சென்னை, டிச. 7- தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா – வாழ்வியல் சிந்தனைகள் மற்றும் The Modern Rationalist – Annual Number 2024 – மலர் வெளியீட்டு விழா இன்று பெரியார் திடலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
கடுமழையால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையைக் கருத்தில் கொண்டு சென்னையில் டிசம்பர் 2ஆம் தேதி நடக்கவிருந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்த நாள் நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா இன்று (7.12.2024) காலை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் மிகுந்த எழுச்சியுடன் தமிழ்நாடெங்கும் இருந்து வந்திருந்த கழகத் தோழர்கள் வாழ்த்துகளுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இன்று காலை பெரியார் திடலில் திரண்டிருந்த கழகத் தோழர்கள் தமிழர் தலைவர் பெரியார் திடல் நுழைவாயிலில் காரில் வந்தபோது அவரை மிகுந்த எழுச்சியுடன் ஒலிமுழக்கத்துடன் வரவேற்பு அளித்து அழைத்து வந்தனர்.
முற்பகல் 10:30 மணியளவில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் தமிழர் தலைவரின் பிறந்த நாள் விழா தொடங்கியதும் மேடையில் முதல் நிகழ்வாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு கூடியிருந்த அனைத்துத் தோழர்கள் சார்பாக திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
தொண்டறச் செம்மல்கள்
இதனைத் தொடர்ந்து நூற்றாண்டு தொண்டறச் செம்மல்கள் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்கள் பெங்களூரு மானமிகு வீமு.வேலு (105 வயது), ஆத்தூர் மானமிகு ஏ.வி.தங்கவேல் (103 வயது), பொத்தனூர் மானமிகு க.சண்முகம் (102 வயது) ஆகியோருக்கு ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்து “நூற்றாண்டு தொண்டறச் செம்மல்” விருது வழங்கி சிறப்பித்தார்.
இதனைத் தொடர்ந்து மாவட்டங்கள் வாரியாக தமிழ்நாடு முழுவதும் திரண்டு வந்திருந்த கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் ஒருங்கிணைந்து திரட்டிய “பெரியார் உலக நன்கொடை” மற்றும் இயக்க ஏடுகளுக்கான சந்தாத் தொகையினை குடும்பம் குடும்பமாக மேடையில் வரிசையாக வந்து தமிழர் தலைவரிடம் வழங்கி மகிழ்ந்தனர்.
புத்தக வெளியீட்டு விழா
அடுத்து நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ் ‘The Modern Rationalist – Annual Number 2024’ மலரினை வெளியிட, தமிழக மூதறிஞர் குழு பொருளாளர் த.கு.திவாகரன் அதனைப் பெற்றுக் கொண்டார்.
தமிழர் தலைவரின் “வாழ்வியல் சிந்தனைகள்” (தொகுதி- 18) நூலினை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை இலக்கிய சங்கத்தின் மாநில துணை செயலாளர் பேராசிரியர் சுந்தரவள்ளி வெளியிட பெரியார் பன்னாட்டமைப்பு வினோபிரியா நூலினைப் பெற்றுக் கொண்டு தமிழர் தலைவரை வாழ்த்தி உரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து விழாவிற்கு வந்திருந்த ஏராளமானோர் வரிசையாக வந்து நூல்களைப் பெற்றுக்கொண்டனர். விழாவினை முன்னிட்டு 2 நூல்களுக்குமான விலை ரூ.520லிருந்து சலுகை விலையில் ரூ.400க்கு தரப்பட்டன.
விழாவில் திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி வரவேற்புரையாற்ற, கழக மாநிலப் பொறுப்பாளர்கள் தலைமைக் கழக அமைப்பாளர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.
கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் தமிழர் தலைவரின் பிறந்த நாள் விழா தலைமை உரையை நிகழ்த்தினார். அப்போது கழகத் தோழர்கள் அனைவரும் எழுந்து நின்று உற்சாகத்துடன் கரவொலி எழுப்பி தமிழர் தலைவருக்குப் பிறந்த நாள் வாழ்த்தை மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
தந்தைபெரியார் காலந்தொட்டு இடைவிடாத இயக்கத்தின் செயல்பாடுகள், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92 வயதில் 82 ஆண்டு கால பொதுவாழ்வு சாதனைகள், தந்தைபெரியார் கொள்கைகளை செயல்படுத்துகின்ற பாங்கு, பெரியார் உலகமயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு வரலாற்றுத் தகவல்களை எடுத்துக்கூறிய கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆசிரியர் அவர்களுடன் 51 ஆண்டுகளாக தம்முடைய பணி தொடர்வதாக மிகுந்த நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு இதே மேடையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவோம் என தமது தலைமையுரையில் குறிப்பிட்டார்.
நினைவுப் பரிசு
கடந்த 3.12.2024 அன்று புதுடில்லியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அகில இந்திய சமூகநீதி மாநாட்டில் காணொலி வாயிலாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றியதைத் தொடர்ந்து, அந்நிகழ்ச்சிக்கான நினைவுப் பரிசை வழங்கி மாநிலங்களவை திமுக உறுப்பினர் வழக்குரைஞர் பி.வில்சன் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்தார்.
விழாவில் நூல்களை வெளியிட்ட தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலை இலக்கிய சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் பேராசிரியர் சுந்தரவள்ளி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டின் மூத்த தலைவர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் தமிழர் தலைவரை வாழ்த்தி சிறப்புரை ஆற்றினர். இவ்விழா நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஏற்புரை நிகழ்த்தினார்.
விழாவில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்கினார். திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் நன்றி கூறினார்.
பங்கேற்றோர்
இந்நிகழ்வில் திராவிடர் கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்கள் முனைவர் துரை.சந்திரசேகரன், வீ.அன்புராஜ் மற்றும் திருமதி மோகனா அம்மையார், சி.வெற்றிச் செல்வி, திருமதி கவிதாமாறன், திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் உரத்தநாடு இரா.குணசேகரன், தஞ்சை இரா.ஜெயக்குமார், கழக வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி, திராவிடர் கழக வழக்குரைஞரணி தலைவர் த.வீரசேகரன், திராவிடர் கழக மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, வழக்குரைஞர் சு.குமாரதேவன், திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் இரா.செந்தூரப்பாண்டியன், திராவிட மகளிர் பாசறை மாநிலச் செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, தலைமைக் கழக அமைப்பாளர்கள் மதுரை வே.செல்வம், வி.பன்னீர்செல்வம், தருமபுரி ஊமை ஜெயராமன், குடந்தை க.குருசாமி, ப.ஆல்பர்ட், தே.செ.கோபால், க.சிந்தனைச்செல்வன், பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், துணைத் தலைவர் வேல்.சோ.நெடுமாறன், பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், பெரியார் வீரவிளையாட்டுக் கழக மாநிலத் தலைவர் பேராசிரியர் ப.சுப்பிரமணியன், தஞ்சை ராமகிருட்டிணன், செய்யாறு கழக மாவட்டத் தலைவர் அ.இளங்கோவன், செய்யாறு நகர தலைவர் தி.காமராஜ், முனைவர் ஜெயகுமார், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வடமணப்பாக்கம் வி.வெங்கட்ராமன், சேத்பட்டு நாகராஜன் உள்ளிட்ட அனைத்து மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, மாணவர் கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் கழகத் தோழர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிகழ்வில், தமிழ்நாடு காவல் துறை மேனாள் தலைவர் ஏ.எக்ஸ்.அலெக்சாண்டர், எழுத்தாளர் இமையம், தி.மு.க. பிரமுகர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி, வழக்குரைஞர் ஆம்பூர் ஜெ.துரை, மருத்துவர் மீனாம்பாள், ஆடிட்டர் இராமச்சந்திரன், மருத்துவர் உதகை கவுதமன், வரலாற்று ஆய்வாளர் பழ.அதியமான், தமிழ்நாடு திரைப்படக் கல்லூரி தலைவர் டிராட்ஸ்கி மருது, சன் செய்தி தொலைக்காட்சி முதன்மை ஆசிரியர் மு.குணசேகரன், ஓய்வு பெற்ற கூட்டுறவு கூடுதல் பதிவாளர் ஜெ.ஆர்.செந்தமிழன், வே.மதிமாறன் மற்றும் பெருந்திரளான பிரமுகர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
குருதிக்கொடை முகாம்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவையொட்டி இன்று காலை பெரியார் திடலில் உள்ள பெரியார் மணியம்மை மருத்துவமனையில் நடைபெற்ற குருதிக்கொடை முகாமினை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தொடங்கி வைத்தார். இளைஞரணி, மாணவர் கழகத்தினர் ஏராளமானோர் குருதிக் கொடை வழங்கினர்.