கேள்வி 1: இனி ஏக்நாத் ஷிண்டே அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும்?
– க.சந்திரன், மதுரை
பதில் 1: அது அவருக்கே தெரியுமோ, தெரியாதோ? நாம் எப்படிக் கணிக்க முடியும்? பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். கண்காணிப்பு அவருக்கும் நிரந்தரமாகவே இருப்பது நிச்சயம்!
– – – – –
கேள்வி 2: ‘படேகேதோ கடேங்கே’ என்று கூறியதை ஜார்க்கண்ட் மக்கள் புறந்தள்ளியது ஏன்?
– அ.கண்ணன், வேலூர்
பதில் 2: பழங்குடி மக்களுக்குள்ள அரசியல் தெளிவு பெருங்குடி – பெருநகர படித்த தற்குறிகளுக்கும் இனி வந்தால் சரி!
– – – – –
கேள்வி 3: இதுவரை பெயரளவிற்கு பேரிடர் நிதி ஒதுக்கிய ஒன்றியம் இம்முறை (2023-2024) ஒரு பைசா கூட ஒதுக்காதது ஏன்?
– கி.மாசிலாமணி, நுங்கம்பாக்கம்
பதில் 3: இன்னும்கூட சற்று பொறுத்திருந்து பாருங்கள். “வெறும் வாயில் சுட்ட வடைதானா?” என்பதை!
– – – – –
கேள்வி 4: நாடாளுமன்றத்தில் தவறான தகவலைக் கூறிய நிர்மலா சீதாராமன் மீது நடவடிக்கை எடுக்க முடியாதா?
– ச.வெற்றிமணி, காஞ்சி
பதில் 4: அவர் மீது சட்டப்படி நாடாளுமன்ற உரிமைக்குழு நடிவடிக்கை எடுக்கலாம். எங்கே நடைமுறை போகிறது?
– – – – –
கேள்வி 5: உத்தரப்பிரதேச மாநிலத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடச் சென்ற நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தியை சாமியார் அரசின் காவல்துறை தடுத்து நிறுத்தியுள்ளதே?
– சூர்யகுமார், திண்டிவனம்
பதில் 5: நமது ஜனநாயகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் கடமையைச் செய்வதைச் தடுப்பதா? எப்படி பார்த்தீர்களா?
– – – – –
கேள்வி 6: தொடர்ச்சியாக நடைபெறும் ரயில் விபத்துகள் குறித்து மக்களவை உறுப்பினர் கனிமொழி மக்களவையில் கவலை தெரிவித்துள்ளாரே? ஒன்றிய ரயில்வே அமைச்சகம் சிந்திக்குமா?
– வேலுச்சாமி, புதுக்கோட்டை
பதில் 6: கேளாக் காது; பார்க்காப் பார்வை; புரியாப் பிடிவாதம் – ரயில்களுக்கு நம் நாட்டில் இப்படி ஒரு ‘சுதந்திரம்’? வருத்தத்திற்குரியது, கண்டனத்திற்குரியது.
– – – – –
கேள்வி 7: தமிழ்நாட்டைப் போன்றில்லாமல் – மாநிலத் தேர்தல்கள் முடிவடைந்த பின் முதலமைச்சரைத் தேர்ந்தெடுப்பதில் வட மாநிலங்களில் இழுபறிகள் நாட்கணக்கில் நடைபெறுகின்றனவே?
– முகுந்தன், ஒசூர்
பதில் 7: ஆம். கூடா நட்பும் பதவி வெறி அரசியலும் ஏற்படுத்தும் நிலைமைகள், அரசியல் ‘வியாதிகள்’ – அரசியல் ‘வாதிகளானால்’ நல்லது!
– – – – –
கேள்வி 8: ‘விளையாட்டுத் துறையில் முன்னணி மாநிலம்’ என்ற விருதை தமிழ்நாட்டுக்குப் பெற்றுத் தந்துள்ள துணை முதலமைச்சரின் சாதனை குறித்து?
– ஆறுமுகம், தாம்பரம்
பதில் 8: போற்றி வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. பலே! பலே!!
– – – – –
கேள்வி 9: பெண் தொழில் முனைவோரை உருவாக்குவதில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது சாதனைதானே?
– அன்புமொழி, வந்தவாசி
பதில் 9: ‘திராவிட மாடல்’ ஆட்சியின் கிரீடத்தில் மற்றொரு முத்து!
– – – – –
கேள்வி 10: நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையின்போது, அரசியல் சாசனத்தின் மூலம் சமூகநீதியை எட்டி உள்ளோம் என்கிறார்களே, இது உண்மையா?
– எஸ்.நல்லபெருமாள், வடசேரி
பதில் 10: அவரவர் மனசாட்சிதான் இதற்குத் தகுந்த பதில் கூற முடியும்!