55ஆவது இந்திய பன்னாட்டுத் திரைப் பட விழா பாஜக ஆளும் கோவா மாநில தலைநகர் பனாஜியில் (நவம்பர் 20 முதல் 28 வரை) நடைபெற்றுள்ளது. “இளம் திரைப்பட தயாரிப்பாளர்கள் – எதிர்காலம்” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த பன்னாட்டுத் திரைப்படத் திருவிழாவில் 81 நாடுகளில் இருந்து 180 பன்னாட்டுத் திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளன.
பன்னாட்டளவிலான அறிஞர்கள், எழுத்தாளர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் பங்கேற்ற இந்த கோவா பன்னாட்டுத் திரைப் பட விழாவை ஒன்றிய பிஜேபி அரசு ஹிந்துத்துவா கொண்டாட்டக் களமாக மாற்றி விட்டது. ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் தலைமையேற்று நடத்திய இந்த பன்னாட்டுத் திரைப்பட விழாவை பிரதமருக்கு நெருக்கமான மோசடி சாமியார் சிறீசிறீ ரவிசங்கர் துவங்கி வைத்தார். பன்னாட்டுத் திரைப்பட விழாவின் திரையிலும், வெளிப்புறத்திலும் ராமர், ஹனுமான், மகாவிஷ்ணு உள்ளிட்ட உருவ வடிவங்களும் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக கோவா பன்னாட்டுத் திரைப்பட விழா அரங்கு முழுவதும் காவி வண்ணம் பூசப்பட்டு இருந்தது.
சுதந்திரப் போராட்டத்தின் பொழுது பிரிட்டிஷ் அரசுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து தண்டனை தளர்வு பெற்றவரும், காந்தியார் கொலை வழக்கில் ஒரு குற்றவாளியுமான சாவர்க்கரை நாயகனாகச் சித்தரித்த “சுதந்திர வீர் சாவர்க்கர்” இந்திய பனோரமாவின் (இந்திய பன்னாட்டுத் திரைப்பட விழா) தொடக்கப் படமாக திரையிடப்பட்டது. காந்தியாரை இழிவுபடுத்தியும், நேதாஜி, அம்பேத்கர், பகத்சிங் ஆகியோர் சாவர்க்கரின் உபதேசப்படியே இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றனர் என்பது போன்ற சர்ச்சைக்குரிய காட்சிகள் “சுதந்திர வீர் சாவர்க்கர்” திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளன.
இந்திய திரையுலகில் மண்ணை கவ்விய, 370 ஆவது சட்டத்திருத்தத்தை ரத்து செய்து ஜம்மு-காஷ்மீரை மோதல் நிலமாக்கிய ஒன்றிய பிஜேபி அரசாங்கத்தின் செயல்பாட்டை நியாயப்படுத்தும் “ஆர்டிகல் 370” என்ற ஹிந்தி திரைப்படம், மஹாவிஷ்ணுவின் அவதாரங்களின் கதையான “மஹாவதார் நரசிம்மா” என்ற 3டி அனிமேஷன் திரைப்படம், சிறீகிருஷ்ணனின் அவதாரப் படமான “கல்கி 2898 A.D.” என்ற தெலுங்குத் திரைப்படம், கொங்கணின் விநாயகர் திருவிழாவை மய்யப்படுத்தும் “கரத் கணபதி” என்ற மராத்தி திரைப்படம் உள்ளிட்ட ஹிந்துத்துவாவை போற்றும் திரைப்படங்கள் திரையிடப்பட்டன.
பன்னாட்டுத் திரைப்பட விழாவை ஹிந்துத்துவா கொண்டாட்டக் களமாக மாற்றிய ஒன்றிய அரசின் செயல்பாட்டிற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
விஞ்ஞான கண்டுபிடிப்புக் கருவிகளைப் பயன்படுத்தி அஞ்ஞான மூடத்தன சரக்குகளை வினியோகம் செய்யும் இவர்களை எந்தத் தரத்தில் நிறுத்துவது?
இந்திய அரசமைப்புச் சட்டம் 51A(h) என்ன சொல்லுகிறது. மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மையையும், சீர்திருத்த உணர்வையும் ஏற்படுத்த வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று கூறப்பட்டுள்ளது. இதனை ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களே காலில் போட்டு மிதிப்பது ஏற்கத்தக்கதுதானா?
என்ன செய்வது சட்டத்தில் சரத்துகளைக் காப்பாற்ற வேண்டிய தலைமை நீதிபதிகளே, தம் வீட்டில் நடக்கும் ‘பூஜைக்கு’ம் பிரதமரை அழைக்கும் அளவுக்கு நிலை குலைந்து போயிருக்கிறதே – என்ன சொல்ல!