“தலைப்புச் செய்திகள்” என்ற தலைப்பில் கவிஞர் கழுகூர் பழனியப்பன் அவர்கள் 28 கட்டுரைகளை வடித்துள்ளார். அந்தக் கட்டுரையிலிருந்து ஒரு கட்டுரை மட்டும் தந்தை பெரியாரின் தொண்டுகளுக்கு ஓர் உதாரணமாக இங்கு வெளியிடப்படுகிறது. படித்துப் பாருங்கள். பெரியாரைப் பற்றி பார்ப்பனர்கள் பாராட்டும் வரலாற்று விளக்கமும் தெளிவாகும்.
தஞ்சை மாவட்டம், திருவையாறு பகுதியைச் சேர்ந்த தில்லை தலம் பார்ப்பனர் குடியிருப்பில் வாழ்ந்தவர். சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த விவரத்தைச் சொல்லுகிறார்.
சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த விவரத்தைச் சொன்ன அவர். அமெரிக்காவில் ‘வாசிங்டன்’ நகரில் வாழ்ந்து வருகிறாராம். இவருடைய பாட்டனார் அறுபது ஆண்டுகளுக்கு முன்னரே சென்னைக்கு வந்து விட்டாராம். அவர் திருவையாறில் ஆசிரியராகப் பணி புரிந்துள்ளார். இவருடைய தந்தை தொடர்வண்டித் துறையில் (அன்று புகைவண்டித் துறை) பணியாற்றியுள்ளார். அத்துறையில் உயர் அதிகாரியாகப் பணி செய்து ஓய்வு பெற்ற பின், டில்லியிலேயே குடியேறி விட்டாராம்.
இப்படித் தன் குடும்ப வரலாற்றை தன்னுடன் பயணித்த இரா.இரத்தினகிரியிடம் கூறியுள்ளார். இரத்தினகிரி ஒன்றிய அரசின் நிறுவனமான சுரங்கங்களின் சுற்றுச்சூழல் ஆய்வு மதிப்பீட்டு வல்லுநர் குழு உறுப்பினராக பணியாற்றியவராவார். இந்த உரையாடலானது 2003ஆம் ஆண்டு நிகழ்ந்துள்ளது.
வாசிங்டனை வாழ்விடமாகக் கொண்ட திருவையாறுக்காரர், பல உண்மைகளை இரத்தினகிரி அய்யாவிடம் சொல்லத் தொடங்கினார். இதைப் படிப்பவர்கள் அவர் சொன்ன உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள். அவர் ஆரம்பிக்கும் போதே என் மனதில் உள்ள பல உண்மைகளைச் சொல்லுகிறேன் என்றார்.
நாடே கடமைப்பட்டிருக்கிறது
தந்தை பெரியாருக்கு இந்த நாடே கடமைப் பட்டிருக்கிறது என்பது முக்கியமான செய்தி. ஆனால், அவருக்கு யார் நன்றிக் கடன்பட்டிருக்கிறார்களோ இல்லையோ பார்ப்பனர்கள்தான் எல்லோரையும்விட அதிகமாக நன்றிக்கடன் பட்டிருக்க வேண்டும். பெரியார் என்று ஒருவர் தோன்றியிருக்காவிட்டால், அவர் தொடர் பரப்புரை செய்திருக்காவிட்டால் பார்ப்பனர்களாகிய நாங்கள், கோயில்களின் பெரிய பெரிய மதில் சுவர்களுக்குள்ளேயே, மூலவர் இருப்பிடத்திற்குள்ளேயும், மடப் பள்ளிக்குள்ளேயும் தான் முடங்கிப் போயிருப்போம்.
பெரியார் பரப்புரை செய்ததினால் தான் நாங்கள் எங்களின் புரோகிதத் தொழிலை விட்டு விட்டு, அனேகம் பேர் நகர்புறங்களுக்கு வந்துவிட்டோம். பள்ளிக் கூடங்களுக்குச் சென்று படிக்க ஆரம்பித்தோம். என் பாட்டன் ஆசிரியராகவும், என் தந்தை பெரிய அரசு அதிகாரியாகவும், நானும் என் குடும்பமும் அமெரிக்காவில் இருக்கிறோம் என்றால் அது பெரியாருடைய பரப்புரையால்தான்.
உண்மையைக் கூறும் பார்ப்பனர்
ஒரு பார்ப்பனர் இப்படி உண்மையைச் சொல்லி பெரியாரிடம் நன்றியுணர்வோடு இருக்கிறார் என்றால் அது நமக்கு வியப்பாகவே இருக்கிறது. மேலும், அவர் கூறுகிறார்! திருவையாறு கீழவீதி அக்ரகாரத்திலும், தஞ்சாவூர் மேல வீதி அக்ரகாரத்திலும் நூற்றுக்கணக்கான மொட்டைப் பாப்பாத்திகளைப் பார்த்திருப்பீர்கள். பார்ப்பனப் பெண்கள் கணவனை இழந்தால் அதாவது விதவையானால், அவர்களை மொட்டையடித்து, காவிப் புடவையைக் கொடுத்து வீட்டிற்கு வெளியே திண்ணையோரத்தில் படுக்க வைத்து விடுவார்கள். பல வீடுகளில் வீட்டிற்குள்ளேயும் ஆண்களின் கண்களில் அவர்கள் தென்படவே கூடாது. அப்படித் தென்பட்டால் அது அபசகுனம் என்பார்கள்.
பொழுது விடியும் முன்பாகவே அந்த விதவைத் தாய்கள் ஆற்றிற்குச் சென்று குளித்துவிட்டு நனைந்த துணியுடன் வந்து வீட்டுத் திண்ணையில் ஒதுங்கி சுருண்டு படுத்துக் கொள்வார்கள். பொழுது விடிந்த பிறகு தெருவில் நடக்கக் கூடாது. வேலைக்குப் போகிற ஆண்கள் விதவைப் பெண்ணை பார்த்தால் அன்றைய வேலை விளங்காது என்ற வெறுப்போடு பார்ப்பார்கள். இப்படியெல்லாம் மரபுகள் இருந்து வந்தது. ஆனால், இன்று ஒரு மொட்டைப் பாப்பாத்தியையாவது பார்க்க முடியுமா? என்றார்.
மீண்டும் சொல்லுகிறார். டில்லியில் நடைபெற்ற ஒரு அரசு விழாவினைத் தொலைக்காட்சி செய்திப் பிரிவு நிகழ்ச்சியில் பார்த்தேன். அது சங்கரராமன் கொலை வழக்கைப் பற்றியதாகும். சங்கர ராமனின் மனைவிக்கு உதவித் தொகை வழங்கினார்கள். அத்தொகையைப் பெற்றுக் கொண்ட அந்த அம்மையார் மொட்டை அடித்திருக்கவில்லை. வண்ணப் புடவையுடன் தான் வந்திருந்து அத்தொகையினைப் பெற்றுக் கொண்டார். இதனைப் பார்த்து இதுவும் பெரியாரின் உழைப்பு என்று உணர்ந்தேன் என்றார்.
கோபுரம் எதற்கு?
மேலும் எங்கள் சமூகத்தவர்கள் சிலர், பொது மக்களிடம் கோடிகோடியாக நிதியென்ற பெயரில் வசூலித்து கோயிலுக்கு உயர உயரமான கோபுரங்களைக் கட்டுகிறார்கள். அந்தக் கோபுரங்களுக்கு தங்கத் தகட்டிலே கூரை போடுகிறார்கள். மேலே கண்ட பல சமூகக் கொடுமைகள் பற்றி இவர்கள் பேசுவதே இல்லை. பெரியாரின் பரப்புரையின் காரணமாகத்தான் பல வகையான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.இதனை எவராலும் மறுக்க முடியாது என்றார்.
பார்ப்பனப் பெண்கள் நாற்பது வயது வரை கூட திருமண நிதி (வரதட்சணை) கொடுக்க முடியாமல், மணவாழ்க்கையை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் வாடுகின்றனர். ஆனால், பெரியாரின் தொடர் பரப்புரையினால் அதிகப் பேர் கலப்பு மணம் புரிந்துகொண்டு சிறப்பாக வாழ்கின்றனர். இவற்றையெல்லாம் பார்க்கும்பொழுது, இன்று அதிகமான திருமண நிதி (வரதட்சணை) இல்லாமலேயே மணம் செய்து கொண்டு வாழ்கின்றனர். இவை மட்டுமல்லாது பார்ப்பனர்களின் விழிப்புணர்வுகளுக்குக் காரணமானவர் பெரியார்தான். பெரியாரின் தொண்டை எவரும் எந்தக் காலத்திலும் மறக்க, மறுக்க முடியாது. இது எனது மனதின் ஆழமான உணர்வாகும். நீங்கள் தற்போது தான் அறிமுகமானீர்கள். உங்களிடம் உண்மையான எனது உணர்வினைச் சொல்ல வாய்ப்புக் கிடைத்தமைக்கு மகிழ்ச்சி அடைகிறேன்.
இப்படி இந்த உரையாடல் முற்றுப் பெற்றது. இதுதான் இன்றைய உண்மையான நிலை. இதை நம் உணர்வில் இருத்தி உயர்வு பெறுவோம்.