முதலமைச்சரின் உறுதியான உரை
சென்னை, டிச.7- மதவெறி – ஜாதிவெறி எண்ணம் பெரியார் வாழ்ந்த இம் மண்ணில் ஒருபோதும் நிறைவேறாது எனவும், சமூக நீதியை நிலைநாட்டி சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவோம் எனவும் அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி நடைபெற்ற அரசு விழாவில் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபட உரையாற்றினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (6.12.2024) சென்னை, இராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற, தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர் களாக மாற்றும் உன்னதத் திட்டத்தின் கீழ் தூய்மைப் பணியாளர்களுக்கு நவீன கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் வழங்குதல் மற்றும் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஆற்றிய விழாப் பேருரை வருமாறு:–
நம்முடைய அறிவாசான் தந்தை பெரியார் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களைப் பற்றி என்ன சொன்னார் என்று கேட்டால், டாக்டர் அம்பேத்கருக்கு சமமாக, இந்தியாவில் யாரையும் சொல்ல முடியாது என்று சொன்னார். நம்முடைய கருத்துகள் அனைத்தையும் அவர் பேசி இருக்கிறார். அதுமட்டுமல்ல, இன்னொன்றையும் சொன்னார். “எனக்குத் தலைவராக இருக்கும், தகுதியைப் படைத்தவர் அம்பேத்கர்” என்று அவரை போற்றியவர் தந்தை பெரியார் அவர்கள். அப்படிப்பட்ட ‘அறிவுலக மேதை’ புரட்சியாளர் அம்பேத்கரை அவருடைய நினைவு நாளில் நான் இங்கு வணங்கி, என்னுடைய உரையை நான் தொடங்குகிறேன்.
தலைவர் கலைஞர்அவர்கள் புரட்சியாளர் அம்பேத்கருடைய புகழைஎப்படிப் போற்றினார்? ஒரு பெரிய பட்டியல் இருக்கிறது. சுருக்கமாக சொல்கிறேன். 1972 இல் இந்தியாவிலேயே முதன்முதலாக அண்ணல் அம்பேத்கர் பெயரில் அரசுக் கல்லூரி, 1989 இல் சென்னை சட்டக் கல்லூரிக்கு அண்ணல் அம்பேத்கர் பெயர், 1990 ஆம் ஆண்டு புரட்சியாளர் அம்பேத்கரின் நூற்றாண்டு விழா, அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுப்பவர்களுக்கு ரூபாய் 10 இலட்சம் நிதி, 1997 இல் சென்னையில் சட்டப் பல்கலைக்கழகத்திற்கு “டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்” என்று பெயர் சூட்டினார், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் பெயரில் கல்வி அறக்கட்டளை, அம்பேத்கர் பெயரில் விருது, சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் அவருடைய சிலை, சென்னையில் மணிமண்டபம்என்று புரட்சியாளர் அம்பேத்கரை போற்றியவர்நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்!அவர் காட்டிய பாதையில், நம்முடைய திராவிட மாடல் அரசும் இன்றைக்கு நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! அண்ணல் அம்பேத்கர் பிறந்த ஏப்ரல் 14-ஆம் நாளை, ‘சமத்துவ நாளாக’ நாம் அறிவித்தோம். அந்த நாளை கொண்டாட மட்டுமல்ல, அனைவரையும் சமத்துவ உறுதிமொழி எடுக்க ஆணையிட்டவன்தான், இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்பதை பெருமையோடு நான் தெரிவிக்க விரும்புகிறேன்!
அம்பேத்கரை போற்றும் ‘திராவிட மாடல்’ அரசு!
என் பாசத்துக்குரிய எழுச்சித் தமிழர் நம்முடைய தொல்.திருமாவளவன் அவர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று, புரட்சியாளர் அம்பேத்கர் மணிமண்டபத்தில், முழு உருவ வெண்கலச் சிலையை நான் திறந்து வைத்தேன். திராவிட முன்னேற்றக் கழகத் துணைப்பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா அவர்களின் கோரிக்கையைஏற்று, அண்ணல் அம்பேத்கர் அவர்களுடையதேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களை தமிழில் மொழிபெயர்த்து அதை வெளியிடக்கூடிய அறிவிப்பும் செய்யப்பட்டிருக்கிறது. செம்பதிப்பாக அது விரைவில் வெளிவரயிருக்கிறது. அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. புரட்சியாளர் அம்பேத்கரை போற்றுவது மட்டுமல்ல, அவரின் சிந்தனைகளை செயல்படுத்தவேண்டும் என்று நினைக்கக் கூடியவன்தான் இன்றைக்கு உங்கள் முன்னால் நான் நின்று கொண்டிருக்கிறேன்.
தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர், அயோத்திதாச பண்டிதர் ஆகியோர் காணநினைத்த சமத்துவ சமுதாயத்தை அமைப்பதற்கான பாதையில் நடைபோடுவது தான் நம்முடைய திராவிட மாடல் ஆட்சி! ஒடுக்கப்பட்ட மக்கள், சமூகம், அரசியல், பொருளாதாரம் என்று அனைத்து வகையிலும் மேம்பாடு அடையவேண்டும்! “அதுதான் உண்மை யான முழுமையான விடுதலை” என்று அண்ணல் அம்பேத்கர் கருதினார்.
அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்!
அந்த வழியில் உருவாக்கப்பட்ட திட்டம் தான், ‘அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்.’நம்முடைய நாடு விடுதலை அடைந்த பிறகு, இதுவரை தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு என்று தனியாக முதன்முதலாக தொடங்கப்பட்ட தொழில் திட்டம், இதுமட்டும்தான் என்பது தனிப்பெருமை! ஒடுக்கப்பட்ட மக்கள் பொருளாதார மேம்பாட்டை அடைய, 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், ‘அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்’ தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ், தொழில் முதலீட்டுக்கு 35 விழுக்காடு தொகையை மானியமாகவும், 65 விழுக்காடு தொகைக்குரிய வங்கிக் கடன் வட்டியில், 6 விழுக்காடு தொகை வட்டி மானியமாகவும் அளிக்கப்படுகிறது. மிகவும் குறுகிய காலத்திலேயே இரண்டாயிரத்து 136 பயனாளிகளுக்கு வங்கிகளால் கடன்கள் அனுமதிக்கப்பட்டு, அதில் தகுதியான, ஆயிரத்து 303 தொழில் முனைவோர்க்கு, அரசு மானியமாக மட்டும் 160 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. இதில், முக்கிய மான அம்சம் என்னவென்றால், 288 பெண் தொழில் முனைவோர்! அவர்களுக்கு மட்டும், 33 கோடியே 9 இலட்சம் ரூபாய் மானியமாக வழங்கபட்டிருக்கிறது!
ஆதிதிராவிட – பழங்குடியினருக்கு எண்ணற்ற திட்டங்கள்
இந்தத் திட்டம் மட்டுமல்ல, கடந்த 3 ஆண்டில் திராவிட மாடல் ஆட்சியில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களுக்கு செய்யப்பட்ட திட்டங்கள் போன்று, வேறு எந்த ஆட்சியிலும் நடந்திருக்காது என்பதை, என்னால் நெஞ்சை நிமிர்த்தி இங்கே நான் சொல்ல முடியும்.
முக்கியமான சிலவற்றை நான் தலைப்புச் செய்தி களாக highlight-ஆக மட்டும் சொல்கிறேன்.
ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஆதிதிராவிடர் பகுதிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம்!
முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினர் சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்கான (CM Arise) தொழில் முனைவு திட்டம்!
இந்தத் திட்டம் மூலமாக இதுவரை சுமார் 470 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு முன்னெடுப்புகளால், 78,955 பேர் பயன்பெற்றுள்ளனர்.
விவசாயத் தொழிலாளர்களாக உள்ள ஆதிதிராவிட மகளிரை நில உைடமையாளர்களாக மாற்றும், ‘நன்னிலம் திட்டம்’!
ஜாதி வேறுபாடுகளற்ற 199 முன்மாதிரி சமத்துவக் கிராமங்களுக்கு 30 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கிய திட்டம்!
பழங்குடியினர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த, ஆண்டுக்கு 250 கோடி என்று 1000 கோடி ரூபாயில் தொல்குடி திட்டம்!
பழங்குடியின உண்டு உறைவிடப் பள்ளிகளை மறுசீரமைக்கும் திட்டம்!
பழங்குடியினர் தொடர்பான ஆய்வு செய்பவர்க ளுக்கு தொல்குடி புத்தாய்வுத் திட்டம்!
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல விடுதி கட்டடங்கள் புதிதாக கட்டவும், மேம்படுத்தவும் 400 கோடி ரூபாய் அதற்கென்று ஒதுக்கீடு!
ஆதிதிராவிட பழங்குடியின மாணவர்கள் வெளி நாடுகளில் உயர்கல்வி பயில, உதவித்தொகை! அவர்கள் முனைவர் படிப்புக்கான கல்வி உதவித் தொகை உயர்வு!
சட்டக் கல்வி பயில சிறப்புச் சலுகை! உயர்திறன் ஊக்கத்தொகை திட்டம்!
479 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள், ஹை-டெக் லேப்!
ஆதிதிராவிட பழங்குடியின மாணவர் விடுதி மாண வர்களுக்கு உணவுப்படி உயர்வு உள்ளிட்ட பல்வேறு வசதிகள்!
ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் புதிய வகுப்பறைகள், அறிவியல் ஆய்வுக்கூடங்கள் கட்ட 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு!
நரிக்குறவர் மற்றும் இருளர் இன மக்களுக்கு ஆயிரத்து 500 புதிய வீடுகள் மற்றும் அவர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த சிறுவணிக கடன்!
பழங்குடியின மக்களுக்காக, தேசிய தொல்குடி மாநாடு! பழங்குடியினர் மகளிர் மேம்பாட்டிற்காக, அனைத்து மாவட்டங்களிலும் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு, சமுதாயக்கூடங்கள் பராமரிப்பு, பள்ளிகளில் உணவு தயாரித்து வழங்குதல், பொலிவு – ஹெல்த் கேர் சொசைட்டி என்று பல திட்டங்கள்!
பண்டைய பழங்குடியினருக்கு 750 புதிய வீடுகள்!
அழிவின் விளிம்பில் இருக்கும் பண்டைய பழங்குடியின குடும்பங்களுக்கு 750 புதிய வீடுகள்!
ஈரோடு மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் தொலைத் தொடர்பு வசதி இல்லாத 78 கிராமங்களில் நீண்ட தூர கம்பியில்லா இணைப்பு வசதிகள், பழங்குடியின இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற திறன் பயிற்சி, அரியலூர் மாவட்டத்தில், ஆண்டிமடம் ஜெயங்கொண்டம், உடையார்பாளையம் சரகங்களில் உள்ள பழங்குடியின இருளர் மக்கள் வனத்துறைக்கு உட்பட்ட முந்திரி தோட்டத்தில் முந்திரிக் கொட்டை சேகரம் செய்ய உரிமை, 50 கோடி ரூபாய் மதிப்பில் ஆதிதிராவிட தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க ஈங்கூர் மற்றும் முதலிபாளையம் தொழிற்பேட்டைகள் புனரமைப்பு!
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரில் சிறந்த எழுத்தாளர்களுக்கான பரிசுத்தொகை உயர்வு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குறித்த சிறந்த படைப்புகள் மொழிபெயர்ப்பு, வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களை காவல்துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள், சமுதாயக் கண்ணோட்டத்துடன் அணுக ‘சமத்துவம் காண்போம்’ எனும் பயிற்சி!
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோர் சிறப்பு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்!
முதல்முறையாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யின கலாச்சார நிகழ்வாக ‘ஆதி கலைக்கோல் விழா!’
ஜெய் பீம் தொழிலாளர்கள் மற்றும் சிறு வணிகர்கள் நல சங்கம், இதெல்லாம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களை முன்னேற்று வதற்கான திட்டங்கள் என்றால், இந்தத் திட்டங்கள் எல்லாம் முறையாக செயல்படுத்தப்படுகிறதா? என்பதை கண்காணிக்க தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டுச் செயல்திட்ட சட்டத்தையும் இயற்றி இருக்கிறோம்.
சட்டம் மட்டுமல்ல; தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தை உருவாக்கி, அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுகிறோம். சவாலாக சொல்கிறேன். இத்தனை திட்டங்கள் வேறு எந்த ஆட்சியிலும் நடைபெறவில்லை என்பதை நான் திட்டவட்டமாக தெரிவிக்க விரும்புகிறேன்!
சமூகத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் எத்தனை செய்தாலும், நம்முடைய அரசுக்கு களப்பணியில் நல்ல பெயர் கிடைக்க முழு முதல் காரணம், தூய்மைப் பணியாளர்கள்தான்! நம்முடைய பணிகளை ஊடகங்களும், பொதுமக்களும் பாராட்டும்போது, நான் மனசுக்குள் உங்களை தான் நினைத்துக்கொள்வேன். அரசு அதிகாரிகள் – ஊழி யர்கள் – மாநகராட்சி பணியாளர்கள் – தூய்மைப் பணி யாளர்கள் – காவலர்கள் – மின்வாரிய ஊழியர்கள் என்று எல்லோரும் சேர்ந்து நேரம் காலம் பார்க்காமல் ஆற்றிய பணிகளால்தான் அந்த நல்ல பெயர் நமக்கு கிடைக்கிறது!
தூய உள்ளம் கொண்ட பணியாளர்கள்!
நான் எத்தனை நன்றி சொன்னாலும், அதெல்லாம் உங்கள் தொண்டுக்கு நிச்சயமாக அது ஈடாகாது! அதனால்தான், உங்களின் சுயமரியாதையை உங்கள் பணிக்கான மரியாதையை கொடுக்க உங்களில் ஒருவனாக உங்கள் கூடவே நான் இருக்கிறேன்! என்னைப் பொறுத்தவரைக்கும், தூய்மைப் பணியாளர்கள் என்று சொல்வதைவிட, தூய உள்ளம் கொண்ட பணியாளர்கள் என்றுதான் சொல்லவேண்டும்! உங்கள் எல்லோருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள், பாராட்டுகள்!
தூய்மைப் பணியாளர்களின் நலனுக்காக நம்முடைய திராவிட மாடல் அரசால், தூய்மைப் பணியாளர்கள் நல வாரியம் தொடங்கப்பட்டது. அந்த வாரியம் தொடங்கப்பட்டது முதல் 2021-ஆம் ஆண்டுவரை 18 ஆயிரத்து 225 உறுப்பினர்கள் மட்டும்தான் பதிவு செய்திருந்தார்கள். ஆனால், அரசின் நலத்திட்டங்கள் மற்றும் மானியங்கள் எல்லாமே, அனைத்து தூய்மைப் பணியாளர்களுக்கும் சென்றடைய வேண்டும் என்று நம்முடைய அரசால் அதற்குரிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, கடந்த மூன்று ஆண்டுகளில், 3 இலட்சத்து 6 ஆயிரத்து 775 உறுப்பினர்கள் இப்போது பதிவு செய்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. உங்களுக்கு மருத்துவக் காப்பீட்டு அட்டை கிடைப்பதில்கூட பிரச்சினை இருக்கிறது என்று சொன்னார்கள்.
என்னுடைய கவனத்திற்கு வந்தது. உடனே அதை வழங்க நான் உத்தரவிட்டேன்.
அதன் தொடர்ச்சியாக, இன்று 35 ஆயிரம் உறுப்பினர்களுக்கு மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்ல, தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரியத்தில், பதிவு செய்திருக்கும் உறுப்பினர்களுக்கு, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக, அடுக்குமாடிக் குடியிருப்புகளில் 90 சதவீதம் அரசு மானியத்துடன் ஆயிரம் வீடுகள் பல்வேறு மாவட்டங்களில் வழங்கப்பட்டிருக்கிறது. இத்துடன், திருவான்மியூரில் தற்காலிக வீட்டில் வசித்து வரும் நரிக்குறவர் – தூய்மைப் பணியாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு முழு மானியத்துடன் தாட்கோ மூலமாக வீடு கட்டித் தரப் போகிறோம். நம்முடைய குறிக்கோள் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவல நிலைக்கு, முழுமையாக முற்றுப் புள்ளி வைக்கவேண்டும்.
செல்வப்பெருந்தகை கோரிக்கை உடனடியாக ஏற்கப்பட்டது!
நம்முடைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர், அருமை சகோதரர் செல்வப்பெருந்தகை அவர்கள் ஒருமுறை என்னை சந்தித்து, தலித் இந்திய வர்த்தக மற்றும் தொழிற்சங்கம் அமைப்புடன் இணைந்து இந்தத் திட்டத்தை செயல்படுத்தலாம் என்று ஒரு கோரிக்கை வைத்தார். அதைக் கேட்டபோது நல்ல திட்டமாக இருந்தது; சிறப்பான திட்டமாக இருந்தது என்று நான் உடனடியாக அதிகாரிகளை அழைத்து, கலந்து பேசி, உடனே அந்தக் கோரிக்கையை பரி சீலித்து, கடந்த 28.02.2023 அன்று ஒப்பந்தத்தில் கையெ ழுத்திட்டோம். இந்தப் பணிகளை இயந்திரமயமாக ஆக்கியிருக்கிறோம்.
சமூக நீதி வழியாக சமத்துவ சமுதாயம்!
சென்னை பெருநகரில் இருக்கும், கழிவுநீர் கட்ட மைப்பு பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள 539 இயந்திரங்கள் பயன்பாட்டில் இருக்கிறது. புதி தாக 58 கழிவுநீர் பராமரிப்பு இயந்திரங்கள் 28 கோடியே 55 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடந்த ஆகஸ்ட் 12 அன்று சென்னை குடிநீர் வாரியத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த இயந்திரங்களை இயக்கவும், கழிவுநீர் கட்டமைப்புகளை பராமரிக்கவும், 728 நிரந்தரப் பணியாளர்கள் மற்றும் ஆயிரத்து 489 ஒப்பந்த பணியாளர்கள் மூலமாக இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலமாக, பணியாளர்களுக்கு மாதத்திற்கு குறைந்தபட்ச வருமானமாக தலா 50 ஆயிரம் என்று 7 ஆண்டுகளுக்கு உறுதி செய்யப்படும். இந்தப் பணிகளுக்காக 500 கோடியே 24 இலட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டி ருக்கிறது. இதன்மூலமாக இந்த குடும்பத்தினருக்கு நிரந்தர வருமானம் உறுதி செய்யப்பட்டு அவர்களின் வாழ்வாதாரத்தையும், மாண்பையும் மேம்படுத்த இந்த சிறப்புத் திட்டம் வழிவகுத்திருக்கிறது.
இப்படி தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்க ளுக்கு நலத்திட்ட உதவிகள் செய்வதுடன், நம்மு டைய கடமை முடிந்துவிட்டதாக என்று நான் கருதவில்லை. சமூகநீதி, சுயமரியாதை, சமத்துவம், சகோதரத்துவம், பெண்ணுரிமை, ஒடுக்கப்பட்டோர் உரிமை ஆகியவற்றை உள்ளடக்கிய திராவிடவியல் கோட்பாடுகளை சட்டரீதியாக மாற்றி கொள்கைகளை ஆட்சி நெறிமுறைகளாக ஆக்கவேண்டும் என்று நினைக்கிறோம். அதற்காக தொடர்ந்து உழைக்கிறோம்.
இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலமும் நிறைவேற்றாத, புதுமை திட்டங்களை நாம் நிறை வேற்றுகிறோம். சமூகநீதி வழியாக, சமத்துவ சமுதாயத்தை படைக்க பாடுபடுகிறோம்! நம்முடைய இலட்சிய பயண வழியில் ஒரு சில தடைகள், இடர்பாடுகள் இருப்பதை நான் மறுக்கவில்லை. உடனே அதை மட்டும் சிலர் பெரிதுப்படுத்தி, அரசியலாக பார்க்க என்னென்ன பேசுகிறார்கள். “இதுதான் பெரியார் மண்ணா? இதுதான் அம்பேத்கர் மண்ணா?” என்று கேள்வி கேட்கிறார்கள்.
ஒரு இடத்தில் நடந்த நிகழ்வை முழுமையாக புரிந்துகொள்ளாமல், அதில் அரசின் செயல்பாடுகளை தெரிந்துக்கொள்ளாமல், தெரிந்திருந்தாலும், திட்ட மிட்டு வதந்திகளை பரப்பி, நம்முடைய திராவிட மாடல் அரசுக்கு அவப்பெயர் உண்டாக்கவேண்டும் என்று நினைக்கிறவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது; உங்கள் மதவெறி – ஜாதி வெறி எண்ணம் இந்த பெரியார் மண்ணில், அம்பேத்கர் கொள்கைகள் உரம் பெற்று இருக்கும் மண்ணில் ஒருபோதும் நிறைவேறாது, ஒருபோதும் நிறைவேறாது. இந்த ஸ்டாலின் இருக்கும் வரை உங்களால் அதை நிறைவேற்ற வும் முடியாது.
சமத்துவ சமுதாயத்தை உருவாக்கியே தீருவோம்!
தந்தை பெரியாரும், புரட்சியாளர் அம்பேத்கருமே தாங்கள் வாழ்ந்த காலத்தில் இதுபோன்ற பல நெருக்கடிகளை எதிர்கொண்டு, எதிர்நீச்சல் போட்டுதான் இலட்சியப் பயணத்தை தொடர்ந்தார்கள். அவர்களின் கொள்கை வழி நடக்கும் நம்முடைய அரசும், சமூகத்தில் நிலவும் இடர்பாடுகளை நீக்கி, சமூகத்தை பிளவுபடுத்தும் சக்திகளை மக்களிடம் அம்பலப்படுத்தி, சமூகநீதிக் கொள்கையை நிலை நாட்டி, சமத்துவ சமுதாயத்தை உருவாக்கியே தீரு வோம்! இதுதான் தந்தை பெரியார் மீதும், புரட்சியாளர் அம்பேத்கர் மீதும் நாங்கள் எடுக்கும் உறுதிமொழி!
ஆதிதிராவிடர் பழங்குடியினர் விழிப்புணர்வு கூட்டத்தில் உரையாற்றிய நான் அய்ந்து இலக்குகளைக் குறிப்பிட்டேன்.
முதல் இலக்கு, கல்வி, வேலைவாய்ப்பில் அவர்கள் உரிய இடங்கள் பெறவேண்டும்!
இரண்டாவது இலக்கு, சமூக அமைப்பில் அவர்கள் எந்தச் சூழலிலும் புறக்கணிக்கப்படக் கூடாது!
மூன்றாவது இலக்கு, எக்காரணம் கொண்டும் சாதியின் பெயரால் தடுக்கப்படக் கூடாது!
நான்காவது இலக்கு, அரசியல், பொருளாதாரம், கல்வி ஆகிய அனைத்து மட்டத்திலும் அவர்கள் வளர்ச்சி உறுதிசெய்யப்படவேண்டும்!
அய்ந்தாவது இலக்கு, எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கவேண்டும்!
இந்த சிந்தனைகள் கொண்ட அரசாகதான் திராவிட முன்னேற்றக் கழக அரசு தொடர்ந்து செயல்படுகிறது! இனியும் செயல்படும்! செயல்படும்! என அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளில் உறுதிகூறி, நிறைவு செய்கிறேன்.
-இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.