அன்று இலங்கை, இன்று தென் கொரியா – இந்திய அரசியல்வாதிகளுக்கு கண்ணெதிரே உள்ள எடுத்துக்காட்டுகள்.
50 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் முறையாக ஆசிய ஜனநாயகத்தில் ராணுவ ஆட்சியை அறிவித்து. தென் கொரிய அதிபர், நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். தொலைக்காட்சி உரையில், “அரசு எதிர்ப்புப் சக்திகள்” மற்றும் “வட கொரியாவின் அச்சுறுத்தல்” பற்றி குறிப்பிட்ட தென் கொரிய அதிபர் யூன் சாக் யோல் இந்த முடிவை அறிவித்தார்.
உண்மையில் முழுமையான அதிகாரம் படைத்த அதிபர் அவரது தொழிலதிபர் நண்பர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் அவரால் திணிக்கப்பட்டு தலைமைப்பதவிகளில் உள்ள அதிபரின் கைப்பாவைகளில் சிலர் அவருக்கு எதிராக செல்லத்துவங்கியதால் தனது ஊழல் வெளிப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் அவர் ராணுவ ஆட்சியை அறிவித்தார் என்று உடனடியாக தெரியவந்தது.
அதிபரின் இந்த முடிவால் ஒட்டுமொத்த தென் கொரிய மக்களும் சாலைகளில் இறங்கினர். பணிகளை முழுமையாக நிறுத்தினர். உணவகங்களில் சமையல் வேலைகளை அப்படியே விட்டுவிட்டு சாலைகளில் இறங்கினர் தங்களின் மக்களாட்சி உரிமையைப் பாதுகாத்து குடியரசை வலுப்படுத்த வன்முறையின்றி போராட்டம் துவங்கியது.
அதே நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த ராணுவ சட்டத்தை அமல்படுத்தும் நடவடிக்கையை நீக்க ஏதுவாக“அவசர வாக்கெடுப்பை” நடத்த அங்கு விரைந்தனர். நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட, அவசர வாக்கெடுப்பில் அதிபர் தோற்கடிக்கப்பட்டார். சில மணிநேரங்களுக்குப் பிறகு நாடாளுமன்றத்தின் வாக்கெடுப்பை ஏற்றுக்கொண்டு ராணுவ ஆட்சியை நீக்கினார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிபர் யூன் சாக் -யோலை பதவி நீக்கம் செய்வது குறித்து வாக்களிக்க தயாராகி வருகின்றனர்.
சூழ்ச்சி வெளியானது எப்படி
அரசாங்கத்தை சீர்குலைக்கும் எதிர்க்கட்சிகளின் முயற்சிகளை எதிர்கொள்ள இந்த ராணுவ நடவடிக்கை அவசியம் என்றும், நாட்டின் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் அரச விரோத சக்திகளை தடுப்பது ராணுவச் சட்டத்தின் நோக்கம் என்றும் தனது உரையில் தென் கொரிய அதிபர் யூன் சாக் -யோல் கூறியிருந்தார்.
தற்காலிக ராணுவ ஆட்சிக்கு அவர் ஒப்புதல் அளித்தார் நாடாளுமன்றத்திற்கு ராணுவ வீரர்களையும் காவல் துறையினரையும் அனுப்பினார். ஹெலிகாப்டர்கள் நாடாளுமன்ற கட்டடத்தின் மேற்கூரையில் தரையிறக்கப் பட்டன.
முகமூடி அணிந்த நவீன ரக ஆயுதம் ஏந்திய வீரர்கள் நாட்டின் மக்களாட்சியின் தலைமைப்பீடமான நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தனர். ஆனால் ஊழியர்களும் உறுப்பினர்களும் உயிருக்கு அஞ்சாமல் ராணுவத்தினரை அவைக்குள் நுழைய அனுமதிக்க வில்லை. அங்கிருந்த தீயணைப்புக் கருவிகள் மூலம் அவர்களைத் தடுத்தனர்
ராணுவத் தலைமை உடனடியாக போராட்டங்கள் மற்றும் நாடாளுமன்ற நடவடிக்கைகளை தடை செய்வதற்கான உத்தரவை வெளியிட்டது. அனைத்து ஊடகங்களும் தங்கள் பணியை நிறுத்தச் சொல்லி அதனை தங்கள் கட்டுப்பாட்டில் வைப்பதற்கான உத்தரவையும் ராணுவம் பிறப்பித்தது. இந்த நிலையில் அதிபரின் சொந்தக் கட்சியான மக்கள் சக்தி கட்சியின் தலைவர்களும், இது ஒரு “தவறான நடவடிக்கை” என்று விவரித்தனர்.
இதற்கிடையில், மிகப் பெரிய எதிர்க்கட்சியான இடதுசாரி ஜனநாயக கட்சியின் தலைவர் லீ ஜே-மியுங், ஆணையை நிராகரிக்க தனது கட்சியின் உறுப்பினர்களை நாடாளுமன்றத்தில் கூடுமாறு வலியுறுத்தினார். இந்த அறிவிப்புக்கு எதிரான போராட்டத்தில் தென் கொரிய மக்களும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார். எதிர்க்கட்சித் தலைவர் லீ ஜே-மியுங்கின் அழைப்புக்கு மக்கள் பதிலளித்தனர்.
அதிபர் யூன் சுக்-யோலின் ராணுவ சட்டப் பிரகடனத்தைத் தொடர்ந்து, தென் கொரிய பொதுமக்கள் அமைதியாக போராடத் துவங்கி நாடாளுமன்றத்திற்கு வெளியே கூடி எதிர்ப்புத் தெரிவித்தனர்.
“சர்வாதிகாரத்தை முறியடிக்கவும்” “அதிபரே வெளியே போ” போன்ற முழக்கங்களை எழுப்பினர்.
“பலத்த ராணுவப் பிரகடனம் இருந்தபோதிலும், எதிர்ப்பாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டது. கொரிய வர்லாற்றில் முதல் முறையாக இரவு முழுவதும் அவை நடைபெற்றது.
4.12.2024 அன்று நள்ளிரவு 1:00 மணியளவில், 300 உறுப்பினர்களில் 190 பேர் கலந்து கொண்ட நாடாளுமன்றம், அதிபர் யூன் சுக்-யோலின் ராணுவச் சட்டப் பிரகடனத்தை நிராகரிக்க வாக்களித்தது.
ராணுவச் சட்டம்
எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது?
ராணுவச் சட்டம் தற்காலிகமானது. அவசர காலத்தில் ராணுவச்சட்டம் பயன்படுத்தப்படும். குறிப்பாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களால் நிலைமையை நிர்வகிக்க முடியாதபோது ராணுவ ஆட்சி அமைக்கப்படுகின்றது. தென் கொரியாவில்,மேனாள் சர்வாதிகாரி பார்க் சுங்-ஹீ ஆட்சிக் கவிழ்ப்பின்போது படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கடைசியாக 1979இல் ராணுவச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது. தென் கொரியா 1987 இல் நாடாளுமன்ற ஜனநாயக நாடாக மாறியதிலிருந்து, ராணுவச் சட்டம் பயன்படுத்தப்படவில்லை.
ஆனால், “அரசுக்கு எதிரான சக்திகளிடமிருந்து” நாட்டைப் பாதுகாப்பது அவசியம் என்று கதைகட்டிய அதிபர் யூன் சாக்-யோல் தென் கொரியாவில் ராணுவச் சட்டத்தை அறிவித்தார்.
தற்போதைய அதிபர் மக்களிடையே தன்னுடைய ஊழலை மறைக்க வட கொரியாவை தென் கொரியாவின் எதிரியாக காட்டிக்கொண்டே இருந்தார். மேலும் வட கொரியா மீது கடுமையான நிலைப்பாட்டை எடுத்து, எதிர்க்கட்சியினரை வட கொரியாவின் அனுதாபிகள் என்று அழைத்தார். வட கொரியர்களும் தங்கள் சகோதரர்கள் தான். 1947க்கு முன்பு ஒன்றாக இருந்தோம் என்று கூறும் நபர்களை தேசத்துரோகிகள் என்று அதிபரும் அவருக்கு ஆதரவாக செயல்படும் வலதுசாரி அமைப்புகளும் பரப்புரை செய்தனர். இதற்கு எந்த ஆதாரங்களையும் யூன் வழங்கவில்லை.
ராணுவச் சட்டத்தின் கீழ், ராணுவத்திற்கு முமு அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன. மேலும் இதன் மூலம் அனைத்து உரிமைகளும் தடைசெய்யப்படும். ராணுவ வீரர்கள் கேட்கும் அடையாள அட்டையைக் காண்பித்தால் தான் மக்கள் கடைகளுக்குச் செல்ல முடியும். இல்லை என்றால், சிறை வாசம். அதைவிட துப்பாக்கியால் சுடும் அதிகாரம் கூட கிடைத்துவிடும்.
அதாவது குடிமக்கள் அவர்களது சட்டப் பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தை இழக்க நேரிடும்.
அரசியல் நடவடிக்கைகள் மற்றும் ஊடகங்கள் மீதான கட்டுப்பாடுகளை ராணுவம் அறிவித்த போதிலும், எதிர்ப்பாளர்களும் அரசியல்வாதிகளும் இந்த உத்தரவுகளை மீறினர்.
யூனுக்கு ஏன் இந்த அரசியல் அழுத்தம்?
தற்போதைய அதிபர் யூன் சாக் -யோல், வலதுசாரி அமைப்பின் ஆதரவோடு அரசியலில் அமர்ந்தவர். அவருக்கு விரல்விட்டு எண்ணும் அளவுள்ள தொழிலதிபர்கள் மட்டுமே கொரியா என்றாகிவிட்டது. மேலும் அனைத்து துறையிலும் தனதுகைப்பாவைகளை அமர வைத்தார். இந்த நிலையில் ஏப்ரல் 2024 முதல் சவால்களை எதிர்கொள்ளத் தொடங்கினார். பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சி பெரும்பான்மை பெற்ற பிறகு, அவரது அரசாங்கம் மசோதாக்களை நிறைவேற்றுவதற்குப் போராடியது.
இந்த ஆண்டு பல ஊழல் மோசடி நண்பருக்கு ஆதரவாக ஒட்டுமொத்த கொரியாவின் செல்வ வளங்களை அள்ளிக்கொடுத்தது போன்ற குற்றச்சாட்டுகளால் மக்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் ஆதரவு 17 சதவீதமாக குறைந்தது.
தனது நண்பரின் ஆடம்பர வாழ்க்கைக்கு அதிபர் உழைத்ததாகவும் அவரது மனைவி அவரது நண்பரின் நிறுவனத்தின் விலை உயர்ந்த பொருளோடு மகாராணி போல் வாழ்வதாக குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன. பங்குச்சந்தை மோசடி குற்றச்சாட்டும் எழுப்பப்பட்டது.
மேலும் கடந்த மாதம், அதிபர் யூன் சாக் யோல், தனது மனைவி சம்பந்தப்பட்ட சர்ச்சைகளுக்காக தேசிய தொலைக்காட்சியில் மன்னிப்பு கேட்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஆனாலும், எதிர்க்கட்சிகளின் கோரிக்கையான, ஊழல்கள் பற்றிய விரிவான விசாரணையை அவர் ஏற்க அனுமதிக்க மறுத்துவிட்டார்.
சமீபத்தில், தென் கொரியாவின் எதிர்க்கட்சியானது, அதிபர் யூன் சாக் -யோலின் நிர்வாகத்திற்கு மேலும் சவால் விடும் வகையில், அதிபரால் ரத்து செய்ய முடியாத ஓர் அரசாங்க நிதிக் குறைப்பு மசோதாவை முன்மொழிந்தது.
அதே நேரத்தில், அதிபரின் மனைவியை விசாரிக்கத் தவறியதற்காக அமைச்சர்கள் மற்றும் அரசாங்கத்தின் தணிக்கை அமைப்பின் தலைவர் உள்பட பல உயர்மட்ட வழக்குரைஞர்களை பதவி நீக்கும் தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டுவந்தன.
எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி, யூனை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. பதவி நீக்கம் செய்வது குறித்து நாடாளுமன்றம் 7.12.2024க்குள் முடிவெடுத்து வாக்களிக்க வேண்டும்.
பதவி நீக்கச் செயல்முறை நேரடியானது
அவர்களது தீர்மானம் வெற்றிபெற, 300 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கிற்கு மேல் ஆதரவு தேவைப்படும் . அதாவது குறைந்தது 200 வாக்குகள் தேவைப்படும் .
தென் கொரியாவின் நாடாளுமன்றம், அதிபர் பதவி நீக்கத்திற்கு ஒப்புதல் அளித்தால், அரசமைப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடக்கும். இது தென் கொரிய அரசாங்கத்தின் கிளைகளை மேற்பார்வையிடும் ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட கவுன்சில் அகும்.
நீதிமன்றத்தின் ஆறு உறுப்பினர்கள் பதவி நீக்கத்துக்கு ஆதரவாக வாக்களித்தால், அதிபர் பதவியில் இருந்து நீக்கப்படுவார். தென் கொரிய அதிபர் ஒருவர் பதவி நீக்கம் செய்யப்படுவது இது முதல் முறை அல்ல.
2016-ஆம் ஆண்டில், அப்போதைய அதிபர் பார்க் கியூன்-ஹே, பணம் பறித்துவந்த ஒரு நண்பருக்கு உதவியதற்காக குற்றம் சாட்டப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார். 2004 இல் மற்றொரு அதிபரான ரோ மூ-ஹியூன் பதவி நீக்கம் செய்யப்பட்டு இரண்டு மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் அரசமைப்பு நீதிமன்றம் அவரை மீண்டும் பதவியில் அமர்த்தியது. ஆனால், இந்த வார நிகழ்வுகள், கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவில் தென் கொரிய ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக, பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் ஜனவரி 6 அன்று நடந்த கலவரத்தைவிட (டிரம்ப் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தை தாக்கியது) தென் கொரியாவில் நடக்கும் சம்பவங்கள், அதன் ஜனநாயக நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர்.
தென்கொரியா கடந்துவந்த பாதை
1970வரை ஒரு ஏழை நாடு. எவ்வாறு பொருளாதார துறையில் மகாசக்தியாக மாறியது.
கொரியா முன்பு சீனாவின் அடிமை நாடாக இருந்தது. பின்னர் மங்கோலிய ஆட்சியாளர்களும் இதன் மீது ஆட்சி செலுத்தினர். நவீன காலத்தில் ஜப்பான் கொரியாவை தனது காலனியாக்கியது. ஜப்பானின் கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை பெற்ற பிறகு, கொரியா ரஷ்யா மற்றும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குக் கீழ் வந்தது. இரண்டு நாடுகளும் கொரியாவை வடகொரியா, தென்கொரியா என்று பிரித்தன.
சாம்சுங், எல் ஜி மற்றும் ஹூந்தாய் போன்ற நிறுவனங்கள் அடிப்படையான வணிகங்களில் இருந்து தொழில்நுட்ப உலக அதிசயமாக மாறின. பிரமாண்ட தொழில்நுட்ப வளர்ச்சிக்குப் பின்னால், அரசாங்கக் கொள்கைகளும் இருந்தன. தென் கொரியா தனது குறைவான வளங்களை முன்னேற்றமாக மாற்றியது.
1947 ஆம் ஆண்டில் வட கொரியா தீவிர இடது சாரி மற்றும் தென் கொரியா மக்களாட்சி வழிமுறை நாடுகளாக மாறின. மேலும், தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் நேர்மையுடன் இருந்தால், குடியரசு உலகின் மிகச் சிறந்த அமைப்பாக மாறும் அது சமத்துவ அமைப்பின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டால்.
1975 வரை தென் கொரியா மிகவும் ஏழைமையான நாடாக இருந்தது. தென் கொரிய ஆளுநர்கள் கல்வி மற்றும் சுகாதாரத்தில் மிகுந்த கவனம் செலுத்தினர். நகரம் முதல் கிராமம் வரை ஒவ்வொரு குடிமகனுக்கும் சமான கல்வி மற்றும் சுகாதார வசதிகள் வழங்கப்பட்டன. விளைவு தொழில் நுட்பத்தில் உயரிய இடத்தை தென் கொரியா அடைந்தது. இன்று சியோல் நவீன உலகின் தொழில் நுட்பத்தலைநகரங்களுள் ஒன்றாக மாறுவதற்கு அங்கிருந்த நேர்மையான அரசியலே காரணம்.
ஆனால், 2020ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு புதிய அதிபர் தீவிரவலதுசாரி அமைப்புகளின் ஆதரவோடு ஆட்சியில் அமர்ந்து அவரது நண்பர்களுக்கு மட்டுமே அத்தனை வளங்களையும் வாரி வழங்கியதால் தென்கொரிய மக்கள் ஒற்றுமையுடன் கூடி ஆட்சியாளரைத் தூக்கி வீச வீதிக்கு வந்துவிட்டனர்.
இதை இந்திய ஒன்றிய ஆட்சியாளர்கள் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளலாம்!