வைக்கம் போராட்டம்
தொடங்கப்பட்ட நாளில்…
வைக்கம் சத்தியாகிரகம் தொடங்கிய 30.3.1924 அன்று விடியற் காலையிலேயே எல்லோரும் குளித்து முழுகி நெற்றியில் திருநீறு பூசி போராடத் தயாராகியிருக்கிறார்கள்.
காலை ஏழு மணிக்கு இரண்டிரண்டு பேராகக் கோயில் வீதியை நோக்கிப் புறப்பட்டார்கள். பிரச்சனைக்குரிய சாலையின் முகப்பில் `தீண்டாத ஜாதியினர் இதற்கு அப்பால் பிரவேசிக்கக் கூடாது’ என்று கோயில் நிர்வாகத்தால் போர்டு வைக்கப்பட்டிருந்தது. அந்த இடத்திற்குச் சென்றதும் எல்லோரும் அங்கு நின்றார்கள்.
குஞ்ஞபி, பாஹுலேயன், கோவிந்தப்பணிக்கர்னு மூன்று பேர் மட்டும் அந்தப் பலகையைத் தாண்ட முயற்சிக்கவும் போலீஸ் அவர்களைத் தடுத்து நிறுத்தியது. நீங்களெல்லாம் என்ன ஜாதி? என்று ஒரு போலீஸ்காரன் கேட்டான்.
`நான் புலையன்!’ `நான் ஈழவன்!’ `நான் நாயர்!’னு அவர்கள் ஒவ்வொருவரும் சொன்னதும், “நாயர் மட்டும் போகலாம். மற்ற இரண்டு பேரும் போகக் கூடாது!”என்று சொல்லி போலீஸ்காரர்கள் அவர்களைத் தடுத்தனர்.
“அவர்களையும் அழைத்துக் கொண்டு போகவே நான் வந்திருக்கிறேன். மூன்று பேரும்தாம் போவோம்!” என்று கோவிந்தப்பணிக்கர் சொல்லியிருக்கிறார். போலீஸ் விடவில்லை. “எங்களைத் தெருவில் போக விடுங்கள். இல்லையென்றால் கைது செய்யுங்கள்!” என்று அவர்கள் சொல்லவும் மூன்று பேரையும் போலீஸ் கைது செய்தது.
வைக்கம் போராட்டத்தில் பெரியார்!
வைக்கம் போராட்டம் தொடங்கப்பட்ட பொழுது, சென்னை மாகாணக் காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்தார் பெரியார். அப்போது அவருக்கு வயது 45. திருச்சி குளித்தலை மாநாட்டிற்குச் சென்றுவிட்டு அங்கிருந்து மதுரைக்குப் பக்கத்தில் பண்ணபுரம்கிற ஊரில் கதர் பிரச்சாரம் பண்ணிக் கொண்டிருந்தபோது `வைக்கம் சத்தியாகிரகத்தின் நிலைமையைப்பற்றி யோசிக்க விரைவில் ஒரு கூட்டம் கூடுவதால் நீங்கள் அவசியம் வரவேண்டும்!’ என்று நீலகண்டநம்பூதிரி அடித்த தந்தி பெரியார் கைக்கு கிடைத்தது. பிரச்சாரப் பயணத்தில் இருந்த பெரியாருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட அவர் அங்கிருந்து ஈரோட்டுக்குத் திரும்பிட்டார்.
கொச்சியில் இருந்து டி.ஆர்.கிருஷ்ணசாமி அய்யரும், `நீங்கள் இங்கு இருக்க வேண்டியது மிகவும் அவசியம். உடனே புறப்பட்டு வாருங்கள்!’னு பெரியாருக்குத் தந்தி அனுப்பினார்.
`வைக்கத்தில் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. தலைவர்கள் எல்லோரையும் கைது செய்துவிட்டார்கள். நானும் வைக்கத்திற்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன். என்னையும் அவர்கள் கைது செய்துவிடுவார்கள். தொடர்ந்து இயக்கத்தை நீங்கள்தான் தலைமைதாங்கி நடத்த வேண்டும். தந்தி மூலம் யோசனை கூறுங்கள்!”னு ராத்திரி ஏழு மணிக்குப் பெரியாருக்கு மறுபடியும் ஒரு தந்தி வந்தது.
வைக்கத்தில் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்த பெரியாரை விட்டால் வேறு வழி இல்லை என்று கேரளத் தலைவர்கள் நினைத்தார்கள். ஜெயிலில் இருந்த நீலகண்ட நம்பூதிரியும், ஜார்ஜ்ஜோசப்பும் ஈரோட்டில் பெரியாரைச் சந்திக்க ரகசியமாக ஒரு ஆளை அனுப்பி வைத்தார்கள். அவர் பெரியாரை நேரில் சந்தித்து விவரத்தைச் சொன்னார். அதற்குமேலும் பெரியாரால் அமைதியாக அங்கு இருக்க முடியவில்லை. உடல்நிலை சரியில்லாமல் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தவர், எல்லாம் சரியாகிவிட்டது என்று வீட்டிலிருந்தவர்களிடம் பொய் சொல்லிவிட்டு, வைக்கத்துக்குப் புறப்பட்டுவிட்டார்.
புறப்படுவதற்கு முன், மெயிலில் வருவதாகவும், திருச்சூரில் சந்திக்கும் படியும் நீலகண்ட நம்பூதிரிக்குத் தந்தி கொடுத்தார். பெரியார் வைக்கம் புறப்பட்டார் என்று தெரிந்ததும் தமிழ்நாட்டிலிருந்து சீனிவாச அய்யங்கார், கோவை அய்யாமுத்து இரண்டு பேரும் வைக்கம் கிளம்பிப் போனாங்க. ஈரோட்டிலிருந்து புறப்பட்ட பெரியார் கொச்சியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பின் அங்கிருந்து மறுநாள் வைக்கத்துக்குப் போய் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினார்!
வைக்கத்தில் பெரியாருக்கு
அளிக்கப்பட்ட வரவேற்பு!
பெரியார் வைக்கம் வருகிறார் என்ற செய்தி கிடைத்த உடன் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சத்தியா கிரகிகள் அவரை வரவேற்பதற்காகப் படகுத்துறையில் கூடினர்.
சிறிது நேரத்தில் திருவாங்கூர் சமஸ்தான அதிகாரிகளும் போலீஸ்காரர்களும் வைக்கம் படகுத்துறைக்கு வந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் சத்தியாக்கிரகிகள் மத்தியில் பதட்டம் நிலவியது. பெரியார் படகை விட்டு இறங்கியதும் அவரைக் கைது செய்துவிடுவார்களோ என்று குழப்பத்தில் ஆழ்ந்தார்கள்.
பெரியார் படகிலிருந்து இறங்கியதும் சத்தியாக்கிரகிகள் `நாயக்கர் வாழ்க!’ `நாயக்கர் வாழ்க!’ என்று முழக்கமிட்டுக் கொண்டே முண்டியடித்துப் பெரியாரை நெருங்கினார்கள். போலீஸ்காரர்கள் அவர்களை நெட்டித் தள்ளி ஒதுக்கிவிட, படகுத்துறையில் காத்திருந்த அதிகாரிகள் பெரியாருக்குச் சால்வைப் போர்த்தி மாலை போட்டார்கள்!
திருவாங்கூர் மகாராஜா சென்னைக்குப் போகும் பொழுதெல்லாம் ஈரோட்டில் இறங்கி தங்கிவிட்டுச் செல்வது வழக்கம். ஈரோட்டில் பெரியாருக்கு ரயில்வே ஸ்டேஷன் பக்கத்தில் ஒரு பங்களா இருந்தது. மஹாராஜா ஈரோடு வரும்போதெல்லாம் அந்த பங்களாவில்தான் தங்கி ஓய்வெடுத்துச் செல்வார். அந்த வகையில் பெரியார் குடும்பத்துக்கும், ராஜா குடும்பத்துக்கும் நெருக்கமான தொடர்பு இருந்தது. அதனால் பெரியார் வைக்கம் வருவதைக் கேள்விப்பட்ட மகாராஜா அவருக்கு வரவேற்பு கொடுத்து அழைத்து வரச் சொல்லி அதிகாரிகளை அனுப்பியிருந்தார்.
ஆனால் பெரியார் வரவேற்பு கொடுக்க வந்த அதிகாரிகளிடம், `நான் இங்குப் போராட வந்திருக்கிறேன். அதனால் மகாராஜா அளிக்கும் வரவேற்பை என்னால் ஏற்றுகொள்ள முடியாது’ என்று சொல்லிவிட்டுப் போராட்டக் காரர்களோடு புறப்பட்டுச் சென்றார்.
வைக்கத்தில் பெரியார்
உரையாற்றத் தடையும் கைதும்!
பெரியாரின் பேச்சு ஒடுக்கப்பட்ட மக்கள் மட்டுமில்லாமல் அனைத்துத் தரப்பினரிடமும் எழுச்சியை உண்டாக்கியது. அது மக்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தைப் பார்த்துத் திருவாங்கூர் அரசாங்கமே மிரண்டுவிட்டது. அவர் பேச்சைக் காவல்துறை குறிப்பெடுத்து அரசாங்கத்திற்கு அனுப்பிக்கொண்டே இருந்தது.
பெரியார் வைக்கம் சென்ற சில நாட்களிலேயே, `திருவாங்கூர் சமஸ்தானத்துக்கு உட்பட்ட பகுதியில் 15 நாளைக்கு அவர் எந்தவிதமானப் பிரசங்கமும் செய்யக் கூடாது!’ என்று தடை உத்தரவுப் போட்டுவிட்டார்கள். தடையை மீறி பெரியார் கொல்லம், செங்கனாச்சேரி என ஊர்ஊராகச் சென்று தொடர்ந்து பேசினார்.
இதற்கு மேலும் அவரை வெளியே விட்டுவைத்தால் சரிவராது என்று நினைத்த திருவாங்கூர் அரசு அவரைக் கைது செய்து விசாரணைக்கு அழைத்தபோது நீதிமன்றத் திற்கு அவரது மனைவி நாகம்மையாரும் வந்திருந்தார்கள். பெரியார் எதிர் வழக்காடவில்லை.
`இந்த நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லை. என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்கத் தயார்!’னு சொல்லிட்டார்.
ஒரு மாதம் சிறைத்தண்டனை கொடுத்தார்கள்.
அவரை முதலில் ஒரு வாரம் வைக்கம் போலீஸ் ஸ்டேஷனில் வைத்திருந்தார்கள். அதற்குப் பிறகு அங்கிருந்து அழைத்துச்சென்று அருவிக்குத்து போலீஸ் ஸ்டேஷனில் வைத்துவிட்டார்கள்.
வைக்கத்திலிருந்து அந்த இடத்திற்குப் படகில் செல்லவேண்டும். அருவிக்குத்து படகுத்துறையை ஒட்டித்தான் போலீஸ் ஸ்டேஷனும் இருந்தது. பெரியாருக்கு அப்போது நீதி மன்றம் விதித்தது வெறுங்காவல் தண்டனைதான். அங்க ஒரு மாதம் சிறைத் தண்டனையை அனுபவித்துவிட்டு விடுதலையானார்.
பெரியாரை அருவிக்குத்து சிறையில்
சந்தித்த கோவை அய்யாமுத்து
வைக்கத்திலிருந்து கொச்சிக்குப் படகில் செல்லும் வழியில் அருவிக்குத்து உள்ளது. அருவிக்குத்து படகுத் துறையை ஒட்டி கரையோரத்தில் இருந்த காவல் நிலையத்தில்தான் பெரியாரைச் சிறை வைத்திருந்தார்கள். அருவிக்குத்தில் பெரியார் இருந்தபோது அவரைச் சந்தித்ததாகக் கோவை அய்யாமுத்து அவருடைய சுயசரிதையில் எழுதியிருக்கிறார்.
`வைக்கத்திலிருந்து கொச்சிக்குப் போறப்ப அருவிக் குத்து போலீஸ் ஸ்டேஷன்ல நாயக்கரைச் சந்திச்சோம். நாங்க போனப்ப அவர் அந்த காவல்துறை அலுவலகத்தையொட்டி கரையில் நிறுத்தப்பட்டிருந்த படகில் அமர்ந்திருந்தார். அவருக்கு ஒரு பார்பர் சவரம் செய்து கொண்டிருந்ததார். நாங்கள் நாயக்கரிடம் சிறிது நேரம் உரையாடிவிட்டு விடைபெற்றோம்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
பெரியாருக்கு மீண்டும் சிறை
பெரியார் விடுதலையாகி வைக்கம் வந்தபோது, சத்தியாக்கிரகிகள் அவரை வைக்கம் படகுத்துறையிலிருந்து ஊர்வலமாக அழைத்துக்கொண்டு சென்றதைச் சுட்டிக்காட்டி, `தடையாணை இருக்கும்போது வைக்கத்தில் ஏன் ஊர்வலம் போக அனுமதித்தீர்கள்?’ என்று கேட்டு, கோட்டயம் மாவட்ட மாஜிஸ்ட்ரேட் தலைமைச் செயலாளருக்குக் கடிதம் எழுதினார்.
அதைத் தொடர்ந்து, `கொல்லம் மாவட்டத்தில் அவர் பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ளவோ, பேசவோ கூடாது!’ என்று இருந்த தடையை நீட்டித்து உத்தரவு போட்டார் மேஜிஸ்ட்ரேட்.
பெரியார் அந்தத் தடை ஆணையை ஒரு பொருட்டா கவே மதிக்கவில்லை. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடு வதும், பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்பதுமாக இருந்தார்.
வைக்கத்தில் நடக்கும் சட்டத்திற்கு எதிரான நடவடிக் கைகள் தனக்கு அதிர்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்ட பெரியார், தான் ஏன் இந்தத் தடையை மீறவேண்டியிருக்கிறது என்று விளக்கி, `இளைஞர்களே போராட்டக் களத்திற்கு வாருங்கள்!’ என்று அழைப்புவிடுத்தார்.
தடை உத்தரவை மீறியதற்காக உள்ளூர் மாஜிஸ்ட்ரேட் முன் ஆஜராகும்படி பெரியாருக்கு நோட்டீஸ் வந்தது.
நீதிமன்ற விசாரணையின் முடிவில் அவருக்கு ஆறு மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது! மாஜிஸ்திரேட் கொடுத்த தீர்ப்பில், `நாயக்கர் வேண்டு மென்றே பிடிவாதமாகச் சட்டத்தையும் உத்தரவையும் மீறி நடந்திருப்பதாகத் தெரிகிறது. அம்மாதிரி நடப்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் தடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு முன் சாதாரண தண்டனை விதித்து நடத்தையைத் திருத்தப் பார்த்தும் பிரயோஜனம் இல்லாததால் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த முறை கோட்டயம் சிறையில் ஒரு மாதம் வைத்திருந்து அதன்பிறகு திருவனந்தபுரம் மத்திய சிறையில் அடைக்கவேண்டும் என்று மாஜிஸ்ட்ரேட் உத்தரவு போட்டிருந்தார். வைக்கத்திலிருந்து கோட்டயத்துக்குப் படகில்தான் செல்லவேண்டும். பெரியாரைக் கைது செய்து படகில் அழைத்துக்கொண்டு போகும்போது கடுமையான மழை, புயல் காற்று வீசியிருக்கிறது. அவரை அழைத்துச் சென்ற படகு தண்ணீரில் அடித்துக்கொண்டு போய் ஆழம் குறைவான ஒரு இடத்தில் தரைதட்டி நின்றுவிட்டது. மழை குறைந்ததும் பெரியாரைக் கொண்டு வந்து வைக்கம் காவல் நிலையத்தில் வைத்துவிட்டார்கள். ஒரு வாரம் கழித்து மழையெல்லாம் விட்டபின்னால் அங்கிருந்து கோட்டயம் சிறைச்சாலைக்குக் கொண்டு சென்றார்கள். கோட்டயத்திலிருந்து திருவனந்தபுரம் நூறு கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் இருக்கும். கோட்டயம் சிறையிலிருந்து திருவனந்தபுரம் சிறைக்கு அழைத்துக் கொண்டு போக காவல்துறை தயாரானபோது `நான் நடந்தே திருவனந்தபுரம் வருகிறேன்!’ என்று சொல்லியிருக்கிறார் பெரியார்.
பெரியாருக்கு எதிராக
சத்ருசம்ஹார யாகம்!
பெரியார் திருவனந்தபுரம் சிறையில் இருந்தபோது வைக்கத்திலிருந்த உயர் ஜாதி இந்துக்கள் சிலபேர், `தீண்டப் படாதவர்களைக் கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் அனுமதிக்க வைக்கத்தப்பனிடம் பூப்போட்டு உத்தரவு கேட் கலாமா?’ என்று நம்பூதிரிகளிடம் ஆலோசனை கேட்டார்கள்.
ஓ! பேஷா செய்யலாமே!’ன்னு சொல்லி அவர்களும் வைக்கத்தப்பனுக்குப் பூ போட்டுப் பார்க்க, வைக்கத்தப்பன் `அனுமதிக்கலாம்!’னு உத்தரவு கொடுத்திருக்கு!
வைக்கத்தப்பன் உத்தரவைப் பார்த்து அதிர்ச்சியான நம்பூதிரிகள் `சிவனுக்குச் சக்தி குறைஞ்சிப் போயிடுத்து! நாளைக்கு நன்னா ஒரு பூஜை பண்ணிட்டு, திரும்பக் கேட்கலாம்!’னு சொல்லியிருக்காங்க. மறுநாள் பூஜை பண்ணிட்டு பூப் போட்டுப் பார்த்தப்ப மறுபடியும் வைக்கத்தப்பன் `அவர்களை அனுமதிக்கலாம்!’னு உத்தரவு கொடுத்திருக்கு! தொடர்ந்து மூனு தடவை பூ போட்டுப் பார்த்தப்பவும் வைக்கத்தப்பன் கிட்டேயிருந்து `அனுமதிக்கலாம்!’னே உத்தரவு வரவும் நம்பூதிரிகளுக்குச் சிவன் மேலயே கோபம் வந்துவிட்டது!
அதன்பிறகு அங்கிருந்தப் பார்ப்பனர்களும் நம்பூதிரிகளும் சேர்ந்து இதற்கு வேறு என்ன வழி என்று யோசித்தார்கள். அவர்கள் கோபம் முழுவதும் பெரியார் மேல் திரும்பியது.
பெரியாருக்கு எதிரா அவங்க `சத்ருசம்கார யாகம்’னு ஒரு யாகத்தைப் பண்ண ஆரம்பிச்சாங்க! பெரியாருக்கு எதிரா யாகம் நடத்தப்போய் விஷயம் வேற மாதிரி ஆயிடுச்சி. அவர் திருவனந்தபுரம் ஜெயில்ல இருந்தப்ப ஒரு நாள் வெளியில கடுமையான வேட்டுச் சத்தம் கேட்டிருக்கு. வேட்டு போடுறாங்களே என்ன விசேஷம்னு அங்க இருந்த காவலாளிக்கிட்டக் கேட்டிருக்கார். அவர், `மகாராஜா திருநாடு அடைஞ்சிட்டார்!’னு சொல்லியிருக்கார். திருநாடு அடைஞ்சிட்டார்னா இறந்துட்டார்னு அர்த்தமாம்!
திருவாங்கூர் மன்னர் இறந்துட்டாருங்கிற செய்தியைக் கேட்ட உடனே ஜெயில்ல இருந்த சில பேர் பெரியாருக்கிட்ட, `நாயக்கர்வாள்! உங்களுக்கு எதிரா நம்பூதிரிகள் யாகம் நடத்தினாங்க. இப்ப என்னாச்சி பார்த்தீங்களா. அது அவங்க பக்கமே திரும்பிடுச்சி!’ன்னு சொல்லியிருக்கிறார்கள்.
பெரியார் அதைக் கேட்டுக் கொஞ்சம் கூட சந்தோஷப் படலை. `அவங்க நடத்தின அந்த யாகத்தினால நான் செத்துப்போயிடுவேன்னு நினைச்சது எவ்வளவு முட்டாள் தனமோ, அதை விடப் பெரிய முட்டாள் தனம் அந்த யாகத்தோட பவர் திரும்பி மன்னர் செத்துப்போயிட்டாருன்னு சொல்றது!’ன்னு சொல்லியிருக்கார்.
ஈரோடு திரும்பிய பிறகும் பெரியார் கைது
பெரியார் திருவனந்தபுரம் சிறையிலிருந்து விடுதலையானதும் வைக்கத்தில் கொஞ்சநாள் தங்கிப் பிரச்சாரம் பண்ணிட்டு ஈரோடு வந்தார். அவர் மறுபடியும் வைக்கத்திற்குத் திரும்பிப் போய்விடக் கூடாதென்று நினைத்த பார்ப்பனர்கள் அதற்கு என்ன செய்யலாமென்று யோசித்தார்கள். யார் ஆட்சியில் இருந்தாலும் அதிகாரம் எப்போதும் அவங்கக் கையிலத்தானே இருக்கு! பெரியார் மீது தேசத்துரோக வழக்குப் போட்டுக் கைது செய்து விட்டார்கள்.
திருவாங்கூர் சமஸ்தானத்தில் திவானா இருந்த டி.ராகவய்யா, சென்னை ராஜதானியில் கவர்னரோட சட்டச் செயற்குழு உறுப்பினராக இருந்த சர் சி.பி.ராமசாமி அய்யரை ரகசியமாச் சந்திச்சிப் பேசுனார். உடனே சி.பி.ராமசாமி அய்யர், பெரியார் எப்பொழுதோ கதர் பிரச்சாரத்தில் பேசிய பேச்சைத் தோண்டி எடுத்து அவர் மேல் இராஜத் துரோக வழக்குப் போட்டுக் கைது பண்ணிட்டார்!
மனதை நெகிழவைக்கும்
நாகம்மையார் அறிக்கைகள்
பெரியார் சிறை செல்வதற்கு முன் நாகம்மையாரிடம், `இரண்டு வருடத்திற்குக் குறையாமல் தண்டனை கிடைக்கக்கூடிய பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது!’ என்று சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்.
பெரியாரைக் கைது செய்ததும் நாகம்மையார் வைக்கம் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டித் தலைவர்களையும் தொண்டர்களையும் வைக்கத்துக்கு வரச்சொல்லி ஒரு அறிக்கை விட்டார்.
`என் கணவர் ஈ.வி.இராமசாமி நாயக்கர் இராஜதுரோக வழக்கிற்காகக் கைது செய்யப்பட்டிருக்கிறார். ரெண்டு வருஷத்துக்குக் குறையாத தண்டனை கிடைக்கக்கூடிய பாக்கியம் தனக்குக் கிடைச்சிருக்குன்னு சொல்லிட்டுப் போயிருக்கார். அவர் விரும்பியபடியே திரும்பத் திரும்ப தேச ஊழியத்தின் பொருட்டுச் சிறைக்குப் போகும் பாக்கியம் பெற வேண்டும் என்றும், அதற்காக அவருக்கு ஆயுள் வளர வேண்டும் என்றும் கடவுளையும், மகாத்மா காந்தியையும் பிரார்த்திக்கிறேன். அவர் பாக்கியில் வைத்துவிட்டுப் போனதாக நினைத்துக் கொண்டிருக்கும் வைக்கம் சத்தியாகிரக விஷயத்தில் வேண்டிய முயற்சிகள் எடுத்து அதைச் சரிவர அகிம்சா தர்மத்துடன் நடத்தி அனுகூலமான முடிவுக்குக் கொண்டுவர வேணுமாய் என் கணவரிடம் அபிமானமும் அன்பும் உள்ள தலைவர்களையும், தொண்டர்களையும் பக்தியோடு பிரார்த்தித்துக் கொள்கிறேன்!’ன்னு சொல்லியிருக்காங்க!
பெரியாரின் பேச்சு வைக்கத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை
வெளிப்படுத்தும் டபிள்யூ.எச்.காட்டன் அறிக்கை
டபிள்யூ.எச்.காட்டன் என்கிற வெள்ளைக்கார அதிகாரி சென்னைத் தலைமைச் செயலாளருக்கு வைக்கம் போராட்டம் தொடங்கின காலத்திலேயே ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்த அறிக்கை ஒன்றே பெரியாரின் பேச்சு வைக்கத்தில் எந்தளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது என்பதை அறிந்துகொள்ளலாம்.
`சத்தியாகிரக இயக்கத்துக்கு வெளி ஆதரவு கிடைக்காமல் போயிருந்தால் அது எப்பவோ பிசுபிசுத்துப் போயிருக்கும். ஈ.வெ.ராமசாமி நாயக்கரின் தலைமைதான் இயக்கத்திற்குப் புத்துயிர் கொடுத்தது. வைக்கத்தைச் சுற்றியுள்ள கிராமங்களிலும், திருவாங்கூரின் மற்ற இடங்களிலும் அவர் பேசியப் பேச்சு மக்களிடம் ஆழமாகப் பதிந்து விட்டது. அவருடைய தீர்க்கமான, தர்க்க முறையில் அமைந்த வாதங்கள், தடுமாற்றம் உள்ளவர்களையும் சத்தியாகிரகத்துக்கு ஆதரவாக மாற்றியதோடு, எதிர்த்தவர்களையும் சிந்திக்க வைத்தது. ராமசாமி நாயக்கருடையப் பேச்சு மக்கள் மனதில் சுலபமாகப் பதியக்கூடியதாகவும், திருவாங்கூர் அரசாங்கத்தின் வெற்றுக் கவுரவத்தைக் குலைக்கிறதாகவும் இருந்தது’ என்று அவர் எழுதியிருந்தார்.
இளையராணியின் வேண்டுகோளும் பெரியாரின் பதிலும்
காந்தியார், இளவரசர் சித்திரைத் திருநாளின் தாயாரும் இளையராணியுமான ராஜமாதாவை சந்தித்தார். அவரைப் பார்க்கப் போகும் முன் பெரியாரை ஆசிரமத்தில் சந்தித்துப் பேசினார். இரண்டு பேரும் பேசிவிட்டு அங்கிருந்து காரில் புறப்பட்டார்கள். ராஜமாதாவைச் சந்திக்கச் செல்லும் வழியில் பெரியார் காரிலிருந்து இறங்கிவிட்டார். காந்தியார் மட்டும் இளையராணியைச் சந்தித்தார்.
பெரியார் பொதுக்கூட்டத்தில் பேசும்போதெல்லாம், `ஒடுக்கப்பட்ட மக்களைக் கோயில் உள்ளே செல்வதற்கும் அனுமதிக்க வேண்டும்!’ என்று பேசினார் இல்லையா? அதை மனதில் வைத்துக்கொண்டு ராணி, காந்தியைப் பார்த்து, `நாங்க சாலைகளைத் திறந்து விடுகிறோம். ஆனால் அடுத்ததாகக் கோயிலுக்குள்ளே நுழையப்போவதாக ஈ.வெ.ராமசாமி நாயக்கர் பேசிக் கொண்டிருக்கிறார். அவர் அதைச் செய்யக்கூடாது. கோயில் நுழைவுக்கிளர்ச்சி செய்யமாட்டார்கள் என்று உத்தரவாதம் கொடுத்தால் இப்பொழுதே சாலைத் தடையை நீக்கிவிடுகிறேன்!” என்று சொல்லியிருக்கிறார்.
காந்தி பெரியாரை மறுபடியும் சந்தித்துப் பேசினார். ராஜமாதா சொன்னதை அவர் பெரியாரிடம் சொல்ல, `நமது லட்சியம் கோயிலுக்குள்ளேயும் போக வேண்டும் என்பதுதானே? தெருவில் மட்டும் நடந்து போவதால் என்ன உரிமை வந்துவிடப் போகிறது? இந்தப் பேதம் ஒழியத்தானே நாம் கிளர்ச்சி செய்கிறோம்! ஆனால், நான் இப்பொழுது அதைப்பற்றி அழுத்தம் கொடுக்கப் போவதில்லை. மக்களை அதற்குப் பக்குவப்படுத்தி விட்டுத்தான் செய்ய வேண்டும்!’ என்று பெரியார் சொல்லியிருக்கார்.
`ராணியிடம் அப்படியே சொல்லிடலாமா?’ என்று கேட்டார் காந்தி.
`தாராளமாகச் சொல்லிவிடுங்கள்!’ என்று சொன்னார் பெரியார்.
அதைக் கேட்டதும் மகாராணி, `கோயிலைச் சுத்தியுள்ள நான்கு தெருக்களில் ஒரு தெருவைத் தவிர மற்ற மூன்றிலும் நடந்து போகலாம்!’ என்று உத்தரவு போட்டுவிட்டார்.