சென்னை, டிச. 3- சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் நேற்று (2.12.2024) மாலை நடந்த நிகழ்வில், அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த 1,200 செவிலியர்களுக்கு நிரந்தர பணிக்கான ஆணை மற்றும் கரோனா காலத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட 963 செவிலியர்களுக்கு ஒப்பந்த அடிப்படையிலான பணிக்கான ஆணைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண் தம்புராஜ், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் செல்வவிநாயகம், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் ராஜமூர்த்தி, கூடுதல் இயக்குநர் சித்ரா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இந்நிகழ்வில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும்போது, “திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை சுகாதாரத்துறையில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் என மருத்துவத் துறையில் மொத்தம் 20,440 பேருக்கு வெளிப்படையான கலந்தாய்வு நடத்தப்பட்டு, பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன” என்றார்.