சென்னை, டிச.5- சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உள்நோயாளி களின் உடல் நிலை மற்றும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்த விவரங்களை உடனாளர்கள் அவ்வப் போது அறிந்து கொள்வதற்கும், குறைகளைத் தீர்ப்பதற்கும் தனியே மருத்துவ ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவர்களுக்கும், நோயாளி களுக்கும் இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக அவசர சிகிச்சை, தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளவர் களுக்கு இத்தகைய தகவலறியும் வசதி அளிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் அனைத்து நோயாளிகளுக்கும் அது விரிவுபடுத்தப்படும் என்றும் மருத்துவ மனை நிர்வாகிகள் தெரிவித்தனர்.
அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் உடல் நிலை மற்றும் மருத்துவ விவரங்களை முறையாக மருத்துவர்கள் தெரிவிப்ப தில்லை என்பது நீண்டகாலமாக எழுப்பப்படும் குற்றச்சாட்டாக உள்ளது. அசம்பாவித நிகழ்வுகளுக்கும் அது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
கிண்டி, கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை மருந்தியல் புற்றுநோய்த் துறை பேராசிரியர் மருத்துவர் பாலாஜி மீது அண்மையில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி தாக்கினார். தனது தாய்க்கு முறையாக சிகிச்சை அளிக்காததும், கண்ணியமாக தங்களை நடத்தாததுமே தாக்குதலுக்கு காரணம் என அந்த இளைஞர் வாக்குமூலம் அளித்தார்.
ஆலோசகர்கள் நியமனம்: இந்த சூழ்நிலையில், தற்போது இத்தகைய முன்முயற்சியை மாநிலத்திலேயே முதல்முறையாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக மருத்துவமனையின் முதல்வர் மருத்துவர் எ.தேரணிராஜன் கூறியதாவது:
ஒவ்வொரு நோயாளியையும், அவர்களது உடனாளர்களையும் கண்ணியத்துடன் நடத்தி சிறப்பான சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதே ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் பிரதான நோக்கம்.
அதில் தவறுகள் நிகழாத வகையில் தடுக்க சிறப்பு செயல் திட்டத்தை அமலாக்க வேண்டிய அவசியம் எழுந்தது. அதன்படி, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், துறைச் செயலர் ஆகியோரின் வழிகாட்டு தலுக்கேற்ப நோயாளிகள் மற்றும் உடனாளர்களுக்கான சிறப்பு மருத்துவ ஆலோசகர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டது.
5 பேர் நியமனம்
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக 4 பெண்கள் உள்பட 5 பேரை அப்பணிகளில் நியமித்துள்ளோம். அவர்களில் மூவர் முதுகலை உளவியல் ஆலோசனை பட்டம் பெற்றவர்கள். இருவர் சமூக பணியியல் படிப்பை நிறைவு செய்தவர்கள். அவர்கள் அனைவருக்கும் உரிய பயிற்சி வழங்கப்பட்டது. அதன் பின்னர், தீவிர சிகிச்சைப் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவுகளில் அவர்கள் பணியமர்த்தப் பட்டனர். ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனையில் 25 தீவிர சிகிச்சைப் பிரிவுகள் உள்ளன.
இதைத் தவிர, மருத்துவமனைகளில் உள்ள குறைகளை சுட்டிக் காட்டினால் அதன் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள், சாதனை நிகழ்வுகள், மருத்துவ நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை பொது மக்கள் இன்ஸ்டாகிராம் செயலி மூலம் அறிந்து கொள்ளவும் வகை செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.