சென்னை, டிச.3- 2024ஆம் ஆண்டு, சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இந்த விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் டிச.20 என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” 1995ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோருக்கு ரூ.5,00,000/- (ரூபாய் அய்ந்து லட்சம் மட்டும்) விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இவ்விருதாளர் முதலமைச்சரால் தேர்வு செய்யப்படுகிறார்.
2024 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. எனவே சமூக நீதிக்காக பாடுபட்டு பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் தங்களது விண்ணப்பத்தினை சென்னை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அனுப்பி வைக்கலாம்.
தங்களது விண்ணப்பம் சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். 2024ஆம் ஆண்டுக்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கான விண்ணப்பங்கள் சென்னை மாவட்ட ஆட்சியருக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் டிச.20 ஆகும், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலைஞரின் கனவு இல்லம் திட்டம்
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
சென்னை,டிச.3- தமிழ்நாடு அரசு மூலமாக ‘கலைஞர் கனவு இல்லம் திட்டம்’ செயல்படுத்தப் படுகிறது. வீடு இல்லாதவர்களுக்கு, நிரந்தரமாக வீடு கட்டித்தரும் திட்டம் மறைந்த மேனாள் முதலமைச்சர் கலைஞரால், கடந்த 1975ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
இதையடுத்து, கடந்த 2010ஆம் ஆண்டு குடிசை இல்லா மாநிலம் என்ற இலக்கை எட்டும் வகையில், ‘கலைஞரின் வீடு வழங்கும் திட்டம்’ புதிதாக அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது, ஊரகப் பகுதிகளில் குடிசைகளை மாற்றி, அனைவருக்குமே பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகளை அமைத்து தருவதுதான் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
அந்தவகையில், சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக் கெடுப்பின்படி, கிராமப்பகுதிகளில் கிட்டத்தட்ட 8 லட்சம் குடிசை வீடுகளில் மக்கள் வாழ்ந்து வருவதாக கண்டறியப்பட்டிருக்கிறது. அதன்படி முதல் கட்டமாக 3,500 கோடி ரூபாய் செலவில் 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்பட உள்ளது. இதற்கான நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
ஒரு வீட்டிற்கு 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அரசு கொடுக்கும். கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தில் ரூ.3,100 கோடி மதிப்பில் ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
2024-2025ஆம் நிதியாண்டில் ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள்:
வீட்டின் பரப்பளவு குறைந்தபட்ச சமையலறை உட்பட 360 சதுர அடியாக இருக்க வேண்டும், அதில் 300 சதுர அடி ஆர்சிசி கூரையால் மூடப்பட்டிருக்க வேண்டும் தீப்பிடிக்காத பொருளில் அமைக்கப்பட்ட கூரையாக இருக்க வேண்டும். (பயனாளிகளின் விருப்பத்துக்கேற்ப)ஓலை அல்லது ஆஸ்பெஸ்டாஸ் கூரைகள் அமைக்கப்படக்கூடாது.
வீட்டின் சுவர்கள், செங்கல், இன்டர்லாக் பிரிக், ஏஏசி பிளாக் உள்ளிட்டவற்றால் கட்டப்பட்டிருக்க வேண்டும் மண்ணால் கட்டப்படும் சுவர்கள் கூடாது ஒவ்வொரு வீட்டிற்கும் யூனிட் காஸ்ட் உதவியாக ஒருங்கிணைக்கும் தொகையும் சேர்த்து ரூ.3.50 லட்சம் வழங்கப்படும்.
கிராம ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர், உள்ளிட்டோர் அடங்கிய குழு இத்திட்டத்திற்கு தகுதியான பயனாளியை தேர்வு செய்ய வேண்டும்
மலைப்பாங்கான பகுதிகளில் பயனாளிகளின் விருப்பப்படி கூரை அமைக்கலாம். இந்த பணம் மொத்தம் 4 பிரிவுகளாக பயனாளிகளின் வங்கி கணக்குக்கே நேரடியாக அனுப்பி வைக்கப்படும்.
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் படி வீடு கட்ட கட்டுமான பொருட்களுக்கான சிமெண்ட் மற்றும் கம்பி வழங்கப்படும். ரூ.3 லட்சத்து 10 ஆயிரத்தை நிதியாகவும், மீதம் 40 ஆயிரத்திற்கு கட்டுமான பொருட்களாகவும் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.