சுயமரியாதை இயக்கம் தோன்றிய இந்த நூறாண்டுகளில், பல்வேறு சாதனைகளை நாம் தனித் தனியாகப் பட்டியலிட முடியும்! பெரியார் தொண்டர்களின் பங்கு, எழுத்தாளர்களின் பங்கு, பேச்சாளர்கள் பங்கு, போராட்டங்களின் பங்கு, சிறை சென்றோர் பங்கு, கலை நிகழ்ச்சிகளின் பங்கு, குடும்பம், குடும்பமான தோழர்களின் பங்கு என விவரித்துக் கொண்டே போகலாம்! குடிஅரசு, விடுதலை நாளிதழில் இருக்கும் இவற்றை ஆசிரியர் அவர்கள் பொக்கிசமாகப் பாதுகாத்து வருகிறார்!
கருவூலம் நம் வீரமணி!
மேலும் அந்தக் காலத்து அச்சுத் தாளில் இருந்தவை, அழகிய வடிவமைப்பில் புத்தாக்கம் பெற்றுக் கொண்டே இருக்கிறது! இதற்காக அல்லும்பகலும் ஒரு குழு பம்பரமாகச் சுழன்று கொண்டே இருக்கிறது! அவர்களுக்கு நம் பாராட்டுகள்! நொடிதோறும், நொடிதோறும் ஆசிரியரின் இந்த உழைப்பை அருகில் இருப்போர் அறிவர்! முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கூட, “கருத்துகளைச் சேகரித்து வைக்கும் கருவூலம் நம் வீரமணி”, எனப் புகழ்ந்து கூறினார். (18.02.2008)
இந்த வரிகளுக்குப் பின்னால் இருக்கும் “பொருள்” அவ்வளவு சாதாரணமானது இல்லை! கலைஞர் அவர்கள் மேலும் கூறும்போது, “இதுபோன்ற வாய்ப்புகள் உலகில் வேறெந்த அமைப்புகளுக்கும் ஏற்படவில்லை”, என்றும் கூறினார். வரலாறு முழுவதும் பாதுகாக்கப்பட்டதோடு, அது மேலும் வளர்த்தெடுக்கப்பட்டது எவ்வளவு பெரிய சாதனை! அதனால்தான் அவர் “தமிழர் தலைவராக” இருக்கிறார்!
கிராமங்களின் வரலாறு!
சுயமரியாதை இயக்க நூற்றாண்டில் இப்படியான பல்வேறு நிகழ்வுகளில் நாம் மகிழ்ந்தும், திளைத்தும் இருக்க முடியும்! இந்த வரிசையில் கிராமங்களின் பங்கும் நம் இயக்கத்தில் உச்சம் பெற்றவை! பெரியார் பெருந்தொண்டர்கள் கூற நாம் கேட்டிருப்போம், “எங்கள் கிராமமே திராவிடர் கழகம்தான் என்பார்கள். வேறெந்த அரசியல் கட்சியும் எங்கள் கிராமத்தில் இருந்ததில்லை என்பார்கள், இங்கிருந்து 20 கிலோமீட்டர் வரை அத்தனைக் கிராமமும் கருப்புச்சட்டை தான் என்பார்கள்”.
இப்படி நிறைய கேட்டிருப்போம். அப்படியென்றால் அவர்கள் எல்லோரும் இப்போது எங்கே என்கிற கேள்வியும் வரும்! தமிழர்கள் எப்படியான வாழ்க்கை வாழ வேண்டும் எனப் பெரியார் விரும்பினாரோ, அவ்வாறே கல்வி கற்று, தமிழ்நாட்டின் பல இடங்களுக்கும் வேலைக்குச் சென்று, உலக நாடுகளில் பயணித்து, சுயமரியாதை வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்! ஒரு கிராமத்தில் ஒரே ஒரு கருப்புச் சட்டை தொண்டர்தான் பாடுபட்டிருப்பார், ஆனால் அதன் பயன்களை இன்று அந்தக் கிராமமே அனுபவிக்கும்!
ஆலம்பட்டு காரண கர்த்தா!
அப்படியான சுயமரியாதைக் கிராமங்களை நூற்றுக்கணக்கில் நாம் வரிசைப்படுத்தி எழுத முடியும். அந்த வகையில் “ஆலம்பட்டு” கிராமம் தனது நூற்றாண்டைக் கொண்டாடுகிறது! ஆலம்பட்டு கிராமம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. கழக மாவட்டத்தில் காரைக்குடியில் வரும்! அந்தக் கிராமத்தில் 23.11.2024 அன்று மாநாடு போல ஒரு பொதுக்கூட்டம் நடத்தி இருக்கிறார்கள். செய்தி அறிந்ததும் அடுத்த நாள் அந்தக் கிராமத்திற்குச் சென்றோம்!
இந்த நிகழ்ச்சிக்கு யார் “காரண கர்த்தா” என அந்தக் கருப்புச் சட்டைக்காரரைத் தேடினோம். அவர் பெயர்தான் சங்குநாதன்!
“எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே”, என சங்கு முழங்கி இருக்கிறார் சங்குநாதன்! வயது 44 ஆகிறது. சொந்த ஊர் ஆலம்பட்டு என்றாலும், சென்னை சென்று 22 ஆண்டுகள் ஆகிறது. அரும்பாக்கத்தில் வசிக்கிறார். “திடீரென சொந்தக் கிராமத்திற்கு வந்து, இப்படியான ஒரு கொள்கைத் திருவிழாவை நடத்தும் எண்ணம் எப்படி வந்தது?”, என்பதுதான் முதல் கேள்வி. தலை முழுக்க அந்தக் கேள்விதான் ஓடிக் கொண்டே இருந்தது.
ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு!
அதற்கு அவர் சொன்ன பதில், “ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு”, என்பது நிரூபணம் ஆனது. ஆம்! தமிழர் தலைவர், ஆசிரியர் அவர்களுக்கு இரண்டு வாரங்களுக்கு முன் சிறிது உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அலுவலகம் கூட வர இயலாத சூழ்நிலை. எனினும் அதுதான் வாய்ப்பு என இன்னும் அதிகமாக எழுத, படிக்க அந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டார்கள். அதுசமயம் அற்புதமான குடிஅரசு, விடுதலை கட்டுரைகளை நமக்காகத் தொகுத்துக் கொடுத்தார்கள்.
மேலும் “சுயமரியாதை இயக்க நூற்றாண்டு” என்பதை வலியுறுத்தும் வகையில் தினமும் விடுதலையில் செய்திகள் வந்து கொண்டே இருந்தன. காரணம் சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டை பிரமிப்பாகக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே ஆசிரியரின் முழு நேரச் சிந்தனை! இந்தச் சூழலில் சங்குநாதன் அவர்கள் கடந்த ஓர் ஆண்டாக விடுதலை வாங்கிக் கொண்டிருக்கிறார். “தொடர்ந்து சுயமரியாதை இயக்க நூற்றாண்டு செய்திகளாக வருகிறதே, நம் கிராமமும் இதற்குப் பொருத்தமானது தானே என யோசித்ததன் விளைவுதான், “பெருங்கூட்டம்” ஒன்றை நடத்தியுள்ளார்!
நூற்றாண்டு கிராமம் ஆலம்பட்டு!
திருப்தியிலும், மகிழ்ச்சியிலும் திளைத்த அவரிடம், “ஆலம்பட்டு கிராமம் குறித்துக் கூறுங்கள்”, என்றோம்? அந்தக் குக்கிராமத்தில்
1962 ஆம் ஆண்டு படிப்பகம் திறந்திருக்கிறார்கள். “தந்தை பெரியார் மறுமலர்ச்சி டாக்டர் அம்பேத்கர் இளைஞர் மன்றம்” எனும் அமைப்பையும் ஏற்படுத்தி உள்ளார்கள். தொடர்ந்து 1978 ஆம் ஆண்டு பெரியார் சிலை வைத்துள்ளார்கள். அதுவும் கல்லல் பகுதியில் பிடிஓ அதிகாரியாக இருந்த முனியசாமி என்பவரை வைத்துத் திறந்துள்ளார்கள். அந்த ஆண்டு முதலே கழகக் கொடியும் கம்பீரமாகப் பறந்து வருகிறது.
மொத்தமே 80 குடும்பங்கள் தான் அங்கு வசிக்கிறார்கள்! முழுவதுமே பட்டியல் இனப் பெருமக்கள்! கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் “ஆதிதிராவிடர் காலனி” என்பதை மாற்றி, பெரியார் நகர் என்கிற பெயர்ப் பலகையைக் கல்வெட்டாய் பதித்து வைத்திருக்கிறார்கள். பட்டியல் இனப் பெருமக்கள் என்று சொன்னாலும், குறிப்பிட்ட ஜாதி மட்டுமல்ல; எல்லோரும் கலந்தே வசிக்கிறார்கள்; ஒற்றுமையாய் இருக்கிறார்கள்!
அதேநேரம் அனைவரும் கொள்கையாளர்களும் இல்லை. இருந்தாலும் மேற்கண்ட அத்தனை செயற்கரிய செயல்களையும் இணைந்தே செய்துள்ளனர்! இப்படியான சூழலில் நூலகத்தைச் சென்று பார்த்தோம். சங்குநாதன் அவர்கள் ஒவ்வொன்றாய் விவரித்தார். நூலகம், தந்தை பெரியார் சிலை, தந்தை பெரியார் மறுமலர்ச்சி டாக்டர் அம்பேத்கர் இளைஞர் மன்றம் ஆகியவை தோன்ற, துணையாக இருந்த பெரியார் பெருந்தொண்டர்கள் குறித்து விவரித்தார்.
பெரியாரின் கொள்கை வேர்கள்!
பி.கே.வெள்ளைச்சாமி. இவர் சங்குநாதன் அவர்களின் அய்யா. இவர் அனைத்திற்குமான முன்னோடி. இவரின் மகள் பெயர் காளியம்மாள். 90 ஆண்டுகளுக்கு முன்னரே சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டவர். அதேபோல ஏ.நாச்சியப்பன். 1918 ஆம் ஆண்டே “ஆதி திராவிடர் இளைஞர் அய்க்கிய சங்கம்” எனும் அமைப்பை ஆலம்பட்டுக் கிராமத்தில் தோற்றுவித்தவர். மற்றொருவர் பி.எஸ்.இரத்தினவேல் பாகவதர். இவர் என்.எஸ்.கிருஷ்ணன் தலைமையில் சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டவர். “மொய் வரவேற்கப்படாது” என அந்தக் காலத்திலேயே அழைப்பிதழில் அச்சிட்டவர்.
அதேபோல கே.பி.கருப்பையா. இவர் “வாத்தியாராக” பணி செய்துள்ளார். ஆதிக்க ஜாதியினர் சிலர், “நீங்கள் தண்டோரா அடிக்க வேண்டும்”, எனக் கூறியுள்ளனர். இவர், எனக்கு அடிக்கத் தெரியாது என்று கூறியுள்ளார். அப்போது தங்கள் தலையில் மாட்டிக் கொண்டு ‘இப்படித்தான் அடிக்க வேண்டும்’ என விவரித்துள்ளனர். “பரவாயில்லையே! நீங்களே சிறப்பாக அடிக்கிறீர்களே, தொடர்ந்து நீங்களே அடியுங்கள்” எனக் கூறி அப்போதே கொள்கை முழக்கத்தைத் தெறிக்கவிட்டவர். இவரது மகளுக்கும் சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றுள்ளது.
தொடர்ந்து கே.வி.சங்கரலிங்கம். ஜாதிக் கொடுமைக்கு எதிரான “உக்கிரமமான” சமூகப் போராளி. இவர் பாதுகாப்பிற்கு அரிவாள் வைத்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவரே அந்தக் காலத்தில் சிறப்பு அனுமதி கொடுத்துள்ளார். அந்தளவிற்கு உண்மையும், நேர்மையும் கொண்ட பெரியார் தொண்டராக இருந்துள்ளார்.
இப்படியான சூழலில் பி.வி.அழகுதாஸ் என்பவரின் படமும் படிப்பகத்தில் இருந்தது. காரணம் அந்த இடத்தை இலவசமாகக் கொடுத்த மனிதநேயர். இவர் இயக்கத்தில் நேரடியாக இல்லை என்றாலும், பெரியாரின் முக்கியத்துவத்தை அறிந்த பெரியவராக இருந்துள்ளார். ஆக இவர்கள் தான் ஆலம்பட்டு கிராமத்திற்கு
அடித்தளமாக இருந்துள்ளனர்!
பெரியாரின் ஆலம்பட்டு வருகை!
இந்தப் பகுதியில் பலர் இலங்கையிலும், மும்பையிலும் வசித்துள்ளனர். கொழும்பில் வசித்த போது, அங்கிருந்த இயக்கத் தோழர்களோடு பணி செய்துள்ளனர். எனினும் தங்கள் ஆலம்பட்டு கிராமத்தை அவர்கள் தொடர்ந்து நேசித்துள்ளனர். 1963 ஆம் ஆண்டு பெரியாரை அழைத்து நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். அந்த நேரத்தில் கடுமையான மழையாம்! பெரியாரின் வாகனம் கிராமத்திற்குள் வர முடியாத சூழல். எனவே சகதியில் பச்சை பனை ஒலையை விரித்து, அதில் மாட்டு வண்டியைச் செலுத்தி, பெரியாரை அழைத்து வந்துள்ளார்கள். அதுசமயம் காசி எனும் தோழரின் மகளுக்கு ‘அருமைக்கண்ணு’ எனப் பெயர் சூட்டியுள்ளார் பெரியார்.
அதேபோன்று பிறிதொரு சமயமும் பெரியார் வந்ததாக சங்குநாதன் சகோதரர் பொன்னம்பலம் கூறினார். படிப்பகம் 1962, பெரியார் சிலை 1963, அதனைத் தொடர்ந்து பெரியார் நூற்றாண்டு விழாவையும் 1978 இல் கொண்டாடினோம் எனக் கூறினார். அருகாமைக் கிராமமான செவரக்கோட்டையில் பொன்னம்பலம் என்கிற பெரியார் பெருந்தொண்டர் இருந்தாராம். இவர் இலங்கையில் வசித்த போது, அங்கு திராவிடர் கழகத்தில் தீவிரமாக இயங்கியுள்ளார். அவரின் நினைவாக தம் பெயரனுக்கு பொன்னம்பலம் என பி.கே.பொன்னுச்சாமி பெயர் சூட்டியுள்ளார். சிறு, சிறு விசயத்திலும் பெரியார் தொண்டர்கள் எப்படி அணுஅணுவாய் வேலை
செய்துள்ளார்கள் பாருங்கள்!
கல்வி விழிப்புணர்வு!
அதேபோல பெரியார் இந்தக் கிராமத்திற்கு வந்தபோது தமிழ்மாறன் என்கிற இளைஞர், பெரியாரின் 85 வயதையொட்டி, 85 ஓட்டைக் காசுகளைக் (அப்போது நாணயத்தின் நடுவில் துவாரம் இருக்குமாம்) கொடுத்துள்ளார். அன்றைய இளைஞரான தமிழ்மாறன், இப்போது பெரியார் பெருந்தொண்டராக வலம் வருகிறார்.
இந்தக் கிராமத்தில் பிறந்த காளிமுத்து எனும் தொண்டர் மும்பையில் வசித்து வந்துள்ளார். அவருக்கு எழுதப் படிக்கத் தெரியாதாம். எனினும் சென்னையில் இருந்து விடுதலை நாளிதழை வரவழைத்து, தம்பி மகனைப் படிக்கச் சொல்லி தினமும் கேட்பாராம். அவருக்கு எழுதப் படிக்கத் தெரியாத காரணத்தால், பிள்ளைகளை நன்கு படிக்க வைத்துள்ளார். அந்த வகையில் ஒரு பையன் சென்னையில் சுங்கத்துறை அதிகாரியாகவும், மற்றொருவர் இலண்டன் நாட்டிலும் வசிக்கிறார்களாம். இந்த விழிப்புணர்வு பெரியார் கொள்கை மூலமே கிடைத்தது எனக் கிராமத்தில் அடிக்கடி கூறுவாராம்.
சங்குநாதன் கொடுத்த புத்துணர்ச்சி!
இப்படியான ஏராளமான வரலாற்றுத் தகவல்களைக் கொண்டது இந்தக் கிராமம்! 1918 முதலே திராவிட இயக்கச் செயல்பாடுகளைத் தொடங்கிய கிராமம்! இங்குதான் தோழர் சங்குநாதன் மிகப்பெரிய நிகழ்ச்சியை நடத்தி, சுயமரியாதை இயக்க நூற்றாண்டுக் கிராமத்திற்குப் புத்துணர்ச்சி கொடுத்துள்ளார். சென்னையில் இருந்து வருகை தந்து துண்டறிக்கை, அழைப்பிதழ், சுவரொட்டி, பதாகை என நகரத்தை மிஞ்சும் அளவு அசத்திவிட்டார். அதுமட்டுமின்றி சுற்று வட்டார கிராமங்களுக்கு ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று, தங்கள் வீட்டுத் திருமணம் போல, கூட்ட அழைப்பிதழைக் கொடுத்துள்ளார்.
நிகழ்ச்சியன்று ஆலம்பட்டு பெரியார் சிலைக்கு நமது தோழர்கள், அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்துள்னர். இதுதவிர சுற்றுவட்டார கிராமப் பொது மக்கள் சிலர் தன்னிச்சையாக வந்து மாலை அணிவித்தது, பலரையும் வியப்பின் உச்சிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். சற்றொப்ப 300 பேர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், அனைவருக்கும் புலால் உணவு தயார் செய்யப்பட்டுள்ளது!
இந்தக் கூட்டத்திற்குக் கிராமத் தலைவர் முத்தழகு, கிராமப் பொருளாளர் பொன்னம்பலம், பூவேந்திரன், முகிலன், தினேஷ், நதியா, கணபதி, சத்யபிரகாஷ், பிரதிக் செல்வம், கமலேஷ், கவுசிக், வினோத் ஆகியோர் பெரும் உதவி செய்துள்ளனர்!
உட்காரும் கல் இருக்கைகள்!
பொதுவாகவே ஆலம்பட்டு கிராமத்தில் பெரியார் பிறந்தநாள், பொங்கல் விழா இரண்டும் தான் சிறப்பாகக் கொண்டாடப்படுமாம்! பிறந்தநாளில் இனிப்புகளும், பொங்கல் விழாவன்று விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுமாம். ஒருபோதும் மஞ்சு விரட்டு போன்றவை நடத்தியதே கிடையாதாம். தீபாவளி அன்று பெரியவர்கள் புதுச்சட்டை அணிந்து நான் பார்த்ததே இல்லை என்கிறார் பொன்னம்பலம். அதேபோல இவர்கள் கிராமத்தில் அனைத்துமே பார்ப்பன மறுப்புத்
திருமணங்கள்தான் நடைபெறுமாம்!
இந்தக் கூட்டத்தை வாய்ப்பாகப் பயன்படுத்தி, தமது புது இல்லத்தில் சஙகுநாதன் கழகக் கொடியை ஏற்றியுள்ளார். கடந்த ஓர் ஆண்டாக ஆலம்பட்டு வீட்டிற்கும் விடுதலை வாங்கிக் கொண்டிருக்கிறார்.
சங்குநாதனின் அம்மா இராக்கம்மாள், அப்பா கிருஷ்ணன். இவர் இராணுவத்தில் பணிபுரிந்தவராம். இவருடைய அய்யா பி.கே.வெள்ளைச்சாமி மற்றும் அப்பா கிருஷ்ணன் நினைவாகக் கிராமத்தில் ஒரு பணியைச் செய்துள்ளார்.
அதாவது ஆலம்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே, பாறைகளால் ஆன இரண்டு உட்காரும் கல் இருக்கையை உருவாக்கி இருக்கிறார். இதனைக் காரைக்குடி மாவட்டக் கழகத் தோழர்கள் அனைவரும் பங்கேற்க, திறப்புவிழா செய்துள்ளார்.
ஒரு கூட்டம் என்ன செய்யும்?
திராவிடர் கழகத்தின் ஒரு கூட்டம் என்பது, அந்தக் கூட்டம் நடந்த ஆலம்பட்டு கிராமம், அங்கு ஊறித் திளைத்திருக்கிற திராவிட இயக்கச் சிந்தனைகள், அதன் நூற்றாண்டு வரலாறுகள் என விரிந்து கொண்டே போகிறது! இப்படிப் பல நூறு சுயமரியாதை இயக்கக் கிராமங்கள் சேர்ந்துதானே, இந்த அழகிய தமிழ்நாட்டை நமக்குக் கொடுத்துள்ளது! எனவே நமது தோழர்கள் வெளியூர், வெளிநாட்டில் பணிபுரிந்தாலும், சுயமரியாதை இயக்க நூற்றாண்டை முன்னிட்டு, உங்கள் கிராமத்தில் பெரும் பகுத்தறிவு மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்! அதுதான் பெரியாருக்கும், தம் பெற்றோருக்கும், நம்மை ஈன்ற கிராமத்திற்கும் நாம் காட்டும் நன்றியுணர்ச்சி ஆகும்!