சிறீநகர், டிச.3- மசூதிகளை ஆய்வு செய்ய ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதற்கு தேசிய மாநாட்டுக் கட்சியின் காஷ்மீர் மாகாண தலைவர் சவுகத் மிர் தனது கவலையையும், கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பல இடங்களில் மசூதிக்கு அடியில் கோயில் இருப்பதாகவும், அங்கு கள ஆய்வு நடத்த வேண்டும் என பலர் மனு தாக்கல் செய்து வருகின்றனர். உத்தரப் பிரதேசத்தின் சம்பலில் ஜாமா மசூதியில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி கள ஆய்வு நடத்த சென்றபோது கலவரம் ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இது போன்ற மனுக்கள் நாடு முழுவதும் தாக்கல் செய்யப்படுவதற்கு தேசிய மாநாட்டு கட்சியின் காஷ்மீர் மாகாண தலைவர் சவுகத் மிர் கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மசூதிகள் இருக்கும் இடத்தில் கள ஆய்வு செய்ய வேண்டும் என மனுக்கள் குவிவது ஆழ்ந்த கவலையளிக்கிறது. இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால், அவர்கள் நாட்டின் அமைதியை சீர்குலைப்பர். அஜ்மீரில் உள்ள காஜா மொயின் உத்தின் சிஸ்தி முசுலிம்களின் புனித தலமாக உள்ளது. அது ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மையின் அடையாளமாக உள்ளது. அங்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானோர் வருகின்றனர்.
அஜ்மீர் தர்காவின் பின்னணியை கருத்தில் கொள்ளாமல், அங்கு ஆய்வு நடத்தப்பட வேண்டும் என சமீபத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பழைய மசூதிகள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை சிலர் இடிப்பது நாட்டில் பிரிவினையை விதைக்கும் முயற்சி.
தர்காவை முசுலிம் ஆட்சியாளர்கள் மட்டும் கட்டவில்லை. இந்து அரசர்கள் பலர், தர்காக்கள் கட்ட தங்கள் பங்களிப்பை அளித்துள்ளனர். அஜ்மீரின் வரலாறு, பாரம்பரியம் தெரியாத சிலர், கவனத்தை ஈர்ப்பதற்காக தர்காவின் கீழ் கோயில் உள்ளதாக பொய் மனுக்களை தாக்கல் செய்கின்றனர். ஆதாரமற்ற இந்த மனுக்களை நீதிமன்றம் பரிசீலிப்பது வருத்தம் அளிக்கிறது. நமது நாட்டின் மதநல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சிக்கு எதிராக நாங்கள் துணை நிற்போம். புனித தலங்களின் புனிதத்தையும், பாரம்பரியத்தையும் நாம் பாதுகாக்க வேண்டும். ஆதாரமற்ற கோரிக்கைகள், பிரிவினை நடவடிக்கைகள், நமது சமூகத்தை சீர்குலைக்க அனுமதிக்கக் கூடாது.
1991ஆம் ஆண்டு வழிபாட்டு தலங்கள் சட்டத்தின் படி, வழிபாட்டுத் தலங்களில் எந்த மாற்றத்தையும் சந்தேகத்திற்கு இடமின்றி தடைசெய்கிறது. 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி நாடு சுதந்திரம் பெற்றபோது, வழிபாட்டுத் தலங்கள் எப்படி இருந்ததோ, அதை அப்படியே பாதுகாக்க வேண்டும் என வழிபாட்டு தலங்கள் சட்டத்தின் 4ஆவது பிரிவு கூறுகிறது. ராம் ஜன்மபூமி வழக்கில் கூட, மத நல்லிணக்கம், நாட்டின் பன்முக பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. இவ்வாறு சவுகத் மிர் கூறியுள்ளார்.
இணைய வழியாக இலவசமாக
ஆதார் அட்டையை திருத்தி கொள்ளலாம்!
இறுதி நாள் டிசம்பர் 14
புதுடில்லி, டிச.3- அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்டங்களை பெறுவதில் ஆதார் அட்டை மிக முக்கிய பங்கை வகிக்கிறது. மேலும், இந்திய குடிமக்கள் என்ற அடையாளத்தை இந்த ஆதார் அட்டை நமக்கு அளிக்கிறது. எனவே, ஆதார் அட்டையில் ஏதேனும் பிழை இருந்தால், உடனடியாக மாற்ற வேண்டியது கட்டாயமாகும். அந்த வகையில், பெயர், முகவரி, பிறந்த தேதி, அலைபேசி எண் இணைத்தல் போன்றவற்றை இலவசமாக இணையம் மூலம் பதிவேற்றம் செய்வதற்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வரும் டிசம்பர் 14ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கியுள்ளது.
அதாவது, ஆதார் கார்டில் உங்கள் பெயரை 2 முறை மட்டுமே மாற்றிக்கொள்ள முடியும். அதற்கு மேல் மாற்ற வேண்டும் என்றால், (UIDAI) ஆணையத்தை அணுக வேண்டும். ஆதார் அட்டையில் குறிப்பிட்ட சில விவரங்களை இணையத்தில் திருத்திக் கொள்ளலாம். ஆனால், பயோமெட்ரிக் சம்பந்தப்பட்ட எதையும் இணையத்தில் திருத்த முடியாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இணையத்தில் ஆதார் அட்டையை பதிவேற்றம் செய்வது எப்படி?
1. முதலில் myaadhaar.uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
2. உங்களுடைய ஆதார் எண் அல்லது ஆதார் அட்டையுடன் இணைந்த அலைபேசி எண்ணை உள்ளிடவும்.
3. இப்போது உங்கள் ஆதார் அட்டை திரையில் காட்டும் , அதில் என்ன திருத்தும் செய்யவேண்டும் அல்லது எதை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பதை பார்த்து சரி செய்யவும்.
4. பின்னர், ஆதார் அட்டைக்கான POA ஆவணத்தை 2 MB-க்கு மிகாமல் JPEG,PNG அல்லது PDF வடிவில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதன் பிறகு, SRN எண் வழங்கப்படும். அதை வைத்து ஆதார் அட்டை புதுப்பித்தது குறித்த நிலையை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.