சென்னை, டிச.5- பல்கலைக் கழகங்களில் காலியாக இருக்கும் பணியிடங்களில் துணை வேந்தர்களை நியமிப்பதில் தமிழ்நாடு அரசு நல்ல முடிவை எடுக்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார்.
கருத்தரங்கம்
தமிழ்நாடு மாநில உயர் கல்வி மன்றம் சார்பில் ‘விளைவு அடிப்படையில் கல்வி’ (அவுட்கம் பேஸ்டு எஜூகேஷன்) கருத்தரங்கம் சென்னை பல்கலைக் கழக வளாகத்தில் 3.12.2024 அன்று நடந்தது. இந்த கருத்தரங்கத்துக்கு உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தலைமை தாங்கினார். இதில் கூடுதல் தலைமை செயலாளர் கே.கோபால், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற துணைத் தலைவர் எம்.பி. விஜயகுமார், தொழில் நுட்பக் கல்வி இயக்ககத்தின் ஆணையர் ஆபிரகாம் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கில் அமைச்சர் கோவி. செழியன் பேசுகையில்,
‘உயர்கல்வியில் திறமைவாய்ந்த ஆசிரியர்களும், மாணவர்களும் இருக்கிறார்கள். நல்ல திட்டங்களை வழங்க அரசும் தயாராக இருக்கிறது. அரசும், பேராசிரியர்களும் இணைந்து மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டுக்கான திட்டங்களை வகுக்க வேண்டும். மாணவர்களுக்கு தேவைப்படும் திறனறிவு கல்வி முறைகளை வகுப்பது, அந்த திறன் அறிவுகள் மாணவர்களை சென்றடைய தேவையான கற்பித்தல் முறைகள், கற்பித்தல் சரியாக சென்றடைந்துள்ளதா என்பதை உறுதி செய்ய தேர்வு நடத்துவது, கல்வி முறையில் மேலும் எவ்வாறு முன்னேற்றம் செய்வது? ஆகியவற்றை வரையறுக்கவே இந்த கருத்தரங்கம் நடக்கிறது. இது பல்கலைக்கழகங்கள், மண்டலம், கல்லூரி அளவிலும் சேரும் வகையில் விரிவுபடுத்தப்படும்’ என்றார்.
நல்ல முடிவு எடுக்கப்படும்
நிகழ்ச்சி முடிந்ததும் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கவுரவ விரிவுரையாளர்களை பொறுத்தவரையில், கடந்த 10 ஆண்டுகளில் ரூ.5 ஆயிரம் உயர்த்தி தந்தார்கள். ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, ரூ.5 ஆயிரத்தை உயர்த்தினார்.
பல்கலைக்கழக மானியக்குழு அதற்கான தொகையாக ஓராண் டுக்கு ரூ.40 கோடி தர வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறது. 2017இல் நிறுத்தப் பட்ட அந்த தொகை இது வரை வழங்கப்படவில்லை.
ஆனாலும் கல்லூரி மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்களை நியமித்து பணி வழங்கியுள்ளது. மீண்டும் சில விரிவுரையாளர் பணியிடங்களையும், நிரந்தர பேராசிரியர்கள் பணியிடங்களையும் உருவாக்கும் முயற்சியும் நடக்கிறது.
துணைவேந்தர் பதவிகளுக்கு ஏற்பட்டுள்ள இடர்பாடுகள், யாரால்?எப்படி ஏற்பட்டது? என்பது அனைவருக்கும் தெரியும். ஆனாலும் மாணவர்கள் நலன் கருதி,நல்லமுடிவை தமிழ்நாடு அரசு எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்