திருச்சி,டிச.9- அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். திருச்சியில் அவர் 7.12.2024 அன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அதிகரிப்பு
அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. எனவே மாணவர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டிய சூழல் எழுந்துள்ளது. உதவி உடற்கல்வி ஆசிரியர்கள் 3 ஆயிரம் பேருக்கான தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நிறைவடைந்துள்ளது.
அவர்களுக்கு பணி வழங்கக் கூடிய சூழலில் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் தங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன் காரணமாக 3 ஆயிரம் பேரை பணி நியமனம் செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளது. மேலும், இடைநிலைப் பள்ளி ஆசிரியர் காலி பணியிடங்கள் உள்ளன. கடந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக கண்டு கொள்ளப்படவில்லை. பணி நியமனத்திற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவர்களுக்கும் சேர்த்தே தேர்வு நடத்தியுள்ளோம். முதலமைச்சரின் உத்தரவை பெற்று அவர்களுக்கு பணி வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
வெம்பக்கோட்டை அகழாய்வில் அதிக அளவு மண்பாண்ட ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன
விருதுநகர், டிச. 9- வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளத்தில் வைப்பாற்றங்கரையில் 3Mம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 16 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த அகழாய்வில், சேதமடைந்த சுடுமண்ணாலான உருவ பொம்மை, கண்ணாடி மணிகள், சங்கு வளையல்கள், வட்டச்சில்லு, தங்கமணிகள் என 2,600-க்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், புதிதாகத் தோண்டப்பட்ட குழியில் சுடுமண்ணாலான அலங்கரிக்கப்பட்ட மணிகள், சங்கு வளையல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும், அதிக அளவில் மண்பாண்ட ஓடுகள் கிடைத்துள்ளன. கருப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் கிடைக்கும் மண்பாண்ட ஓடுகளைக் குறியிட்டு, அவற்றை ஆவணப்படுத்தும் பணியில் தொல்லியல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிக அளவில் மண்பாண்ட ஓடுகள் கிடைத்துள்ளது, இப்பகுதியில் தொழிற்கூடங்கள் இருந்ததற்கான சான்றுகளாகும் என்று அகழாய்வு கள இயக்குநர் பொன்.பாஸ்கர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை 16 விழுக்காடு அதிகம்
சென்னை, டிச.9- தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை நிகழாண்டில் இயல்பை விட 16 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது. அதிகபட்சமாக நாகையில் 913 மி.மீ., சென்னையில் 845 மி.மீ. மழை பெய்துள்ளது.
நிகழாண்டில் வடகிழக்குப் பருவமழை கடந்த அக்.15-இல் தொடங்கி, தற்போது வரை தமிழ்நாட்டில் பரவலாக மழைபெய்து வருகிறது. மேலும், ஃபென்ஜால் புயல் காரணமாக விழுப்புரம், கடலூா், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை கொட்டித் தீா்த்தது.
அதில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஆகிய பகுதிகளில் 500 மில்லி மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்தது.
16 சதவீதம் அதிகம்: இதன் காரணமாக, தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை அக்.1 முதல் டிச.8-ஆம் தேதி வரை இயல்பாக 387.7 மி.மீ. மழை பெய்ய வேண்டிய நிலையில், தற்போது 448.6 மி.மீ. மழை பெய்துள்ளது. அதாவது, இயல்பை விட 16 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது. அதே நேரத்தில், தூத்துக்குடி, தென்காசி, விருதுநகா் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இயல்பைவிட குறைவாகவே மழை பெய்துள்ளது.
சென்னையில் இயல்பாக 718 மி.மீ. மழை பெய்ய வேண்டிய சூழலில், நிகழாண்டில் இயல்பை விட 845 மி.மீ. அதாவது 18 சதவீதம் அதிகமாக மழை பெய்தது. புயலுக்கு முன்பு வரை சென்னையில், இயல்பை விட 3 சதவீதம் குறைவாக மழை பெய்திருந்தது குறிப்பிடத்தக்கது.