கார்த்திகை தீபம் * தந்தை பெரியார்

viduthalai
2 Min Read

கார்த்திகை தீபம் என்ற பண்டிகை வரப் போகின்றது. இதற்காக அருணாசலமென்னும் திருவண்ணாமலை முதலிய பல ஊர்களில் பெரும் பெரும் உற்சவங்கள் நடைபெறும். அதற்காக பதினாயிரக்கணக்கான மக்கள் யாத்திரை போவார்கள்.

இது மாத்திரமல்லாமல் பல பல குடங்கள் நெய்களை டின் டின்னாய் கற்பூரத்தைக் கலந்து நெருப்பில் கொட்டி எறிப்பார்கள். சில இடங்களில் கட்டைகளை அடுக்கி அல்லது தட்டுகளைப் போராகப் போட்டு நெருப்பு வைத்து சட்டிசட்டியாக வெண்ணைகளை அந்த நெருப்பில் கொட்டுவார்கள்.

இவைகள் தவிர வீடுகளிலும், கோவில்-களிலும் 10, 50, 100, 1000, 10000, 100000 என்கின்ற கணக்கில் விளக்குகள் போட்டு நெய், தேங்காய் எண்ணெய், நல்ல எண்ணெய், இலுப்பை எண்ணெய் முதலியவைகளை ஊற்றியும், எள்ளு பொட்டணம், பருத்தி விதை பொட்டணம் ஆகியவைகளை கட்டியும், பெரும் பெரும் திரிகள் போட்டும் விளக்குகள் எரிப்பார்கள். இந்தச் சடங்குகள் செய்வதே மேற்படி பண்டிகையின் முக்கிய சடங்காகும். ஆகவே, இந்தச் சடங்குகளுக்கு எத்தனை லட்சம் ரூபாய் செலவு என்பதையும் இதற்காக செல்லும் மக்களின் ரயில் செலவு, மற்ற வீண் செலவு, நேரச்செலவு ஆகியவைகளால் எத்தனை லட்சம் ரூபாய் செலவாகும் என்பதையும் கவனித்துப் பார்த்து பிறகு இப்படிப்பட்ட இந்தப் பெருந்தொகைச் செலவில் நாட்டுக்கோ, மக்களுக்கோ, அல்லது மதத்திற்கோ, மக்களின் அறிவிற்கோ சுகாதாரத்திற்கோ அல்லது வேறு எதற்காவது ஒரு அம்மன் காசு பெறுமான பிரயோஜன-மாவது-முண்டா என்பதையும் யோசித்துப் பார்த்தால் நமது மக்களின் பாரம்பரியமான முட்டாள்தனம் விளங்காமற் போகாது. அர்த்தமற்ற தன்மையில் நமது செல்வம், கொள்ளை போகின்றதே, கொள்ளை போகின்றதே என்று கூச்சல் போடுகின்றோம். ஜவுளிக்கடையில் போய் மறியல் செய்து ஜெயிலுக்குப் போவதைப் பெரிய தேச-பக்தியாய்க் கருதுகிறோம். ஆனால் இந்த மாதிரி நமது செல்வம் நாசம் போவதைப் பற்றி நமக்கு சிறிதும் கவலையில்லை. அதைப் பற்றி நினைப்பதுமில்லை. அதைப் பற்றிப் பேசுவதே மதத் துரோகமாகவும், நாத்திகமாகவும் சொல்லப்படுகின்றது. இம்மாதிரி செல்வம் நாசமாவதை விட்டுக் கொண்டு வருவதால் எத்தனை பத்து லட்சக்கணக்கான மக்கள் தலைமுறை தலைமுறையாக முட்டாள்களாகிக் கொண்டு வருகின்றார்கள் என்பதை நாம் கவனிப்பதில்லை.

ஆகவே ஆங்காங்குள்ள சுயமரியாதைத் தொண்டர்கள் இதை கவனித்து இம்மாதிரி-யான மூடத்தனங்களும், நாசகார வேலைகளும் சிறிதாவது குறையும்படியாக வேலை செய்வார்களானால் அது மற்ற எல்லா முயற்சி களையும்விட எத்தனையோ மடங்கு பயன்தரக் கூடியதும் பல வழிகளிலும் அவசியமானதுமான முயற்சிகளாகும் என்பதை ஞாபகமூட்டுகின்றோம்.

– ‘குடிஅரசு’ – துணைத்தலையங்கம்
30.11.1930

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *