெறவிருக்கிறது.
ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன்பு, வைக்கத்தில் தந்தை பெரியாருக்கு சிலை அ.தி.மு.க. ஆட்சியில் வைக்கப்பட்டது. இப்பொழுது தந்தை பெரியார் நினைவிடம் விரிவாக்கம் செய்யப்பட்டு, சீரமைப்பு செய்யப்பட்டு, இன்றைய ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோரும் இணைந்து மிகப்பெரிய அளவிற்கு மாறுதல்களை உண்டாக்கி, ரூபாய் எட்டரை கோடி செலவழித்து, சீரமைப்புப் பணிகள் நடைபெற்றன. அதனுடைய திறப்பு விழா நாளை (12.12.2024) காலை நடைபெறவிருக்கிறது.
அந்தத் திறப்பு விழாவில், இரு மாநில முதல மைச்சர்களும், அரசுத் தலைமைச் செயலாளர்கள், அமைச்சர் பெருமக்கள், அதிகாரிகள் ஆகியோரும் பங்கேற்கவிருக்கின்றனர்.
வைக்கம் போராட்டம் ஒரு மாநில பிரச்சினையல்ல; மானுடப் பிரச்சினை!
வைக்கம் வெற்றி, ஜாதி, தீண்டாமை ஒழிப்புக்கு எவ்வளவு பெரிய விலை கொடுத்து ஆரம்பத்தில் தொடங்கியிருக்கிறார்கள்; அது எவ்வளவு நீண்ட போராட்டமாக வந்திருக்கிறது. இது எல்லை கடந்த ஒன்று. இது ஒரு மாநில பிரச்சினையல்ல; மானுடப் பிரச்சினை.
அதனுடைய வெற்றி விழாதான் நாளைக்கு நடை பெறவிருக்கிறது.
அவ்விழாவில் பங்கேற்கத்தான் நாங்களும் செல்கிறோம்.
நன்றி, வணக்கம்!
இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தனியார் தொலைக்காட்சி செய்தியாளரிடம் கூறினார்.