திருவெறும்பூர், டிச.4- தமிழர் தலைவரின் 92ஆவது பிறந்த நாளினை முன்னிட்டு மனிதநேயப் பணியாக பெரியார் மருத்துவக் குழுமம், பெரியார் மருந்தியல் கல்லூரி, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, திருச்சி ஹர்ஷமித்ரா புற்றுநோய் மருத்துவமனை , ஹெலன் கெல்லர் அரிமா சங்கம் மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் சார்பில் திருவெறும்பூர் முக்குலத்தோர் மேல்நிலைப் பள்ளியில் 01.12.2024 அன்று காலை 9 மணியளவில் மருத்துவ முகாம் நடைபெற்றது. பெரியார் மருத்துவக் குழுமத்தின் இயக்குநர் மரு. கவுதமன் அவர்களின் வழிகாட்டுதலில் திருச்சி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் மற்றும் பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை ஆகியோர் தலைமையில் திருவெறும்பூர் பெரியார் மருத்துவமனையில் மருத்துவ அலுவலர் மரு.தியாக ஆர்த்தி சிறப்பாக ஒருங்கிணைத்த இம்மருத்துவ முகாமினை முக்குலத்தோர் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் K.S.M. கருணாநிதி துவக்கி வைத்து சிறப்பித்தார்கள்
வல்லம் பெரியார் மணியம்மை மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் மரு. புஷ்பா, திருச்சி பெரியார் மணியம்மை மருத்துவமனையின் மருத்துவர் சீனிவாசன் மற்றும் திருவெறும்பூர் மருத்துவமனை மரு. தியாக ஆர்த்தி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற பொது மருத்துவ முகாமில் 218 பேரும், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையின் மருத்துவர்கள் மரு. சான்ட்ரா, மரு. பிரியதர்ஷினி மற்றும் மருத்துவக் குழுவினர் தலைமையில் நடைபெற்ற கண் பரிசோதனை முகாமில் 151 பேர் பரிசோதனை மேற்கொண்டு அதில் 26 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஹர்ஷமித்ரா உயர் சிறப்பு புற்றுநோய் மருத்துவமனையின் பெண்கள் நல மருத்துவர் மரு. மானுசிறீ மற்றும் மருத்துவக் குழுவினர் தலைமையில் நடைபெற்ற மார்பகம் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை முகாமில் 49 பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
பரிமளம் துவக்கப் பள்ளியின் தாளாளர் புலவர் மனோகரன், சிறீ ஸ்வீட்ஸ் உரிமையாளர் தொழிலதிபர் இரவிந்திரன், திராவிட முன்னேற்றக் கழக சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் தினேஷ் குமார் மற்றும் ஹெலன் கெல்லர் அரிமா சங்கத் தலைவர் லயன் பூமா ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்த இம் மருத்துவ முகாமில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பேரா. அ.ஜெசிமா பேகம், அ.ஷமீம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் பொது மக்களுக்கு மருந்து மாத்திரைகளை இலவசமாக வழங்கினர்.
திருவெறும்பூர் பெரியார் மருத்துவமனையின் செவிலியர்கள் விமலா, தனம், சரண்யா, சாந்தி, திருச்சி பெரியார் மணியம்மை மருத்துவமனையில் செவிலியர்கள் ஹெலன், காமாட்சி, ஹேமாமாலினி, வல்லம் பெரியார் மணியம்மை மருத்துவமனையின் செவிலியர் சுபத்ரா ஆகியோர் இரத்த அழுத்தம், இரத்தச் சர்க்கரை போன்ற மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர்
அரவிந்த் கண் மருத்துவமனையின் செல்வக்குமார், ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் மக்கள் தொடர்பு அலுவலர் சிவ.அருணாச்சலம் ஆகியோர் கலந்து கொண்டு முகாம் நடைபெற ஒத்துழைப்பை நல்கினர். திராவிடர் கழக மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர் முகாமிற்கான ஏற்பாடுகளையும் சிறீ ஸ்வீட்ஸ் உரிமையாளர் இரவிந்திரன் அவர்கள் முகாமிற்கான மதிய அறுசுவை உணவினையும் வழங்கி பேருதவி புரிந்தனர். திரளான பொதுமக்கள் கலந்து கொண்ட இம் மருத்துவ முகாம் மதியம் 3 மணியளவில் நிறைவுற்றது.