ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அழுத்தம்
சென்னை, டிச.4 மக்கள் தொகை ஜாதிவாரி கணக்கெடுப்பு உடனே தொடங்கப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (3.12.2024) முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக புதுடில்லியில் நடைபெற்ற அகில இந்திய சமூகநீதி கூட்டமைப்பின் மூன்றாவது தேசிய இணைய மாநாட்டில் ஆற்றிய உரை வருமாறு.
காணொலி வாயிலாகவும், நேரிலும் வந்து உரை யாற்றியிருக்கக்கூடிய பல்வேறு அரசியல் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்திருக்கக்கூடிய
தோழர்களே!
சமூகநீதியில் அக்கறை கொண்ட பெருமக்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்!
இந்த சமூகநீதி மாநாட்டைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கும் மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினரும், மூத்த வழக்குரைஞருமான வில்சன் அவர்களுக்கு எனது பாராட்டுகள்! வாழ்த்துகள்! நன்றிகள்!
தந்தை பெரியார் அவர்கள்
மீண்டும் மீண்டும் கூறினார்
இரத்த பேதம் இல்லை. பாலின பேதம் இல்லை. இவைதான் திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகள். இதைத்தான் தந்தை பெரியார் அவர்கள் மீண்டும் மீண்டும் கூறினார்.
மனிதர்களில் உயர்வு – தாழ்வு என்ற வேறுபாடு இல்லாத நிலையை உருவாக்கத்தான் ‘இடஒதுக்கீடு’ எனப்படும் சமூகநீதி உருவாக்கப்பட்டது.
ஆண் – பெண் ஏற்றத்தாழ்வை அகற்றத்தான் பெண்ணுரிமைக் கருத்தியல் முன்னெடுக்கப்பட்டது.
இந்தக் கொள்கைகளை கருப்பொருளாகக் கொண்டு இந்த மாநாட்டை வில்சன் அவர்கள் ஏற்பாடு செய்தி ருக்கிறார்.
அரசியல் நடவடிக்கைகளைவிட, சமூகநீதி நட வடிக்கைகளில் அதிக அக்கறை கொண்டவர் நம்முடைய வில்சன் அவர்கள். அதனால்தான் இப்படியொரு மாநாட்டை, அகில இந்தியா முழுமைக்குமான மாநாடாக ஒருங்கிணைத்திருக்கிறார்.
அகில இந்திய தலைவர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றி!
தமிழ்நாட்டில் உதயமான திராவிட இயக்கத்தின் முற்போக்குக் கருத்துகள், மானுட வளர்ச்சிக்கான கருத்தியல்கள் அந்த அடிப்படையில் நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ள அகில இந்திய தலைவர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றி!
இந்தியா முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை மீட்டெடுக்க, இப்படிப்பட்ட மாபெரும் அமைப்பை உருவாக்கி, நாமெல்லாம் ஒன்று சேர்ந்தி ருக்கிறோம்.
கடந்த ஆண்டு நடைபெற்ற முதல் மாநாட்டில் பங்கேற்றபோது, இந்தியா முழுமையும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்களின் இடஒதுக்கீடு உரிமை காக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ளதுபோல் சமூகநீதிக் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி பேசியிருக்கிறேன்.
சமூகநீதிக் கருத்தியல் வெற்றிபெற…
சமூகநீதிக் கருத்தியல் வெற்றிபெற ஒத்த கருத்துள்ள சக்திகள் ஓரணியில் திரள்கின்றன, இந்தியா முழுமைக்கும் இது அவசியம் என்று கூறினேன்.
அடுத்த மாநாட்டில், ஒன்றிய பா.ஜ.க. அரசின் சமூக நீதிக்கு எதிரான செயல்பாடுகள் பற்றி சொல்லி, ஒன்றிய அரசின் நிறுவனங்களில் நிரப்பப்படாமல் இருக்கும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பணி யிடங்களை முழுமையாக நிரப்ப வலியுறுத்தினேன்.
நீதிபதிகள் நியமனம் மற்றும் அரசு ஊழியர்களின் பதவி உயர்விலும் இடஒதுக்கீடு, இடஒதுக்கீட்டிற்கு உள்ள 50 விழுக்காடு உச்சவரம்பு நீக்கப்படவேண்டும் என்று அது உள்ளிட்ட தீர்மானங்கள் பலவற்றை நாம் நிறைவேற்றினோம்.
இன்றைக்கு மீண்டும் ஒன்று கூடியிருக்கிறோம்!
இடஒதுக்கீட்டு உரிமை மாநிலங்களின் அதி காரத்திற்கு உள்பட்டதாக இருக்கவேண்டும் என்று அப்போது வலியுறுத்தினேன். இந்த நோக்கங்களை அடுத்தக்கட்டத்திற்குக் கொண்டு செல்ல இன்றைக்கு மீண்டும் ஒன்று கூடியிருக்கிறோம்.
சமூகநீதியை அடையவேண்டும் என்பது தனிப்பட்ட ஒரு மாநிலத்தின் எண்ணமோ, இந்தியாவின் பிரச்சினையோ அல்ல. எங்கெல்லாம் புறக்கணிப்பு – ஒதுக்குதல் – தீண்டாமை – அடிமைத்தனம் – அநீதி இருக்கிறதோ, அங்கெல்லாம் சமூக நோய்களை முறிக்கும் மருந்தாக இருப்பதுதான் சமூகநீதி!
சமூகரீதியாக, கல்விரீதியாக புறக்கணிக்கப்பட்ட வர்களை கைதூக்கி விடுவதுதான், சமூகநீதி!
சமூகரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கிய வர்கள் என்பதுதான் அரசமைப்புச் சட்டத்தின் சமூகநீதி வரையறை!
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 340 ஆவது பிரிவில் ‘socially and educationally’ என்பதுதான் வரையறையாக இருக்கிறது. அதே சொல்தான் அரசமைப்புச் சட்டத்தின் திருத்தத்திலும் சொல்லப்பட்டது.
அதாவது சமூகநீதி எனப்படும் இடஒதுக்கீடு என்பதே சமூகரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கிய வர்களுக்குத் தரப்படவேண்டும் என்பதுதான் இந்திய அரசமைப்புச் சட்ட வரையறை!
தந்தை பெரியாரும்,
அறிஞர் அண்ணாவும்தான்!
இந்தத் திருத்தத்திற்கே காரணம், அன்றைய சென்னை மாகாணம்தான்! இந்தத் திருத்தத்திற்குக் காரணமான தலைவர்கள்தான் தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணா அவர்களும்!
“சமுதாயத்திலும், கல்வியிலும் பிற்படுத்தப்பட்டவராக இருக்கும் எந்தச் சமூகத்தவர்க்கும் செய்யும் சலுகைகளை அரசமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவும் தடுக்காது” என்பதுதான் அரசமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட முதலாவது திருத்தம்!
இந்த திருத்தத்திற்குக் காரணம், “happenings in madras தான்” என்று நாடாளுமன்றத்திலேயே கூறினார் அன்றைய பிரதமர் நேரு அவர்கள். சென்னை மாகா ணத்தில் ஆட்சியை கைப்பற்றிய நீதிக்கட்சியின் ஆட்சியில், 1922 ஆம் ஆண்டு, அன்றைய முதலமைச்சர் பானகல் அரசர் அவர்கள் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உரிமை ஆணையைப் பிறப்பித்தார். அதுதான் இன்றைக்கு வரைக்கும் தமிழ்நாட்டில் தொடர்கிறது. தமிழ்நாட்டை பார்த்து பல்வேறு மாநிலங்கள் சமூக நீதியை வழங்கி வருகிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு சமூகநீதி வழங்கியதோடு, இந்தியாவின் மற்ற மாநில ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், அத்தகைய உரிமை கிடைக்க வழிகாட்டியதும் திராவிட இயக்கம்தான்.
ஒன்றிய அரசின் துறைகளில்,
27 விழுக்காடு ஒதுக்கீடு முழுமையாக வழங்கப்படவில்லை
இந்தக் கருத்தியல்தான் இன்றைக்கு அகில இந்தியா முழுமைக்கும் பரவி இருக்கிறது. ஆனால், சமூகநீதியை பா.ஜ.க. முறையாக அமல்படுத்துவது இல்லை. கடந்த பத்தாண்டு காலத்தில் ஒன்றிய அரசின் துறைகளில், பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காடு ஒதுக்கீடு முழுமையாக வழங்கப்படவில்லை.
ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேறுவதை பா.ஜ.க. விரும்பவில்லை. அதனால்தான், அவர்கள் சமூகநீதிக்கு எதிராக இருக்கிறார்கள். இடஒதுக்கீட்டில், பொருளாதார அளவுகோலை நுழைக்கத் துடிக்கிறார்கள்.
ஏழை எளிய மக்களுக்கு பொருளாதார உதவி செய்வதை நாங்கள் தடுக்கவில்லை. ஆனால், சமூக ரீதியாக பின்தங்கியவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய இடஒதுக்கீட்டை, பொருளாதார அளவு கோலை மட்டுமே அடிப்படையாக வைத்துவிட்டு பொதுப்பிரிவினருக்கும் வழங்குவதைதான் எதிர்க்கிறோம்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை
கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார்கள்
எப்படி பா.ஜ.க., தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு விரோதமான கட்சியோ, அதேபோன்று பெண்களுக்கும் விரோதமான கட்சிதான். அதனால்தான், பெண்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்கும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார்கள்.
மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை, ஒரே ஒரு கட்சியை தவிர, மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இருந்த எல்லா கட்சிகளும் ஆதரித்து வாக்களித்தார்கள். எந்த முக்கியக் கட்சியும் எதிர்த்து வாக்களிக்கவில்லை. ஆனால், அது செயல்பாட்டிற்கு வந்துவிடக்கூடாது என்ற தடையை பா.ஜ.க.வே அந்த சட்டத்திற்குள் ஷரத்துக்களாக எழுப்பியது.
மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிந்த பிறகு – அதை வைத்து தொகுதி மறுவரையறைகள் முடிந்த பிறகு – மகளிருக்கு 33 விழுக்காடு தருவோம் என்று சொன்னார்கள்.
மக்கள்தொகை கணக்கெடுப்பும், தொகுதி வரையறையும் முடிந்த பிறகு என்றால் 2029 ஆம் ஆண்டுக்குப் பிறகுதான், 33 விழுக்காடு இடஒதுக்கீடு பெண்களுக்கு கிடைக்கும். 2029 ஆம் ஆண்டு அதாவது இன்னும் 6 ஆண்டுகள் கழித்து நிறைவேறப்போகும் சட்டத்தை இப்போதே நிறைவேற்றிவிட்டதாக கணக்குக் காட்டியது பா.ஜ.க. அரசு.
1996 ஆம் ஆண்டு, 2010 ஆம் ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட சட்டங்களில் இது மாதிரியான தடை சுவர்கள் இல்லை. அப்படி என்றால், இப்போது இந்தத் தடைகளை உருவாக்கியது யார்? இந்த சட்டத்தை கொண்டு வந்த பா.ஜ.க.வே தடையையும் போட்டிருக்கிறது.
1929 ஆம் ஆண்டு செங்கற்பட்டில் நடந்த சுயமரியாதை மாநாட்டில்தான், பெண்களுக்குச் சொத்துரிமை, பணியுரிமை, மறுமணம் செய்துகொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு புரட்சிகரமான பெண்ணுரிமைத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன் தொடர்ச்சியாகத்தான், தி.மு.க. அரசில் பெண்களின் நலன் சார்ந்த பல்வேறு அடுக்கடுக்கான திட்டங்கள் தீட்டப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
எந்தக் கொள்கையை கூறினோமோ, அதை சட்டபூர்வமாக செயலாக்கி வரும் அரசுதான், திராவிட முன்னேற்றக் கழக அரசு!
மகளிர் இடஒதுக்கீட்டை தடுத்து, சதி செய்த மாதிரியே, ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தவும் பா.ஜ.க. அரசு முன்வரவில்லை.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம்
ஜாதிவாரிக் கணக்கெடுப்பை ஒன்றிய அரசு உடனே நடத்த வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நாம் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம்.
இந்திய மக்கள் அனைவருக்கும் கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் சம உரிமை மற்றும் வாய்ப்பு கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் திட்டங்களைத் தீட்டி, சட்டங்கள் இயற்ற ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அவசியம்.
2021 ஆம் ஆண்டே எடுக்கப்பட்டிருக்க வேண்டிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பை ஒன்றிய பா.ஜ.க. அரசு உடனே தொடங்கவேண்டும். அதோடு இணைத்து ஜாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்தவேண்டும். இதை செயல்படுத்த பா.ஜ.க. அரசு மறுக்கிறது. ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தினால், அதை வைத்து உண்மையான சமூகநீதியை வழங்கவேண்டும் என்றுதான் தயங்குகிறார்கள்.
பெண்ணுரிமைக்கும் எதிராக இருக்கிறது
ஒன்றிய பா.ஜ.க. அரசு
ஜாதிவாரிக் கணக்கெடுப்பை எடுக்க மறுப்பது மூலமாக சமூகநீதிக்கும், மகளிர் இடஒதுக்கீட்டு சட்டத்தை தள்ளிப் போட்டதால் பெண்ணுரிமைக்கும் எதிராக இருக்கிறது இந்த பா.ஜ.க. அரசு.
இதற்கு எதிராக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்கவேண்டும்!
தாழ்த்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீடு முறையாக வழங்கப்படவேண்டும்.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு முறையாக வழங்கப்படவேண்டும்.
சிறுபான்மையினர் இடஒதுக்கீடு முறையாக வழங்கப்படவேண்டும்.
நீதித்துறையில் இடஒதுக்கீடு செயல்பாட்டிற்கு வரவேண்டும்.
இதர பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின சமுதாயத்தினருக்கு, பதவி உயர்வில் இடஒதுக்கீடு உறுதி செய்யப்படவேண்டும்.
ஜாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்தி, அதன் தரவுகளை வெளியிடவேண்டும்.
இதையெல்லாம் அகில இந்திய அளவிலும், மாநிலங்கள் அளவிலும் கண்காணிக்க வேண்டும். சமூகரீதியாகவும் கண்காணிக்கவேண்டும்.
அனைத்து மாநிலங்களிலும்
குழுக்கள் அமைக்கப்படவேண்டும்!
தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்ததும், ஆதிதிராவிடர் பழங்குடியினர் ஆணையத்தை அமைத்தது. சமூகநீதி ஆணையத்தை அமைத்தது. சமூகநீதி கண்காணிப்புக் குழுவை அமைத்தது. இந்தக் கண்காணிப்புக் குழு, கல்வி, வேலைவாய்ப்பு, பதவிகள், பதவி உயர்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூகநீதி அளவுகோல், முறையாக, முழுமையாக பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணித்து வருகிறது.
இதேபோன்று அனைத்து மாநிலங்களிலும் குழுக்கள் அமைக்கப்படவேண்டும்.
சமூக நீதி – Social Justice
மதச்சார்பற்ற அரசியல் – Secular Politics
சமதர்மம் – Socialism
சமத்துவம் – Equality
மாநில சுயாட்சி – State Autonomy
கூட்டாட்சிக் கருத்தியல் – Federalism – இவை உயிர்வாழும் இந்தியாவே, இணையற்ற இந்தியா!
எனவே, இத்தகைய கருத்தியல்களை நாம் ஒன்று சேர்ந்து முன்னெடுக்கவேண்டும்!
நாம் அனைவரும் இணைந்து
போராட வேண்டும்!
சமூகநீதி இந்தியாவை உருவாக்க – சமதர்ம இந்தியாவை உருவாக்க – சகோதரத்துவ இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் இணைந்து போராட வேண்டும்! நன்றி! வணக்கம்!
– இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.