உணவுப் பொதுவிநியோக சங்கிலித் தொடா் மேம்படுத்தலில் ‘அன்ன சக்ரா’ திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய 12 மாநிலங்களில் சுமார் ரூ.130 கோடி சேமிக்கப்பட்டுள்ளது; இதில் தமிழ்நாட்டில்
ரூ.29 லட்சம் சேமிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களுக்கு ஒன்றிய நுகர்வோர் விவகாரங்கள், உணவு பொதுவிநியோகத்துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷி விருது அளித்தார்.
நியாய விலைக்கடைகளுக்கான பொது விநியோக சங்கலி செயல்திறனை மேம்படுத்தலுக்காக ’அன்ன சக்ரா’, முறையை ஒன்றிய அரசு அறிமுகம் செய்துள்ளது.
இதற்கான புதிய கருவிகள் மற்றும் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டப்படி மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய மானியங்களை விரைவாக வழங்கும் இணைய தளம் போன்றவைகளை ஒன்றிய உணவு பொதுவிநியோகத்துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷி 5.12.2024 அன்று டில்லி பாரத் மண்டபத்தில் தொடங்கிவைத்தார்.
விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு, அரவை மில்கள், இந்திய உணவு கழகக் கிடங்குகள், தமிழ்நாடு உள்ளிட்ட மாநில உணவுக் கிடங்குகளிலிருந்து பின்னர் நியாய விலைக் கடைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த போக்குவரத்து விநியோக சங்கிலியில் மேம்பட்ட வழி முறைகள் மூலம் உகந்த வழிகளைக் கண்டறிந்து உணவு தானியங்களின் தடையற்ற சிக்கன முறை உறுதி செய்யப்பட்டது. குறிப்பாக
வழித்தடங்களின் தூரம் குறைக்கப்பட்டது!
அய்.நா.வின் உலக உணவுத் திட்டம், புத்தாக்கம், தொழில்நுட்ப பரிமாற்ற நிறுவனம், டில்லி
அய்.அய்.டி. ஆகியவை இணைந்து உருவாக்கியது அன்ன சக்ரா. நாட்டில் 81 கோடி பயனாளிகளுக்கு உணவுப் பாதுகாப்பு சங்கிலித் தொடர் வலை அமைப்பை வழங்கும் உலகின் மிகப்பெரிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தில் – வேகமான செயல்திறனை மேம்படுத்த உதவும் இந்த முயற்சியில் – முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள் செயல்படுத்தி வருகின்றன. குறிப்பாக சரக்குகள் கொண்டு செல்லப்பட்டதில் எரிபொருள் நுகர்வு, கால நேரம், தளவாடச் செலவுகள் குறைந்தது. தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் ரூ. 130 கோடி செலவினங்கள் குறைந்ததாகவும், நாடு முழுக்க உள்ள 6,700 கிடங்குகளிலிருந்து 4.37 லட்சம் நியாயவிலைக் கடைகளுக்கும் அன்ன சக்ரா திட்டம் செயல்படுத்தும் போது ஆண்டுக்கு ரூ. 250 கோடி சரக்கு போக்குவரத்து செலவு சேமிக்கப்படும் எனவும் ஒன்றிய அமைச்சா் பிரஹலாத் ஜோஷி இந்த நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் இந்த முன்மாதிரி திட்டம் 1,817 நியாய விலைக்கடைக்களுக்கான வழித்தடங்கள் மாற்றப்பட்டதின் மூலம் ரூ.29 லட்சம் சேமிக்கப்பட்டுள்ளது. ‘அன்ன சக்ரா’ திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஒன்றிய உணவு பொதுவிநியோகத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, இணையமைச்சா்கள் நிமுபென் ஜெயந்திபாய் பம்பானியா, பி.எல்.வா்மா ஆகியோர் விருதுகளை வழங்கினர். தமிழ்நாடு அரசின் உணவுப் பொருள் வழங்கல் துறை இணை ஆணையர் கலைவாணி இந்த விருதைப் பெற்றுக்கொண்டார்.
உணவு விநியோகத்தில் தமிழ்நாடு முன்னிலை மாநிலமாகத் திகழ்வதாக பல ஆண்டுகளுக்கு முன்பே உச்சநீதிமன்றம் கூறியது குறிப்பிடத்தக்கதாகும்.
ஆம், இந்தியாவுக்கே எடுத்துக்காட்டான மாநிலம் ‘திராவிட மாடல்’ அரசு நடத்தும் தமிழ் நாடே!