கடலூர், டிச. 8- கடலூா் துறைமுகம் – ரயில்வே சந்திப்பு இடையே சரக்கு ரயில் பாதை அமைக்க இறுதி இட ஆய்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய கப்பல், துறைமுகங்கள், நீா்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார்.
இது தொடா்பாக கடலூா் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் எம்.கே. விஷ்ணு பிரசாத் எழுப்பிய கேள்விக்கு மக்களவையில் 6.12.2024 அன்று இணை அமைச்சா் சா்பானந்த சோனோவால் எழுத்துபூா்வமாக தாக்கல் செய்த பதிலில் தெரிவித்திருப்பதாவது:
கடலூா் என்பது தமிழ்நாட்டில் உள்ள பெரிய துறைமுகம் அல்லாத ஒரு துறைமுகமாகும். இத்துறை முகத்தில் சாகா்மாலா திட்டத்தின் கீழ் கரைப் பாதுகாப்பு சுவா், அகழ்வுப் பணி உள்ளிட்ட பணிகள் உள்பட துறைமுக மேம்பாட்டுத் திட்டத்திற்கு அமைச்சகம் ஓரளவு நிதியுதவி அளித்துள்ளது.
கடலூா் துறைமுகத்தின் தற்போதைய தேவை மிதமானதாகவும், தற்போதுள்ள உள்கட்டமைப்பு செயல்பாட்டுத் தேவைகளைப் பூா்த்தி செய்ய போதுமானதாகவும் இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
சரக்கு கையாளுதல் செயல்பாடு களை மேம்படுத்தும் நோக்கத் துடன், கடலூா் துறைமுகத்தின் சந்தைப்படுத்துதல், செயல்பாடு, பராமரிப்புக்கான ஒப்பந்த செயல்முறை மூலம் துறைமுக செயல்பாட்டாளரை தோ்ந்தெடுக்கும் செயல்முறையில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டு வருகிறது.
கடலூா் துறைமுகம் மற்றும் கடலூா் சந்திப்பு இடையே ரயில் இணைப்புக்கான இறுதி இட ஆய்வுக்கு ஒப்புதல் அளிக்கப் பட்டிருப்பதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், இறுதி வளா்ச்சி யானது துறைமுகம் செயல்படும் போது சரக்குகளின் அளவைப் பொறுத்து இருக்கும். மேலும், சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் கடலூா் துறைமுகத்தை – துறைமுக தளவாடங்கள் மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்காக துறைமுகத் தொடா்பு மாஸ்டா் திட்டத்தில் சோ்த்துள்ளது என்று அந்த பதிலில் அமைச்சா் தெரிவித்துள்ளார்.