சுயமரியாதை இயக்கம் தோன்றிய பிறகு பார்ப்பனர்களும், புராணப் பண்டிதர்களும், புஸ்தகக் கடைக்காரர்களும், புரோகிதக் கூட்டத்தார்களும் எவ்வளவுதான் பழிகள் கூறி விஷமப் பிரச்சாரம் செய்து வந்தும் நாட்டில் தோன்றியிருக்கும் உணர்ச்சிகளையும் அதனால் ஏற்பட்டிருக்கும் பலன்களைப் பற்றியும், இரண்டொரு நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுகின்றோம்.
பார்ப்பனர்கள் அடியோடு
விலக்கப்பட்டனர்
பார்ப்பனர்களை எந்தக் காரணங்கொண்டும் நம்புவதென்பதோ, அவர்களோடு ஒத்துழைப்ப தென்பதோ, கலந்துள்ள கூட்டங்களில் சேர்வதென்பதோ, தேர்தல்களில் அவர்களுக்கு ஓட்டுச் செய்வதென்பதோ முதலாகிய காரியங்களில் அடியோடு மறுக்கப்பட்டு வருகின்றது. கோயில்கள் சம்பந்தமான விஷயங்களில் பூஜைகள் அபிஷேகங்கள் உற்சவங்கள், புதுக்கோயில்கள் கட்டுதல், ஆகிய காரியங்களில் அலட்சியம் காட்டப்பட்டு வருவதுடன், பல கோயில்கள் அரைகுறை வேலையில் இருந்தவைகளும் நிறுத்தப்பட்டுவிட்டன.
பண்டிகைகள், விரதங்கள், சடங்குகள் முதலியவைகள் அநேகமாக, சில இடங்களில் அடியோடு விடப்பட்டும், சில இடங்களில் மிக்க அலட்சியமாக ஏதோ நிர்ப்பந்தத்திற்கு நடத்துபவைகளாகவும் காணப்படுகின்றன.
விதவைகள் மணம் என்பதும், கலப்பு மணம் என்பதும், தினம் தினம் நடக்கும் விஷயங்களும், நடத்தத் தேவையான விளம்பரங்களும் வெளியான வண்ணமாய் இருந்து வருகின்றது. ஜாதி வித்தியாசம் ஒழித்தல், தீண்டாமை ஒழித்தல், முதலிய வித்தியாசங்கள் குறிப்பிடத் தகுந்த அளவுக்குப் பயன்கொடுத்து வருகின்றன. அதாவது தினமும் மக்கள் மகமதியராவதும், கிறிஸ்தவராவதுமான செய்திகள் வெளியாகின்றன. கோயில் பிரவேசம் பல இடங்களில் நடக்கின்றன. புரோகித விலக்கு சங்கங்கள் புதிது புதிதாக ஏற்படுத்தப்படுகின்றன.
ஒழிக்கப்பட்ட மதப் புரட்டர்கள்
மதத்தைப் பற்றிய புரட்டுகள் வெகுதாராளமாய் வெளிப்படுத்தப் படுவதோடு மதப் புரட்டர்கள் எல்லாம் மூலையில் முக்காடிட்டு ஒடுங்கி உட்கார்ந்து கொள்ள வேண்டியதாகிவிட்டன. அன்றியும் அவர்களின் உண்மையான தோல்வியைக் காட்ட அறிகுறி என்னவென்றால் தாங்கள் வாய் திறக்க யோக்கியதை அற்றும்போய், புத்தியில்லாத பாமர மக்களை ஏவிவிட முயற்சியில் இறங்கியிருப்பதேயாகும்.
நாடகம் பார்க்கும்போதுகூட பார்ப்பன ஆதிக்கமா?
மதுராந்தகத்தில் சமீபத்தில் நடந்த நாடகத்திற்காகப் போடப்பட்ட ஒரு துண்டு விளம்பரத்தின் அடியில் “பஞ்சமர்”களுக்கு டிக்கட்டு கொடுக்கப்பட மாட்டாது. பிராம்மண ஸ்திரீகளுக்குத் தனி இடம் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் அந்த ஊர் சேர்மன் இந்த நிபந்தனையின் பேரிலேயே நாடகக் கொட்டகைக்கு ‘லைசென்சு’ கொடுத்திருக்கிறாராம். துண்டு விளம்பரம் நமது பார்வைக்கு வந்திருக்கிறது. கூத்தாடிப் பெண்களும் கூத்தாடி ஆண்களும் கூடிக் கூத்தாடுகிற இடத்தில்கூட ஆதி திராவிடர்கள் போகக் கூடாது என்பதும், அங்கு கண்ணே! பெண்ணே! என்று பேசிக் கொண்டு மூக்கையும் காதையும் கன்னத்தையும் கடித்துக் கொண்டு விளையாடுவதைப் பார்க்கப் போகும் பார்ப்பனப் பெண்களுக்கும் கூட தனி இடம் ஒதுக்கித் தருவது என்பதும் பார்ப்பன ஆதிக்கத்தைக் காட்டுகின்றதா இல்லையா என்று கேட்பதோடு, இது சைமன் கமிஷனுக்குத் தெரிய வேண்டாமா என்று கேட்கின்றோம்.
– ‘குடிஅரசு’, 12.02.1928
இந்து மதப்புரட்டு தேசமெல்லாம் பரவி வருவதுடன், அடுத்த ஜன கணிதத்தில் ஒவ்வொருவரும் இந்தியன் அல்லது இந்துவல்லாதவன் என்று சொல்ல வேண்டும் என்றும், எந்தக் காரணம் கொண்டும் ஜாதியையும், ஜாதிப் பட்டத்தையும் சொல்லக் கூடாதென்றும், நூற்றுக்கணக்கான சங்கங்களும் மகாநாடுகளும், தீர்மானங்கள் செய்தனுப்புவதுமேயாகும்.
சுயமரியாதை இயக்கம் தோன்றிய பிறகு குறைந்துவிட்ட கோயில் வருமானம்
வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம், தேசத்துரோகம், தேசியத்திற்கு விரோதம் என்று எவ்வளவோ தூரம் பார்ப்பனர்களும், அவர்களது வால்களும், கத்தியும், இப்போது சட்டசபையிலும், சர்க்கார் உத்தியோகத் திலும் ஏற்பட்டு நிலைத்து அனுபவத்திற்கு வந்துவிட்ட தோடு, பார்ப்பனர்கள் தங்கள் வகுப்புக்குள்ள உரிமையை கெஞ்சிக் கேட்கவேண்டிய அளவுக்கு, தைரியமாய் வெளியில் வந்து விட்டார்கள். உதாரணமாக சர்க்கார் மதுவிலக்குப் பிரச்சார ஜில்லா கமிட்டிகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு பார்ப்பனர் என்கின்ற கணக்கு வைத்து நியமிக்கவேண்டும் என்று திவான்பகதூர். திரு. ராமச்சந்திர ராவே, முயற்சி எடுத்துக் கொண்டதோடு தேவஸ்தானக் கமிட்டிகளில், பார்ப்பனர்களுக்கு உண்டான பங்கு ஏன் கொடுக்கவில்லை? என்று சட்டசபையில் திரு.சத்தியமூர்த்தியே பல கேள்விகள் கேட்கவும், இந்தக் கேள்வியை திரு.சத்தியமூர்த்தி வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உரிமையை ஒப்புக்கொண்டு கேட்கின்றாரா? என்று திரு.சி.எஸ்.இரத்தின சபாபதி முதலியார் கேட்கவும் சர்க்காரர் ஆம் என்று பதில் சொல்லவுமான நிலைமைக்கு வந்துவிட்டது.
மற்றும் ராமேஸ்வரம் கோயில் தேவஸ்தான சம்பந்தமான ஒரு உத்தியோக அறிக்கையில் “சுயமரியாதை இயக்கம் தோன்றிய பிறகு, கோயில் வரும்படி குறைந்து வருகின்றது. ஆதலால் முன்போல இனிவரும்படி எதிர்பார்க்க முடியாது” என்று காணப்பட்டிருக்கின்றது.
மற்றும் ரிஜிஸ்திரேஷன் இலாகா வருஷாந்திர ரிப்போர்ட் ஒன்றில் “இப்போது ரிஜிஸ்டர் கல்யாணங்கள் அதிகப்பட்டு வருவதால், கல்யாணங்களை ரிஜிஸ்தர் செய்ய ஒவ்வொரு இடத்திலும், அதிகமான ரிஜிஸ்டிரார்களை நியமிக்க வேண்டும்” என்று குறிக்கப்பட்டிருக்கின்றது.
வைதிகக் குடுக்கைகளுக்கும், புராண அழுக்கு மூட்டைகளுக்கும், வருணாச்சிரம புராணங்களுக்கும் அடியோடு பொதுமேடைகள் இல்லாமல் செய்துவிட்டது.
காஞ்சிபுரம் சங்கராச்சாரி மடத்தில் இருந்து வந்த பள்ளிக் கூடத்தில் தீண்டப்படாத வர்களைச் சேர்த்துக் கொள்ளாததற்காக கிராண்டு மறுக்கப்பட்டு பள்ளிக்கூடம் மூடப்பட்டுவிட்டது.
சென்னைப் பச்சையப்பன் காலேஜில் ‘தீண்டப் படாதவர்களை’ சேர்த்துக் கொள்ளப்பட்டுவிட்டது. அருப்புக் கோட்டை நாடார் பள்ளிக் கூடத்திலும் சேர்த்துக் கொள்ளப்பட்டாய்விட்டது. திருப்பதி தேவஸ்தான சமஸ்கிருதப் பள்ளிக் கூடத்தில் பார்ப்பன ரல்லாதார்களை சேர்த்துக் கொள்ளவேண்டுமாய் சர்க்கார் உத்தரவு போட்டு அந்தப்படி சேர்த்துக் கொண்டும் ஆய்விட்டது.
ரங்கசாமி அய்யங்கார் தெரு
சென்னையில் பார்ப்பனரல்லாத சமூகத்தினர் – ஒரு பிரபலஸ்தர், அச் சமூகத்துக்கு ஆக உழைத்தவரென்று பெரிதும் பாராட்டப் பெற்றவரான காலம் சென்ற தணிகாசலம் செட்டியார் பேரால் இருந்த ஒரு தெருவுக்கு அப்பெயர் எடுக்கப்பட்டு ஒரு பார்ப்பனர் பெயர் அதாவது ரங்கசாமி அய்யங்கார் தெரு என்று பெயர் இடப்பட்டு விட்டது. இது சாதாரண சங்கதி என்று சொல்லிவிட முடியாது. செட்டியாருடைய பெயர் மறைந்து விட்டதே என்பதற்கு ஆக நாம் இதைப் பெரிதாக்க வரவில்லை. இதன் கருத்து என்ன என்பதைப் பொது மக்கள் உணர வேண்டுமென்பதே நமது நோக்கம். சீனிவாசபுரம், தாசில் சீனிவாசபுரம், முனிசீப்பு சீனிவாசபுரம், சிவகாமிபுரம், ராஜகோபாலபுரம் என்பது 100 கணக்கான அய்யர், அய்யங்கார், ஆச்சாரியார், சாஸ்திரி வீதிகள் இருக்க ஒரு பார்ப்பனரல்லாத பிரபலஸ்தருடைய அதுவும் சாகும் வரை 30 வருட காலம் கவுன்சிலராய் இருந்தவரின் பெயர் ஒரு வீதிக்கு இருந்ததை மாற்றி அதற்குப் பதிலாக ஒரு பார்ப்பனர் பெயரைக் கொடுப்பது என்றால், அதுவும் “ஜனநாயகத்தின் பேரால் அமைக்கப்பட்ட ஒரு ஸ்தாபனத்தின் மெஜாரிட்டி ஓட்டைக் கொண்டு செய்யப்படுகின்ற காரியம்” என்பதே இப்படி இருக்கும்படியாய் இருந்தால் இனி அவர்களது ஆட்சியுள்ள ஸ்தாபனங்களில் நம் மக்கள் கதி என்ன ஆகும் என்று சொல்ல வேண்டுமா? என்று கேட்கின்றோம். இந்தக் காரியம் இதுவரை பார்ப்பனர்கள் செய்து வந்த கொடுமைகளில் எல்லாம் மிக மிகக் கொடுமையான காரியம் என்றுதான் சொல்ல வேண்டும். இனி இந்தப் பார்ப்பன ஆதிக்கத்தால் என்ன ஆபத்து நாம் எதிர்பார்க்க வேண்டியது பாக்கி இருக்கிறது என்று கேட்கின்றோம்.
– ‘குடிஅரசு’, 07.08.1938
பெண்களுக்கு மூன்றாவது பாரம்வரை சம்பளம் இல்லாமல் சொல்லிக் கொடுப்பதாக சர்க்கார் ஒப்புக் கொண்டு அந்தப்படி அமலிலும் வந்துவிட்டது.
பெண்களுக்குப் போதனை முறைப் பாடசாலைகள் முக்கிய தாலுகாக்கள் தோறும் ஏற்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டு வேலை நடந்து வருகின்றது.
பொது கிணறுகளில்
தண்ணீர் எடுப்பதை தடுப்பதா?
விதவைகள் ஆசிரமம் வெளி ஜில்லாக்களில் ஏற்படுத்த யோசனைகளும் ஏற்பாடுகளும் செய்யப்படு கின்றது. இவ்வளவும் அல்லாமல் முனிசிபாலிடிக்குச் சம்பந்தப்பட்ட பொதுக்கிணறுகளில் தீண்டப்படாதார் உட்பட எல்லோரும் தண்ணீர் எடுக்கலாம் என்றும் யாராவது ஆட்சேபித்தால் 50 ரூபாய் அபராதம் என்றும் சட்டம் செய்தாகிவிட்டது. ஜில்லா போர்டு, தாலுகா போர்டு சம்பந்தப்பட்ட கிணறுகளுக்கும் அதே மாதிரி சட்டம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. பதினாறு வயதிற்குட்பட்ட பெண்களுக்குக் கல்யாணம் செய்யக் கூடாது என்றும், பதினெட்டு வயதுக்கு மேற்படாத கல்யாணமில்லாத பெண்களை புணரக் கூடாது என்றும் சட்டம் செய்தாகிவிட்டது.
விதவைகள் சொத்துரிமைக்கும், பெண்கள் சொத்துரிமைக்கும் சட்டங்கள் கொண்டு வரப்படப் போகின்றன.
சாமி பேரால்
பெண்களுக்குப் பொட்டுக் கட்டி…
சாமிபேரால் பெண்களுக்குப் பொட்டுக் கட்டி விபசாரிகளாக்கப் பட்டுவருவதை நிறுத்தச் சட்டங்கள் செய்யப்பட்டுவிட்டன. பட்டணங்களில் விபசார விடுதிகளை ஒழிக்கச் சட்டம் செய்யப்படுகின்றது. இப்படியாக இன்னும் அநேக விஷயங்கள் இந்தியா முழுவதும் புற்றில் இருந்து ஈசல்கள் புறப்படுவதுபோல தினத்திற்குத்தினம் புதிதாக இந்த இரண்டு வருஷத்தில் ஏற்பட்டுக் கொண்டு வருகின்றதை கண்ணில் பார்த்துக் கொண்டு வருகின்றோம். இன்னமும் அடுத்த வருஷத் துவக்கத்தில், சில விஷயங்களுக்கு சத்தியாக்கிரகம் என்பவைகள் தாராளமாய் நடைபெறக் கூடிய நிலைமைக்கு நாடு வந்து விடும் என்கின்ற பலமான நம்பிக்கை நமக்குண்டு என்பதையும் தைரியமாய் வெளிப்படுத்துகின்றோம். அன்றியும் அதற்குள் பார்ப்பனர்கள் சாரதா சட்டத்தை மீறி செய்யப் போவதாய்க் கூறும் சத்தியாக்கிரகம் பார்ப்பனர்கள் இப்போது சொல்லுகின்ற படி நடக்குமானால், அதுவும் நமது சுயமரியாதை இயக்கத்தின் பலன் என்பதோடு அதை நம்மவர்கள் நடத்தப்போகும் சத்தியாக்கிரகத்திற்கு அனுகூலமாய் தேசத்தில் உணர்ச்சி உண்டாக்கவும் கூடும்.
– குடிஅரசு – துணைத்தலையங்கம்
– 03.11.1929