வகுப்பு வாரி உரிமை மாநாடு (3.12.1950)
வகுப்புவாரி உரிமைக்கான ‘சமூக நீதிக்காக’ –திருச்சியில் 03.12.1950-இல் ‘வகுப்புவாரி உரிமை மாநாடு’ நடைபெற்ற நாள் இன்று.
‘சென்னை மாகாண அரசு அமல்படுத்தி வரும் வகுப்புவாரி பிரதிநிதித்துவ உத்தரவு இந்திய அரசியல் சட்டத்திற்கு முரணானது’என 1950 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றம், தீர்ப்பு அளித்தது.
வகுப்புவாரி உரிமை செல்லாது என்ற அத்தீர்ப்பை, தந்தை பெரியார் மிகக் கடுமையாக எதிர்த்தார்;
சமூக நீதிக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதியை எதிர்த்து தந்தை பெரியார் 14.09.1950இல் நாடெங்கும் ‘வகுப்புரிமை நாள் கொண்டாடுங்கள்!’ என வேண்டுகோள் விடுத்தார். தந்தை பெரியாரின் வேண்டுகோளை ஏற்றுத் தமிழ்நாடே திரண்டெழுந்தது. மாணவர்களும், இளைஞர்களும், பொது மக்களும் கட்சி வேறுபாடின்றி, ‘அரசியல் சட்டம் ஒழிக! ‘வகுப்புவாரி உரிமை வேண்டும்!’ என முழங்கினார்கள்.
அனைத்துக் கட்சியிலும் உள்ள வகுப்புவாரி உரிமை ஆதரவாளர்களைத் திரட்டினார் தந்தை பெரியார்; திருச்சியில் 03.12.1950-இல் ‘வகுப்புவாரி உரிமை மாநாடு’ ஒன்றைப் பெரிய அளவில் நடத்திப் பல முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றினார். ஒன்றிய அரசு அமைச்சர்கள் சென்னை மாகாணத்திற்கு வரும்போது கறுப்புக்கொடி காட்டி நம் வெறுப்பை,எதிர்ப்பை உணர்த்த வேண்டும் என தமிழ்நாடு மக்களுக்கு தந்தை பெரியார் அறைகூவல் விடுத்தார்.
ஒன்றிய அமைச்சரவையிலும், நாடாளுமன்றத்திலும் சர்தார் வல்லபாய் பட்டேல் பெரியாரின் கொள்கைக்கு வலுவுண்டாக்கி, இந்திய அரசியல் சட்டத்தின் விதி 15-இல் 4-ஆவது உட்பிரிவாக ஒரு புதுப்பிரிவினைத் திருத்தமாகக் கொணரச் செய்தார். அத்திருத்தமாவது: விதி (15) (4): “குடிமக்கள் சமூகத்திலும் கல்வியிலும் பின் தங்கியுள்ள எந்த வகுப்பினருக்கும், அல்லது தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பழங்குடியினருக்கும் அவர்களின் முன்னேற்றங்கருதி அரசு எந்தத் தனி ஏற்பாட்டினைச் செய்வதையும் இந்த விதியின் ஒரு பிரிவோ அல்லது விதி 29-இன் 2-ஆவது உட்பிரிவோ தடை செய்யாது” என்பதாகும்.
இந்திய அரசியல் சட்டம் அமல்படுத்தப்பட்ட ஓராண்டு காலத்திற்குள் 1951, பிப்ரவரியில் நிறைவேற்றப்பட்ட இந்த திருத்தமே – அரசியல் சட்டத்தில் செய்யப்பட்ட ‘முதல்’ – திருத்தம் ஆகும். இந்த சட்ட திருத்தத்தின் மீது நாடாளு மன்றத்தில் கடுமையான விவாதங்கள் நடைபெற்றன. விவாத முடிவில் 01.06.1951-இல் வாக்கெடுப்பு நடைபெற்றது. அரசியல் சட்டவிதி 15-இல் உட்பிரிவு 4என்பதைச் சேர்த்து நேரு கொண்டு வந்த திருத்தத்துக்கு ஆதரவாக 243 வாக்குகளும், எதிராக 5 வாக்குகளும் பதிவாயின.
இந்தியாவில் அரசியல் சட்டத்தின் ‘முதல்’- திருத்தம், வகுப்புவாரி உரிமைக்கான ‘சமூக நீதிக்காக’ – செய்யப்பட்டது. மக்கள் எழுச்சிகளும், போராட்டங்களும் மக்கள் நலனுக்குப் புறம்பான தீர்ப்புகளையும்,தடைகளையும், உடைத்தெறியும் என்பதே வரலாற்று உண்மையாகும்.