காரைக்குடி டிச. 6- காரைக்குடி (கழக) மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் 01.12.2024 அன்று காலை 10.30 மணியளவில் காரைக்குடி குறள் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இக்கலந்துரையாடல் கூட்டத்திற்கு பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் செல்வம் முடியரசன் தலைமை தாங்கினார். பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் ந. செல்வராசன் வருகை தந்த அனைவரையும் வரவேற்றார்.
பகுத்தறிவாளர் கழக மாவட்ட ஆலோ சகர் விஞ்ஞானி சு. முழுமதி, பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் ஒ. முத்துக்குமார், மாவட்டத் துணைத் தலைவர் கோபால்சாமி, மாவட்ட துணைச் செயலாளர் தோழர் முத்துலெட்சுமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் திராவிடர் கழக மாவட்டக் காப்பாளர் சாமி திராவிடமணி, கழக மாவட்டத் தலைவர் ம.கு. வைகறை, கழக மாவட்டச் செயலாளர் சி.செல்வமணி, கழக பேச்சாளர் தி.என்னாரெசு பிராட்லா, ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
புதிய தோழர்களை இணைக்கலாம்
பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் செல்வம் முடியரசன் தனது தலைமையுரையில் 28, 29 டிசம்பர் 2024, திருச்சியில் நடைபெறும் இந்திய பகுத் தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு 13ஆவது மாநாடு குறித்தும் கழகத்தில் எவ்வாறு புதிய தோழர்களை இணைக்கலாம் என்பது குறித்தும் பேசினார். பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் ஒ. முத்துக்குமார் டிசம்பர் 28, 29 இரண்டு நாட்கள் திருச்சியில் நடைபெறும் மாநாட்டிற்கு அதிக அளவில் நிதி திரட்ட வேண்டும் என்றும் அதிக அளவில் தோழர்களையும், ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களையும் ஒருங்கிணைத்து அழைத்துச் செல்ல முனைப்போடு விரைந்து செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டதோடு கழகத்தை வலுப்படுத்த சொல்லிச் செய்ய வைப்பதை விட, செய்து செய்விக்க முயல வேண்டும் என்ற தனது கருத்தை முன்வைத்தார்.
நோக்க உரையாற்றிய பகுத்தறிவாளர் கழக மாநில துணைப் பொதுச் செயலாளர் மு.சு. கண்மணி, திருச்சியில் நடைபெற இருக்கின்ற மாநாட்டிற்கு முன்பதிவு செய்யும் அவசியம், முன்பதிவு செய்யும் விதம், மாநாட்டிற்கு தோழர்களை திரட்ட வேண்டிய அவசியம் குறித்து விளக்கியதோடு, மாநாட்டிற்கு தோழர்கள் அதிகளவில் நிதி திரட்டும் பணியில் தோழர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென்றும் அதிக எண்ணிக்கையில் தோழர்களை திரட்டி அழைத்துச் செல்ல வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து பேசிய திராவிடர் கழக மாவட்டக் காப்பாளர் சாமி திராவிடமணி ஆசிரியரின் அறிவுறுத்தலை ஏற்று தொடர் பயணமாக மாவட்டம் தோறும் சுழன்று கழகக் கடமை செய்து வருகின்ற பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா. தமிழ்ச்செல்வன் மற்றும் பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர் வி. மோகன் இருவருக்கும் காரைக்குடி கழக மாவட்டத்தின் சார்பில் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்ததோடு மாநில பொதுச் செயலாள் வி. மோகனுக்கு பொன் துகில்அணிவித்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்கள். தன்னுடைய காலத்தில் நடைபெற்ற மாநாட்டுச் சிறப்புகளையும், காரைக்குடி கழக மாவட்டத்தின் செயல்பாடுகளையும், ஆசிரியர் எடுத்துக் கொண்ட முயற்சி களையும் தொகுத்து அறியத் தந்தார்.
மாதாந்திர கூட்டங்கள்
கழக மாவட்டத் தலைவர் ம.கு. வைகறை பேசுகையில் கழகத்தை ஒன்றிய அளவில் விரிவுபடுத்த ஒன்றியம் தோறும் மாதாந்திர கூட்டங்களை நடத்த வேண்டும் எனவும் மூடப் பழக்கவழக்கத்தை ஒழிக்கக் கூடிய, அறிவியல் மனப்பான்மையை வளர்க்கக் கூடிய பெரியாரிய கருத்துகளை தொகுத்து துண்டறிக்கையாக இரண்டு அல்லது மூன்று பக்கங்களில் தயாரித்து அதனை அக்கூட்டங்களில் கலந்து கொள்பவர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் மந்திரமா? தந்திரமா? போன்ற அறிவியல் தொடர்பான நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்த வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கினார்.
கழக சொற்பொழிவாளர் என்னாரெசு பிராட்லா, கழக கொள்கைகளை பொது வெளியில் கொண்டு போய் சேர்ப்பதற்கு தோழர்கள் ஒவ்வொருவரும் பேசும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் தொடர்ந்து கழகம் இல்லாத இடங்களில் ஆசிரியரின் திடமான, நேர்த்தியான முடிவுகளாலும், ஓய்வில்லா சுற்றுப்பயணத்தின் மூலமும் கழகத்தை கட்டமைத்த விதம் குறித்தும் அறியத் தந்து நாமும் முனைப்போடு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அவரைத் தொடர்ந்து பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் விஞ்ஞானி சு. முழுமதி, மாவட்டச் செயலாளர் ந. செல்வராசன், மாவட்டத் துணைத் தலைவர் செ. கோபால்சாமி, மாவட்ட துணைச் செயலாளர் தோழர் இரா. முத்துலெட்சுமி, மாவட்ட அமைப்பாளர் த. பாலகிருஷ்ணன், ஆ. பால்கி, பகுத்தறிவாளர் கழகம் மற்றும் கழக மாவட்டச் செயலாளர் செல்வமணி, அ. பிரவீன் முத்துவேல், சொ. சேகர் ஆகியோர் அவர்தம் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
அனைத்தையும் கவனமுடன் கேட்டறிந்த பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர் வி.மோகன் கழகப் பற்றோடு பயணித்த குடும்பங்களில் இருந்து திறமையான தோழர்களை காரைக்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டிருப்பதை சுட்டிக்காட்ட பாராட்டையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்கள். திருச்சியில் நடைபெற இருக்கின்ற இந்திய பகுத்தறிவாளர் சங்களின் கூட்டமைப்பு 13ஆவது மாநாட்டில் நடைபெற இருக்கின்ற இரண்டு நாள் நிகழ்ச்சிகள் குறித்தும் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் வசதிகள் குறித்தும் மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கின்ற தலைவர்கள் குறித்தும் முன்பதிவு செய்ய வேண்டியதின் அவசியம் குறித்தும் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிப்பதன் சிறப்பு குறித்தும் மிகச் சிறப்பாக, தெளிவுவாக விவரித்தார்கள்.
நிதி ஆதாரங்கள்
மாநாட்டு செலவினங்கள், அதற்குத் தேவைப்படும் நிதி ஆதாரங்கள், பெரும் திரளாக தோழர்கள் திரள வேண்டியதன் அவசியம், உலக அளவில் மாநாடு குறித்த எதிர்பார்ப்பு இவற்றை விளக்கியதோடு காரைக்குடி கழக மாவட்டத்தின் சிறப்பை பெருமிதத்தோடு குறிப்பிட்டு இம்மாவட்டத்தின் சார்பில் மாநாட்டு நிதி சார்ந்த எதிர்பார்ப்பையும் கூட்டத்தில் தெளிவுபடுத்தினார்கள்.
92 வயதில் ஆசிரியரின் அயராத உழைப்பையும், சுறுசுறுப்பான சுற்றுப் பயணத்தையும், ஆசிரியரின் தொலைநோக்குப் பார்வையையும் அதற்காக அவர் எடுத்துக்கொள்ளும் சிரத்தையையும் நினைவு கூர்ந்த மாநில பொதுச் செயலாளர் இன்றைய சூழலில் தோழர்கள் அனைவரும் முழு வீச்சோடு, தொய்வின்றி கழகப் பணி செய்ய வேண்டும். அதிக செலவினங்கள் இல்லாமலும் பிரச்சனைகளுக்கு இடம் கொடுக்காமலும் திட்டமிட்டு தொடர்ந்து கழகப் பணி செய்ய வேண்டும். பெரியார் சிந்தனையாளர்கள், பற்றாளர்கள் எங்கும் நிறைந்திருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி நமக்குத் தெரிந்த வழிகளில் அவர்களை இனம் கண்டு கழகத்தில் இணைக்க வேண்டும். அறிவியல் மனப்பான்மையை வளர்க்கக் கூடிய நிகழ்ச்சிகளையும், செயல்பாடுகளையும் நாம் தொடர்ந்து தொய்வின்றி செயல்படுத்திட வேண்டும். அவ்வாறு நாம் செயல்படவில்லையெனில் அடுத்து வரும் தலைமுறைக்கு செய்ய வேண்டிய கடமையைச் செய்ய மறந்த குற்றமிழைத்தவர்களாவோம் என்பதை நினைவிற் கொண்டு தோழர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து விரைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்…
28, 29 டிசம்பர் 2024, திருச்சியில் நடைபெறும் இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு (FIRA) 13ஆவது மாநாடு தொடர்பாக திட்டமிடல்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாக நடத்துவது குறித்து
அமைப்புப் பணிகள்…
காரைக்குடி (கழக) மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் மாநாட்டு நிதியாக முனைவர் மு.சு. கண்மணி, மாநில துணைப் பொதுச் செயலாளர் ரூ. 6000/=, ந. செல்வராசன், மாவட்டத் தலைவர் ரூ.4000/=, ஒ. முத்துக்குமார், மாநில அமைப்பாளர் ரூ. 2500/=, விஞ்ஞானி சு. முழுமதி மாவட்ட ஆலோசகர் ரூ. 2500/= மொத்தம் ரூ.15000/= முதல் கட்டமாக வழங்கப்பட்டது.
மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாநாட்டிற்கு ரூ. 20,000/= வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. நிகழ்வின் இறுதியாக மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் த.பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.