ஆசிரியர் அவர்கள் சுமந்துவரும் பொறுப்புகள் பன்மைத்துவம் வாய்ந்தவை. பத்திரிகை ஆசிரியராக, ஒரு சமூக இயக்கத்தின் தலைவராக, பல்வேறு அமைப்புகளின் நிறுவனராக, நிர்வாகியாக, புரவலராக, சட்டத்துறை வல்லுநராக என்று எப்போது எந்தப் பணியில் ஈடுபடுகின்றாரோ அதனை அதன் பொறுப்புணர்ந்து ஆற்றுவதில் வல்லவர் என்பதை அனைவரும் அறிவர். அவற்றுக்காகப் பலரையும் சந்திக்கிறார்; பல இடங்களுக்கும் பயணப்படுகிறார்; ஒவ்வொரு தரப்பாரிடமும் உரையாடுகிறார்; அதற்கான அரங்குகளில் உரையாற்றுகிறார். ஒன்றை மற்றொன்று இடையீடு செய்யாத அளவுக்கு ஒவ்வொன்றிலும் அவரது கவனம் இருக்கும்; ஆழம் இருக்கும்; வியக்க வைக்கும் அறிவாற்றல் வெளிப்படும்.
அவருடைய தனித்திறன்களை, சிறப்பியல்புகளை, சாதனைகளை, பண்பு நலன்களை வியந்து பார்க்கும் நம்மில் பலருக்கும் கூட, அவரது ஆற்றலின் உண்மையான விரிந்த பரப்பு தெரியாது என்றே சொல்லவேண்டும்.
“நவீன இந்தியாவை உருவாக்கியவர்கள்” (Makers of Modern India) என்ற தலைப்பில் வரலாற்றாளர் ராமச்சந்திரகுகா தொகுத்த புத்தகத்தில் இடம் பெற்றிருந்த 19 ஆளுமைகளில் தென்னிந்தியாவில் இருந்து ஒரே ஒரு சமுதாய சீர்திருத்தவாதி மட்டுமே இடம் பெற்றார். அவர் தந்தை பெரியார்! தான் அந்த மாமனிதர்களை தேர்ந்தெடுத்ததற்கு என்ன அளவுகோல் என்று குறிப்பிடும்போது, ‘‘அவர்கள் சுயசிந்தனையாளர்களாக சமூக மாற்றத்திற்கு உழைத்தவர்களாக, இலக்கியத்தரம் வாய்ந்த எழுத்துக்குச் சொந்தக்காரர்களாக இருக்க வேண்டும் என்று கருதினேன்” என்றார். தந்தை பெரியாரைப் பற்றி கூடுதலாகக் கூறும்போது, “பெரியார் ஈ.வெ.ராமசாமி, சுயசிந்தனையால் மட்டுமல்ல; அதனைத் தானே பரப்புரை செய்தவர் என்பதுடன், அதற்காகத் தனக்குப் பின்னும் செயல்படக்கூடிய வகையில் ஓர் அமைப்பை உருவாக்கிய அமைப்பாளர் (organiser)” என்றார்.
ஒரு சமூக சீர்திருத்த இயக்கம், நீடித்து நிலைக்கும் வகையில் அமைப்புகளை, நிறுவனங்களை உருவாக்கியதென்பது மிகக் கடினமான ஒன்றாகும். அந்தச் சாதனையைத் தந்தை பெரியாரைத் தொடர்ந்து திறம்பட ஆற்றுபவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் – இயக்கமானாலும் சரி – கல்வி அமைப்புகளானாலும் சரி!
ஆசிரியர் அய்யா அவர்களின் முக்கிய பரிமாணங்களுள் ஒன்று கல்வியாளர் என்பது. தானும் கற்றுத் தெளிந்தவர் என்பதுடன், சமூகநீதி, பாலியல் நீதிப் பார்வையில் கல்வி நிறுவனங்களை உருவாக்கி வெற்றிகரமாக நடத்தியும் வருபவர். அதன் அடிப்படையில் பல உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணங்களை ஆசிரியர் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் அண்மையில், கடந்த அக்டோபர் மாதத்தில் புகழ்பெற்ற மணிபால் கல்வி நிறுவனங்களைப் பார்வையிடுவதற்காகச் சென்றிருந்தார். புதுமைகளைத் தேடும் அவரது ஆர்வம் இன்னொரு முறை புலப்பட்டது.
கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டத்தில் உள்ள சிறிய புறநகர்ப் பகுதிதான் மணிபால். 1953இல் அங்கு மருத்துவர் டி.எம்.எ.பை என்பவரால் தொடங்கப்பட்ட கஸ்தூரிபாய் மருத்துவக் கல்லூரிதான் முதல் நிறுவனம். இன்று அது உலகளாவிய அளவில் 50 கல்விநிறுவனங்களை உருவாக்கி நடத்தி வரும் பெரிய நிறுவனமாகும். அந்நிறுவனத்தைப் பற்றிக் கூறியிருந்த திராவிடர் கழக வழக்குரைஞரணித் தலைவர் வழக்குரைஞர் த.வீரசேகரன் அவர்களின் முன்னெடுப்பில், அதிகாரப்பூர்வமான எந்த முன்னறிவிப்பும் இன்றி, மிக இயல்பாகப் பார்த்து வருவதற்கான பயணமாகத் தான் மணிபால் சென்றார் ஆசிரியர்.
ஆனால், தங்கள் நிறுவனத்திற்கு வருபவர் பல கல்வி நிறுவனங்களின் நிறுவனரும், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் என்னும் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தரும் ஆயிற்றே! அவரை அவருக்குரிய மதிப்புடன் வரவேற்க வேண்டாமா என்று கருதிய அந் நிறுவனம், எதிர்பாராத வகையில் சிறப்பான வரவேற்பை வழங்கியது.
மணிபால் உயர்கல்வி நிறுவனம் (Manipal Academy of Higher Education – MAHE) என்ற பெயரிலான அம் மாபெரும் நிறுவனத்தின் தலைவராக நிர்வாகப் பொறுப்பை ஏற்று நடத்திவரும் இணைவேந்தர் டாக்டர் ஹெச்.எஸ்.பல்லால் அவர்கள் முன்னின்று வரவேற்றார். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் லெப்டினண்ட் ஜெனரல் டாக்டர் எம்.டி.வெங்கடேஷ், இணை துணை வேந்தர்கள் டாக்டர் நாராயண சபாஹித், டாக்டர் சரத் கே.ராவ், பதிவாளர் டாக்டர் பி.கிரிராஜ் கினி, தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் ரவிராஜ் உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.
மணிபால் நிறுவனம் குறித்து டாக்டர் ஹெச்.எஸ்.பல்லால் எடுத்துரைத்து, பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் என்னும் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் கி.வீரமணியின் வருகையைப் பெரிதுவந்து பேசினார். மணிபால் நிறுவனம் குறித்த அறிமுகத்தினை மூத்த கல்வியாளர்கள் வழங்கினர். அவர்களின் வரவேற்புக்கு நன்றி தெரிவித்து, டாக்டர் கி.வீரமணி அவர்கள் பேசும்போது, “அதிகாரப்பூர்வமாக எவ்விதத் தகவலும் அளிக்காமல், பொதுவான நபராக ஒரு கல்வி நிறுவனத்தைப் பார்வையிடப் போகிறோம் என்ற மனநிலையில் தான் இங்கு வந்தேன். எனினும் உங்கள் வரவேற்பு என்னை நெகிழச் செய்கிறது. அனைத்து மக்களுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்பதே தந்தை பெரியாரின் நோக்கம். அதற்காகவே, மக்கள் பல்கலைக்கழகமாக மக்களின் பங்களிப்புடன் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. அத்தகைய பணியைச் செய்து வரும் மூத்த நிறுவனமான மணிபால் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்திருப்பது மகிழ்ச்சியானது. இந்தத் தொடர்பு மேலும் வலுப்பெறட்டும்” என்று கூறியதுடன், பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் சிறப்புகளையும், மேனாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்கள் தனது “டார்கெட் 3 பில்லியன்” புத்தகத்தில் நமது பல்கலைக்கழகத்தையும், அதன் பெரியார் புரா திட்டத்தையும் பற்றி எழுதியிருப்பதையும் எடுத்துக் காட்டினார். கிராமப் புறங்களுக்கு வளர்ச்சியைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற டாக்டர் அப்துல்கலாம் அவர்களின் கனவை, தந்தை பெரியார் பல்லாண்டுகளுக்கு முன்பே பேசியிருப்பதையும், அதைச் செயல்படுத்திவந்த பெரியார் மணியம்மை கல்வி நிறுவனத்தின் செயல்களைக் கண்டு வியந்து, பெரியார் புரா என்று அதற்குப் பெயரிட்டதையும் தெரிவித்தபோது, அக் கல்வியாளர்கள் பெரிதும் மகிழ்ந்தனர்.
தொடர்ந்து மாஹே-வின் வளர்ச்சிகளையும், புதுமைகளையும் காட்சிப்படுத்தியுள்ள புதுமை அரங்கம், பல்லடுக்கு நூலகம், விளையாட்டுப் பயிற்சிக் கூடம், மருத்துவ மாணவர்களுக்கான பயிற்சிக் கூடம், அதில் மனித உடலை உருவகப்படுத்தி ஆய்வுக்குட்படுத்தும் மய்யம் (Simulation Centre) ஆகியவற்றைச் சென்று பார்வையிட்டார். அதன் பேராசிரியர்கள், பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடினார். புதிய அறிவியல், மருத்துவ விந்தைகளைக் கண்டு மகிழ்ந்தார்; கேள்வியெழுப்பினார்; முக்கியமான செய்திகளைத் தன் குறிப்பேட்டில் குறித்துக் கொண்டார்.
உடன் வீ.மோகனா அம்மையார், வழக்குரைஞர் த.வீரசேகரன், டாக்டர் வசந்தி, வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், டாக்டர் வீ.விஜயசேகரன், பல நிறுவனங்களின் ஆலோசகராகவும் நிர்வாகியாகவும் செயலாற்றும் ஆற்றலாளரான மணி ஆகியோரும் சென்றிருந்தனர்.
இத்தனை வயதில் இவ்வளவு ஆர்வத்துடன் செய்திகளை அறிந்துகொள்ளும் ஆசிரியர் அவர்களின் பண்பு அக்கல்வி நிறுவனத்துப் பெருமக்களை வியக்கச் செய்தது. ஓய்வென்று ஒரு நாளும் இல்லை; புதியன கற்பதும், பழையன கடப்பதும் அன்றாடச் செயல்கள் அவருக்கென்பதை மீண்டும் உறுதி செய்து கொள்ள முடிந்தது.
தொகுப்பு: ச.பிரின்சு என்னாரெசு பெரியார்