வானிலைக் கணிப்பையும் கடந்து வரலாறு காணாத மழை, புயல்!
அமைச்சர்கள், அதிகாரிகள், தேசியப் பேரிடர் பணியாளர்களின் மீட்புப் பணி அபரீதமானது!
பிரதமரிடம் முதலமைச்சர் கோரிய நிதியை உடனே வழங்கவேண்டும்;
வரலாறு காணாத மழையுடன், புயலும் சேர்ந்ததால், பேரிழப்பு தமிழ்நாட்டிற்கு நேர்ந்துள்ளது; இந்த நேரத்தில் அரசியல் செய்யாமல், பிரதமரிடம் தமிழ்நாடு முதலமைச்சர் கோரிய நிதியை உடனடியாக அளித்திட, அனைத்துத் தரப்பினரும் அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
அண்மையில் சற்றும் எதிர்பாராத – வானிலை ஆய்வாளர்களாலேகூட துல்லியமாய்க் கணித்தறிந்து, முன்கூட்டியே ஆயத்த ஏற்பாடுகளைச் செய்யவதற்கு இடந்தராத, எதிர்பார்க்க முடியாத ஒரு இயற்கைப் பேரிடராக – ஃபெஞ்சல் புயலும், அதனையொட்டிய சுமார் 120 ஆண்டுகளில் பெய்யாத பலத்த கன மழை பெய்ததோடு, எப்போது புயல் கரையைக் கடக்கும்; மழை ஓயும் என்றும் கணிக்க முடியாத ‘தாட்டோட்டம்‘ காட்டி, தட்பவெட்பத் துறையில் ‘கண்ணாமூச்சி‘ விளையாடுவதுபோன்ற ஒரு சூழல். இதற்குமுன் இது எப்போதும் நிகழ்ந்திராத ஒன்று என்பதால், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் பல மலட்டாறுகள், கிளை நதிகள் பலவும் வெள்ளம் பெருகி, சாலைகளையே ஆக்கிரமித்து, போக்குவரத்தைக்கூட தடுக்கும் ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது.
பாதிப்புப் பெரிது – நிவாரணப் பணிகள்
அதனிலும் பெரிது!
கடலூர் மாவட்டத்திலும் இதே நிலைமைதான் என்றாலும், நமது முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள், அதிகாரிகள், பொதுநல தொண்டறத் தோழர்கள் எல்லாம் அவரவருக்குரிய பங்க ளிப்பை வெகுச் சிறப்பாகச் செய்தாலும், பெய்த மழை, பெருகும் காட்டாற்று வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட பகுதிகள் – தவிர்க்க இயலாதவை ஆயின.
தேசியப் பேரிடர் பணியாளர்கள் அதிசயத்தக்க வகையில், உயிரைப் பொருட்படுத்தாது – பாதிக்கப்பட்ட வர்களைப் பத்திரமாகக் காப்பாற்றிய சேவை, அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பு, குறிப்பாக இத்துறை மட்டுமின்றி, துணை இராணுவம் உள்பட பலரும் செய்தும், திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கிக் கொண்டு பலியாகிய பரிதாபத்திற்குரிய ஏழு பேரை எண்ணுகையில், மிகுந்த துயரமும் பீறிடுகிறது!
என்ன செய்வது! விபத்து என்பது இமை மூடித் திறப்பதற்குமுன் நடந்துவிடும் கொடுமையாயிற்றே! அவர்களது உடல்களைக் கண்டறிந்து, அவற்றை எடுக்க எடுத்த முயற்சியும் குறிப்பிடத்தக்க வகையில் அமைந்தது என்றாலும், சோகம் சோகமே!
இந்த நிலையில், நிவாரண உதவிகளை தமிழ்நாடு அரசும், முதலமைச்சர் அவர்களும் தாமதமின்றி, ஆணை பிறப்பித்து, அரசை முடுக்கிவிட்டுள்ளது வரவேற்கத்தக்கதாகும்.
முதலமைச்சரிடம் பிரதமர் பேச்சு!
பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைத் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு, கள நிலவரம்பற்றி கேட்டறிந்துள்ளதும், உடனடியாக தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோளான நிவாரண மதிப்பீட்டுக் குழுவினரை தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்க இசைவு தெரிவித்ததும் வரவேற்கத்தக்கது.
ஆனால், அதன் அடுத்தகட்டமான கணிசமான நிதி உதவி (தமிழ்நாடு அரசும், முதலமைச்சரும் ரூ.2000 கோடி கேட்டுள்ளனர்)யை தாமதமின்றி தாராளமாக வழங்கிடவேண்டியது ‘‘கூட்டுறவுக் கூட்டாட்சி‘‘ (‘‘Cooperative Federalism’’) என்பதைக் கூறும் பிரதமரின் முக்கிய கடமை என்பது ஒருபுறமிருந்தாலும், அதைவிட மனிதாபிமான கண்ணோட்டத்தின்படியும் மிக முக்கியமானதாகும்.
தமிழ்நாடு முதலமைச்சர் – தமிழ்நாடு அரசு தரவிருக்கும் நிவாரண நிதி – பாதிக்கப்பட்ட குடும்பங்க ளுக்கு ரூ.2000–ம், பல்வேறு வகை நிவாரண உதவி கள்பற்றியும் அறிவிப்புச் செய்து உடனடியாக நிர்வாக எந்திரத்தை வேகமாக முடுக்கிவிட்டுள்ளார்.
அரசியல் செய்ய இது நேரமல்ல!
தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் இதில் ஒருமித்துக் குரல் கொடுத்து, உரிய நிவாரண நிதித் தேவையைப் பெற – ஒன்றிய அரசை வற்புறுத்திட வேண்டியது அவசர, அவசியமாகும்!
‘‘அரசியல்‘‘ செய்ய இது நேரமில்லை – மக்கள் பாதுகாப்பு, நல்வாழ்வு மிகவும் முக்கியமல்லவா?
பா.ஜ.க. தலைவர் மற்றும் சிலர் நிவாரண நிதியை (குடும்பத்திற்கு) ரூ.6,000 தரவேண்டும் என்று பேட்டியளிக்கின்றனர்.
அதற்குரிய மொத்த நிதியை ஒன்றிய அரசு, தமிழ்நாட்டிற்கு வழங்கிடவேண்டும் என்று அவரும், அவரையொத்த பெருந்தொகை ஆலோசனை வழங்குவோரும் ஒன்றிய அரசிடம் வற்புறுத்தி, வாதாட முன்வந்தால், வரவேற்போம்.
தமிழ்நாட்டில், ‘அரசியல்’ செய்ய எத்தனையோ சந்தர்ப்பங்கள் இனி வரலாம். இப்போது மக்களது வாழ்வாதாரமான குடியிருப்புகளை சீரமைத்தல் – மறு வாழ்வு மேம்பாடு போன்ற முக்கிய பிரச்சினைகளை ஓட்டுக் கண்ணோட்ட அரசியலோடு பார்க்காமல், நாட்டுக்
கண்ணோட்டம், மக்கள் நலமாகப் பார்க்கட்டும்!
அரசியலைத் தாண்டி ஒத்துழைப்புத் தருக!
எத்தனையோ நிதி நெருக்கடியிருந்தாலும், நிதி நிர்வாகத் திறமையால் (Fiscal Management) சமாளித்து வரும் ‘திராவிட மாடல்‘ அரசு, இதனையும் சமாளிக்க அனைவரும் அரசியலைத் தாண்டி ஒத்துழைக்க முன்வருதல் மிகவும் தேவையாகும்!
சென்னை
4.12.2024
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்