அருமைத் தோழர்களே, நீங்கள் காட்டும் அன்பும், ஆதரவும் 92 வயதில் மேடைக்கு வந்த என்னை 29 வயதுடையவனாக திரும்பச் செய்துள்ளது!
தந்தை பெரியாருக்குப் பின் இயக்கம் இருக்காது என்று எண்ணியவர்கள் ஏமாந்தார்கள், தோல்வி அடைந்தார்கள்!
இப்பொழுது நமது கடமை ‘திராவிட மாடல்’ ஆட்சியைக் காப்பதே!
வானவில் நிரந்தரமானதல்ல; ஆனால், சூரியன் நிரந்தரமானது!
திராவிடம் என்ற சுயமரியாதை – சமதர்மம் – பகுத்தறிவுக் கொள்கையை நாடெங்கும் கொண்டு செல்வோம்!
இவ்வளவு சிறப்பாக விழாவை ஏற்பாடு செய்தவர்களுக்கும் – திரளாக வந்திருக்கும் உங்களுக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!
சென்னை, டிச.9 திராவிடம் என்பது சுயமரியாதை, பகுத்தறிவு, சமதர்மம் என்பதாகும். அதை அழிக்க எந்தக் கொம்பனாலும் முடியவே முடியாது. ‘திராவிட மாடல்’ அரசைப் பாதுகாப்போம். இது வெறும் வானவில் அல்ல – சூரியன். எவராலும் அசைக்க முடியாது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
கடந்த 7.12.2024 அன்று சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற தமிழர் தலைவர் ஆசிரியரின் 92 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா – புத்தக வெளியீட்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஏற்புரையாற்றினார்.
அவரது ஏற்புரை வருமாறு:
எழுச்சியோடும், நெகிழ்ச்சியோடும் நடை பெறக்கூடிய என்னுடைய 92 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா – ‘‘வாழ்வியல் சிந்தனைகள்’’ (தொகுதி 18) –
‘‘The Modern Rationalist – Annual Number -2024’’ ஆகிய நூல்கள் வெளியீட்டு விழா – தோழர்களுடைய சந்திப்பு இவற்றையெல்லாம் உள்ளடக்கிய இந்நிகழ்ச்சிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வயது 92 என்பது முக்கியமல்ல!
எனக்கு 92 வயது என்பதைவிட, இந்தக் கொள்கைகளை தன்னுடைய வாழ்நாள் கொள்கையாக ஆக்கிக் கொண்டு, பெரியாரை வாசித்ததைத் தாண்டி, என்றைக்கும் சுவாசிப்போம் – அதன்மூலமாக எங்களுடைய சுவாசம் நீண்டு கொண்டிருக்குமே தவிர, அது ஒருபோதும் குறையாது என்று சொல்வதற்கு அடையாளம்தான், பெங்களூருவைச் சார்ந்த அய்யா வீ.மு.வேலு அவர்களுக்கு 105 வயது; அதேபோல, சேலம் ஆத்தூரைச் சேர்ந்த அய்யா ஏ.வி.தங்கவேலு அவர்களுக்கு 103 வயது; பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன அறக்கட்டளையின் தலைவராக இருக்கக்கூடிய பொத்தனூர் அய்யா க.சண்முகம் அவர்களுக்கு 102 வயது.
திராவிடர் மாணவர் கழகத்தில் இருந்து இருக்கக் கூடியவர்கள். குடும்பத்தோடு இந்த இயக்கத்தில் இருக்கக்கூடியவர்கள்.
அவர்களை இங்கே பெருமைப்படுத்தி இருக்கின் றோமே, அதுதான் எனக்கு மிகவும் மகிழ்ச்சிதரும் நிகழ்ச்சியாகும்.
கடந்த 2 ஆம் தேதி நடைபெறவிருந்த இவ்விழாவை கடும் மழையின் காரணமாக, 7 ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தார் கழகத் துணைத் தலைவர் கவிஞர் அவர்கள்.
இன்றைக்கு எங்களுக்குத் திருமண நாள் என்பதையும் கவிஞர்தான் நினைவூட்டினார். எல்லா நாளும் எங்களுக்கு ஒரே நாள்தான்.
தந்தை பெரியார் எனக்கு ஏற்பாடு செய்த திருமணம்
அய்யா பெரியார் அவர்கள், எனக்குத் திருமண ஏற்பாட்டினை செய்யும்பொழுது, நான் அவரிடம், “எனக்கு எதற்கு அய்யா திருமணம்?” என்று கேட்டேன்.
அப்பொழுது அய்யா அவர்கள் சொன்னார், ‘‘இயக்கத்திற்குப் பயன்பட வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஏற்பாட்டினை செய்கிறேன்” என்றார்.
‘‘அப்படியென்றால், செய்யுங்கள்’’ என்று நான் சொன்னேன்.
‘‘பெண்ணைப் பார்த்திருக்கிறாயா?” என்று அய்யா அவர்கள் கேட்டார்.
‘‘பார்க்க வேண்டிய அவசியம் இல்லை; அய்யா; இயக்கத்திற்குப் பயன்படும் என்று சொன்ன பிறகு, யாராக இருந்தால் என்ன?” என்று சொன்னேன்.
அப்படிப்பட்ட ஒரு நாளையும் இன்றைக்கு இணைத்து, எங்களுக்கு 66 ஆவது திருமண நாள் இன்று. எங்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறீர்கள்!
என்னுடைய வாழ்விணையரைத்தான் நீங்கள் பாராட்டவேண்டும்!
என்னைவிட, என்னுடைய வாழ்விணையரைத்தான் நீங்கள் எல்லோரும் பாராட்டவேண்டும். காரணம் என்ன வென்று கேட்டால், நான், மாணவப் பருவந்தொட்டே இந்தப் பணியிலேயே இருக்கின்றவன். என்னுடைய வாழ்விணையர் வசதியாக, குரோட்டன்ஸ் செடி போன்று இருந்தவர்கள். நான், காட்டாமணி போன்று இருக்கக்கூடியவன்.
எல்லோருக்கும் நான் நன்றி சொல்கிறேன். எங்களு டைய பிள்ளைகளுக்குச் சொல்கிறேன்; குருதிக் குடும்பங்களுக்குச் சொல்கிறேன். தோழர்களுக்குச் சொல்கிறேன்; கொள்கைக் குடும்பங்களுக்குச் சொல்கிறேன்; கல்விக் குடும்பங்களுக்கும் சொல்கிறேன். எல்லோருக்கும் சேர்த்து சொல்லிக் கொள்வது என்ன வென்றால், நாங்கள், இல்லறத் துறவிகள்.
சாப்பிடுவதற்கும், தூங்குவதற்கும்தான் வீட்டிற்குச் செல்வோம்; இயக்கப் பணிகளைத்தான் முழு மூச்சாக செய்வோம்.
அந்தப் பணியை இணைத்து, எண்ணிப் பார்த்து பெரிய அளவிற்கு ஏற்பாடு செய்து, சிறப்பாக எல்லோரும் வந்திருக்கின்றீர்கள்.
92 ஆவது பிறந்த நாளை கொண்டாடவேண்டும் என்று சொல்கிறீர்கள்; வயதாகிவிட்டது, வயதாகிவிட்டது என்று சொல்வது பெருமையா?
எதிரிகளைப் பார்க்கிறோம்; களத்தைப் பார்க்கிறோம். சற்று நேரத்திற்கு முன், மிகப் பிரமாதமாக நம்முடைய நூலை வெளியிட்ட, தமிழ்நாட்டினுடைய சிறந்த பொழிவாளர்களில், ஆய்வாளர்களில் சிறப்பாக இருக்கக்கூடியவர்களில் பெருமைக்குரியவர் நம்மு டைய அருமைச் சகோதரர் பீட்டர் அல்போன்ஸ் அவர்கள்; அதேபோல, பேராசிரியர் சுந்தரவள்ளி அவர்கள். ஏராளமான தோழர்கள் இங்கே வந்திருக்கிறீர்கள். உங்கள் அனைவருக்கும் என்னுடைய தலைதாழ்ந்த நன்றியை, வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இங்கே பெரியார் பெருந்தொண்டர்களைப் பாராட்டி பெருமைப்படுத்துவது என்பது இருக்கிறதே, இந்தக் கொள்கையினுடைய வெற்றியைப் புரிந்து கொள்ளவேண்டும்.
நம்முடைய நாட்டில் ஒரு சம்பிரதாயம் என்ன வென்றால், ‘‘எல்லாம் வல்ல இறைவனை வேண்டு கிறோம்” என்றுதான் முடிப்பார்கள்.
நூற்றாண்டைக் கடந்த மூன்று பெரியார் பெருந்தொண்டர்களைப் பாராட்டுவது ஏன்?
ஆனால், இறை மறுப்பு இருக்கின்றவர்களும் நீண்ட நாள் வாழ்வார்கள் என்பதற்கு இவர்கள்தான் அடை யாளம்.
வாழ்க்கைக்கும், அதற்கும் சம்பந்தமில்லை. வாழ்க்கை முறை ஒழுங்காக இருந்தால், நீண்ட நாள்கள் வாழலாம். அதிலொன்றும் மாறுபாடு கிடையாது.
இவர்களை அழைத்து சிறப்பு செய்த பிறகு, இந்த விழாவினை நடத்துவது என்பது – இது ஒரு பெரிய பொதுநலம் – கொள்கை நலம் சார்ந்தது என்பதைவிட, என்னைப் பொறுத்தவரையில் இது ஒரு ‘சுயநலம்!’
அது என்ன சுயநலம் என்றால், எனக்கு வயதாகி விட்டது, வயதாகிவிட்டது என்று சொல்லிச் சொல்லி, நான் வேலை செய்வதற்கு முன், இது ஒரு தடையாக இருப்பதுபோல, எங்கோ ஓரிடத்தில், மனதின் ஒரு மூலையில், நமக்கு வயதாகிவிட்டது என்று நினைக்காமல் இருப்பதற்கு, என்னைவிட வயதானவர்களைக் காட்டிவிட்டால், சிறிய கோட்டிற்குப் பக்கத்தில் ஒரு பெரிய கோடு.
ஒரு கோடு எப்பொழுது சிறிய கோடாகும்? அதற்குப் பக்கத்தில் ஒரு பெரிய கோடு போட்டுவிட்டால், அது சிறிய கோடாகிவிடும்.
ஆகவே, எனக்கு வயதாகிவிட்டது என்பதை நானும் நம்பவில்லை; நீங்களும் நம்பவேண்டாம்.
களத்தில் நிற்பதற்குத் தகுதி இருக்கிறதா? என்ப தைத்தான் பார்க்கவேண்டும்; அதுதான் மிகவும் முக்கியம்.
இக்கூட்டத்தின் தலைவரும் சொன்னார், நம்முடைய கழகத் துணைத் தலைவரும் சொன்னார், இன்றைய சிறப்பு விருந்தினராக வந்திருக்கக்கூடிய பீட்டர் அல்போன்ஸ் அவர்களும் சொன்னார். அவர் அரசியலில் ஞானம் பெற்றவர், அனுபவம் பெற்றவர்.
தந்தை பெரியார் காலத்துக்குமுன் – தந்தை பெரியார் காலத்திற்குப் பின்!
நான் நினைத்துக் கொண்டிருந்ததை அவர் சொன்னார்; எங்களுக்குள்ள அதுதான் கருத்து ஒற்றுமை.
தந்தை பெரியார் காலத்திற்கும், இன்றைய காலத்திற்கும் உள்ள வேறுபாட்டினை மிக அழகாகவும், விரிவாகவும் சொன்னார்.
மின்னணு கருவிகள், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் போன்றவை பல இன்றைக்கு இருக்கின்றன. விஞ்ஞானத்தைப் பொறுத்தவரையில், எவ்வளவுக்கெவ்வளவு அதில் லாபம் இருக்கிறதோ, எவ்வளவுக்கெவ்வளவு அதனால் பயன் இருக்கிறதோ – அதனைத் தவறாகப் பயன்படுத்தினால், அவ்வளவுக்கவ்வளவு சமூகத்திற்குக் கேடு விளையும் என்பதை நாம் ஒவ்வொரு நாளும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.
அதற்கு உதாரணமாக வேறெங்கேயும் போக வேண்டாம்; இன்றைக்கு இருக்கின்ற தொலைக் காட்சிகளை எடுத்துக்கொண்டாலே போதும்.
தொலைக்காட்சி என்பது அறிவியல் கருவியாகும். அதில் பல அறிவியல் சிந்தனைகளைப் பரப்பவேண்டும் என்று நினைப்பது கிடையாது. அதன்மூலமாக அவர்க ளுக்கு ‘ரேட்டிங்’ கிடைக்கவேண்டும் என்பதைத்தான் மிக முக்கியமாகக் கருதுகிறார்கள்.
மேலை நாடுகளில் அறிவியலைப் பரப்புவதற்கும், அறிவியலை சொல்லிக் கொடுப்பதற்கும் இதனைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
விஞ்ஞானத்தைக் கொண்டு அஞ்ஞானத்தைப் பரப்புகிறார்கள்!
தந்தை பெரியார் அவர்கள், ‘இனிவரும் உலகத்தில்’ அழகாகச் சொல்லியிருப்பார்.
‘‘ஒரே ஆசிரியர், ஆயிரக்கணக்கானவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க முடியும்; காரணம் என்னவென்றால், வீடியோ வரும்” என்று.
ஆனால், அதன்மூலமாக இப்பொழுது என்ன செய்கிறார்கள் என்றால், ஒரு ஊரோடு தீர்ந்து போக வேண்டிய மூடநம்பிக்கையை நேரடி அலைவரிசை என்று சொல்லி, எல்லா ஊர்களிலும் இருப்பவர்கள் கன்னத்தில் போட்டுக் கொள்ளச் செய்கிறார்கள்.
அரசமைப்புச் சட்டத்தில், அறிவியல் விழிப்புணர்வை உண்டாக்குவது அடிப்படைக் கடமை என்று இருக்கிறது. ஆனால், அது எழுத்தோடு அப்படியே இருக்கிறது.
அதை அன்றாடம் செய்கின்ற ஓர் இயக்கம் இருக்கிறது என்றால், தந்தை பெரியாருடைய இயக்கம்தான், திராவிடர் கழகம்தான் செய்கிறது. அதனால் ஏற்படுகின்ற விருப்பு – வெறுப்புகளைப்பற்றி கவலைப்படுவது கிடையாது.
‘டிரால்ஸ்’ என்பதைப்பற்றி இங்கே சொன்னார்கள். சம்பளம் கொடுத்து பொய்யைப் பரப்புவதற்காக ஆட்களை வைத்திருக்கிறார்கள். இதுதான் இப்பொழுது நவீன வளர்ச்சி.
மூடநம்பிக்கைகள், அறிவற்ற கருத்துகள், அழிய வேண்டிய கருத்துகள்தான் இப்பொழுது பரப்பப்படு கின்றன.
எப்படி அணுகுண்டை கண்டுபிடித்து, நாகசாகியில் போட்டு மக்களை அழித்தார்களோ, அதுபோன்ற பெரிய ஆபத்துகளை இன்றைக்குப் பொய்க் குண்டுகளைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
கருப்புச்சட்டைக்காரர்கள் இராணுவ வீரர்கள் – ஆகவேதான் எண்ணிக்கையில் குறைவாக இருக்கிறார்கள்!
ஆகவே, நமக்கு முன் இருக்கின்ற பிரச்சினைகள் என்னவென்று நாம் கவனிக்கவேண்டும். நாம் எண்ணிக்கையில் குறைவாக இருக்கிறோமே என்று யாரும் எண்ணவேண்டிய அவசியமில்லை.
ராணுவ வீரர்கள் எண்ணிக்கையில் குறை வாகத்தான் இருப்பார்கள்.
தீயணைப்பு வீரர்கள் எண்ணிக்கையில் குறைவாகத்தான் இருப்பார்கள்.
மக்கள் தொகை அளவிற்கு, காவல்துறையினர் சமமாக இருக்கமாட்டார்கள். ஆனால், காவல்துறை யினருக்கு என்ன வேலை? எந்தக் கட்சி வந்தாலும், எந்தக் கட்சிப் போனாலும் அவர்களுக்குக் கவலையில்லை. அவர்கள் மக்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கவேண்டிய பணிதான் முக்கியம்.
அதேபோன்று, தீயணைப்புத் துறையினர் எந்த நேரத்திலும் தயாராக இருக்கவேண்டும்; அவர்களுக்கு எப்பொழுது அழைப்பு வரும் என்று சொல்ல முடியாது. எப்பொழுது அவர்களுக்கு ஓய்வு? எப்பொழுது அவர்களுக்குப் பணி? என்று சொல்ல முடியாது.
அதேபோன்று, பனிமலையில் நின்று கொண்டிருக்கின்ற இராணுவ வீரர்கள் இருக்கி றார்களே, அவர்களுக்கு நாம் ஆயிரம்முறை தலை வணங்கவேண்டும்.அந்த இராணுவ வீரர்கள் வீட்டை விட்டு வெளியே வரும்பொழுது, உயிரோடு மீண்டும் வருவேன் என்று அவர்களுக்கு உத்தரவாதம் கிடையாது. அதைத் தெரிந்துதான் அவர்கள் இராணுவத்திற்குப் போகிறார்கள்.
அதுபோன்று தெரிந்துதான், பெரியாரின் பெரும் இராணுவமாகிய இந்த இராணுவத்திற்கு நாம் வந்திருக்கின்றோம். அதிலும் எனக்கு ஒரு பெரிய மகிழ்ச்சி என்னவென்றால், இத்தனை ஆண்டுகள் ரிட்டையர்டு ஆகாத சர்வீஸ் எனக்கு.
என்னுடைய ஊதியம் என்பது எது?
எனக்கு ஊதியமும் கிடையாது; அதுமட்டுமல்ல, ஓய்வூதியமும் கிடையாது. ஏனென்றால், ஓய்வு பெற்றால்தானே, ஓய்வூதியம்?
அதனால் நான் நிம்மதியாக இருக்கிறேன்; பஞ்சப்படி ஏறியதா? இல்லையா? என்கிற கவலை கிடை யாது. நமக்கு எப்பொழுதுமே படி பஞ்சம். ஆகவே, அதைப்பற்றி நான் கவலைப்படவேண்டிய அவசியமே இல்லை.
ஆனால், சமூகத்தைக் காக்கின்றவர்கள் நாம் என்ற மகிழ்ச்சி இருக்கிறதே, அந்த ஊதியத்திற்கு இணையான ஊதியம் வேறு உண்டா?
தந்தை பெரியார் காலத்தில் நாணயமான எதிரிகள் இருந்தார்கள். இராஜாஜி போன்றவர்கள் வெளிப்ப டையான எதிரிகள் அந்தக் காலத்தில்.
ஆனால், இன்றைய காலகட்டத்தில் நாணயமற்ற எதிரிகள் – கண்ணிவெடிகளைப் புதைத்து வைத்தி ருக்கிறார்கள் – அதைக் கண்டுபிடிப்பதற்கே ஓர் அறிவு வேண்டும். ஆனால், அப்படி கண்டுபிடிக்கின்ற அறிவை நமக்குச் சொல்லிக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார் நம்முடைய அறிவாசான் அவர்கள்.
இங்கே இவ்வளவு பேர் இருக்கின்றோம். 105 வயது; 103 வயது; 102 வயது; எனக்கு 92. யார் கைகளிலாவது கைத்தடி இருக்கிறதா? கிடையவே கிடையாது.
எங்களுக்கெல்லாம் பெரியார் என்கிற அந்தப் பெரிய கைத்தடி இருக்கிறதே, அது உங்களுக்கும், எங்களுக்கும் மட்டுமல்ல, இந்த இனத்திற்கே பாதுகாப்பானதாகும்.
அதில் அரசியல் விருப்பு வெறுப்புகள் கிடையாது. பதவி ஆசைகள் கிடையாது.
ஆகவே, இன்றைக்கு நாணயமற்ற எதிரிகள். அதை விட மிகவும் முக்கியம் – தன்னை விற்றுக்கொள்ளக்கூடிய ஒரு சமூகத்து மக்கள்.
அப்படி அவர்கள் விற்றுக்கொள்வதைப்பற்றிக் கூட கவலையில்லை. குறைந்த விலைக்கு விற்றுக்கொள்கிறானே? இதைத்தான் பெரியார் அவர்கள் சொன்னார். ஒவ்வொன்றையும் பாடம் போன்று சொல்லியிருக்கின்றார். அதையெல்லாம் நாம் நினைவில் கொள்ளவேண்டும். அதுதான் நம்மை இளமையாக்கும்; நம்மை வளமையாக்காது, ஆனால், இளமையாக்கும்.
பொருளாதாரக் கண்ணோட்டத்தோடு – அறிவுக் கண்ணோட்டத்தோடு நம்மைவிட வளமைப் படைத்தவர்கள் வேறு யாரும் கிடையாது.
சுயமரியாதை இயக்கமும் – ஆர்.எஸ்.எசும் ஒரே காலகட்டத்தில் தோன்றியவையே!
நம்முடைய பணி என்பது சாதாரண பணியா? எவ்வளவு பெரிய மாறுதல்களை செய்திருக்கின்றோம்.
இந்த இயக்கம் சாதாரண இயக்கமல்ல; இராணுவ வீரர்களால்தான் நாடு காப்பாற்றப்படுகின்றது என்பது போன்று, கருஞ்சட்டை ராணுவத்தால்தான், இந்த சமூகம் காப்பாற்றப்படுகின்றது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், சுயமரியாதை இயக்கமும் ஒரே காலகட்டத்தில் தொடங்கப்பட்டவைதான்.
எப்பொழுதும் நோயும் வரும்; அந்த நோயை அழிக்கக்கூடிய மருந்தும் வரும்.
அங்கே நோய் – இங்கே மருந்து.
பெரியார் காலத்தில் இருந்த ஆபத்தைவிட, இன்றைய காலகட்டத்தில் வருகின்ற ஆபத்துகள் நிறையவே பார்க்கிறோம்.
அன்றைக்கு வெளிப்படையாக வந்தது; இன்றைக்கு வெளிப்படையாக வராமல், மனிதர்கள் பல நேரங்களில் கூலிப் படைகளால் கொல்லப்படுவது சாதாரணமாகி விட்டது. நகையை அடமானம் வைத்து, அந்தப் பணத்தை கூலிப்படைக்குக் கொடுக்கிறார்கள் என்று செய்திகள் வருகின்றன.
கூலிப்படைகள் அரசியலிலும் உண்டு!
அரசியலிலும் கூலிப்படைகள் இருக்கின்றன. அரசியல் கூலிப்படை என்பது அதைவிட ஆபத்தானதாகும்.
எனவே, அவற்றை அடையாளம் கண்டு, அந்தக் கூலிப்படைகளின் முகத்திரைகளைக் கிழித்து எறிகின்ற வேலை நமக்கு இருக்கிறது.
மற்றவர்களுக்கெல்லாம் தேர்தல் ஒரு பதவி வாய்ப்பு. அவர்களுக்குக் கொள்கை வாய்ப்பு அல்ல.
இங்கே கவிஞர் அவர்கள் உரையாற்றும்பொழுது ஒரு செய்தியைச் சொன்னார்.
புதிது புதிதாக இப்பொழுது கட்சிகள் முளைக்கின்றன. திடீர் திடீரென்று கட்சிகள் வரும்; யார் வேண்டுமானாலும் கட்சித் தொடங்கலாம். அப்படி தொடங்கி, கட்சியைப் பதிவு செய்யலாம்; தேர்தலிலும் நிற்கலாம்.
அதுபோன்றவர்களை நாம் இன்றைக்குப் பார்க்கின்றோம். நேரிடையாக வரமாட்டார்கள் அவர்கள். அதற்குப் பதிலாக வேறு விதமாக மாயக் குதிரைகள் வருகின்றன; டிரோஜன் குதிரைகள் வருகின்றன.
புராண உதாரணப்படி, ‘மாயமான்’கள் வருகின்றன; மாரீசன் இருந்தானா, இல்லையா? என்பது வேறு விஷயம்! அரசியல் மாரீசன்கள் இன்றைக்கு அதிகமாக இருக்கின்றார்கள். அவர்கள் மாயமான்களைக் கொண்டு வரும்பொழுது, எந்த மான்களாக இருந்தாலும் கண்டு பிடிக்கவேண்டியது பெரியாருடைய நுண்ணாடிக்கு சாதாரணமாதாகும்.
திராவிட இயக்கத்தை அழித்துவிடுவோம்; அடுத்த தேர்தலில் நாங்கள்தான் ஆட்சிக்கு வருவோம் என்று யார் வேண்டுமானாலும் சொல்லலாம்.
ஊடகங்களின் விளம்பர வெளிச்சங்கள் அவர்க ளுக்கு ஆடம்பரமாக இருக்கலாம். ஆனால், வான வில் எவ்வளவுதான் அழகாக இருந்தாலும், அது நிரந்தரமல்ல. ஆனால், சூரியன் நிரந்தரமாகத் தோன்றும்; நிரந்தரமாக சூரிய வெளிச்சத்தைக் கொடுக்கும். சூரிய வெளிச்சத்தினால், இலை, கிளைகள் துளிர்விடும். மூன்று, நான்கு நாள்கள் மழை பெய்தால், வெயில் வராதா? என்று நினைக்கின்றோம்.
வானவில் நிரந்தரமானதல்ல!
ஆகவே, வானவில்தான் நிரந்தரம்; வானவில்தான் வெற்றி பெறும் என்று, சூரியனோடு வானவில் போட்டி போட முடியாது. அந்தக் கற்பனையே, வீணான கற்பனை என்பதை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.
எல்லா இயக்கங்களுக்குள்ளும் புகுந்து இயக்கத்தை உடைப்பது; அதிலிருந்து ஆட்களை கூட்டிக் கொண்டு போவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
திராவிட இயக்கத்தை காப்பாற்றவேண்டும் – ஏன்?
திராவிட இயக்கத்தை ஏன் காப்பாற்றவேண்டும் என்று தந்தை பெரியார் சொன்னார்?
அவருக்குப் பின் ஏன் நாங்கள் உழைத்துக் கொண்டிருக்கின்றோம்?
திராவிட இயக்கம் நூறாண்டைத் தாண்டிய ஒரு வரலாற்று இயக்கமாகும்.
பலவிதமான எதிர்ப்புகளைச் சந்தித்து, எதிர்நீச்சல் அடித்து, அடித்து எதிர்நீச்சலில் வளர்ந்த இயக்கம்.
திராவிட இயக்கத்திலிருந்து நாவலர் பிரிந்த நேரத்தில், அன்னை மணியம்மையார் அவர்கள், கலைஞரையும், நாவலரையும் ஒன்று சேர்க்கவேண்டும் என்று முயற்சி எடுத்தார்.
கலைஞருக்கும் – நாவலருக்கும் கருத்து வேறுபாடு வந்தபோது தலையிட்டு தீர்த்து வைத்தவர் அன்னை மணியம்மையார்!
நான் முதலில் பேசினேன்; பிறகு அன்னை மணியம்மையார் பேசினார். பெரியார் இல்லை என்று சொல்லுகின்ற நேரத்தில், தி.மு.க. உடையக் கூடாது என்பதற்கான முயற்சியை எடுத்தார் அன்னை மணியம்மையார் அவர்கள்.
அதற்குக் கலைஞர் அவர்கள், ‘‘நன்றி அறிவிப்புக் கடிதம்” எழுதினார். அந்தக் கடிதத்தை அன்னை மணியம்மையார் அவர்களைப்பற்றிய புத்தகத்தில் பதிவு செய்திருக்கின்றோம்.
அக்கடிதத்தில் ஒரு வரியில்,
‘‘திராவிட இயக்கத்தை நீங்கள் காப்பாற்றும் முயற்சிக்கு நான் நன்றி செலுத்துகின்றேன். இந்த இயக்கம் என்பது மற்றவர்கள் நினைப்பதுபோன்று அல்ல. இது நெருப்பாற்றில், மெழுகுப் படகில் பயணம் செய்கின்ற இயக்கம்” என்று சொன்னார்.
இன்றைக்கும் அது “திராவிட மாடல்” ஆட்சியாக ஒப்பற்ற முதலமைச்சராக இருக்கக்கூடிய தளபதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இயக்கமாகும்.
இந்த இயக்கத்தை, நீங்கள் ஏதோ ஒரு வர்ணம் தீட்டி – அல்லது தார் பூசி – அந்தக் கொம்பன், இந்தக் கொம்பன் என்று சில புதிய ஆட்களைப் பிடித்துக்கொண்டு வந்து, அவதூறு பேசலாம் என்று நினைக்காதீர்கள்.
எந்த இயக்கத்திலும், யூதாசுகள் இருப்பார்கள். என்னைவிட அதிகமாக பைபிளைப் படித்தவர் நண்பர் பீட்டர் அல்போன்ஸ் அவர்கள். பைபிள் மத நூல்தான், அதில் எனக்கு மிகவும் பிடித்த விஷயத்தை இயக்கத் தோழர்களுக்குச் சொல்வேன்; கூட்டணித் தோழர்கள் உள்பட தெரிந்துகொள்ளவேண்டிய செய்தியாகும் இது.
பைபிள் மத நூலாக இருந்தால் என்ன? எந்த நூலாக இருந்தால் என்ன?
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு (குறள் 423)
அது நமக்குப் பயன்படவேண்டியதுதான்.
யூதாஸ்கள் – எச்சரிக்கை!
நான் கிறித்துவப் பள்ளியில் படித்தவன் என்பதால், யூதாஸ்பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். தினசரி ரொட்டியைக் கொடுங்கள் என்று கேட்பவர்கள்.
இதைச் சொல்வதால், இவரை (பீட்டர் அல்போன்ஸ்) சங்கடப்படுத்தக் கூடாது. இவர் சங்கடப்படு கிறாரோ, இல்லையோ – இதை வைத்து நம்மை சங்கடப்படுத்திவிடுவார்கள் மற்றவர்கள்.
ஏனென்றால், எங்கே சந்து கிடைக்கும் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நாங்கள் இணைப்பதைப்பற்றி பேசுகிறவர்களே தவிர, பிரிப்பதைப் பற்றி பேசாதவர்கள்.
பைபிளில் எனக்கு மிகவும் பிடித்த இடம் எதுவென்றால், ஏசுநாதரை கைது செய்யவேண்டும்; ஏசுநாதர் சாப்பிடுகின்ற நேரம்தான் சரியான சந்தர்ப்பம்; அப்பொழுது நீங்கள் ஏசுநாதரைக் கைது செய்யலாம் என்று வருகிறார்கள்.
அப்பொழுது, யூதாசிடம் கேட்கிறார்கள், ‘‘எல்லோரும் தாடி வைத்திருக்கிறார்களே, இதில் யார் ஏசுநாதர் என்று கண்டுபிடிப்பது?” என்று கேட்கிறார்கள்.
இது நடந்ததா, இல்லையா? என்பது வேறு. அந்தத் தத்துவம் என்பது மிக முக்கியமான தத்துவமாகும். எல்லா அரசியல் கட்சிகளும் தெரிந்துகொள்ளவேண்டிய மிக முக்கியமான ஒரு தத்துவம் இருக்கிறது அதில்.
அப்பொழுது யூதாஸ் சொல்கிறார், ‘‘கவலைப்படா தீர்கள், நான் யாரை கடைசியாகக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்கின்றேனோ, அவர்தான் ஏசுநாதர். அப்பொழுது அவரை நீங்கள் கைது செய்துகொள்ளலாம்” என்கிறான்.
இப்பொழுது நிறைய பேர் கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள்.
இதை, தி.மு.க. கூட்டணித் தோழர்கள், கூட்டணியை உருவாக்குவதற்கும், கூட்டணியைப் பாதுகாப்பதற்கும் தயாராக இருக்கின்ற எங்களைப் போன்ற திராவிடர் கழகத்துக்காரர்கள் – நாங்கள் சொல்கின்ற உதாரணம், மதவாத உதாரணமாக இருக்கலாம்; ஆனால், நாங்கள் கூறுவது என்பது மிகவும் முக்கியமானதாகும்.
முத்தம் கொடுக்கின்றவனை அடையாளம் காண வேண்டும்; பெரியார் மிகவும் கவனமாக இருப்பார்; பெரி யாருக்குப் பிறகு நாங்களும் கவனமாக இருக்கின்றோம். எங்களிடம் முத்தம் கொடுக்கின்றவன் நெருங்கினால், கொஞ்சம் ஓரமாக அவர்களை ஒதுக்கி வைத்திருப்போம்.
எந்த இயக்கத்திலும் மிக அதிவேகமாகப் பேசக்கூடி யவன் அந்த இயக்கத்தில் கடைசிவரை இருந்ததே இல்லை என்பதுதான் வரலாறு.
பெரியார் கண்ணாடி என்பது நுண்ணாடி!
ஆகவே, யாரை, எந்தப் பார்வையோடு பார்க்க வேண்டும் என்கிற பார்வைக் கண்ணாடி இருக்கிறதே, அது பெரியாரின் கண்ணாடி; நுண்ணாடியைவிட ஆழமான அரசியல் கண்ணாடி. காலத்தைத் தாண்டிய கண்ணாடி என்பதை மறந்துவிடாதீர்கள்!
ஆகவே, அப்படிப்பட்ட ஓர் அற்புதமான சூழ்நிலை இன்றைக்கு இருக்கின்ற காரணத்தினால்தான், திராவிட இயக்கம் ஒருபோதும் மைனஸ் ஆகாது. ப்ளஸ்தான் ஆகும். நான் சொல்கிறேன், யார் மைனஸ் ஆவார்கள் என்று.
தந்தை பெரியார் அவர்கள் சொல்வார், ‘‘பூனைக் குட்டி வெளியே வந்தது” என்று.
ஆகவே, திராவிட இயக்கம் எவ்வளவோ சங்கடங்க ளைச் சந்தித்திருக்கிறது; நாளைக்கும் சந்திக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
அரசியல் இயக்கங்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்; அதற்குக் கவசங்களாக இருக்கின்ற எங்களை, கேடயங்களாக இருக்கக்கூடிய எங்களைத்தான் குண்டுகள் துளைக்கும். அதற்காக எங்களை இழக்கத் தயாராகிக் கொண்டுதான் இந்தக் கருப்புச் சட்டையை அணிந்து வந்திருக்கின்றோம்.
நாங்கள் எதைச் செய்தாலும், வெளிப்படையாகச் சொல்லக்கூடியவர்கள். இந்த இயக்கம் ஓர் இனவெறி இயக்கமல்ல.
இதில் யாருக்காவது சந்தேகம் இருந்தால், மூத்த பத்திரிகையாளரும், சமூக ஆய்வாளருமான டி.ஜே.எஸ்.ஜார்ஜ் என்பவர், ‘இந்து’ நாளிதழில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அவர் அந்தக் கட்டுரையில், ‘‘முதன் முதலில் இந்த இயக்கம் தொடங்கியதைப் பார்த்தால், இது எங்கே ஓர் இனவெறி இயக்கமாக மாறிவிடுமோ என்ற அய்யம் எங்களைப் போன்றவர்களுக்கு இருந்தது. ஆனால், பெரியார் – அண்ணா – கலைஞர் போன்ற வர்களைப் பார்த்தவுடன், இனவெறி இயக்கமல்ல – அது ஒரு கலாச்சார பாதுகாப்பு இயக்கம் என்பதை மிக அழகாக எடுத்துக்காட்டி இருக்கிறார்கள். ஆகவே, அந்த இயக்கம் சாதாரணமான இயக்கமல்ல” என்று சொல்லியிருக்கிறார்.
எனவே நண்பர்களே, நன்றாக நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். அவசியம் வரும்பொழுது தெளி வாக்குவோம்.
அந்த அடிப்படையில், இன்றைக்கும் திராவிட இயக்கத்தை யாராலும் அசைக்க முடியாது.
அன்றைய காங்கிரசில் சத்தியமூர்த்தி போன்றவர்கள் இருந்தார்கள். இன்றைக்கு ராகுல் காந்தி இருக்கின்ற காங்கிரஸ் என்பது மிகவும் வித்தியாசமானதாகும். சமூகநீதி இயக்கமாக இருக்கிறது.
அடுத்தத் தேர்தலைவிட, அடுத்த தலைமுறை முக்கியம்!
தந்தை பெரியார் அவர்கள் 1925 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாநாட்டில் எதைச் சொல்லிவிட்டு காங்கிரஸ் கட்சியைவிட்டு வெளியே வந்தார்களோ, அதை அப்படியே இன்றைக்கு நடைமுறைப்படுத்துகின்ற அளவிற்கு வந்திருக்கின்ற ஓர் இளந்தலைவர் இருக்கின்றார் என்றால், அவர்தான் பெருமதிப்பிற்குரிய, பாராட்டப்படவேண்டிய, பின்பற்றப்படவேண்டிய ராகுல் காந்தி அவர்கள்.
அவர் தெளிவாகச் சொல்கிறார், 50 சதவிகிதத்தை தாண்டி இட ஒதுக்கீடு போகவேண்டும் என்று சொன்னார். அதற்கு வழிகாட்டியது யார்? தமிழ்நாட்டில் 69 சதவிகிதம் இங்கே இருக்கிறது.
அதேபோன்று நண்பர்களே, ஒவ்வொரு துறையையும் எடுத்துக்கொண்டீர்களேயானால், அந்த வாய்ப்புகளை இந்த இயக்கம் பெற்றுத் தந்திருக்கிறது.
இது எங்களுக்காக அல்ல; நாங்கள் அடுத்த தேர்தலைப்பற்றி கவலைப்படுகின்றவர்கள் அல்ல. மற்ற கட்சிகளாக இருந்தால், அடுத்த தேர்தலோடு அந்தக் கட்சிகள் காணாமல் போய்விடும். ஆனால், தேர்தலைப்பற்றி கவலைப்படுவது அல்ல “திராவிட மாடல்” ஆட்சி.
தேர்தல் என்பது ஒரு வாய்ப்பு தேர்தல் ஒரு கருவி தேர்தல் ஒரு யுக்தி!
ஆனால், அடுத்த தலைமுறை மாறவேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியம்.
படிக்கக் கூடாது என்று இருந்த தலைமுறையை, படிக்கக் கூடிய தலைமுறையாக ஆக்கியிருக்கின்றோம்.
தேர்தல் என்பது ஒரு வழிமுறை, அவ்வளவுதான்!
பெண் அடிமைதான் – பெண் அடிமையாக இருப்பதைத் தவிர, பெண்ணுக்கு வேறு வேலையில்லை என்று இருந்த நிலையை மாற்றி, ‘‘பெண்ணே, பெண்ணே திரும்பிப் பார்! மற்றவர்களைவிட நீ எந்த வகையிலும் குறைந்தவர் அல்ல. உன்னிடத்தில் உள்ள ஆற்றலை வெளியே கொண்டுவா” என்று சொல்லி, ஒரு பகுதி இயங்காது இருந்த ஒரு சமூகத்தை, சரி பகுதியாக இயங்கக்கூடியதாக ஆக்கிய இயக்கம் – அந்த இயக்கத்திற்குப் பெயர் திராவிட இயக்கம்.
ஆகவே, தேர்தல் என்பது ஒரு வழிமுறை. தேர்தலில் நின்றாலும், வென்றாலும், சென்றாலும் இந்த இயக்கம் என்பது கொள்கையை அடிப்படை யாகக் கொண்டது – நீதிக்கட்சியின் தொடர்ச்சி.
திராவிடர் கழகத்தினர் எண்ணிக்கையில் குறைவாக இருக்கலாம்; ஆனால், ‘‘சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால்” என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
தி.மு.க. என்கிற அரசியல் கட்சியை நாங்கள் பாதுகாக்கவேண்டும் என்பது – ஏதோ நாங்கள் உதவி செய்வதற்காகப் போனவர்கள் அல்ல. அது எங்களுடைய இயக்கம். அவர்களைவிட அக்கறை அதிகம் எங்களுக்கு.
தேர்தலில் தோல்வி என்பது என்ன?
தேர்தலில் ஒரு வேட்பாளர் தோல்வியுற்றால், அவர் அடுத்த தேர்தலில் நின்று வெற்றி பெறலாம் என்று நினைப்பார். ஆனால், அந்தத் தோல்வியை, ஒரு நபரின் தோல்வியாக நாங்கள் கருதமாட்டோம்; கொள்கைத் தோல்வியாகத்தான் கருதுவோம். அந்தக் கொள்கைக்காக ஆயிரம் மடங்கு முன்பைவிட அதிக மாகப் பாடுபடவேண்டிய உணர்வு எங்களுக்கு உண்டு.
காரணம், இனநலம், சுயமரியாதை நலம், பகுத்தறிவு, சமதர்மம் மிகவும் முக்கியமானதாகும்.
ஆகவே, மிரட்டலாம்; உருட்டலாம்; ஊடகங்களின் ஆடம்பர வெளிச்சத்தை வைத்துக்கொண்டு சாதித்துக் கொள்ளலாம் என்று நினைக்காதீர்கள். மின்சாரத்தோடு, உங்களுடைய மின்மினி வெளிச்சத்தை வைத்துப் போராடலாம்; அல்லது ஒப்பிடலாம் என்று நீங்கள் நினைத்துவிடாதீர்கள். அதேபோன்று, வானவில் நிரந்தர மல்ல என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஆகவே, யூதாசுகளை நீங்கள் நம்பாதீர்கள். யூதாஸ் காட்டிக் கொடுத்தவுடன், ஏசுநாதரை கைது செய்ததுபோன்ற பழைய கதையல்ல. பைபிளை மாற்றி எழுதுவதுபோன்று, புதிய ஏற்பாட்டிற்கும், புதிய ஏற்பாடாக அரசியல் ஏற்பாடு இருக்கும் என்பதை நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். ஆகவேதான் தோழர்களே, நாம் உழைக்கின்றோம்.
குருதிக் குடும்பமும் – கொள்கைக் குடும்பமும்!
என்னை என்று நான் சொல்லும்பொழுது, ஒரு நபராகிய என்னை வைத்துச் சொல்லவில்லை. நான், என்னை உருவகப்படுத்திக் கொள்வது தோழர்களை வைத்துத்தான்; கொள்கைக் குடும்பங்களை வைத்துத்தான். இங்கே நான் வரும்பொழுது எனக்கு வயது 92; நிகழ்ச்சி முடிந்து நான் செல்லும்பொழுது 29. அதேபோன்றுதான் எங்களுடைய தோழர்களுக்கும்.
தன்னுடைய 86 ஆவது வயதில் அய்யா அவர்கள் சொன்னதைச் சொல்கிறேன். அய்யா அவர்களை 95 வயது வரையில் வாழ வைத்தவர்கள் அன்னை மணியம்மையார் அவர்களும், இயக்கத் தோழர்களும். இயக்கக் கொள்கைக்காரர்களும்.
நான், இந்த வயது வரையில் இருக்கிறேன் என்றால், அதில் என்னுடைய குருதிக் குடும்பத்திற்கு ஒரு பங்கு இருக்கலாம்; ஆனால், அதைவிட அதிகமான பங்கு கொள்கைக் குடும்பத்திற்குத்தான்.
சென்னையில் நடைபெற்ற மாநாட்டிற்கு, வட நாட்டிலிருந்து வந்தவர்கள், ‘‘இவ்வளவு பேர் கருப்புச் சட்டை அணிந்து வந்திருக்கிறீர்களே, உங்களுக்கு கருப்புச் சட்டை தைத்துக் கொடுப்பார்களா? பணம் கொடுப்பார்களா?” என்று கேட்டார்கள்.
‘‘இல்லீங்க, எங்களுக்குப் பணம் கொடுப்பதற்காக வந்திருக்கிறார்கள்” என்றேன்.
இன்றைக்குக்கூட பணத்தைக் கொடுத்து விட்டுத்தான், என்னைப் பார்த்தார்கள்.
தோழர்கள் பணம் வாங்குகின்ற இயக்கமல்ல இது; தோழர்கள் பணத்தைக் கொடுத்துவிட்டு, வேலை செய்கின்ற இயக்கமாகும்.
பெரியார் மாணாக்கன் அவர்கள், சாதாரண பேருந்து ஓட்டுநர். காலந்தவறாமல் நன்கொடைகளைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் அந்தக் குடும்பத்தினர் என்று சொன்னால், அந்த மனப்பான்மை எல்லோருக்கும் வராது. பணத்தை வைத்திருக்கின்றவர்களுக்குக் கொடுக்கின்ற மனப்பான்மை வராது. கொடுக்கின்றவர்களிடம் எல்லாம் பணம் இருக்கிறது என்று சொல்ல முடியாது.
எது இருந்தாலும், இல்லாவிட்டாலும், நம்முடைய குடும்பத்தின் ஒரு பகுதி என்று நினைக்கின்றார்கள் அல்லவா – அந்தத் தோழர்களுக்கு நான் எவ்வளவோ கடமைப்பட்டு இருக்கிறேன்; அதற்காக நான் தலை தாழ்ந்த நன்றியைத் தெரிவிக்கவேண்டும் அல்லவா!
நம்முடைய கழகத் துணைத் தலைவர் கவிஞர் அவர்கள் சொல்வார், ‘‘ஆசிரியர் உடம்பில் கத்தி படாத இடமே இல்லை” என்று.
அதனால்தான், நான் கத்திக் கொண்டே இருக்கிறேன்.
1962 இல் தனது உடல்நிலையைப்பற்றி தந்தை பெரியார் சொன்னது என்ன?
1962 ஆம் ஆண்டில், பெரியார் அவர்கள் எழு திய ஒன்றைச் சொல்லி என் உரையை நிறைவு செய்கின்றேன்.
அவருடைய உடல்நிலையைப்பற்றி அவர் சொல்கி றார்; அந்தப் பகுதியைப் படிக்கவில்லை. அதற்குமேல் உள்ளவற்றைப் படிக்கின்றேன்.
‘‘இந்தக் காரணங்களால் நானே என்னை, ஒரு கண்டம்டு் மேன் – ‘வேலைக்குப் பயன்பட முடியாத தள்ளப்பட்ட மனிதன்’ என்றே கருதி வாழ்ந்து வருகிறேன்.
இவ்வளவுக் குறைபாடுகளும், இயலாமையும் இருந்தும், மக்கள் என்னிடம் வைத்திருக்கும் அன்பும், மரியாதையும், ஜன்னி வந்தவனுக்கு ஏற்படும் பலம், சகிப்புத்தன்மைபோல் என் நிலை. அறியாத அளவிற்கு வேலைகளையும், பொறுப்பு களையும் நானாக மேற்போட்டுக் கொண்டு தொந்தரவடைபவனாக வருகிறேன்.
ஆனால், இப்படிப்பட்ட தொந்தரவுகளால், நான் அவஸ்தைப்படாமல் இருக்கத்தக்க வண்ணம் நோய் தெரியாமலேயே இருப்பதற்கு, டாக்டர்கள் குளோரோபார்ஃம் – மயக்க மருந்து கொடுப்பதுபோல, பணம், பண்டம் கொடுத்து உற்சாகப்படுத்துகிறார்கள். அதனாலேயே உடல்நிலைப்பற்றி சிறிதும் சிந்திக்காமல் தொண்டாற்றி வருகிறேன் என்று சொல்லுவேன்.”
அதுபோன்று, இன்றைக்கும் உற்சாகப்படுத்துகிறீர்கள். எப்பொழுது கேட்டாலும் சந்தா கொடுக்கிறீர்கள். பெரியார் உலகத்திற்கு நன்கொடை கொடுக்கிறீர்கள்.
நான் பெரியார் அல்ல; பெரியாராக நான் ஆக முடி யாது. ஒரே ஒரு பெரியார்தான் இருக்க முடியும். நான் பெரியாருடைய மாணவன்.
பெரியாரிடத்தில் எவ்வளவு அன்பு காட்டினீர்களோ, அதே அன்பை, பெரியார் தந்த புத்தியைப் பயன்படுத்து கின்ற ஒரு தொண்டனிடத்திலும் நாங்கள் காட்டுவோம் என்று நீங்கள் காட்டுகிறீர்களே, உங்கள் அத்துணை பேருடைய ஒத்துழைப்புக்கு, நன்றிக்கு என்றும் வணக்கம்!
எப்பொழுதும் களமாடுவதற்குத் தயாராக இருக்கிறோம். எப்பொழுதும் நாம் கள வீரர்கள் என்ற உணர்வோடு இருப்போம்.
நம்மைக் காக்கின்ற இயக்கத்தைக் காப்போம்!
நம்மைக் காக்கின்ற இயக்கத்தைக் காக்க வேண்டும் என்பது தந்தை பெரியாருடைய கட்டளை அது. அந்தக் கட்டளையை தலைமேற்போட்டுக் கொண்டு பணியாற்றவேண்டும்.
இந்த ஆட்சி மாறினால், நம்முடைய சமூகத்தி னுடைய நிலை என்ன?
நம் மக்களுடைய வாழ்வு என்னாகும்?
நாம் மக்களைப்பற்றித்தான் கவலைப்படு கின்றோம்; அரசியல்வாதிகளைப்பற்றி நமக்குக் கவலையில்லை.
மக்களைப்பற்றி கவலைப்படுகின்ற இயக்கம்தான் நம்முடைய இயக்கம்.
ஆகவே, மக்களைப் பாதுகாப்பதே நமது பணி.
திராவிட மாடலைப் பாதுகாப்பது என்பது, ஒரு கட்சியைப் பாதுகாப்பது அல்ல. திராவிட மக்களைப் பாதுகாப்பது!
திராவிட மக்களுடைய உரிமைகளைப் பாதுகாப்பது!
திராவிட மக்களுடைய கலாச்சாரப் பெருமை களைப் பாதுகாப்பது!
திராவிட மக்களுடைய வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பது!
திராவிட மக்களுடைய சமத்துவத்தையும், சுயமரியாதையையும், பகுத்தறிவையும் காப்பாற்று வதுதான்!
அந்த உறுதியை இந்த நாளில், எல்லோரும் எடுத்துக் கொள்கிறோம் என்பதற்கு அடையாளமாக, எல்லோரும் எழுந்து நின்று உறுதி எடுப்போம்!
அரசியலில் தோன்றுகின்ற சின்னாபின்னங்க ளைப்பற்றி நாம் கவலைப்படவில்லை. மற்றவர்க ளைப்பற்றி நாம் கவலைப்படவில்லை.
இந்நிகழ்வை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்த தோழர்களுக்கும், மற்றவர்களுக்கும் நன்றி, நன்றி, நன்றி என்று கூறி என்னுரையை முடிக்கின்றேன்.
வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!
திராவிடம் வெல்லும் –
நாளை வரலாறு அதைச் சொல்லும்!
திராவிடம் வெல்லும் – அதனை வரலாறு என்றைக்கும் சொல்லும்! சொல்லும்! சொல்லும்!
திராவிடம் என்பது சமத்துவம்!
திராவிடம் என்பது சுயமரியாதை!
திராவிடம் என்பது அடிமைத்தனத்தைப் போக்குவது!
திராவிடம் என்பது துரோகத்தைத் துளைத்தெடுப்பது- தொலைத்துவிடுவது!
எனவேதான், துரோகத்திற்கு இடமில்லை- கொள்கைக்கே இடம் உண்டு.
திராவிட மாடல் ஆட்சியைக் காப்பாற்றுவதற்கு கேடயமாகவும்- கவசமாகவும் நிற்போம்!
எனவேதான், ‘திராவிட மாடல்’ ஆட்சியைக் காப்பாற்றுவதற்காக ஒரு போர் வீரனைப் போல, கேடயமாகவும், கவசமாகவும் நிற்போம்!
நிற்போம்! நிற்போம்!!
காப்போம்! காப்போம்!!
இனத்தைக் காப்போம்!
மக்களைக் காப்போம்!
உரிமையைக் காப்போம்!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஏற்புரையாற்றினார்.