பி.முருகையன்
அறுபது வருஷத்துக்கு முன்னாடி எங்க கிராமத்துல ஒரு 15 வீடு இருக்கும். அதுல ஒரு மண்பாண்டம் செய்யக்கூடிய வேளார் வீடு குயவர் வீடு. அவங்க வீட்ட சுட்டிக்காட்டும் போது வேளார் வீடு அப்படின்னு தான் சொல்லுவாங்க. அதே மாதிரி மூணு மரமேறி சாணார் வீடுன்னு இருந்தது .ஒரு ஆசாரி வீடு இருந்தது அவங்க இந்த கதவு ஜன்னல் நாற்காலி செய்ற தச்சர் தொழில். எங்க எதிர்த்த வீட்ல ஒரு பத்தர் வீடு இருக்கும். நகை தொழில் செய்பவர் வீடு கொஞ்சம் தள்ளி போனா ஒரு கொல்லர் வீடு.
அவங்க என்னன்னா இந்த அருவாள் கடப்பார இதெல்லாம் செய்ற தொழில்.
அடையாளம்
இப்படி அடையாளப்படுத்தி சொல்லக்கூடிய ஒரு காலகட்டம் இருந்தது. அந்த தெரு கடைசியில் பார்த்தால் ஒரு கோனார் வீடு. அவங்க ஆடு மாடு மேய்த்து பால் கறந்து விப்பாங்க .அது கோனார் வீடு. அப்புறம் பார்த்தீங்கன்னா அந்த தெரு கோடியில் ஒரு வீடு இருக்கும். அது பரியாரி வீடும்பாங்க. அவர் நாவிதர் தொழில் அதாவது முடி வெட்டக்கூடிய தொழில் செய்யக்கூடியவர். அவுங்க வீட்டு மூதாட்டி யார் வீட்டு பிரசவம் என்றாலும் மருத்துவம் பாப்பாங்க; அப்படியே ஆத்துக்கு அக்கரைக்கு போனா வண்ணான் வீடும்பாங்க; சலவை தொழிலாளர்கள் வீடு. .
வடக்கு பக்கமா போனீங்கன்னா ஒரு தனித்தீவு மாதிரி இருக்கும் அப்படியே சுற்றி வயல் இருக்கும். அது நடுவில் பாத்தீங்கன்னா தொம்பன் குடிசைம்பாங்க; அங்க என்னன்னா மூங்கில் பிளாச்சியில் இருந்து கூடை எல்லாம் முடைந்து விப்பாங்க. அது மாதிரி பார்த்தீங்கன்னா இன்னும் ஒரு பக்கம் மூலைல ஒதுங்கி இருப்பது பறையர் தெரும்பாங்க.
அவங்க விவசாய கூலியாக இருப்பாங்க ஆக வண்ணான் வீடு பரியாரி வீடு பறையர் வீடு பண்டாரம் வீடு தொம்பன் வீடு குறவன் வீடு கொசவன் வீடு. அப்ப பார்த்தீங்கன்னா,
இந்த குடும்பங்களை எல்லாம் ஒரு நல்ல ஒரு மரியாதையா கூட அழைக்க மாட்டாங்க ஆசாரி வீடு அந்த வண்ணான் வீடு என்றெல்லாம் அழைக்கிற காலம் எல்லாம் இருந்தது அதுக்கு பிறகு அந்த குயவர் பானை செய்ற ஒரு வீட்டுல ஒரு பையன் அய்டிஅய் முடிச்சிட்டு நம்முடைய தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழகத்தில் வேலை கிடைச்சுது. சாணார் வீட்டில் ஒருத்தர் அய்டிஅய் படிப்பு படிச்சிட்டு அவருக்கு தமிழ்நாடு குடிநீர் வசதி வாரியத்துக்கு வேலைக்கு போனாரு.
அந்த ஆசாரி வீட்டு பையன் ஒருத்தரு பிரஸ் ரிப்போட்டர் ஆனாரு. வண்ணார் வீட்டு பையன் ஒருத்தர் சர்க் கரை ஆலைல தொழிலில் சேர்ந்தார்.
கவுரவம்
அந்த கோனார் வீட்டு பையன் படிச்சு முயன்று ஆசிரியரானார். அதுக்கு பிறகு பார்த்தீங்கன்னா, இந்த குடும்பத்துக்கு எல்லாம் ஒரு கவுரவம் வந்துருச்சு, ஒரு மரியாதை வந்துருச்சு, அவங்க வீடெல்லாம் பொருளாதாரத்தில் முன்னேற ஆரம்பிச்சிருச்சு.
இதிலிருந்து என்ன தெரியுதுன்னா தன்னுடைய குலத்தொழிலை தன்னுடைய பிள்ளைகள் செய்யறத விட நம்ம புள்ளைங்களும் படிச்சு இன்ஜினியர் ஆகணும், டாக்டர் ஆகணும், ஆசிரியர் ஆகணும், இப்படி அய்ஏஎஸ் ஆகணும், அய்பிஎஸ் ஆகணும் அப்படிங்கற ஆசை வந்து இந்த தொழில் செய்கிறவர்களுக்கும் வரத்தானே செய்யும் செருப்பு தைக்கிறவங்களா இருந்தாலும் சரி தன்னுடைய குழந்தைகள் தன்னை மாதிரி வராமல் தனக்கு மேல பெரிய பதவிக்கு வரணும் என்று ஆசைப்படுற காலம் எல்லாம் தோன்றி அது இன்றைக்கு சமூக நீதி என்கிற ஆட்சி நடை பெறுகிற இந்த திராவிட மாடல் ஆட்சியில அந்த முன்னேற்றம் நம் கண்ணால் பார்க்கிறோம்.
ஒரு 70 வருஷத்துக்கு முன்னாடி ராஜாஜி அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது குலக் கல்வி திட்டம்னு ஒரு திட்டத்தை கொண்டு வந்தார்.
அந்த திட்டத்தின்படி அரை நாள் படிக்கணும் பிள்ளைங்க போய் அரை நாள் அந்த குடும்பத்தோட அந்த குடும்பத்தில் உள்ளவங்க பரம்பரை தொழிலை கற்றுக் கொடுப்பாங்க அப்படின்னு சொன்னாரு அதுக்கு தான் தொழிற்கல்வித் திட்டம் அப்படின்னு ஒரு திட்டமுன்னு பேர் வச்சாரு.
அதாவது அதுக்கு பிறகு பார்த்தீங்கன்னா அதை தந்தை பெரியார் போன்ற திராவிட கட்சிகள் எல்லாம் கொள்கை உடைய கட்சிகள் எல்லாம் அதை எதிர்த்து போராடின. ஒழிஞ்சுது குலக்கல்வித் திட்டம். அதன் பிறகு காமராஜர் அவர்களும் அந்த திட்டத்தை எதிர்த்து அதற்குப் பிறகு நிறைய பள்ளிக்கூடங்கள் வந்து புள்ளைங்க படிக்கணும் அப்படின்னு ஒரு முறையே கொண்டு வந்தார்.
முன்னேற்றம்
எதற்கு இதை குறிப்பிடுகிறேன் என்று சொன்னால் அதற்குப் பிறகுதான் எல்லா சமுதாயத்தில் உள்ள பிள்ளைகளும் முன்னேற்றத்தை கண்டார்கள் அந்த ஜாதி மத வேறுபாடு இல்லாமல் முன்னேறினார்கள் என்றால் இந்த சமூக நீதி திராவிட ஆட்சி காரணம் என்று சொல்லலாம் இது ஒழுங்கா தான் போயிட்டு இருக்குது. ஆடு மேய்கிறவர் வீட்டு பிள்ளை எல்லாம் அய்ஏஎஸ் ஆகிறார்கள் என்றெல்லாம் செய்தித்தாளில் வருகிறபோதும் மகிழ்ச்சியாக இருந்தது.
ஆனால், நம்முடைய ஒன்றிய அரசு பிரதமர் மோடி அவர்கள் 2023 சுதந்திர நாள்ல ஒரு திட்டம் அறிவிச்சாரு அது விஸ்வகர்மா பிரைம் மினிஸ்டர் விஸ்வகர்மா ஸ்கீம் அதாவது பிரதம மந்திரி விஸ்வகர்மா திட்டம்.
அதாவது எப்படின்னு கேட்டீங்கன்னா,
அந்தந்த தொழில் செய்றவங்களுக்கு நிதி உதவி அதுக்கு 13,000 கோடி நிதி ஒதுக்குகிறோம், அந்த நிதியை வந்து அவர்கள் அந்த கருவிகள் வாங்கிக் கொள்ளவும் அந்த ரெண்டு லட்ச ரூபா குறைந்த வட்டியில் கடன் கொடுப்போம். இந்தப் பணம் எல்லாம் பெற்று அவர்கள் சுய தொழிலை செய்யலாம், அந்தந்த பஞ்சாயத்துத் தலைவர்கள் அந்த குலத்தொழில் செய்பவர்களை தேர்ந்தெடுப் பார்கள்.
விஷ இனிப்பு
அந்த குலத்தொழில் குரு சிஷ்ய முறையில அந்த குடும்பத்திலேயே கற்றுக் கொடுப்பாங்க அப்படி எல்லாம் சொல்லிட்டு ஒரு திட்டத்தை அறிவித்தார்கள்
இது கிட்டத்தட்ட எப்படின்னா குலக்கல்வி திட்டம் மாதிரிதான் குரு-சிஷ்யர் முறையில அந்த வீட்ல அந்த பெற்றோர்கள் அவங்களுடைய குலத் தொழிலை பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுப்பார்கள். கற்றுக் கொடுத்தால் அதற்கான நிதி உதவி கிடைக்கும் குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும், உபகரணங்கள் கிடைக்கும். அவர்களை முன்னேற்றுவதற்காகவும் இந்த கிராமிய கைத் தொழில்களையும், கலைப் படைப்புகளையும், கலாச்சாரத்தையும் உலகளவில் கொண்டு போறதுக்குன்னு சொல்லிட்டு திட்டம்னு சொன்னாங்க.
எல்லாம் சரிதாங்க. ஆனால் இதை ஆய்வு செய் வதற்காக தமிழ்நாட்டில் ஒரு குழு நியமிக்கப்பட்டது.
எல்லோருக்கும்
மாண்புமிகு நம்முடைய திராவிட ஆட்சி யினுடைய முதலமைச்சர் நம்முடைய தளபதி அவர்கள் இந்தக் குழுவை அமைச்சாங்க. இந்த குழு பரிந்துரை செய்த போது என்ன சொன்னாங்கன்னா இதை ஜாதி அடிப்படையில் வேண்டாம். இது வந்து யாராயிருந்தாலும் சரி இந்த 18 தொழில் பட்டியலில் சொல்லி இருக்கிற படகு கட்டுபவர், பூ கட்டுவது, மாலை கட்டுவோர், கருமாரி மண்பாண்டம் செய்வோர் போன்ற இந்த 18 தொழில்களையும் யார் செஞ்சாலும் அவர்களுக்கு இந்த உதவி செய்யலாம். ஏனென்றால் ஒரு காலத்தில் எனக்கு தெரிஞ்சீங்க இந்த பனை ஏறி சாணான் என்பவர்கள்தான் தென்னை மரத்தில் ஏறி கள், பதநீர் இறக்குவாங்க. இந்த கலை அவங்களுக்கு மட்டுமே தெரிந்த கதை என்று சொல்லுவாங்க.
பரம்பரையா?
ஆனால், அதற்குப் பிறகு எனக்கு தெரிஞ்ச பனைமரத்தில் பதநீர் இறக்குவதும் இந்த கள் இருந்த காலத்தில் கள் இறக்குவதும் தெரிந்தவர்களாக எல்லா ஜாதியைச் சேர்ந்தவர்களுமே செஞ்சாங்க.
அதனால இந்த ஜாதிக்கு இந்த தொழில் என்பது இல்லாம இன்னைக்கு எனக்கு தெரிஞ்சு தச்சுத் தொழிலை ஒரு பிற ஜாதிக்காரர் தச்சர் தொழில் படித்து அந்த விஸ்வகர்மா அல்லாத ஒருத்தர் இந்த தொழிலை செய்து இன்னைக்கு உயர்ந்த வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
மரம் ஏறும் தொழிலை பரம்பரையாகக் கொண்டிருந்த ஒருவர் மகன் இன்று சிற்ப வேலையில் மிக அற்புதமாக பெயரும் புகழும் பெற்று பல மாநிலங்களுக்கும் சென்று சிற்பங்கள் செய்து வருகிறார்..
ஆகவே, ஜாதி அடிப்படையில் இல்லாமல் கிராமத்துல கைவினைக் கலைஞர்களை ஊக்கு விக்கும் முறையில் அவர்களுக்கு இந்த திட்டத்தைக் கொண்டு வரலாம் அப்படின்னு சொல்லிட்டு இந்த குழு பரிந்துரைத்தது மிக அருமையான பரிந்துரை.
திராவிட ஆட்சி
எப்போதுமே, ஏண்டா அதை தமிழ்நாட்டில் மட்டும்தான் அப்படி சிந்திக்கிறாங்கன்னா…
இது திராவிட ஆட்சி கிட்டத்தட்ட நீதி கட்சி காலத்தில் இருந்து சீர்திருத்தம் கொண்டு வந்த ஒரு மாநிலம் தமிழ்நாட்டில் இந்த தமிழ் மாநிலத்தில்தான் தந்தை பெரியார் போன்றவர்கள் எல்லாம் தோன்றியிருக்கிறார்கள்.
ஆகவே, இவர்கள் சித்தாந்த அடிப்படையில் சிந்தித்து ஒரு குழு நியமித்து குழுவினுடைய பரிந்துரை அடிப்படையில கை வினைக் கலை ஞர்களையெல்லாம் ஊக்குவிக்கின்ற வகையில் ஜாதியை எடுத்துவிட்டு யார் கைவினைக் கலை ஞர்களாக இருந்தாலும் அவர்களுக்கு இந்த உதவியை செய்யலாம்.
கைவினைக் கலைஞர்களை அந்தந்த கிராமத்தினுடைய கிராம நிர்வாக அலுவலரே தேர்ந்தெடுப்பார் என்றெல்லாம் தமிழ்நாடு முதலமைச் சர் ஒன்றிய குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகத்தின் உடைய அமைச்சருக்கு கடிதம் எழுதியும்,
அதைப்பற்றி கவலைப்படாது ஒன்றிய அரசு ஸநாதனத்தை போற்றி பாதுகாக்கும் வகையிலும், ஜாதி வேறுபாட்டை களைய மனம் இல்லாமலும், மறைமுகமாக விஸ்வகர்மா திட்டம் என்கிற ஒரு திட்டத்தின் மூலமாக ஜாதி பிரிவினையை ஊக்குவிக்கிறது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
சிறந்த பரிந்துரை
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
என்ற வள்ளுவத்தின் வாய் மொழிக்கு ஏற்ப, ஜாதி அடிப்படையில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் கலை நுணுக்கம் கலை அம்சம் கொண்ட கைவினைக் கலைஞர்களின் முன்னேற்றத்திற்காக இத்திட்டத்தை பயன்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு பரிந்துரைத்தது சாலச் சிறந்த பரிந்துரையாகும்.
ஒன்றிய அரசு உணர்ந்து கொள்ளுமா?
அல்லது
திராவிட சித்தாந்தம் என்பதாலேயே எதிர்க்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.