நமது வீரவணக்கம்
திருச்சி நாகம்மையார் குழந்தைகள் விடுதியிலேயே அதன் ஒரு பகுதிபோல், நீண்ட காலம் இருந்த பாலா (வயது 84) என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட எங்கள் அருமைச் செல்வங்களில் ஒருவர் இன்று (2.12.2024) காலை மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறோம்.
ஒவ்வொரு முறையும் திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்திற்குச் செல்லும் போதெல்லாம் ‘நாகம்மை குழந்தைகள்’ இல்லத்தில் நம் பிள்ளைகளைக் கண்டு உரையாடி நலம் விசாரித்துத் திரும்பும்போது, பாலாவை அழைத்து வரச் சொல்லியோ அல்லது அவரே தானாக வந்தோ, “‘Good Morning’ அண்ணா! அக்கா எங்கே என்று கேட்டு, ஏன் அடிக்கடி வர மாட்டேங்கிறீர்கள்?’’ என்று பாசமொழிகளால் பேசி மகிழ்ந்த அவரின் பாசக் குரலை இனி நாங்கள் யாரும் கேட்க முடியாது என்று எண்ணுகிறபோது, துயரம் எங்களுக்கெல்லாம் தொடர் தாக்குலைத் தருகிறது.
மிகப் பெரிய வசதி படைத்த குடும்பம் அவர் பிறந்த குடும்பம். ஏராளமான சகோதரிகள் – எப்படியோ நொடித்து விட்டது என்பதால் 1962ஆம் ஆண்டில் அவர்களை எல்லாம் அய்யா, அம்மா பாராமரிப்பில் விட்டார்கள் – சிறு குழந்தைகள் என்ற பருவத்தில். வளர்ந்து பெரியவர்களானபின் திருமணத்தையும் அவர்களுக்கு அன்னையார் நடத்தி வைத்து, வாழ்வளித்து வைத்ததும் ஒரு வரலாறு. உடல்நலக் குறைவிலும் நினைவு தவறாதவராக பாலா இருந்து மறைந்தார்.
எங்கள் திருச்சி மாளிகை மறுவாழ்வு இல்லத்து வளர் பருவத்தின் வார்ப்புகள் இப்படி ஒன்றன்பின் ஒன்றாக மறைவது நமக்கு சொல்லொண்ணா வேதனைதான் – என்றாலும் தவிர்க்க முடியாததைத் தாங்கித்தானே ஆக வேண்டும்?
வற்றாத பாசமும், வறளாத அன்பு நெஞ்சமும் – இப்படி இனியும் காண முடியுமோ!
நமது இரங்கலும், வீர வணக்கமும்!
உற்ற சகோதரன்,
கி. வீரமணி
சென்னை
2.12.2024
பாலா மகளுக்கும் நாம்தான் திருமணம் செய்து வைத்தோம். அந்த பெண் அமலாமணிக்கு ‘அண்ணாதுரை’ என்ற வாழ்விணையர் – சென்னையில் உள்ளனர்.