கிருட்டினகிரி, டிச. 4- 1.12.2024 அன்று மாலை 3.00 மணியளவில் கிருட்டினகிரி கார்நேசன் திடல் பெரியார் மய்யத்தில் நடைபெற்ற மாவட்ட ப.க. கலந்துரையாடல் கூட்டத்திற்கு கிருட்டினகிரி மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ச.கிருட்டினன் தலைமை வகித்துப் பேசினார். மாவட்டப் பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் க.வெங்கடேசன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்திற்கு மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கோ. திராவிடமணி, மாவட்ட கழகச் செயலாளர் செ.பொன்முடி ஆகியோர் முன்னிலை வகித்துப் பேசினர்.
கூட்டத்தில் மாநில ப.க.துணைப் பொதுச் செயலாளர் அண்ணா சரவணன் இந்திய பகுத்தறிவாளர் கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொள்ளுதலின் அவசியம் குறித்து நோக்க உரையாற்றினார். தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை. செயராமன் மாநாட்டின் வெற்றிக்கு கிருட்டினகிரி பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களை சந்தித்து பெரு வாரியாக நிதியினை வசூல் செய்து மாநாட்டின் வெற்றிக்கு பெரிதும் உதவுவோம் என்று உற்சாக மூட்டினார்.
மாநில பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் வா. தமிழ் பிரபாகரன் திருச்சியில் டிசம்பர் 28,29 தேதிகளில் நடைபெறும் இந்திய பகுத்தறிவாளர் மாநாடு தற்போதைய சூழலில் தமிழ்நாட்டில் நடத்துவதன் சிறப்பு மற்றும் அதன் நோக்கத்தினை தெளிவாக எடுத்துரைத்தார். மேலும் மாநாடு சிறப்பாக நடைபெறுவதற்காக பகுத்தறிவாளர் கழகத்தினரால் என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் மாநாட்டில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சிகள், மாலை நேர பொதுக்கூட்டம், வெளிமாநில தோழர்கள் பெரியார் உலகம் பார்வை, உணவு ஏற்பாடு, தோழர் கள் தங்குவதற்கான ஏற்பாடுகள் முதலியவற்றைப்பற்றி விளக்கி கூறினார்.
கூட்டத்தில் வேப்பனப்பள்ளி ஒன்றிய ப.க. நிர்வாகி ஜெயின், மத்தூர் ஒன்றிய ப.க.தலைவர் பொன். சிவக்குமார், ஒன்றிய கழக தலைவர் மத்தூர் கி.முருகேசன், காவேரிப்பட்டணம் ஒன்றியத் தலைவர் பெ.செல்வம், மாவட்ட விவசாய அணி தலைவர் இல. ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் பூ. இராசேந் திரபாபு ஆகியோர் கலந்துக்கொண்டு பேசினர்.
திருச்சியில் வருகின்ற டிசம்பர் 28,29/12/2024- இரு தேதிகளில் நடைபெறும் இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்புடன் பகுத்தறிவாளர் கழகம் இணைந்து நடத்தும் இந்திய அளவிலான 13ஆவது மாநாட்டிற்கு கிருட்டினகிரி மாவட்ட ப.க.சார்பில் வசூல் செய்த நன்கொடையை முதல் கட்டமாக ரூ.8000 மட்டும் மாநில ப.க.பொதுச்செயலாளர் வா. தமிழ் பிரபாகரனிடம் கிருட்டினகிரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ச.கிருட்டினன், மாவட்டச் செயலாளர் க.வெங்கடேசன் ஆகியோர் வழங்கினர். தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை செயராமன் மாநாட்டு பங்கேற்பாளர் கட்டணம் ரூ.700 பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளரிடம் வழங்கி பெயரை பதிவு செய்துக்கொண்டார்.
நிறைவாக வேப்பனப்பள்ளி பகுத்தறிவாளர் கழக நிர்வாகி ஜெயின் நன்றி கூறினார்.