திருச்சி, டிச.3 திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியின் நிறுவனத் தலைவர் தமிழர் தலைவரின் 92 ஆவது பிறந்தநாள், சுயமரியாதை நாள் – கல்வி விழாவாகக் கடந்த 30.11.2024 அன்று பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை தலைமையில் கொண்டாடப்பட்டது.
முதல் நிகழ்வாக காலை 9 மணியளவில் செஞ்சுருள் சங்கத்தின் சார்பில் திருச்சி அண்ணல் காந்தி அரசு பொதுமருத்துவமனையின் மருத்துவக் குழுவினர் பங்கேற்ற குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. இக்குருதிக்கொடை முகாமில் 20 பேர் குருதிக்கொடை செய்து உயிர் காக்கும் மனிதநேயப் பணிக்கு பேருதவி புரிந்தனர்.
அதனைத் தொடர்ந்து காலை 10 மணியளவில் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் மரம் நடும்விழா நடைபெற்றது.
உயிர் காக்கும் குருதிக் கொடை முகாம்
தமிழர் தலைவரின் 92 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு செஞ்சுருள் சங்கத்தின் சார்பில் திருச்சி அண்ணல் காந்தி அரசு பொதுமருத்துவமனையின் குருதி (இரத்த) வங்கி மருத்துவர் திவ்யா மனோகரன், பயிற்சி மருத்துவர் சுவேதா, குருதிக்கொடை ஒருங்கி ணைப்பாளர் பாலசந்தர் மற்றும் மருத்துவக் குழுவினர் பங்கேற்ற குருதிக்கொடை முகாம் காலை 9 மணியளவில் நடைபெற்றது.
இக்குருதிக்கொடை முகாமில் 20 பேர் குருதிக்கொடை செய்து உயிர் காக்கும் மனிதநேயப் பணிக்கு பேருதவி புரிந்தனர்.
பெரியார் மன்ற சிறப்புக்கருத்தரங்கம் காலை 11 மணியளவில் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலில்….
இந்நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றிய முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை,
‘‘92 வயதில் 82 ஆண்டுகள் பொதுவாழ்க்கைக்கு உரியவரான நிறுவனத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலில் இணைந்துள்ள பணித்தோழர்களும், மாணவர்களும் பெருமையடைய வேண்டும்’’ என்று கூறி, இயக்கத்தின் தலைவர், அரசியல் வழிகாட்டுநர், வழக்குரைஞர், சட்ட ஆலோசகர், ‘விடுதலை’ ஆசிரியர், பத்திரிகையாளர், பேச்சாளர், எழுத்தாளர், மனிதநேய மாண்பாளர் என்ற அனைத்துப் பரிமாணங்களையும் பெற்ற ஆசிரியர் அவர்களின் தனி மனித ஒழுக்கத்தை இன்றைய இளைய சமுதாயம் பின்பற்ற வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார்.
தமிழர் தலைவரின் பிறந்தநாள் விழாவில், பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை!
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்தநாள் விழாவில் இரட்டிப்பு மகிழ்ச்சியாக அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்களின் சமூகநீதிக் கொள்கை களுக்கு வலுசேர்க்கும் விதமாக பெரியார் மருந்தியல் கல்லூரியின் மதியுரைஞர் வீ. அன்புராஜ் அவர்களின் வழிகாட்டுதலில் 2024ஆம் ஆண்டில் நிர்வாக இடத்தின்கீழ் பயிலும் பெண் மாணவிகள், தந்தையை இழந்து தாயின் அரவணைப்பிலுள்ள மாணவர்கள், 75 மற்றும் 85 சதவீதத்திற்கு மேல் பன்னிரெண்டாம் வகுப்பில் மதிப்பெண் பெற்ற மாணவர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள், விளையாட்டுப் போட்டிகளில் மாவட்ட, மாநில, பன்னாட்டு அளவில் சிறப்பிடம் பெற்றவர்கள், பெரியார் கல்விக்குழுமங்களில் பள்ளிப்படிப்பை முடித்தவர்கள், கல்லூரியின் மேனாள் மாணவர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் போன்ற பல பிரிவுகளில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.
மொத்தம் 80 மாணவர்களுக்கு ரூ.8,37,250/- ரூபாய் கல்வி உதவித் தொகையாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரான திராவிடர் கழக கிராமப் பிரச்சாரக்குழு மாநில அமைப்பாளர் முனைவர் க.அன்பழகன் தமிழர் தலைவரின் சமூகநீதிப்பணிகள் குறித்து சிறப்புரையாற்றினார்.
அவர் தமது உரையில், ‘‘மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட ஒன்றாக இருந்த கல்வியை அனைவருக்கும் கிடைக்கச் செய்த பெருமை அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களைச் சாரும் என்றும், இன்று தமிழ்நாடு கல்விப் பணியில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்கின்றது என்றால், அது திராவிட இயக்கங்களின் சாதனை என்றும் உரையாற்றினார். படிப்பதற்கே உரிமையில்லாத நிலையிலிருந்த பெண்கள் இன்று விண்வெளி வரை சென்று சாதனை படைத்துள்ளனர் என்றால் அது தந்தை பெரியார் அமைத்த அடித்தளம் என்றும் தமிழ்நாட்டில் ‘புதுமைப் பெண் திட்டம்’, ‘தமிழ் புதல்வன் திட்டம்’, ‘நான் முதல்வன் திட்டம்’ என பல திட்டங்களினால் உயர்கல்வி கற்போரின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கின்றது.
தந்தை பெரியாரின் கனவை நனவாக்கும்…
இன்றைக்குத் தமிழர் தலைவரின் பிறந்தநாளில் 80 மாணவர்கள் ரூ.8,37,250/- ரூபாய் கல்வி உதவித் தொகை பெற்றிருக்கின்றனர் என்றால், இத்தகைய தந்தை பெரியாரின் கனவை நனவாக்கும் ஆட்சி மன்றக் குழுவிற்கும், நிர்வாகத்திற்கும் தமது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார். மேலும் ஒன்றிய அளவில் 27சதவிகித இடஒதுக்கீடும், மாநில அளவில் 69 சதவிகித இடஒதுக்கீடும் பெற்று தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை காத்த தமிழர் தலைவரின் பிறந்தநாளில் இத்தகைய உதவித்தொகைகள் வழங்கப்படுவது மிகவும் பொருத்தமானது. இதனை மாணவ சமுதாயம் நன்கு பயன்படுத்திக்கொண்டு, மேன்மேலும் வளர்ந்து சாதனை படைக்க வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார்.
அறிவுக் கொடையாக கலைஞர் கருணாநிதி நூலகத்திற்கு
92 புத்தகங்கள் நன்கொடை
தேசிய மருந்தியல் மற்றும் நூலக வாரவிழாவினை முன்னிட்டு தமிழர் தலைவரின் 92 ஆவது பிறந்தநாளினை மய்யப்படுத்தும் விதமாக கலைஞர் கருணாநிதி நூலகத்திற்கு ரூ.20,160/- மதிப்புள்ள 92 புத்தகங்களை மாணவர்கள் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை அவர்களிடம் நன்கொடையாக வழங்கி சிறப்பித்தனர்.
பெரியார் மருந்தியல் கல்லூரியின் திராவிட மாணவர் கழகத்தில்
92 உறுப்பினர்கள் இணைந்தனர்
தமிழர் தலைவரின் 92 ஆவது பிறந்தநாளினையொட்டி பெரியார் மருந்தியல் கல்லூரியின் திராவிட மாணவர் கழகத்தில் 92 புதிய மாணவர்கள் உறுப்பினரான சேர்ந்த னர்.
மேலும் திராவிட மாணவர் போராட்ட நாளினை (டிசம்பர் 1) முன்னிட்டு உறுதி மொழியினையும் ஏற்றனர்.
இந்நிகழ்ச்சியில் தேசிய மருந்தியல் மற்றும் நூலக வாரவிழாவினை முன்னிட்டு கலைஞர் கருணாநிதி நூலகத்திற்கு 92 புத்தகங்களை மாணவர்கள் வழங்கி சிறப்பித்தனர். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்தநாள் விழாவில் இரட்டிப்பு மகிழ்ச்சியாக 2024ஆம் ஆண்டில் நிர்வாக இடத்தின்கீழ் பயிலும் 80 மாணவர்களுக்கு ரூ.8,37,250 ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பெரியார் மருந்தியல் கல்லூரியின் திராவிட மாணவர் கழகத்தில் 92 புதிய மாணவர்கள் உறுப்பினர்களாக சேர்ந்தனர். மேலும் திராவிட மாணவர் போராட்ட நாளினை (டிசம்பர் 1) முன்னிட்டு அனைவரும் உறுதி மொழியினையும் ஏற்றனர். பெரியார் மருந்தியல் கல்லூரியின் பேரா சிரியர் முனைவர் அ.மு.இஸ்மாயில், துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேரா. அ. ஜெசிமா பேகம் மற்றும் திராவிட மாணவர் கழக பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சிக்கு பெரியார் மன்றச் செயலர் அ. ஷமீம் நன்றியுரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் உள்பட மொத்தம் 350 பேர் பங்கு கொண்டு சிறப்பித்தனர் என்பது குறிப்பி டத்தக்கது.