19.8.1973 தஞ்சை மாநகரில் கோலாகலமாகக் குதூகலப் பெருநாள் திருநாள்! பெரியதோர் ஊர்வலத்தில், யானை முன் செல்ல கருஞ்சட்டையினர் அணிவகுத்து முழக்கமிட்டுப் பின்தொடர அழகு ஒளி உமிழத் தஞ்சையின் தனிச் சிறப்புப் புகழ் வாய்ந்த முத்துப் பல்லக்கில் பெரியாரும், ஆசிரியர் கி.வீரமணியும் அமர்ந்து வந்த பவனி. பின்னர் திலகர் திடலில் மக்கள் வெள்ளத்தினிடையே மகத்தான பொதுக்கூட்டம்.
தஞ்சை மாவட்டக் கூட்ட மெனினும், மாநிலச் சிறப்புப் பொருந்தியதாகையால் ஆசிரியர் கி.வீரமணி வரவேற்கட்டும் எனத் தோலி ஆர்.சுப்ரமணியம் உரைத்திட, வரவேற்புரை நிகழ்த்தினார் “விடுதலை” ஆசிரியரும், கார் நிதி அமைப்பாளருமான கி.வீரமணி. அவர் கேட்டதோ ஒரு லட்சம்.
ஆனால், திரண்டதோ ஒன்றரை லட்சத்திற்கும் மேல்! மீதி 50 ஆயிரம் ரூபாய் தந்தை பெரியாரிடம் நிதியாக வழங்கப்பட்டது. 10 ஆயிரம் ரூபாய் பெரியார் அறக்கட்டளைச் சொற்பொழிவுக்காகத் தரப்பட்டது.
பெரியார்பால் கரிசனமிக்க மருத்துவ நிபுணர்களான டாக்டர்கள் கே.ராமச்சந்திரா. பட். ஜான்சன் ஆகியோருக்கு மாலை அணி விக்கப்பட்டது. தானியங்கிக் கடிகாரம் (ஆட்டோமேட்டிக்) ஒன்றை விழாக்குழுச் சார்பில் அமைச்சர் மன்னை நாராயணசாமி பெரியாரிடம் தந்தார். ஒரு டேப் ரிக்கார்டர், தங்கத்தாலான கார் சாவி ஆகியவற்றைப் பெரியாரிடம் தந்து, பொன்னாடையும் போர்த்தினார் முதலமைச்சர் கலைஞர்.
ஏர்கண்டிஷன் செய்யப்பட்டு, வேனில் இருந்தவாறே பேசுவதற்கு ஏற்ற முறையில் இந்த வேனை அமைத்தவர்கள்
எல்.ஜி.பாலகிருஷ்ணன் கம்பெனியார். விழாவில் ஆசிரியர் கி.வீரமணிக்கு மோதிரமும், ஓவியர் கருணாவுக்கு நல்லாடையும் பெரியாரால் அணிவிக்கப்பட்டன.
வெடி முழக்கங்கள் விண்ணை எட்டின. “பெரியார் வாழ்க! கலைஞர் வாழ்க! கடவுள் இல்லை” என்ற எழுத்துகள் மத்தாப்பூவாய் எரிந்து ஒளி வீசின!