தந்தை பெரியார் பங்கேற்று வெற்றி பெற்ற
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா – டிச.12 கேரளாவில்!
தமிழ்நாட்டிலிருந்து வைக்கத்திற்குத் தோழர்கள் குவிகின்றனர்
வைக்கம், டிச.8- தீண்டாமையை எதிர்த்து தந்தை பெரியார் தலைமையில் வைக்கத்தில் நடைபெற்ற போராட்டத்தின் வெற்றி விழா நூற்றாண்டு வரும் 12ஆம் தேதி வைக்கத்தில் நடைபெற உள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த விழாவில் தமிழ்நாட்டி லிருந்தும் தோழர்கள் பெரும் அளவில் குவிகின்றனர்.
கேரள மாநிலம் வைக்கத்தில் “வைக்கம் போராட்டத்தில் பெரியார் –- நூற்றாண்டு நிறைவு விழா, தந்தை பெரியார் நினைவகம் மற்றும் பெரியார் நூலகம் திறப்பு விழா” 12.12.2024 அன்று காலை 10 மணிக்கு சிறப்புடன் நடைபெற உள்ளது.
இவ்விழாவில் கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமை வகித்து உரையாற்ற உள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகின்றார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விழாவிற்கு முன்னிலை வகித்து உரையாற்றுகிறார்.
வைக்கம் போராட்டம் ஏன்?
கேரள மாநிலம் அன்றைய திருவாங்கூர் சமஸ்தானத்தின் வைக்கத்தில் உள்ள மகாதேவா (சிவன்) கோயிலைச் சுற்றி இருந்த தெருக்களிலே தாழ்த்தப்பட்டவர்கள், ஈழவர்கள், தீயர்கள், புலையர்கள் என்று சொல்லப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் நடப்பதற்குத் தடை நிலவி வந்தது. இந்தக் கொடுமைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டமே வைக்கம் போராட்டமாகும்.
1924 மார்ச் 30 அன்று கேரள காங்கிரஸ் ஆதரவில் இப்போராட்டம் தொடங்கியது.
ஏப்ரல் முதல் வாரத்திலேயே போராட்டம் நடத்தியோர் சிறைப்படுத்தப்பட்ட நிலையில், போராட்டம் தடைபட்டது. கேரள காங்கிரஸ் அழைப்பையேற்று வைக்கம் சென்ற தந்தை பெரியார் 13.4.1924 அன்று அப்போராட்டத்திற்குத் தலைமை யேற்றார்.
மக்கள் ஆதரவைத் திரட்ட பெரியார் செய்து வந்த பிரச்சாரப் பயணம் திருவனந்தபுரம், நாகர்கோயில் வரை நீண்டது. தந்தை பெரியாரின் வரவினால் வைக்கம் போராட்ட இயக்கத்திற்குப் புத்துயிர் கிடைத்தது.
சாதாரண மக்களுக்கும் புரியும்படியாகப் பேசிய தந்தை பெரியாரது உரையானது மக்களிடையே பெரும் எழுச்சியை உண்டாக்கியது. இதனால் மிரண்டு போன அன்றைய – அரசாங்கம் பெரியார் பேசுவ தற்குத் தடை விதித்தது. கோட்டயம் மாவட்டத்திற்குள் பெரியார் நுழையவும் தடை போடப்பட்டது.
தீண்டாமை ஜாதிவெறிக்கு எதிராகப் போராட்டம் நடத்திய பெரியார் சிறைப்படுத்தப்பட்டார். கடுங்காவல் தண்டனைப் பெற்ற பெரியார் பல கொடுமைகளையும், சித்திரவதைகளையும் அனுபவிக்க நேரிட்டது.
தொண்டர்களோடு சிறைப்படுத்தப்பட்ட பெரியார், தமது குடும்பத்தையும் போராட்டத்தில் ஈடுபடுத்தினார். 15.5.1924 அன்று வைக்கம் வந்த அன்னை நாகம்மையார் வைக்கம் போராட்ட நட வடிக்கைகளில் 4 மாத கால அளவுக்குப் பங்கேற்றார்.
இந்தத் தீண்டாமைக் கொடுமைக்கு முற்றுப் புள்ளி வைக்க தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த தந்தை பெரியார் 1924ஆம் ஆண்டு வைக்கம் நகரில் தலைமையேற்று நடத்திய அறப்போராட்டம் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைப் போர் வரலாற்றில் தனித்துவம் பெற்ற ஒன்றாகும். இந்தியாவிலேயே தீண்டாமையை எதிர்த்து முதன்முதலாக நடத்தப்பட்ட சத்தியாகிரக – அறப் போராட்டமும் இதுவேயாகும். போராட்டம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து “வைக்கம் வீரர்” எனத் தந்தை பெரியார் சிறப்பித்துக் கூறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
தந்தை பெரியார் நினைவகம் – நூலகம் தமிழ்நாடு முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
ஆதிக்க ஜாதி வெறியர்களுக்குச் சம்மட்டி அடி கொடுத்த வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழா நிகழ்ச்சிகள் 12.12.2024, வியாழக்கிழமை, காலை 10 மணிக்குத் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலு டன் தொடங்குகிறது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் வரவேற்பு ரையாற்றுகிறார்.
தந்தை பெரியார் நினைவகம் மற்றும் பெரியார் நூலகம் ஆகியனவற்றைத் திறந்து வைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றும் இவ்விழாவிற்குக் கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமை வகித்து உரையாற்றுகிறார். விழாவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் முன்னிலையுரையாற்றுகிறார்.
தமிழ்நாடு நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கேரள கூட்டுறவு துறைமுகங்கள், தேவஸ்தானத்துறை அமைச்சர் வி.என்.வாசவன், தமிழ்நாடு பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, கேரள மீன்வளம் கலாச்சாரம் (ம) இளைஞர் நலத்துறை அமைச்சர் சஜி செரியான், தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கோட்டயம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கே.பிரான்சிஸ் ஜார்ஜ், கோட்டயம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜான் வி.சாமுவேல், வைக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமதி சி.கே.ஆஷா, வைக்கம் நகர்மன்றத் தலைவர் திருமதி பிரீத்தா ராஜேஷ், நகராட்சி வார்டு கவுன்சிலர் இராஜசேகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
நிறைவாக கேரள மாநில அரசு தலைமைச் செயலாளர் திருமதி சாரதா முரளிதரன் நன்றி கூறுவார்.
தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களைச் சேர்ந்த கழகத் தோழர்களும், அனைத்துக் கட்சிகளின் பற்றாளர்களும், ஒடுக்கப்பட்டோர் பெருவாழ்வில் நாட்டமுடைய சமூக உரிமைப் போராளிகளும் இவ்விழாவில் பங்கேற்றுச் சிறப்பிக்க ஆயத்தமாகி வருகின்றனர்.