பெஞ்சால் புயல் நிவாரண நிதியை உடனே வழங்குக!
புதுடில்லி, டிச. 4 – பெஞ்சால் புயலால் தமிழ்நாடு பேரிடரைச் சந்தித்துள்ள நிலையில், பாதிப்பு தொடர்பாக நாடா ளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதம் நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், ஒன்றிய பா.ஜ.க. அரசானது, விவாதத்திற்கு அனுமதி மறுத்ததால், தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று (3.12.2024) நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முழக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாட்டில் பெஞ்சால் புயலால், 14 மாவட்டங்கள் இயற்கைப் பேரிடரைச் சந்தித்துள்ளன. வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் நீரில் மூழ்கி யுள்ளன. வீடுகள், குடிசைகள் சேதம் அடைந்துள்ளன. கால்நடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டுள்ளன. நிலச்சரிவில் 8 பேரும், மின்சாரம் தாக்கி 3 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு அரசு மீட்புப் பணிகளை மேற்கொண்டு வந்தாலும், மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப பெருமளவு நிவாரண உதவிகளை வழங்க வேண்டி யதும், அதற்கான நிதியும் அவசியமாக உள்ளது. ஆனால், ஒன்றிய பா.ஜ.க. அரசானது, கடந்தாண்டுக்கான வெள்ள நிவாரண நிதியையே இப்போது வரை வழங்காமல் தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது.
எனவே, தற்போது பெஞ்சால் புயலாலும் தமிழ்நாடு கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ள நிலையில், ஒன்றிய பா.ஜ.க. அரசு தாமதமின்றி நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும், பாதிப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
திமுக உறுப்பினர்கள் கனிமொழி கருணாநிதி, டி.ஆர். பாலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சு. வெங்க டேசன், காங்கிரஸ் உறுப்பினர் மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் இதுதொடர்பாக மக்களவை தலைவரிடம் தாக்கீது வழங்கினர்.
கனிமொழி கருணாநிதி
மேலும், கனி மொழி கருணாநிதி பேசு கையில், “தமிழ்நாட்டில் பெஞ்சால் புயலானது 14 மாவட்டங்களில் மொத்தம் 69 லட்சம் குடும்பங்கள் மற்றும் 1.5 கோடி தனிநபர்களை பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. குறிப்பாக விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அதி கனமழை பெய்துள் ளது. தமிழ்நாடு அரசுக்கு தற்காலிக சீரமைப்பு பணிக்காக ரூ.2,475 கோடி தேவைப்படுகிறது. எனவே, (NDRF) தேசியப் பேரிடர் மீட்பு நிதியில் இருந்து இடைக்கால நிவாரணமாக ரூ. 2,000 கோடியை உடனடியாக விடுவிக்கவும், சேதங்கள் குறித்த விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ள ஒன்றியக் குழுவை நிய மிக்கவும் தமிழ்நாடு முதலமைச்சர் ஏற்கெனவே கோரிக்கை விடுத்த நிலையில், இதுகுறித்த அவசர நிலையை உணர்ந்து, நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
சு. வெங்கடேசன்
புயல் வெள்ளத் தால் பாதிக்கப்பட் டுள்ள தமிழ்நாடு, புதுச்சேரிக்கு உடனடியாக ஒன்றிய அரசு அவசர நிவாரண நிதியை வழங்க வேண்டும் என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஒத்திவைப்பு தீர்மானம் மூலம் வலியுறுத்தினார்.
“தமிழ்நாட்டின் வடமாவட்டங்கள் டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மக்களின் அன்றாட வாழ்வுநிலை குலைந்து இருக்கிறது. உயிர் இழப்புகளும், சொத்து – ஆதார கட்டுமானங்கள் – பயிர்கள் பெருநாசத்திற்கு ஆளாகியுள்ளன. லட்சக்கணக்கான மக்கள் பெரும் துயரில் ஆழ்த்தப்பட்டுள்ள நிலையில் ஒன்றிய அரசு அவசர நிவாரண நிதியை தாமதமின்றி வழங்கி வாழ்க்கைக்காக போராடும் மக்களின் துயர் துடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும், இதுதொடர்பாக வழக்கமான அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
மாணிக்கம் தாகூர்
“புதுவை, தமிழ்நாட்டில் புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 12 பேர் பலியாகி யுள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் உடனடி நிதி கேட்டுள்ளார். ஆனால், ஒன்றிய அரசு தொடர்ந்து வரலாற்றுத் தவறைச் செய்து கொண்டுள்ளது. 2016 முதல் புயல் பாதிப்புகளுக்கு தமிழகம் ரூ. 43,993 கோடி கேட்ட நிலையில், ரூ. 1,729 கோடி மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையை மாற்ற வேண்டும். தமிழ்நாட்டிற்குக் கிடைக்க வேண்டிய நியாயத்தை கொடுக்க வேண்டும். தமிழ்நாடும், புதுவையும் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கும்போது பிரதமர் படம் பார்த்து கொண்டிருந்தது வரலாற்று தவறானது” என்று காங்கிரஸ் நாடாளு மன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் சாடினார்.
தமிழ்நாடு அரசுக்கு
நிதியை வழங்குங்கள்: வைகோ
மாநிலங்களவை யில் மதிமுக தலைவர் வைகோவும் ஒத்தி வைப்பு தாக்கீது வழங்கிப் பேசினார். நாகப்பட்டினம் மற்றும் மயிலா டுதுறை மீனவர்க ளின் படகுகளும், மீன்பிடி வலை களும் சூறாவளிக் காற்றால் சேத மடைந்திருக்கின்றன. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால், பயிர்கள் பெருமளவில் சேதமடைந்து உள்ளன. காய்கறி மற்றும் பழங்களை சந்தைப்படுத்த முடியாமல் விளைபொருள்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. குடியிருப்புகளில் மழை நீர் புகுந்ததால், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே, மீட்பு மற்றும் நிவாரணப் பொருள்களை விரைந்து வழங்கவும், சேதங்களை மதிப்பீடு செய்யவும் ஆய்வுக் குழுவை அனுப்பி, பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக தமிழ்நாடு அரசுக்கு போதிய நிதி வழங்க வேண்டும்” என்றார்.
ஆனால், இந்த தீர்மானங்களின் அடிப்படையில் விவாதம் நடத்த, மக்களவை தலைவரும், மாநிலங்களவைத் தலைவரும் அனுமதி மறுத்து விட்டனர். இதனால் கோபமடைந்த தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் முழக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர்.