குருதி சோகை உலகளவில் மிகவும் பொதுவான ஓர் ஊட்டச்சத்து நோயாகப் பார்க்கப்படுகிறது. இது உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பகுதியை பாதிக்கிறது. வசதி படைத்த நாடுகளில் இதன் பாதிப்பு குறைவாக இருந்தாலும், நம் இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளில் பின்தங்கிய சமூகப் பொருளாதார நிலை, ஊட்டச்சத்து குறைபாடு ஆகிய காரணங்களால் இதன் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது.
உணவில் இரும்புச் சத்து குறைபாடு, குருதி சிவப்பணுக்களின் உற்பத்திக் குறைபாடு, வலுவற்ற, பாதிக்கப்பட்ட எலும்பு மஜ்ஜை, குருதி சிவப்பணுக்கள் அதிகளவில் அழிக்கப்படுதல், குடல் அழற்சி நோய்கள் (வயிற்றில் அல்சர் மற்றும் கட்டிகள், வயிற்றிலோ, குடலிலோ ஏற்படும் புற்று நோய்), அதிக மாதவிடாய் ரத்தப்போக்கு, உடற்திரவத்தின் அளவு அதிகரித்தல், பிறப்பிலிருந்தே (அ) பரம்பரையாக பாதிக்கப்படுதல், வைட்டமின் குறைபாடு, உணவின்றி வாடுதல், அடிபடுதல், தீக்காயங்கள், சிறுநீரக கோளாறுகள், மண்ணீரல் நோய்கள், வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்று, அதிகளவு புளிப்பு, உவர்ப்பு சுவையுடைய உணவுகளை எடுத்தல் எளிதில் செரிமான மாகாத உணவுகளை அதிகமாக எடுத்தல் ஆகியவை குருதிசோகையின் முக்கிய காரணங்களாகும். குழந்தை பிறப்பின் போது ஏற்படும் அதிக குருதி இழப்பு பெண்களுக்கு குருதி சோகையை ஏற்படுத்தலாம்.குடலில் கொக்கிப்புழு உள்ளவர்களுக்கு வெளியில் தெரியாதவகையில் குருதியிழப்பு ஏற்பட்டு குருதிசோகை வரலாம். ஒரு கொக்கிப்புழு தினமும் 0.3 மி.லி., குருதியை உறிஞ்சுகிறது. சாதாரணமாக ஒருவருக்கு 300 கொக்கிப்புழுக்கள் வரை இருக்கலாம். அதாவது 90 மி.லி குருதி வரை தினமும் குடல் புழுக்களால் நாம் இழக்கலாம் என்ற கணக்கு குருதியிழப்பின் தீவிரத்தை உணர்த்தும்.
அறிகுறிகள்: முகம், நகங்கள், உள்ளங்கை மற்றும் கண்கள் வெளிறிக்காணப்படும். நோய் தீவிரமடையும் பட்சத்தில் உடலே வெளுத்துக் காணப்படும்.குருதியில் பித்தம் அதிகரித்து குருதி சீர்கேடு அடைவதால் மயக்கம், உடற்சோர்வு, தலைவலி, படபடப்பு, சீரற்ற இதயத் துடிப்பு, நெஞ்சுவலி, மூச்சு விடுவதில் சிரமம், நினைவாற்றல் பாதிப்பு, கை கால்களில் வீக்கம், பசியின்மை, சுவையின்மை, நெஞ்செரிச்சல், வாந்தியெடுத்தல், உணவின் மீது வெறுப்பு, செரிமானக்கோளாறுகள், அதிகளவு வியர்த்தல், நாக்கு உலர்ந்து போவது, நாக்கு வீக்கம், உடையக்கூடிய நகங்கள் ஆகியவை பொதுவான அறிகுறிகள்.
மேலும் உடல் கனத்தது போல் உணர்வு, உடலை அழுத்துவது போல் உணர்வு, உடல் சூடு பிடித்தது போன்ற உணர்வு, கண்களைச் சுற்றி வீக்கம், முடி உதிர்தல், எளிய காரணங்களுக்காக கோபம், எரிச்சல்படுவது, குளிர் மீது வெறுப்பு, படிகளில் ஏறும் போது மூச்சுத்திணறல், மண், சுண்ணாம்பு ஆகியவற்றை உண்ண விரும்புதல் ஆகிய அறிகுறிகள் காணப்படலாம் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. குருதி சோகைக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காதது இதயம் மற்றும் நுரையீரல் பாதிப்புகளுக்கு வழிவகுக்கும்.
பின்பற்ற வேண்டியவை
முருங்கை, ஆரைக்கீரை, புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை, அகத்தி, பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி போன்ற கீரை வகைகளையும், கருப்புத் திராட்சை, பேரீச்சை, உலர்ந்த திராட்சை, நெல்லிக்கனி, நாவல், இலந்தை, பப்பாளி, அத்தி, மா, பலா, சப்போட்டா, ஆப்பிள், தக்காளி போன்ற பழங்களையும் தினமும் கொடுத்து வருவது நல்லது. இதனால் ரத்தம் விருத்தி அடைந்து, குருதி சோகை நீங்கும்.
மேலும் பட்டாணி, பாசிப்பயறு, கொண்டைக்கடலை, சுண்டல், நிலக்கடலை, உளுந்து, அவரை, துவரை, சிவப்பு அவல், கேழ்வரகு, கம்பு, சோளம், தினை, எள், வெல்லம், சுண்டைக்காய், பொட்டுக்கடலை, பாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பு, பால், கேரட், பீட்ரூட், சோயா பீன்ஸ், காலிஃபிளவர் ஆகியவற்றை கொடுக்கலாம். முட்டையும், ஈரலும், சிவப்பு இறைச்சியும் இரும்புச் சத்துள்ள முக்கிய உணவுகளாகும்.