திருச்சி, டிச.5- திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின், நாகம்மையார் கலையரங்கத்தில், 25.11.2024 அன்று மதியம் 2 மணி யளவில் மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழு(SSAC) சார்பாக பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்விற்குப் பள்ளி முதல்வர் டாக்டர்.க.வனிதா தலைமையேற்றார். பள்ளியின் முதுகலை தமிழாசிரியரும், மாண வர் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் செயலாளருமான ஏ.ஆர். திலகவதி வரவேற்புரை வழங்கி, வந்தோரை வரவேற்றார்.
தொடர்ந்து விழிப்புணர்வு உரையாற்றிய பள்ளி முதல்வர், தனது உரையில், எதேச்சையாக தொடுவதற்கும், தவறான நோக்கத்தோடு தொடுவதற்கும் உள்ள வித்தியாசம் மற்றும் நண்பர்களைக் கவனமாகத் தேர்வு செய்வதோடு, பேச்சு, பழக்கம் என அனைத்திலும் குறிப்பிட்ட எல்லையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி, உடன் பழகும் நபர்களின் பார்வையில் ஏற்படும் வித்தியாசத்தைப் பிரித்து பார்க்கும் பழக்கத்தைக் கற்றுக் கொள்வதும் இன்றைய காலகட்டத்தில் மிகவும் தேவையான ஒன்று எனவும் அறிவுறுத்தியதோடு, பெண் குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் சிறு பிரச்சினையாக இருந்தாலும், பெற்றோரிடம், ஆசிரியர்களிடம் அல்லது நம்பிக்கைக்கு உரியவர்களிடம் சரியான நேரத்தில், தயக்கமின்றி பகிர வேண்டும் என்பதோடு பிரச்சினையைக் கண்டு பயப்படா மல், அதை எவ்வாறு சமாளிக்க வேண்டும் என்றும், போக்சோ சட்டம் மற்றும் பாலி யல் வன்கொடுமைக்கு எதிராக எப்படி அதைப் பயன்படுத்த வேண்டும் என்றும் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
நிகழ்வின் நிறைவாகப் பள்ளியின் முதுகலை ஆங்கில ஆசிரியரும், மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் இணைச் செயலாளருமான மோ.கிருபா சங்கர் நன்றியுரை வழங்க, நிகழ்வு இனிதே நிறைவுற்றது. இந்த விழிப்புணர்வு நிகழ்வில் பள்ளியின் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான 500க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பெற்றனர்.