காக்கைச் சிறகினிலே (டிசம்பர் 2024) இதழில் “ஒரு அரசியல் பிரசவமும் பிரவேசமும்” என்ற தலைப்பில் வெளிவந்துள்ள இந்தத் திறந்த மடல் தமிழ்நாட்டில் அண்மைக் காலத்தில் புதிதாக அரசியல் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் அவர்களின் ரசிகர்களின் கவனத்திற்குச் சில ஆழமான கேள்விகளை எழுப்பியுள்ளது. அத்துடன் தமிழ்நாட்டின் அரசியல் எத்தகையது என்பதை வரலாற்றிலிருந்து எடுத்துக்காட்டி, ‘வெறும் பிம்பங்களை மூலதனமாகக் கொண்டு தமிழ்நாட்டில் வெல்ல முடியுமா?’ என்ற ஆழமான கேள்வியையும் எழுப்பி விளக்கம் தந்துள்ளது. அதை அப்படியே பிரசுரிக்கிறோம். (ஆ.ர்)
அன்பார்ந்த விஜய் ரசிகர்களுக்கு,
உங்கள் தளபதியின் அரசியல் பிரவேசம் வெகு விமரிசையாக வி.சாலையில் துவங்கியிருக்கிறது. மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்று விழி நிறைந்த நம்பிக்கையுடன் காத்திருக்கும் உங்களுடன் தமிழ்நாடு மற்றும் பொது நலன் சார்ந்து சில நிமிடங்கள் சில விஷயங்கள் பேச வேண்டிய அவசியம் உணர்ந்து இந்த திறந்த மடல்.
திரை – சினிமா என்பதே தனியொரு மொழி. குகை ஓவியம் தொடங்கி தன்னை பிரதியெடுத்து பிரதிபலிக்கத் துடிக்கும், மனித சமூகத்தின் அந்த வேட்கையின் ஓவியம், ஒளிப்படம்,இயங்கும் காணொளி என்கிற பரிணாமத்தின் உச்சம்தான் பேசும் சினிமா(Talkies). திரையிலே தெரிவதும், வருவதும், பேசுவதும், பாடுவதும், ஆடுவதும் எதிரே அமர்ந்து ரசிக்கும் பார்வையாளனின் ரத்தமும், சதையும், உயிரும், உணர்வுமாய் அந்தத் திரையுடன் ஒரு மய்யத்தில் குவியும்; இணையும். அரங்கத்தில் ஒருவரோ இருவரோ அல்ல; இனம் தெரியாத, முகமறியாத, அறிமுகமில்லாத ஒரு கூட்ட மக்கள் திரையில் வரும் நிகழ்வுகள், பாத்திரங்களுடன் ஒன்றி ஈர்க்கப்பட்டு ஒன்றாக மாறும் ஒரு மன ரசவாதத்தை சினிமா சாதிக்கிறது. ஆகையினால்தான் “சினிமா முற்றிலும் ஒரு சமூகச் செயல்” என்று மாற்றுத் திரை இயக்குநர் மிருனாள் சென் கூறுகிறார். இந்த அடிப்படையில்தான் உங்கள் விஜயை நீங்களாகவே நீங்கள் உணர்கிறீர்கள். அந்தந்த நாயகர்களின் ரசிகர்களும் அப்படியே உணர்கிறார்கள். பொதுச் சமூகத்தின் மேல் சினிமா என்கிற இந்தக் காட்சி ஊடகத்திற்கு இருக்கிற இந்த ஆழத்தையும், வீச்சையும் செல்வாக்கையும் அறிந்துகொண்ட சமூக விஞ்ஞானி தோழர் லெனின் ரஷ்யாவில் புரட்சி அரசு பொறுப்பேற்றுக் கொண்டவுடன் முதலில் பொதுவுடமையாக்கியது சினிமாவைத்தான் என்பது உங்களுக்குப் புதிய செய்தியாக இருக்கலாம். இந்தப் புரிதலில்தான் திரையில் உங்கள் விஜயின் வீர தீர போராட்டங்களைப் போலவே சமூக அரசியலிலும் அவர் களமாடி ஒரு பொற்காலத்தைத் தருவார் என்கிற எதிர்பார்ப்புகளிலும் ஏக்கங்களிலும்தான் உங்களின் மடை திறந்த வெள்ளமாய் பங்கேற்ற மாநாட்டுப் படையெடுப்பும், கனவுகளும்.
நிழல் நிஜமாகுமா?
உங்கள் தளபதிக்கு எங்கிருந்து இந்த அரசியல் உத்வேகம் பீறிட்டுக் கிளம்பியது? இயல்பான அடுத்தவர் நலம் பேணும் அக்கறையா? தொண்டார்வமா? சொல்லிக் கொள்ளும்படியாக வெகு சமீபத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு கொடுத்த அன்பளிப்புகள் தவிர அப்படியான முன் நிகழ்வுகள் பங்கேற்புகள் எதுவுமில்லையே ? வேறு எப்படி? எம்.ஜி.ஆரும் என்.டி.ஆரும்தான் தன் ஆதர்சங்கள் என்று அவரே மாநாட்டில் சொல்லியிருக்கிறார். இந்தத் தமிழ் மண்ணில் எம்.ஜி.ஆரைப் பார்த்து சூடு போட்டுக் கொண்ட திரையுலகப் பிரபலங்களின் ஒரு சுவராஸ்யமான பட்டியல் இருக்கிறது என்பதை ஒரு முறை மனதிலே நிறுத்திக் கொள்ளுங்கள். ஆனால் இந்தக் காலத் தேர்வுக்கு ரஜினி ரசிகர்கள் இலவு காத்த கிளியாகிப் போனதுதான் முக்கியக் காரணம் என்பது உங்களுக்கும் புரியும் என்று நம்புகிறேன். இது ஒரு புறமிருக்க மக்கள் திலகமாக, புரட்சி நடிகராக மெருகேறி புரட்சித் தலைவராக அரசியலுக்குள் வெடித்துக் கிளம்பிய எம்.ஜி. ஆரின் பலம் எதுவென்று பார்ப்பது உங்களின் அரசியல் ஆசைகளுக்குப் பயனுள்ளதாய் இருக்குமென நம்புகிறேன்.
துவக்கப் புரிதல்
எம்.ஜி.ஆரின் திரையுலக நாயக பிம்பம்தான் அவரது அரசியல் வெற்றிக்குக் காரணம் என்பதான மேலெழுந்தவாரியான ஒரு துவக்கப் புரிதல்தான் அநேகரிடம் பரவலாக இருக்கிறது. ஆனால் உண்மை என்னவோ அது மாத்திரமல்ல. நாயக பிம்பத்திற்கு ஒப்பனைச் சாதனங்கள் அதிகம் ஒத்துழைக்காத நிலவரத்தில் வேறு வழியில்லாமல் அரசியலுக்கு வந்தவரல்ல அவர். மந்திரிகுமாரி துவங்கி மதுரையை மீட்ட சுந்தர பாண்டியனாக நிறைவு செய்த நீண்ட திரைப் பயணத்தின் ஊடாகவே, சம காலத்திலேயே அரசியலிலும் பங்கேற்றவர் அவர். சுதந்திரப் போராட்டத்தை வழி நடத்திய காங்கிரஸ் வலுவாக இருந்த போதே அதிலிருந்து விலகி சமூகநீதியை முன்னிறுத்தி அரசியல் பிரவேசம் செய்த திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற மக்கள் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர். காலப்போக்கில் காங்கிரஸ் பெருந்தனக்காரர்களுக்கான இயக்கமாக உருமாறும்போது அந்த அரசியலை மறுத்து, தமிழ் மண்ணின் பண்பாட்டுத் தளத்தில் தன் வேர்களை நங்கூரமிட்ட ஒரு மக்கள் கலாச்சார இயக்கத்துடன் தன்னை அடையாளப் படுத்திக் கொள்கிற அரசியல் பிரக்ஞை அவருக்கிருந்தது. திராவிட முன்னேற்றக் கழகம் அறிஞர் அண்ணா வால் தமிழ்நாட்டின் சாமானியர்களின் பாதுகாப்பு அரணாகக் கட்டமைக்கப்பட்டது. அந்த இயக்கத் தின் காவல் நாயகனாகத் திரையில் தன்னை நிலை நிறுத்திக்கொண்ட அந்த அரசியல் புரிதலை முழு மூச்சுடன், ஒரு அர்ப்பணிப்புடன் வலிந்து வடிவமைத்தவர். திரையில் அணியும் ஆடைகளிலிருந்து, பேசும் வசனங்கள் தொட்டு, கவிஞர்களின் பாடல் வரிகளுட்பட படம் முழுதிலும் தன் நாயகப் பாத்திரத்தை திமுகவின் தூதனாக, தொண்டனாக, சராசரிப் பிரதிநிதியாக, தமிழ்நாட்டின் அடி மட்ட உழைக்கும் மக்களுக்கு கொண்டு சேர்த்தவர். இந்த முன்மாதிரி தோற்றப் பொலிவின் காரணமாகவே மக்கள் திலகமாகப் பரிணமித்து அங்கீகரிக்கப்பட்டவர். ’67ல் அரியணையேறிய திராவிட இயக்கம் – இரு கழகங்களாய்ப் பிரிந்தாலும் இன்றளவும் தொடருகிற உண்மையின் பின்னணியில் கழகத்தால் எம்.ஜி.ஆரா இல்லை எம்.ஜி.ஆரால் கழகமா என்ற கேள்விக்கு கோழி முதலா அல்லது முட்டையா என்பதற்கு என்ன பதிலோ அப்படித்தான்.
அவர் உரையாற்றிய தொனி, அந்த மோஸ்தர் கனிந்த நாகரீகமாகத் தெரியவில்லையே? அவர் உரையெங்கும் ஒரு எகத்தாளம்தான் தென்பட்டது. அவருடைய அதீத வார்த்தைப் பிரயோகங்கள் – அது. எழுதித் தரப்பட்டதானாலும், அவருடையதேயானாலும் – அரசியல் புரிதலின் பூஜ்யத்தையே உணர்த்தியது.
நாயக பிம்பம்
எம்.ஜி.ஆர் என்கிற நாயகப் பிம்பத்தின் வெற்றியின் பின் மேலும் முக்கிய இரண்டு காரணிகளுண்டு. முற்றிலும் முழுக்கவும் எவ்விதத்திலும் எதிர்மறையற்ற நல்லவன், நன்மை செய்கிறவன், அநீதிக்கெதிராக நீதியின் பக்கம் நிற்பவன், மது மற்றும் புகை மறுக்கும் நற்பண்பாளன் என்பது தவிர இப்படி நிஜத்தில் தன் ரசிகர்கள் ஏதையெல்லாம் பேண முடியாமல் போராடுகிறார்களோ அதை நிழலில் அப்படியே மாதிரியாக ஒரு வலுவான தீவிரப் பிரக்ஞையுடன் வடிவமைத்தவர்; அப்படியே பாமரர்கள் மத்தியில் ஒரு படிமமாகவும் நிலைகொண்டவர். இந்தக் காட்சி ஊடகத்தின் வீச்சையும், வேகத்தையும், வலிமையையும் மிக ஆழமாகப் புரிந்துகொண்டு நல்ல நாயக வேஷம் மாத்திரம் பூண்ட நடிகர். நல்லவர் மாத்திரமேயல்ல; பொது நன்மைக்காய் நீதிக்காய் தன்னந்தனியே முஷ்ட்டியையும் உயர்த்தும் அசகாய சூரரும் கூட. பொதுப் பிரச்சினைகளில் கண்டு கொள்ளாமல் ஒதுங்கச் சொல்லும் ஒரு நபும்சக சமூகத்தில் “முஷ்டியை உபயோகித்த முதல் நாயகன்” என்று பேராசிரியர் சிவத்தம்பி கூறுகிறார், நடிப்புதானேயென்று எள்ளளவும் எதிர்மறை வேஷமெதுவும் ஏற்காதவர்; வேறு எப்படியும் வேடமிடாதவர். அவரது முழு திரையுலகப் பயணத்திலும் இதை ஒரு புரிதலுடன் வலிந்து உறுதியாய்க் கடைப்பிடித்தவர். ஆகவே அவர் ரசிகர்களுக்கு, அவர் நிஜத்திலும் அரசியலிலும் நல்லவரே; அவர் மாத்திரம்தான் நல்லவர்; அவர் ஒருவரே மக்களுக்கு நன்மை செய்கிறவர். இது ஒரு மாய வலைதான் என்றாலும் அந்த மயக்கம் இன்றளவும் தொடர்கிறது.
அரசியல் சதுரங்கம்
இரண்டாவது, ஒரு ஆணாதிக்கச் சமூகத்தில் தாய்மையை உயர்த்திப் பிடித்ததின் வழி அவர் முன்னெடுத்த பெண்ணிய முன்னிலை அவரை பெண் களின் காவலனாக, பெண்ணியத்தின் பிதாமகனாக, பெண்களின் ஆதர்ச புருஷனாக உயர்த்திய ஒரு பரிணாமம் தமிழ் மண்ணில் நிலை கொண்டது வரலாறு. தவிரவும் பாலுணர்வுப் புரிதல் இலை மறை காய் மறையாக மிகப் பெரிய பவுத்திரமாகப் பாவிக்கப்படுகிற – காதலுக்கும் வீரத்திற்கும் அகமும் புறமும் கண்ட இந்தத். தமிழ் மண்ணில் அந்தப் பாலுணர்வுக்கு அவருடய பாடல் வழிக் காதல் மூலம் தீனி போட்ட ஆகப் பெரிய வணிக சாமர்த்தியர். அம்மையார் அபிநய சரஸ்வதி சரோஜாதேவி அவர்கள் குறித்த தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணி அவர்களின் பேட்டியையும், மிகக் கூர்மையான விமர்சனப் படைப்பான ஜெயகாந்தனின் “சினிமாவுக்குப் போன சித்தாளு”வையும் இது வரையிலும் படிக்காதவர்கள் தேடிப் படியுங்கள். தமிழ் சினிமா தனக்குத் தந்த இத்தனை பெரிய, வலிய கவர்ச்சிக் கவசத்துடன் வலம் வந்ததால்தான், ஒரு சொந்த நிர்ப்பந்தத்தில் – திமுக மற்றும் கலைஞரின் சகாப்தத்தை பலஹீனமாக்கத் தொடுக் கப்பட்ட டில்லி அரசியல் சதுரங்கத்தில் முக்கியப் பாத்திரமேற்று – முழு நேர அரசியலில் தனி இயக்கம் கண்டு அதில் அசைக்க முடியாத வெற்றியும் பெற்றார்.
விஜயின் பின் அணி வகுக்கும் அருமை இளைஞர்கள் மற்றும் தோழியரே மேற்சொன்ன அம்சங்களில் எது ஒன்றாகிலும் உங்கள் தளபதிக்குப் பொருந்துமா என்பதை உங்கள் சிந்தனைக்கே விடுகிறேன். விஜய் மாத்திரமல்ல, எம்.ஜி.ஆருக்குப் பிறகு அரசியலுக்குப் படையெடுத்துவந்த தமிழ் நட்சத்திரங்கள் எவருக்கும் இந்த அடையாளங்கள் எதுவும் கிடையாது. எவரும் சோபிக்கவும் இல்லை. நடிகர் திலகமாய் இணையாகப் போட்டியாகப் பயணித்த சிவாஜி அவர்கள் கழகத்திலிருந்து காங்கிரஸில் இணைந்த அந்த நேரெதிா பயணத்தில் இளைத்து, இறுதியில் அவரும் தனி இயக்கம் கண்டு களைத்து ஒதுங்கினார். சற்று ஏறி வந்த விஜயகாந்தின் குடும்ப அரசியல் பேரங்கள். பொதுவெளியில் கடைப்பிடிக்க வேண்டிய குறைந்தபட்ச எதிர்பார்ப்புகளும் அம்பல மான போது அவரும் வலுவிழந்தார்.
எகத்தாளம்
அருமையானவர்களே இந்த முதலாளித்துவ ஜனநாயக அரசியல் அனைவருக்குமானது; அதில் அய்யமேயில்லை. எவரும் அதில் இடைபடலாம். விஜய் திரையில் காவலனாக வலம் வரலாம். அரசியலில் உண்மையிலேயே அவர் காவலரா அல்லது சேவகரா என்கிற அங்கீகாரம் மக்களிடமிருந்து வர வேண்டும். முதல் துவக்க மாநாட்டிலேயே அது கிடைக்கப் பெற்று விட்டதாககக் கருதி அவர் உரையாற்றிய தொனி, அந்த மோஸ்தர் கனிந்த நாகரீகமாகத் தெரியவில்லையே? அவர் உரையெங்கும் ஒரு எகத்தாளம்தான் தென்பட்டது. அவருடைய அதீத வார்த்தைப் பிரயோகங்கள் – அது. எழுதித் தரப்பட்டதானாலும், அவருடையதேயானாலும் – அரசியல் புரிதலின் பூஜ்யத்தையே உணர்த்தியது. ஆகப் பெரிய எம்.ஜி.ஆரே, சந்தித்த முதல் பொதுத் தேர்தலில் கலைஞருக்குப் பதில் தருகிற போது தனக்கு அரசியல் – ஊழல் செய்யும் அரசியல் – தெரியாதென்றுதான் ஒரு பணிவான நகையுடன் தன்னை வெளிக்காட்டினார்.
நாற்பதுகளின் இறுதியில் இயக்கத்தை ஆரம்பித்து அறுபதுகளின் இறுதியில் அரியணையேறிய அறிஞர் அண்ணாவே சட்ட மன்றத்தில் “உங்கள் நாட்கள் எண்ணப்படுகின்றன” என்று எச்சரித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. கே.விநாயகத்திடம் “நாங்கள் அளந்துதான் நடக்கிறோம்” என்ற தன் அரசியல் முதிர்வை வெளிப்படுத்தினார். புள்ளிவிவரப் புலிகள், அரசியல் விஞ்ஞானிகள், பாயசமாகிய ஃபாசிஸம், உழைப்பின் மேன்மையைப் பேசும் மீன் கதையை மலினமாக்கியது என்ற இந்தப் பட்டியல் தொடர்கின்றது. உங்கள் தளபதியின் இந்த அலட்சிய ஆக்ரோஷ முழக்கங்களை நீங்கள் ரசிக்கலாம். இந்த சுயமரியாதைப் பூமி அதை எப்படி எடைபோடுகிறது என்பதைக் காலம்தான் சொல்லும்.
தனக்குரிய ஆகப் பெரிய பலமாக அவரே அடை யாளம் காட்டிய சந்தையின் உச்சத்திலிருந்து அதைத் துறந்து அரசியலுக்கு வந்திருப்பதான அவருடைய தியாக சீலம்? அவர் ஊதியம் உச்சத்திலிருக்கலாம் – ஆனால் இன்னும் எத்தனை நாட்கள்? அசகாய வீர சூர நாயகர்களைப் புறம்தள்ளி வாழையும், மாமன்னனும், பரியேறும் பெருமாளும் தமிழ்த் திரையில் தழைக்கின்ற நாட்கள் உருவாகியிருக்கின்றன. கூழாங்கல்லும், கொட்டுக் காளியும் என ஒரு பன்னாட்டு மாற்றுப் பயணத்தில் தமிழ்த் திரை காலெடியெடுத்து வைக்கிறபோது இளம் ஃபார்முலா நாயகர்கள் சலித்துப் போகிறபோது, மூன்றே நாட்களில் கருப்பில் கட்டணம் வசூலித்து சந்தையைத் தக்க வைத்துக் கொள்கிற நிர்ப்பந்தத்தில், மாற்றுத் திரையும் (OTT) மற்ற தொழில்நுட்ப வளர்ச்சிகளின் அதிரடித் தாக்கத்தில், அதற்குள்ளாக அப்பா வேஷத்தை ஜீரணிக்க முடியாத நெருக்கடியில் உங்கள் விஜய் அரசியலுக்குள் பிரவேசித்திருக்கிறார்; அதுவும் முன்னோடித் தளபதி ரஜினி அஞ்சி ஒதுங்கிக் கொண்டபின், உடனடிப் போட்டிகள் ஒருவரும் இல்லை என்பது உறுதியான பின் உள்ளே நுழைந்திருக்கிறார். விஜய் வராமல் தமிழ் சமூகம் தத்தளிப்பதாக ஒரு பெரிய கூக்குரலோ கோரிக்கையோ எதுவுமில்லையே? அவராகத்தான் வலிய வருகிறார், நீங்களாகத்தான் சிலிர்த்துப் புறப்பட்டிருக்கிறீர்கள். வாழத்துக்கள்.
பெரியாரைச் சொல்லாமல், பேசாமல் எந்தக் கொம்பனாலும் இந்த மண்ணில்
அரசியல் செய்ய முடியாது. அவரை சொல்லிவிட்டு அவசர அவசரமாய் ஆத்திக
அரிதாரத்திற்கு அப்படிக் கல் விடுவது ஏன்? யாரைக் குளிப்பாட்ட?
வாயே திறக்காதது ஏன்?
சமூக சேவைதான் மூச்சென்றால் மூன்று மாதங்களுக்கும் மேலாகக் களம் கண்டு கொண்டிருந்த ஸாம்சங் தொழிலாளிகள் குறித்து வாயே திறக்கவில்லையே? ஏன்? அரசியலுக்கு இன்றுதான் வந்தார், நல்லது. ஆனால் இது வரையிலும் செய்த சமூகப் பணியென்றாவது எதுவும் உண்டா?”
திமுகவின் குடும்ப அரசியல்?
தந்தை சந்திரசேகர் இல்லாத இளம் நாயகன் விஜயை நீங்கள் கனவு கூட கண்டிருப்பீர்களா? இவர் கூடவே திரைக்கு வந்த விஜயகுமார் புதல்வரின் நிலையை இவரோடு ஒப்பிடுவோமா? நடிகர் மகன் நடிகராக, மருத்துவர் மகன் மருத்துவராக, வழக்குரைஞர் குடும்பத்தில் ஒருவராவது கருப்பு கவுன் போட, ஆடிட்டர் மகன் அப்படியே தொடர, ஆசிரியர் குடும்பத்து வம்சாவளியின் பெருமை காக்க, ராணுவச் சேவையில் தன் வாரிசும் தொடர்வதை பீற்றிக் கொள்ள, தொழில் வணிக சாம்ராஜ்யம் அப்படியே தழைக்க, தொடர் – அரசியல்வாதி மகன் மாத்திரம் ஆடு மேய்க்கப் போக வேண்டுமா?எனக்கு இந்த ரகசியம் புரிவதேயில்லை? என்னவோ இந்த தேசத்தின் எண்ணற்ற இளைஞர்கள் தீராத பொதுநலச் சேவையில் துடித்தெழுந்து பங்கேற்க விழைவது போலவும் அவர்கள் எல்லோரையும் வாரிசு அரசியல் தடை செய்வது போலவும் ஒரு பிம்பம் இங்கே கட்டமைக்கப்படுகிறது. உங்கள் தளபதி மேடையில் உட்கார வைத்திருந்த நாலு பேரில் யார் யாருக்கு விஜய் குடும்ப பரிச்சயம் என்பது வெளிச்சமாகியிருக்க நீங்கள் விழித்துக் கொள்வீர்களென நம்புகிறேன்.
பாதி ஊதியம் கருப்பில்
லஞ்சம் – ஊழல் எல்லா இந்தியக் குடி மகனும் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று புலம்புகின்ற இரண்டு வார்த்தைகள். தன் கண்ணிலே இருக்கிற உத்திரத்தை சட்டை செய்யாமலே அடுத்தவன் கண்களில் இருக்கிற தூசியைக் குற்றம் சாட்டுகிற ஒரு குருட்டு தேசத்தின் குடிகள் நாம். உறுதியாய் ஊழலை ஒழிக்கப் புறப்பட்டால் உங்களில் ஒருவர் கூட தளபதியின் முதல் நாள் காட்சிக்குப் போக முடியாது என்று தெரிந்திருந்தும், தன் பாதிச் சம்பளத்தை கருப்பில் கோடிகளாக வாங்கும் அவர் ஊழலை ஒழிக்கப் போவதாகக் கூறினால் உற்சாகத்தில் குதிக்கும் உங்களையும் என்னவென்று சொல்வது? மக்களை மிகப் பெரிய ஏமாளிகள் என்று எடையிட்டு எந்த அரசியல்வாதியும் ஊழல் பற்றிப் பேசுவதில்லை; மாறாக அது இந்தக் கலியுகம் முடிந்து துவங்கும் கிருத யுகத்திலும் தொடர்ந்து விடுமோ என்கிற அச்சத்தில் இதை அவ்வப்பொழுது நாம் ஒருவருக்கொருவர் நினைவு படுத்திக் கொள்கிறோம்.
சற்றே சிந்தியுங்கள். மீட்டருக்கு மேல் பத்து ருபாய் கேட்கும் ஆட்டோ ஓட்டுநரிலிருந்து, காசு வாங்காமல் கோப்பை நகர்த்த மறுக்கும் – லஞ்சத்தைப் பிறப்புரிமையாகக் கருதும் – அரசு ஊழியரிலிருந்து, பொதுச் சொத்தைப் பேணுவது குறித்த எவ்வித அக்கறையுமின்றி அதை சூறையாடுவதும் அலட்சியப்படுத்துவதுமான சமூகத்தின் பொதுப்புத்தியிலிருந்து, சக மனிதனை பணத்தை மாத்திரம் மய்யமாகக் கொண்டு மதிப்பீடு செய்யும் உடமை சமூகத்தில் அதீத லாபம் மாத்திரம் குறியாகக் கொண்டு இயங்கும் சிறு, குறு, பெரு வணிகர்கள் மற்றும் பெரு வணிகக் குழும நிறுவனங்களிலிருந்து, வணிகமாகிப் போன கல்வி மற்றும் பொதுச் சுகாதாரம் பற்றி எவ்விதச் சுரணையும் இல்லாமல் மற்றவர் வரிப்பணத்தில் உருவாகும் அரசு கல்வி நிறுவனங்களில் படித்துவிட்டு பட்டம் பெற்ற பின் அதை அப்படியே மறந்து மருத்துவராகும் இளைய தலைமுறை வரை
மாயை – கவர்ச்சி
எளிமை, தியாகம், சீலம் இவற்றையெல்லாம் காட்சிப் பொருளாக்கிவிட்டு மாயையிலும், கவர்ச்சியிலும், பிரதிபலனுக்காகவும் மாத்திரம் தேர்ந்தெடுத்து அனுப்புகிற அரசியல்வாதியை மாத்திரம் வெட்கமே இல்லாமல் லஞ்ச ஊழல் முத்திரை குத்துகிற கபடம் வரையிலும், உறங்குவது போல் நடிக்கும் இந்தக் குருட்டு சமூகத்தில் உங்களுக்கும் உங்கள் தளபதிக்கும் லஞ்ச ஊழல் பற்றிப் பேசவும் அதற்கெதிராக வெகுண்டெழவும் முகாந்திரமோ உரிமையோ இருக்கிறதென்று உங்களால் உறுதியாய்ச் சொல்ல முடியுமா? கருப்பட்டிப் பானைக்குள் கை விட்டவன் புறங்கையை நக்கினால் அது இயல்பு. இன்று இந்த தேசத்தின் கெட்ட வாய்ப்பு – பானைகளே முழுங்கப் படுகின்றன என்பதுதான் உண்மை.
காந்தி, காந்தி என்றொரு மானுடன், சாம்பலிலும் புழுதியிலும் நீடு துயிலுற்றிருந்த ஜனக் கூட்டத்தைத் தட்டியெழுப்பி, அந்நிய நுகம் முறித்த – அந்த அரை நிர்வாணி சொன்னது நினைவிருக்கிறதா? “எது மாற வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதுவாக முதலில் நீங்கள் மாறுங்கள்” (Be the change you want to be) என்றாரே? எழுபத்தைந்து வருடங்களில் எங்கே நிற்கிறோம்? எங்கே போகிறோம்? “தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்” என்று மக்கள் கவிஞன் பாடியிருக்கிறான். பெரியாரைச் சொல்லாமல், பேசாமல் எந்தக் கொம்பனாலும் இந்த மண்ணில் அரசியல் செய்ய முடியாது. அவரை சொல்லிவிட்டு அவசர அவசரமாய் ஆத்திக அரிதாரத்திற்கு அப்படிக் கல் விடுவது ஏன்? யாரைக் குளிப்பாட்ட? சுயமரியாதையோடு கூடிய ஆத்திகத்திற்கு தமிழ்ச் சமூகம் என்றோ தயாராகிவிட்டது. உங்கள் தளபதியிடம் யாரும் அதற்கு உத்தரவாதம் கோரவில்லை.
பாசிசமா? பாயசமா?
சித்தாந்த எதிரி ஒருவன்; அரசியல் எதிரி மற்றொருவன். அப்படியானால் உங்கள் விஜயின் தலைமையில் நீங்கள் செய்யப் போவது சித்தாந்தமற்ற பதவி அரசியல் மாத்திரம்தானா? சித்தாந்த எதிரியை பகிரங்கமாக அடையாளம் காட்டாமல் உங்கள் சித்தாந்தத்தை நிறுவுவது எப்படி? அந்தச் சித்தாந்த எதிரி உங்களுக்கு எதிராக அரசியல் செய்தால் கொதித்து எழுவீர்களா/ இல்லை குனிந்து மண்டியிடப் போகிறீர்களா? எந்த அவசியத்தில் ஃபாசிஸம் எனும் கொடிய விஷத்தை நீர்த்துப் பாயாசமாக்கினார்?
ஈரமுள்ள மனசாட்சியோடு நெஞ்சில் கை வைத்துச் சொல்லுங்கள் பிரியமானவர்களே -பிஸ்கில் பானுவிடமும், நிர்வாணமாக்கப்பட்ட ‘நம் அருமை மணிப்பூர் சகோதரியரிடமும் உங்கள் தளபதியின் வார்த்தைகளுக்காய் மன்னிப்பு கோருவீர்களா? இல்லை பாயாசம் கேட்பீர்களா? எல்லாவற்றுக்கும் மேலாக அவரே சொல்லியபடி நட்சத்திர உச்சத்திலிருந்து உதிர வேண்டிய அவசியம் எந்த நிர்ப்பந்தத்தில், யாரிடமிருந்து வந்த அழுத்தத்தில் நேர்ந்தது என்பது ஊரறிந்த இரகசியம். அது உங்களில் அநேகருக்கும் கூட தெரிந்திருக்கும். ஆனால் இன்றைக்கு உரக்க உயர்த்திப் பிடித்திருக்கிற “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” முழக்கத்தை அது திரை மறைவில் விழுங்கும் போது, அந்தச் சாயம் வெளுக்கும் போது, தளபதியின் என் அன்பு ரசிகர்களே உங்கள் முகத்தை நீங்கள் எங்கே வைத்துக் கொள்வீர்கள்? தமிழ் மண்ணின் திராவிட மாற்று அரசியலை எப்படியாகிலும் புரட்டிப் போட தமிழ் தேசிய வார்த்தை வனத்தில் சில சீமான்களை சீண்டி விட்டார்கள். ரஜினி எனும் ஒரு தோற்றப் பிழை கழுவிய மீனில் நழுவிய மீனாய் கழட்டிக் கொண்ட பின், இரட்டை இலை சின்னத்தை ஒரு சூதாட்டத்திலேயே நிறுத்திக் கொண்ட பின். உங்கள் தளபதியைச் சூ காட்டி இந்த தமிழ் மண்ணின் அரசியலெனும் குழம்(ப்)பிய குட்டையிலே தாமரையை மலரச் செய்யும் ஆர்.எஸ்.எஸ் சித்பவன் சித்து விளையாட்டுகளுக்குப் பலியாகத் தயாராயிருக்கிறீர்களா எனதருமை ரசிகப் பெருமக்களே?
ஊடகத்தின் சில மதிப்புக்குரிய அரசியல் விமர்சகர்கள்/வித்தகர்கள் உங்களையும் தளபதியையும் உடன்பட்டு உயர்த்திப் பிடிக்கிற போது, துக்ளக் ரமேஷும், ரவீந்திரன் துரைசாமியும் உங்களுக்கு சவால் விட்டிருப்பது கூட நாக்பூர் இயக்கும் நாடகத்தின் ஒரு அங்கமாகத்தான் தெரிகிறது. எது எப்படியானாலும் இந்த தமிழ் மண்ணின் 2026 தேர்தல் நாடகத்தில் சுவராஸ்யங்களுக்கும், ஹாஸ்யங்களுக்கும் பஞ்சமே இருக்காது என்கிற எதிர்பார்ப்புகளுடன், இவ்வளவு பெரிய ரசிகர் பட்டாளமாகிய உங்களை ஒரு ஆக்க பூர்வ அரசியலில் இனம் காண விழையும்
-ஆர்வத்துடனும் வாழ்த்துக்களுடனும்,
உங்கள் நண்பனாக வல்லபாய்
(கட்டுரையாளர்; மொழிபெயர்ப்பாளர்)
நன்றி: ‘காக்கைச் சிறகினிலே’, டிச. 2024