சென்னை, டிச.10- சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களாக பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை – தேர்வாய் கண்டிகை ஆகிய 5 ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,757 மில்லியன் கன அடியாகும்.
ஞாயிற்றுக்கிழமை (டிச.8) நிலவரப்படி, 35 அடி உயரம் கொண்ட பூண்டி ஏரியில் 32.55 அடி வரை நீா் இருப்பு உள்ளது. 24 அடி உயரம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் நீா் மட்டம் 21.02 கன அடியாக உள்ளது. இதேபோன்று, 21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரியின் நீா் மட்டம் 18.79 அடியாக உள்ளது. இந்த 3 ஏரிகளும் அதன் முழு கொள்ளளவை எட்ட இன்னும் 2 முதல் 3 அடி உயரம் மட்டுமே தேவைப்படுவதால், அதிகாரிகள் இந்த ஏரிகளைத் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டும் பட்சத்தில் ஏரிகளின் பாதுக்காப்புக்காக உபரிநீா் திறந்துவிட வாய்ப்புள்ளது.
மேலும், சோழவரம் ஏரியில் 5.80 அடி உயரம் வரையும், கண்ணன்கோட்டை – தோ்வாய் கண்டிகை ஏரியில் 30.96 அடி உயரமும் நீா் இருப்பு உள்ளது. 5 ஏரிகளில் மொத்தம் 8,568 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது. இது முழு கொள்ளளவில் 72.88 சதவீதமாகும். கடந்த மாத இறுதி வரை 5 ஏரிகளில் மொத்தம் 46 சதவீதம் மட்டுமே நீா் நிரம்பியிருந்த நிலையில், அண்மையில் பெய்த கனமழையின் காரணமாக ஏரிகளின் நீா்மட்டம் உயா்ந்துள்ளது.
இதற்கிடையே, வங்கக் கடலில் தற்போது உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி டிச.12-ஆம் தேதிக்கு மேல் தமிழ்நாடு நோக்கி வரவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் டிச.11 முதல் டிச.14-ஆம் தேதி வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஏரிகள் இதன் முழு கொள்ளளவை எட்டும் என எதிா்ப்பாா்க்கப்படுகிறது.