நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே அதானி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அவையை முடக்கி வருகின்றன. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு இடையே, நாடாளு மன்ற அலுவல்களும் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே மக்களவையில் வங்கிகள் திருத்த சட்ட மசோதா தொடர்பான கேள்விகள் முன்வைக்கப்பட்டன. இதற்குப் பதிலளித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஹிந்தியில் பதில் அளித்தார். அப்போது, இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், நிர்மலா சீதாராமன் பேசிய ஹிந்தி தவறாக உள்ளது எனக் குற்றம் சாட்டினர்.
இதற்குப் பதில் அளிக்க நிர்மலா சீதாராமன் எழுந்தார்.
அப்போது எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவையில் சிறிது சல சலப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பேசிய நிர்மலா சீதாராமன், “ஹிந்தித் திணிப்பை அவர்கள் (எதிர்க்கட்சிகள்) எதிர்க்கிறார்கள்.. நல்லது.. யாரும் எதையும் திணிக்க முடியாது. உயர் கல்வியைக் கூட பிராந்திய மொழிகளில் படிக்க வேண்டும் என்றுகூறிய முதல் பிரதமர் மோடிதான்.
மருத்துவக் கல்வியை கூட தமிழில் படிக்கும் வாய்ப்புள்ளது. சிறிய பிரச்சினைக்காக வாதம் செய்யாதீர்கள். தமிழ்நாட்டில் வாழ்ந்த அனுபவத்தை வைத்து நான் பேசுகிறேன். ஹிந்தி வட இந்திய மொழி.. நீங்கள் ஹிந்தி மொழியையா கற்றுக்கொள்ளப் போகிறீர்கள் என்று கேட்டனர். எதிர்க்கட்சிகள் ஹிந்தித் திணிப்பை எதிர்க்கின்றார்கள்.
எனக்கு ஹிந்தி தெரியாமல் இல்லை, ஆனால் தமிழ்நாட்டில் ஹிந்தி படிக்க விடாமல் செய்ததற்கு தி.மு.க.வினர் மீதுதான் புகார் கூற வேண்டும். ஹிந்தி வட இந்திய மொழி.. தமிழ்நாட்டில் இருந்து கொண்டு ஹிந்தி கற்றுக் கொள்ள விரும்புகிறீர்களா? எனக் கேலிக்கு உள்ளாக்கினார்கள். அரசியல் ஆதரவு காரணமாக அவர்கள் இவ்வாறு பேசுகிறார்கள். தமிழ்நாடு இந்தியாவின் இன்னொரு அங்கம் கிடையாதா? நான் ஹிந்தி கற்றுக் கொள்வதில் என்ன தவறு உள்ளது? அவர்கள் வந்தேறி என்ற வார்த்தையை பயன்படுத்தினர்” என்று அவர் கூறினார்.
நிர்மலா சீதாராமனின் கருத்துக்கு தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஹிந்தி திணிப்பை மட்டுமே தாங்கள் எதிர்ப்பதாகவும், ஹிந்தியை கற்றுக்கொள்வதை யாரும் எதிர்த்ததில்லை என்றும் தெரிவித்தனர். இதற்குப் பதிலளித்துப் பேசிய நிர்மலா சீதாராமன், சென்னையில் ஹிந்தி பிரச்சார சபாவை எரித்தது யார்? என்றும் கேள்வி எழுப்பவே, பா.ஜ.க. எம்.பி.க்கள் மேஜைகளை தட்டி நிர்மலா சீதாராமனின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் 1918இல் தொடங்கப்பட்ட தட்சண ஹிந்தி பிரச்சார சபாவை எப்பொழுது எரித்தார்கள்? எரித்தது யார்? மிக முக்கியமான பொறுப்பில் இருக்கும் அமைச்சர் நாடாளுமன்றத்தில் தவறான தகவலைத் தரலாமா?
தனிப்பட்ட முறையில் ஹிந்தியையோ, வேறு எந்த மொழியையோ படிக்கக் கூடாது என்பதல்ல திராவிட இயக்கத்தின் – தமிழ்நாட்டின் நிலைப்பாடு.
2018ஆம் ஆண்டு முதல் 2021 வரை – இந்தக் கால கட்டத்தில் ஹிந்தி பிரச்சார சபாவில் 39191 பேர் ஹிந்தியில் தேர்ச்சி பெற்றனர் என்று ஹிந்தி பிரச்சார சபா சொன்னதுண்டே! அவர்களைப் படிக்க வேண்டாம் என்று மறியலா செய்தோம்?
நிதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் பேசியது உரிமைப் பிரச்சினைக்கு உரியதே! தமிழ்நாட்டில் செயங்கொண்டத்தில் உள்ள ஒரு வங்கிக்கு, உள்ளூரைச் சேர்ந்த மருத்துவர் வங்கிக் கடன் பெறு வதற்காகச் சென்றார். வங்கி மேலாளர் ஹிந்தியில் பேசினார். எனக்கு ஹிந்தி தெரியாது என்றார் அந்த உள்ளூர் மருத்துவர். அப்படியானால் உங்களுக்குக் கடன் கிடையாது என்று திமிராகப் பதில் அளித்தார், நாட்டுடமையாக்கப்பட்ட அந்த வங்கியின் மேலாளர்.
பிரச்சினை ஊடக வெளிச்சத்துக்கு வந்த நிலையில் வங்கி மேலாளருக்கு என்ன தண்டனை தெரியுமா?
திருச்சி கிளைக்கு மாறுதல் செய்தார்கள்! எப்படி இருக்கிறது? செயங்கொண்டத்தைவிட திருச்சி வசதியாகப் போய் விட்டது – அவ்வளவுதான்! அபாண்டமாக நாடாளுமன்ற அவையில் தகவலைச் சொல்லுவது முக்கிய துறையான நிதி அமைச்சர் பொறுப்பிலுள்ள அமைச்சருக்கு அழகல்ல!
ஆதாரமிருந்தால் வெளியிடலாம்.