சென்னை, டிச.6- புயல் வெள்ள நிவாரணத்துக்காக தனது ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.
தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலா் நா.முருகானந்தத்திடம் ஒரு மாத ஊதியத்துக்கான காசோலையை முதலமைச்சர் அளித்தாா்.
வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக கடுமையான மழை பெய்தது. இதனால், விழுப்புரம், கடலூர் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. இந்தப் பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தனது ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளாா்.
புயல் மழையால் 3 லட்சம் எக்டேர் பரப்பளவில் பயிர்கள் சேதம்
கிருஷ்ணகிரி, டிச.6 ஃபெஞ்சல் புயல் மழையால் தமிழ்நாட்டில்3 லட்சம் எக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கியதாக வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் கூறினார்.
கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஃபெஞ்சல் புயலால் பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 3 லட்சம் எக்டேர் பயிர்கள் நீரால் சூழப்பட்டுள்ளன. பாதிப்பு களை கணக்கெடுக்கும் பணியில் வேளாண் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கணக்கெடுப்பு முடிவில் பாதிப்பு எவ்வளவு என்பது துல்லியமாகத் தெரியவரும்.
‘நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு. வெள்ளத் தடுப்பு பணியில் மெத்தனம் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பேசிவருவது அர்த்தமற்றது. ஏனெனில், திமுக ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகள்தான் ஆகின்றன. அதற்கு முன்னர் 10 ஆண்டுகள் ஆட்சி செய்தது அதிமுகதான். நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டதும் அப்போதுதான். நீதிமன்ற உத்தரவுபடி நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறோம். வெள்ளப் பாதிப்புகள் தொடர்பாக ஒன்றியக் குழுவும் ஆய்வை மேற்கொண்டு வருகிறது. பயிர் பாதிப்பு கணக்கெடுப்பு பணிகள் முடிந்த பின்னர், நிவாரணம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார். சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அவதூறு வழக்கு:
பேரவைத் தலைவா் மு.அப்பாவு மீதான மேல்முறையீடு மனு தள்ளுபடி
சென்னை, டிச.6- தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவுக்கு எதிரான குற்றவியல் அவதூறு வழக்கு ரத்து செய்யப்பட்டதை எதிா்த்து அதிமுக செய்தித் தொடா்பாளா் ஆா்.எம். பாபுமுருகவேல் தாக்கல் செய்திருந்த மனுவை உச்சநீதிமன்றம் நேற்று (5.12.2024) விசாரணைக்கு ஏற்க மறுத்து தள்ளுபடி செய்தது.
சென்னையில் 2023, நவம்பரில் நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய பேரவைத் தலைவா் மு.அப்பாவு, தமிழ்நாடு மேனாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த நேரத்தில், அதிமுக கட்சியைச் சோ்ந்த 40 சட்டமன்ற உறுப்பினர்கள் திமுகவில் இணையத் தயாராக இருந்ததாக என பேசியிருந்ததாகவும், அவரது பேச்சு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும் கூறி, மு.அப்பாவுக்கு எதிராக அதிமுகவின் செய்தித் தொடா்பாளா் ஆா்.எம். பாபு முருகவேல் அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி மு.அப்பாவு தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், மு.அப்பாவு மீதான குற்ற அவதூறு வழக்கை ரத்து செய்து கடந்த அக்டோபரில் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிா்த்து அதிமுக செய்தித் தொடா்பாளா் ஆா்.எம்.பாபுமுருகவேல் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹ்ரிஷிகேஷ் ராய், எஸ்.வி.என். பட்டீ ஆகியோா் அடங்கிய அமா்வு முன் நேற்று (5.12.2024) விசாரணைக்கு வந்தது. மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் எஸ்.நாகமுத்து, ‘சம்பந்தப்பட்ட பேரவைத் தலைவா் அப்பாவின் கருத்து கட்சியின் மதிப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதை ஏற்க மறுத்ததால் மனுவை திரும்பப் பெறுவதாக அவா்கூறினாா். இதையடுத்து, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா். முன்னதாக நீதிபதிகள் கூறுகையில், ‘அரசியல் அமைப்பில் இதுபோன்ற ஒரு நிகழ்வை நமது ஜனநாயகமும், சட்டப் பேரவையும் அங்கீகரித்திருப்பதைக் காட்டும் கட்சித்தாவல் தடைச் சட்டம் நம்மிடம் உள்ளது. ஏதோ வினோதமாக நடந்தது போல் கூறுகிறீா்கள். இதுபோன்ற விடயங்களைக் கையாள்வதற்கு சிறந்த கட்சித் தாவல் தடைச் சட்டம் உள்ளது’ என்றனா்.