ஒன்றிய அரசை எதிர்த்து வணிகர் சங்கங்களின் பேரவை ஆர்ப்பாட்டம்
சென்னை, டிச.4- ஒன்றிய அரசு, கடை வாடகைக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதித்திருப்பதை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கடை வாடகைக்கு ஒன்றிய அரசு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதித்திருப்பதை கண்டித் தும், மாநில அரசு தொழில் உரிம கட்டணத்தை 5 மடங்கு உயர்த்தி இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகே நேற்று (3.12.2024) கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு, பேரவையின் மாநில தலைவர் சவுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் மெஸ்மர் காந்தன் வரவேற்புரையாற்றினார். சட்டமன்ற உறுப்பினர் அசன் மவுலானா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி துணை செயலாளர் மு.வீரபாண்டியன், விடுதலைசிறுத்தைகள் கட்சி மத்திய சென்னை பொறுப்பாளர் செல்லதுரை ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். ஏராளமான வணிகர்கள் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர், மாநில தலைவர் சவுந்தர்ராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
‘‘கடை வாடகைக்கு ஒன்றிய அரசு 18 சதவீதம் வரி விதித்திருப்பது ஏற்புடையதல்ல. மாநில அரசும் தொழில் உரிமை கட்டணத்தை 5 மடங்கு உயர்த்தியுள்ளது. இதை திரும்ப பெற வேண்டும். இதேபோல, ஒன்றிய மாநில அரசுகள் இணைய வழி வர்த்தகத்திற்கு சாதகமாக வும், சில்லரை வணிகத்திற்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறார்கள்.
எனவே, எங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி அடுத்த கட்டமாக வரும் 10ஆம் தேதி நெல்லையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதைத்தொடர்ந்து கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த கோரிக்கைகள் ஒன்றிய, மாநில அரசுகள் ஏற்காவிட்டால் தமிழ்நாடு முழுவதும் ஒருநாள் கடை அடைப்பு நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும்.’’
-இவ்வாறு கூறினார்.