பெரியார் உலகத்திற்கு பெரும் அளவில் நிதி வழங்குவோம் வேலூர் மாவட்ட இளைஞரணி, மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்

Viduthalai
2 Min Read

குடியாத்தம், டிச. 6- வேலூர் மாவட்ட இளைஞரணி மற்றும் மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம் 30.11.2024 அன்று குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டையில் உள்ள பெரியார் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.
மாவட்ட இளைஞரணி தலைவர் இ.தமிழ்தரணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி சிறப்புரை ஆற்றினார். மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் மு.சினிவாசன், மாநகர இளைஞரணி தலைவர் அ.பாண்டியன், மாநகர மாணவர் கழகத் தலைவர் பி.யுவன் சங்கர் ராஜா, மாவட்ட காப்பாளர் சடகோபன், மாவட்ட தலைவர் சிவக்குமார், மகளிர் அணி தேன்மொழி, பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் அன்பரசன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் பேராசிரியர் விநாயகமூர்த்தி, பகுத்தறிவாளர் கழக மாவட்ட துணை தலைவர் சையது அலிம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

இக்கூட்டத்தில் கழக இளைஞரணி சார்பாக நமது மாவட்டம் முழுவதும் கழக இலட்சிய கொடியை ஏற்றுதல், தகவல் பலகை அமைத்து தினம் ஒரு தகவல் எழுதுதல், திண்ணைப் பிரச்சாரம், தெருமுனைப் பிரச்சாரம் போன்ற நிகழ்வுகளை தொடர்ச்சியாக நடத்துவது எனவும், 12.12.2024 காலை 10 மணி அளவில் வைக்கம் வீரர் தந்தையார் புகழ் போற்றும் விழா கேரள மாநிலம் வைக்கத்தில் நடைபெற உள்ள விழாவில் தமிழர் தலைவர், கேரள முதலமைச்சர், தமிழ்நாடு முதலமைச்சர் ஆகியோர் பங்கேற்று சிறப்பிக்க உள்ளார்கள்.

இரண்டு அரசுகளும் இணைந்து நடத்தும் விழாவில் நமது கழக மாவட்ட சார்பில் தனி வாகனத்தில் செல்வது எனவும், டிசம்பர் மாதம் 28 மற்றும் 29 தேதிகளில் திருச்சியில் நடைபெறும் இந்திய பகுத்தறிவாளர்களின் சங்கங்களின் கூட்டமைப்பின் 13ஆவது மாநாட்டில் நமது கழக மாவட்டம் சார்பில் அனைத்து தோழர்களும் கலந்து கொள்வது எனவும், நமது மாவட்டத்தில் உற்சாகமாக கனமாடி அதிக அளவில் இளைஞர்களை இயக்கத்திற்கு அழைத்து வருவது எனவும் டிசம்பர் 7ஆம் தேதி அன்று நடைபெறும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பிறந்தநாள் மகிழ்வாக விடுதலைச் சந்தா மற்றும் பெரியார் உலகத்திற்கு பெரும் அளவில் நிதி வழங்குவது எனவும் இக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இறுதியாக மாவட்ட இளைஞரணி செயலாளர் மு.சீனிவாசன் நன்றி உரையாற்றினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *