திராவிடர் கழகத்தின் தலைவர் – ஆசிரியர் கி.வீரமணியின் 92-ஆவது பிறந்த நாளையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில், “தனது இளம் வயதிலேயே தந்தை பெரியாரின் தலைமையிலான சுயமரியாதை இயக்கத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட ஆசிரியர்
கி. வீரமணி அவர்கள் சிறந்த பேச்சாளரும், சிறந்த கட்டுரையாளருமாவார். சமூக நீதிக் கொள்கைகளை முன்னெடுத்து தொடர்ந்து களத்தில் நிற்பவர். ஏற்றுக் கொண்ட கொள்கைக்காக பல முறை சிறைப்பட்டவர். மதவெறி ஹிந்துத்துவா சக்திகளுக்கு எதிராகவும், மூடக்கருத்துகளுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடி வரும் போராளி. திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி அவர்கள் உடல் ஆரோக்கியத்துடன் இன்னும் பல ஆண்டுகள் வாழ நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்” என்று கே. பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்புத் தலைவர் புகழேந்தி வாழ்த்து!
அ.தி.மு.க. ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் புகழேந்தி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக புகழேந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அய்யாவின் கொள்கைகளை நிலை நிறுத்தியும், சுயமரியாதைப் பாதையில் புதிய வரவுகளை வரவேற்றும்; முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் பிற கட்சிகளின் தலைவர்கள் இவரின் ஆலோசனைகளை தலை வணங்கி ஏற்றும்; அய்யாவைத் தொடர்ந்து அரசியல் தலைவர்கள் எவரும் இவரை அறியாதவர் இல்லை என்கின்ற புகழ் கொண்டவர்.
நீண்ட நெடிய அரசியல் பயணத்தில் தனிப்பெரும் தலைவராகவும் போற்றி புகழ்பாடி வணங்கும் திராவிடர் கழகத்தின் தலைவராகவும், அன்புடன் அழைக்கும் ஆசிரியராகவும் நாங்கள் அனுதினமும் புகழ் பாடும் தந்தை பெரியார் அவர்களின் வாழ்த்துகளுக்கு உரியவராகவும் எங்களது நெஞ்சங்களில் நீங்கா இடத்தைப் பெற்ற திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு பிறந்தநாள் காணும் இந்நாளில் நன்னாளில் சுறுசுறுப்பிற்கு குறைவில்லாமல் ஓய்வுக்கு ஓய்வு தந்து என்றும் இளமைத் தோற்றத்துடன் வளமான ஆரோக்கியத்துடன் நீடு வாழ்க வாழ்க என வாழ்த்தி மகிழ்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.