முதலமைச்சர் காமராசர் 08.04.1961 அன்று திருச்சி வரகனேரியில் பெரியார் நகர் வாயிலைத் திறந்து வைத்தார்.
திருச்சி நகரசபைத் தலைவர் ஏ.எஸ்.ஜி. லூர்துசாமி (பிள்ளை! காமராசரை வரவேற்றுப் பள்ளத் தெரு என்றிருப்பதை மாற்றி, `பெரியார் நகர் எனப் பெயரிட கவுன்சில் தீர்மானித்ததாகவும் அதைத் திறந்து வைக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
காமராசர் அந்த வாயிலைத் திறந்து வைத்துப் பேசுகையில்.
”என் மதிப்பிற்குரிய பெரியார் பெயரை வைத்துள்ளீர்கள் ‘பள்ளத் தெரு’ என்ற பெயரை மாற்றிப் பெரியார் பெயரை வைத்தது பொருத்தமே ஜாதி பேதமற்ற சமுதாயத்தைக் காண. பாடுபட்டு வருபவர் நமது ஈரோட்டுப் பெரியார்தான்! எனவே, இந்த நகருக்குப் பெரியார் பெயரை வைத்தது பொருத்தமே! பெரியார் காங்கிரசின் தலைவராகவும் காரியதரிசியாகவும் இருந்தார். அப்போதே அவர் ஜாதிகளை ஒழிக்க வேண்டுமென்றார்.
“பெரியார் காங்கிரசிலிருந்தபோது ஜார்ஜ் ஜோசப் விருப்பப்படி கேரளத்தில் போராடினார். வைக்கம் என்னும் ஊரில் ஜாதி இந்துக்கள் தாழ்த்தப்பட்டவர்களைத் தெருவிலும் நடக்க விடாதபடி கொடுமை செய்து வந்தனர். பெரியார் சத்தியாக்கிரகம் ஆரம்பித்தார். அப்போது நான் ஒரு சிறிய தொண்டன்தான். பெரியாருக்கு அப்போது என்னைத் தெரியாது; அவர் பெரிய தலைவர். இப்போதும் அவரை எனக்குத் தெரியாது. ஏதோ நான் அவரைப் பார்த்திருக்கிறேன். வைக்கம் நகரில் தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தை நடத்தியதற்காகத் தமிழ்த் தென்றல் திரு.வி.க. ‘வைக்கம் வீரர்’ என்று பெரியாருக்குப் பட்டத்தைச் சூட்டினார். தள்ளாத வயதிலும் ஜாதி ஒழிப்புக்கும் பாடுபட்டு, தன் வாழ்நாளிலேயே அதைக் காண வேண்டுமென்று எதிர்பார்த்திருக்கிறார் பெரியார்” என்று மனம் திறந்து பாராட்டினார்.