வல்லம், டிச. 9- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சமூகப்பணித்துறை மாணவர்களின் கிராமிய முகாம் 18.11.2024 முதல் 22.11.2024 வரை பெரியார் புரா கிராமங்களான மருதக்குடி, பாளையப்பட்டி தெற்கு, புதுக்குடி, அய்யாசாமிபட்டி, முத்தாண்டிப்பட்டி, செங்கிப்பட்டி மற்றும் சானூரப்பட்டி ஆகிய இடங்களில் நடைபெற்றது.
முதல் நாள் நிகழ்வு : 18.11.2024
துவக்க நாள் நிகழ்வாக மருதக்குடியில் “நம் நலமே நாட்டின் வளம்” என்ற கருத்தை மய்யப்படுத்தி மீனாட்சி மருத்துவமனையோடு இணைந்து மருதக்குடியில் 18.11.2024 அன்று காலை பொது மருத்துவமுகாம் நடத்தப்பட்டது. சமூகப்பணித்துறையின் முதலாம் ஆண்டு மாணவி கோ.ர.பிரகல்யா வரவேற்புரை வழங்கினார்.
இம்முகாமில் சமூகப் பணித்துறையின் இணைப் பேராசிரியர் முனைவர் அ.ஆனந்த் ஜெரார்டு செபாஸ்டின் அறிமுகவுரை வழங்கினார். அவர் தமது உரையில், சமூகப் பணித்துறையின் செயல்பாடுகள் குறித்து பெரியார் புரா கிராமங்களில் சமூகப்பணித்துறை செய்து வரும் நற்பணிகளை பற்றி விளக்கினார். இம்முகாமிற்கு பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் பதிவாளர் முனைவர் பூ.கு.சிறீவித்யா தலைமை வகித்தார். அவர் உரையாற்றுகையில், பெண்கள் தங்கள் உடல் நலத்தில் முழுக் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும், உடல் நலக் குறைபாடு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் தகுந்த ஆலோசனை பெற வேண்டும் என்றார். மேலும், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) உயிரி தொழில்நுட்பத் துறையின் பேராசிரியர் முனைவர் வெ.சுகுமாறன் வாழ்த்துரை வழங்கினர். அதனைத் தொடர்ந்து மருத்துவர் பி.குருநாதன் மற்றும் குழுவினர் சிறப்புரையாற்றி மருத்துவ முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு இ.சி.ஜி. அளவிடும் சோதனையும், இரத்த சர்க்கரை அளவு சோதனை, இரத்த அழுத்த சோதனை மற்றும் மருத்துவ ஆலோசனையுடன் மருந்துகளும் வழங்கினர். இந்த நிகழ்வில் மருதக்குடி ஊராட்சி மன்ற தலைவி அம்மா செல்லம் முன்னிலை வகித்தார். அவர் தமது உரையில், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சார்பாக எடுக்கப்படும் திட்டங்களுக்கு மருதகுடி ஊராட்சி மன்றம், துணை நிற்கும் என்று கூறினார். மேலும் இந்நிகழ்வில் பெரியவர்கள், குழந்தைகள் உள்பட சுமார் 102 பயனாளர்கள் கலந்துகொண்டனர்.
முதல் நாளின் மாலை நிகழ்வு – 1
‘இளம் பருவத்தினரின் பாதுகாப்பும் மேம்பாடும்’
மாலை நிகழ்வாக ‘இளம் பருவத்தினரின் பாதுகாப்பும் மேம்பாடும்’ என்ற தலைப்பில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சமூகப்பணித்துறையின் முதலாம் ஆண்டு மாணவர் கு.வெங்கடேசன் வரவேற்புரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சமூகப் பணித்துறை உதவிப் பேராசிரியர் த.அலமேலு அறிமுகவுரை வழங்கினார்.
குழந்தைகள் நல மய்ய – 1098இன் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் ஒழுக்கம் குறித்து குழந்தைகளிடத்தில் கலந்துரையாடினார். மேலும் குழந்தைகள் வன்கொடுமை பற்றிய விழிப்புணர்வை குழந்தைகளிடத்தில் ஏற்படுத்தினார். குழந்தைகள் பாதுகாப்பாக சமூதாயத்தில் எவ்வாறு வாழவேண்டும் என்றும் அறிவுரைகள் சில கூறினார். மேலும் குழந்தைகளுக்கு குழந்தைகள் உதவி எண்-1098 பற்றி தெரிந்திருக்க வேண்டும் என கூறினார்.
சமூகப் பணித்துறை மாணவிகளின், கலை நிகழ்ச்சிகளோடு குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் 50-க்கு மேற்பட்ட குழந்தைகள் பயனடைந்தனர். இந்நிகழ்ச்சியின் இறுதி நிகழ்வாக சமூகப்பணித்துறை முதலாமாண்டு மாணவி லா.லாராஹரினா நன்றியுரை வழங்கினார்.
முதல் நாளின் மாலை நிகழ்வு – 2
“வீடுதோறும் தூய்மை நாடு தோறும் நல்வாழ்வு” என்ற தலைப்பில் நடைபெற்றது. சமூகப் பணித்துறையின் முதலாம் ஆண்டு மாணவி பா.தேவப்பிரியா வரவேற்புரை வழங்கினர். சமூகப் பணித்துறையின் உதவிப் பேராசிரியர் முனைவர் சூ.ஞானராஜ் இந்நிகழ்ச்சியில் அறிமுகவுரை ஆற்றினார்.
இதனைத் தொடர்ந்து பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் உயிரி தொழில் நுட்பத் துறையின் பேராசிரியர் முனைவர் வெ.சுகுமாறன் சிறப்புரை ஆற்றினார். மேலும் தமது உரையில், குழந்தைகளின் நலம் பற்றியும் பெரியவர்களின் உடல்நலம் பேணுதலின் முக்கியத்துவம் குறித்து ஆலோசனையும், தூய்மை காப்பதின் அவசியம் குறித்து பெண்களிடையே தெளிவாக விவரித்தார்.
சமூகப் பணித்துறையின் முதலாம் ஆண்டு மாணவி மு.கவிநிலா நன்றியுரை வழங்கினார்.
இரண்டாம் நாள் நிகழ்ச்சி (19.11.2024)
இரண்டாம் நாளின் நிகழ்வாக “வேளாண்மையும், மேலாண்மையும்” என்ற தலைப்பை மய்யப்படுத்தி பாளையப்பட்டி தெற்கில் காலை “மரம் வளர்ப்போம் மண் வளம் காப்போம்” என்ற கருத்தைக் கொண்டு காலை 10.00 மணி முதல் 11.30 மணி வரை பாளையப்பட்டி தெற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் முதலாம் ஆண்டு சமூகப்பணித்துறை மாணவி அ.நிர்மலா தேவி வரவேற்புரை வழங்கினார். பின் சமூகப்பணித்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் சூ.ஞானராஜ் அறிமுகவுரையாற்றினார். அவர் தம் உரையில், இயற்கையை பாதுபாப்பது பற்றி அறிந்துகொள்ள மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் தா.கீர்த்திவாசன் (உதவிப் பேராசிரியர், கட்டடவியல் துறை மற்றும் இயக்குநர், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் மய்யம், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்) மாணவர்களிடையே இயற்கை என்றால் உங்கள் மனதில் என்ன தோன்றும் என்ற கேள்வியுடன் தனது உரையை ஆரம்பித்து மாணவர்களுக்கு மரம் வளர்ப்பதின் முறையையும், 1974இல் சிலி நாட்டில் நடைபெற்றதை சுட்டிக்காட்டி மரம் நடுவதை போல் மரத்தை காப்பதும் முக்கியமானது என அறிவுறுத்தினார். மேலும் மாணவர்களுக்கு மரம் வளர்ப்பதற்கு பின் மிகப்பெரிய பொறுப்புணர்ச்சி வேண்டும் என்றும் சரியான மரங்களை வளர்க்க வேண்டும் எனவும் காடு வளர்ப்பு பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். காடு வளர்ப்பை கவனமாக செய்யவேண்டும் எனவும் மறு மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும் என்றும், காற்று மாசின் விளைவைப் பற்றியும் விளக்கினார். இந்த நிகழ்வின் மூலம் நாற்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெற்றனர். இறுதியாக முதலாம் ஆண்டு சமூகப்பணித்துறை மாணவி லா.லாரா ஹரினா நன்றியுரையாற்றினார்.
இரண்டாம் நாள் நிகழ்ச்சி – மாலை நிகழ்வு
“வேலை மற்றும் வாழ்வின் சமநிலை பார்வை” என்ற மய்யக் கருத்தை கொண்டு மாலை 2.00 மணி முதல் பாளையப்பட்டி தெற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகே நடைபெற்றது. இந்த நிகழ்வில், முதலாம் ஆண்டு சமூகப் பணித்துறை மாணவர் பா.ஹரிபிரசாத் வரவேற்புரை வழங்கினார். பின் சமூகப் பணித்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் சூ.ஞானராஜ் அறிமுகவுரையாற்றினார். அவர் தமதுரையில், கிராம மக்களுக்கு வேலை மற்றும் வாழ்வின் சமநிலை கொண்டு நல்வாழ்வு வாழ வேண்டியுள்ள கருத்துகளை குறிப்பிட்டார். பின் ரெ.கமலதாசன் (ஊராட்சி மன்ற தலைவர், பாளையப்பட்டி தெற்கு)தலைமையுரையாற்றி சிறப்பித்தார்.
சிறப்பு விருந்தினர் இரா.இந்துமதி (நிர்வாக இயக்குநர் ஸ்கோப் நிறுவனம், திருச்சி) கிராம வளர்ச்சியில் அன்றும் இன்றும் உள்ள வேறுபாடுகள் கிராமத்தின் முன்னேற்றம் போன்றவற்றை மக்களோடு கலந்துரையாடினார்.
‘வயதிற்கும் மகிழ்ச்சிக்கும் எந்த வித தொடர்பும் இல்லை மகிழ்ச்சி என்பது நம் மனநிலையே’ என்பதை மக்களிடம் தெளிவாக விளக்கினார். ‘குழந்தைகளுக்கு பெரியவர்கள் எடுத்துக்காட்டாக இருக்கவேண்டும்’ என்பதையும் வலியுறுத்தினார். இந்நிகழ்வில் பள்ளிக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் செய்து தரும்படி பள்ளி நிர்வாகத்தின் சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
மாலை நிகழ்வு – 2
‘இயற்கையோடு இணைந்து வாழ்வோம்’ என்ற தலைப்பில் மாலை 6.00 மணி முதல் பாளையப்பட்டி தெற்கு சவேரியார் கோவில் அருகில் நடைபெற்றது. இந்நிகழ்வில் முதலாமாண்டு சமூகப்பணித்துறை மாணவி கோ.ர.பிரகல்யா வரவேற்புரை ஆற்றினார். பின்னர் சமூகப் பணித்துறை உதவிப் பேராசிரியர் த.அலமேலு அறிமுகவுரையாற்றினார். அவர் தம் உரையில், கிராம மக்களுக்கு இயற்கையோடு எவ்வாறு இணைந்து வாழவேண்டும் என்பதைப் பற்றிய கருத்துகளை குறிப்பிட்டார்.
சிறப்பு விருந்தினர் மா.சிங்காரம் (ஓய்வு) – வளச்சரகர் சிறப்புரை ஆற்றினார். அவரது உரையில், இன்று நாம் பயன்படுத்தும் வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுபாடு, காடுகளை அழிப்பதனால் ஏற்படும் நிலச்சரிவு, நீர் நிலை மற்றும் பாதுகாப்புப் பற்றியும், பூச்சிக்கொல்லி இல்லாத விவசாயத்தை பற்றி நம்மாழ்வார் கூறிய கருத்துகளையும் பதிவிட்டார். மாணவர்களுக்கு விவசாயத்தையும் அதன் சிறப்புகளையும் எடுத்துரைத்தார். இயற்கையை மீட்டெடுக்கும் பணியில் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் மிகவும் முக்கிய பங்கு வகித்துள்ளது என்பதையும் குறிப்பிட்டார்.
இறுதியாக சமூகப்பணித்துறை முதலாமாண்டு மாணவி அ.தஸ்பிஹா பானு நன்றியுரையாற்றினார்.
மூன்றாம் நாள் நிகழ்ச்சி அறிக்கை
மூன்றாம் நாள் நிகழ்வாக புதுக்குடியில் “நற்கல்வியே நமக்கு துணை” என்ற தலைப்பில் நிகழ்ச்சிகள் நடை பெற்றன. முதலாமாண்டு மாணவி கோ.ர.பிரகல்யா வரவேற்புரை வழங்கினார். இதனைத் தொடர்ந்து புதுக்குடி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆ.செ.சந்திரசோதி தலைமையுரை வழங்கினார். மேலும் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) விண்வெளி பொறியியல் துறையின் தலைவர் மற்றும் உதவிப் பேராசிரியர் முனைவர் இ.கார்த்திக் சுப்ரமணியன் சிறப்புரை வழங்கினார்.
அவர் தமது உரையில், ‘நீங்களும் ஆகலாம் அறிவியல் விஞ்ஞானி’ என்ற தலைப்பில் மேதகு கலாம் அவர்களை முன் உதாரணம் காட்டி குழந்தைகள் அனைவரும் இலட்சியத்தை நோக்கி பயணிக்க வேண்டும் என்றார். ஆர்வம், பொறுமை தன்னம்பிக்கை போன்றவை ஒரு சிறந்த விஞ்ஞானியை உருவாக்கவல்லது என கூறினார். இதனையடுத்து குழந்தைகள் நல குழு தலைவர் முனைவர் வி.உஷா நந்தினி உரையாற்றினார். அவர் தமது உரையில், குழந்தைகளிடம் குழந்தை உதவி எண்-1098 பற்றி கேட்டறிந்தார். மேலும் அவர் குழந்தைகளுக்கு போதைப் பொருட்களால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதனைத் தொடர்ந்து அப்பள்ளியில் மரக் கன்றுகள் நடவு செய்து அதனை பாதுகாக்க வேலியும் அமைக்கப்பட்டது.
பன்னாட்டு குழந்தைகள் நாளை முன்னிட்டு அங்கிருந்த குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சுமார் 100-க்கு மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்று பயன்பெற்றனர். என்ற தலைப்பை மய்யப் படுத்தினார்.
மாலை நிகழ்வு -1
கிராமப்புற பங்கேற்பு மதிப்பீடு பயிற்சி
மாலை 2.30 மணி முதல் புதுக்குடி ஊராட்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதலாமாண்டு சமூகபணித்துறை மாணவி அ.தஸ்பிஹாபானு வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினர் அ.விஜய்கிருஷ்ணன் ஜெனரஸ் நிறுவனம் மற்றும் ஆலோசகர் சிறப்புரை ஆற்றினார். அவர் தமது உரையில், பங்கேற்பு கிராமப்புற மதிப்பீடு பற்றிய தெளிவான விளக்கத்தை கூறினார். சமூகத்தில் உள்ள பிரச்சினைகளை முதலில் கண்டறிய வேண்டும் மற்றும் கிராம மக்களின் தேவையை கண்டறிந்து கூறினார். கிராமத்தின் வளங்களை கண்டறிந்து அதனை கிராம மக்கள் எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்று ஆய்வு செய்வது கிராம மக்களை எவ்வாறு அணுகுவது என்பதை பயிற்சி அளித்தார். குறுக்கு நடை பற்றி கூறினார். அதனைத் தொடர்ந்து சமூக பணித்துறை மாணவர்கள் கிராம மக்களுடன் இணைந்து கிராம வரைபடம் மற்றும கிராமங்களின் வளங்கள் பற்றி வரைந்து தெரிந்து கொண்டனர்.
மாலை நிகழ்வு – 2
‘கல்விக் கண் அறிவின் திறவு எண்’ என்ற தலைப்பில் மாலை 6.30 மணி முதல் புதுக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி (ஆதி திராவிட நலத்துறை) அருகில் நடைபெற்றது. வரவேற்புரையை சமூகப் பணித்துறையின் முதலாமாண்டு மாணவி அ.நிர்மலா தேவி வழங்கினார். அதனைத் தொடர்ந்து முனைவர் கா.செல்வக்குமார் சிறப்புரை ஆற்றினார்.
அவர் தமது உரையில், “பள்ளிக்கூடங்கள் தான் சமூகத்திற்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது என்றும் நட்பு வட்டாரங்கள் பற்றியும் சக மாணர்வளுடன் பழகும் தன்மையும், விளையாட்டு போன்ற தனித்திறமைகளை வளர்ப்பதற்கும் பள்ளிகூடங்கள் தான் ஏதுவாக இருக்கிறது” என்று கூறினார். ஞாபகத்தன்மையை அதிகரிக்க மாணவர்களுக்கான ஆலோசனைகளை வழங்கினார். “உலகமே திரும்பி பார்ப்பதற்கு படிப்பு மட்டுமே மிகச் சிறந்த பாதை” என்று மாணவர்களுக்கு விளக்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
நான்காம் நாள் காலை
கிராமிய முகாம் 2024 நான்காம் நாளின் நிகழ்வாக ‘சமத்துவமும் சமூக வளர்ச்சியும்’ என்ற தலைப்பை மய்யப்படுத்தி (21.11.2024) வியாழக்கிழமை அன்று காலை நிகழ்வாக ‘உழவன் ஆட்சி உழவே சாட்சி’ என்ற மய்யக் கருத்தை கொண்டு காலை 9.00 மணி முதல் டான் போஸ்கோ மாதிரி பண்ணையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் முதலாம் ஆண்டு சமூகப்பணித்துறை மாணவி தேவப்பிரியா வரவேற்புரை வழங்கினார். சமூகப் பணித்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் சூ.ஞானரரஜ் அறிமுகவுரையாற்றினார். அவர்தம் உரையில் டான் போஸ்கோ மாதிரி பண்ணையின் சிறப்புகளை பற்றி விளக்கினார்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் எம்.மைக்கேல் (டான் போஸ்கோ மாதிரி பண்ணை ஒருங்கிணைப்பாளர்) சமூகப் பணித்துறை மாணவர்களுக்கான களப்பணியையும் மாதிரி பண்ணையைப் பற்றியும் அங்குள்ள செடிகள் மூலிகைகள் போன்றவற்றின் நன்மைகள் பற்றி விளக்கிக் கூறினார்.
பின்பு சமூகப்பணித்துறை மாணவர்கள் களப்பணியில் அங்குள்ள களைகளை சீர்செய்து நிலத்தை சுத்தம் செய்தனர்.
மாலை நிகழ்வு – 1
மாலை 1 மணி முதல் ‘பெண்களின் பாதுகாப்பும் சமூதாய மேம்பாடும்’ என்ற தலைப்பை மய்யப்படுத்தி அய்யாசாமிப் பட்டியில் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் முதலாமாண்டு சமூகப்பணித்துறை மாணவி லா.லாரா ஹரினா வரவேற்புரை வழங்கினார். பின் சமூகப் பணித்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் சூ.ஞானராஜ் அறிமுகவுரையாற்றினார். அவர்தம் உரையில், பொதுமக்களிடம் சமூகப்பணித்துறை மாணவர்களின் செயல்பாடுகள் குறித்தும் பெண்களின் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு குறித்த விழிப்புணர்வை அறிந்துகொள்ளவும் ஊக்கப்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியை சிறப்பு விருந்தினர் அ.திவ்யா (ஆலோசகர், ஒருங்கிணைந்த சேவை மய்யம், தஞ்சாவூர்) ஒருங்கிணைந்த சேவை மய்யங்களில் சேவைகளைப் பற்றி கிராம மக்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார். மகளிர் மேம்பாட்டை உறுதி செய்யவும் அவர்களை பாதுகாக்கவும் மகளிர்க்கான உதவி எண்-181 குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
பெற்றோர்களுக்கும், இளம்பருவ குழந்தைகளுக்கும் நடுவே இருக்கும் இடைவெளியை குறைக்கவும், ஒருவருடன் ஒருவர் மனம்விட்டு பேசவும் வலியுறுத்தினார். பெண்களுக்கு அரசாங்கம் என்னென்ன சலுகைகள் வழங்குகிறது – அதனை எப்படிப் பெறலாம் என்பதையும் விளக்கினார். இந்த நிகழ்வின் மூலம் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பயனடைந்தனர். இறுதியாக சமூகப்பணித்துறை முதலாமாண்டு மாணவி கா.வினோதா நன்றியுரையாற்றினார்.
மாலை நிகழ்வு – 2
மாலை நிகழ்வு 6.00 மனி முதல் 7.30 மணி வரை “தொழில்முனைவும் பொருளாதார முன்னேற்றமும்” என்ற தலைப்பில் மய்யப்படுத்தி அய்யாசாமிபட்டியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் முதலாமாண்டு சமூகப்பணித் துறை மாணவி அ.தஸ்பிகா பானு வரவேற்புரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் சி.ஜார்ஜ் பெர்னாண்டஸ் (பயிற்சி ஒருங்கிணைப்பாளர். வாப்ஸ் மதுரை, HFL சமஸ்தா, CSR வல்லம்) பெண்கள் எவ்வகையில் சுயதொழில்களில் அவர்களை ஈடுபடுத்திக்கொள்ளலாம் என்றும். அவர்தம் நிறுவனத்தின் சுயதொழில் பயிற்சிகள் கொடுத்துக் கொண்டிருப்பதையும், தொழில் முனைவோரின் முன்னேற்றத்திற்கு எவ்வகையான பயிற்சி வேண்டும். அதை எப்படி செயல்படுத்துவது என்றும் எடுத்துரைத்தார். அதுமட்டுமல்லாது. பயிற்சிகள் குறித்த துண்டு வெளியீடும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் மூலம் அறுபதுக்கும் மேற்பட்ட பெண்கள் பயன்பெற்றனர். இதனைத் தொடர்ந்து சமூகப் பணித்துறையின் உதவிப்பேராசிரியர் முனைவர் ஞானராஜ் விளக்கவுரையாற்றினார். அதன்பின் சமூகப் பணித்துறை மாணவர்கள் கலை நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு தப்பிசைத்தும், பாடல் பாடியும் அங்கிருந்த குழந்தைகளையும் கலை நிகழ்ச்சிகளில் ஈடுபடச் செய்தனர். பின் அக்குழந்தைகளுக்கு சிறப்புப் பரிசும் வழங்கப்பட்டது. நிறைவாக முதலாமாண்டு சமூகப்பணித்துறை மாணவன் கு.வெங்கடேசன் நன்றியுரையாற்றினார்.
அய்ந்தாம் நாள்
போதைப் பொருட்களுக்கு எதிரான கையெழுத்து பிரச்சாரம்
காலை நிகழ்வாக போதைப் பொருட்களுக்கு எதிரான கையெழுத்து பிரச்சாரம் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் மது, போதை ஒழிப்பை மய்யமாகக் கொண்டு சானூரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் இரா.நந்தகுமார் முதலில் கையெழுத்திட்டு இப்பிரச்சாரத்தை துவக்கி வைத்து உரையாற்றினார். இதன் மூலம் பொதுமக்களும் காவல் துறையினரும் இப்பிரச்சாரத்தில் கலந்துகொண்டு கையெழுத்திட்டு போதைப் பொருட்களுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு அவர்களது ஆதரவை தெரிவித்தனர். இதில் 500க்கு மேற்பட்ட பொது மக்கள் விழிப்புணர்வு பெற்றனர். மேலும், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலை பல்கலை.) சமூகப் பணித்துறை மாணவ, மாணவிகள் போதைப் பொருட்களுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மது போதையும் மறுவாழ்வும்
இறுதி நாளின் மாலை நிகழ்வு “மது போதையும் மறுவாழ்வும்” என்ற கருத்தைக்கொண்டு மாலை 6 மணி முதல் முத்தாண்டிபட்டியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சமூகப்பணித்துறை முதலாம் ஆண்டு மாணவி அ.தஸ்பிகாபானு வரவேற்புரை ஆற்றினார். இதனைத் தொடர்ந்து முனைவர் அ.ஆனந்த்ஜெரார்டு செபாஸ்டின் (இணைபேராசிரியர், சமூகப்பணித்துறை மற்றும் இயக்குநர், பெரியார் புரா ஊராக வளர்ச்சி மய்யம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் தஞ்சாவூர்) அறிமுகவுரை வழங்கினார். இந்நிறைவு விழாவில் கிராமிய முகாமின் ஒருங்கிணைந்த அறிக்கை முதலாமாண்டு சமூகப் பணித்துறை மாணவர்கள் லா.லாராஹரினா, கோ.ர.பிரகல்யா. பா.தேவபிரியா, அ.தஸ்பிஹாபானு, கா.வினோதா போன்றோரால் பொது மக்கள் முன் வாசிக்கப்பட்டது. பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலை பல்கலை.) துணைவேந்தர் பேரா.வெ.இராமச்சந்திரன் தலைமையுரை ஆற்றினார்.
குடிபோதை குடும்பத்தை பாதிக்கும்
அவர் தம் உரையில், மாணவர்களும் பொதுமக்களும் எங்களை பயன்படுத்தி எவ்வகையில் அறிவுத்திறனை மேம்படுத்தலாம் என்றும் ‘குடிபோதை குடும்பத்தை பாதிக்கும்’ என்ற கருத்தினையும், காடுகளின் தந்தை காடுகளின் விஞ்ஞானி ஜாடவின் சிறிய முயற்சி இன்று பெரிய காட்டை உருவாக்க வழி செய்ததாக அவரின் வாழ்க்கையை எடுத்துக்காட்டாக கூறி மாணவர்கள் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்று கூறி விளக்கமளித்தார். பின் சிறப்பு கலைக் குழுவினரான லெனின் மற்றும் தங்கவேல் அவர்களின் ‘மது போதை மற்றும் மறு வாழ்வு’ பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே பாடல் மூலம் எடுத்துரைத்தனர்.
சிறப்பு விருந்தினர் மு.பாரதிமோகன், (திட்ட இயக்குநர், குடிபோதை மறுவாழ்வு மய்யம் காஜாமாலை மகளிர் மன்றம், திருச்சி) சிறப்புரை ஆற்றினார். அவர்தம் உரையில், மது போதையில் மனிதர்களின் வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்பையும் அதிலிருந்து மீண்டு வருவதற்கான மனப் பக்குவம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் தெளிவாக மக்களிடையே எடுத்துரைத்தார். இறுதியாக சமூகப்பணித்துறை முதலாமாண்டு மாணவி பா.தேவப்பிரியா நன்றியுரை வழங்கினார்.