1944ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் நாள் அதிகாலை நேரம். கடலுார் திருப்பாதிரிப் புலியூரில் சத்திரம் ஒன்றில் அந்தச் சிறுவனோடு பெரியார் முன் நின்றார் ஏ.பி. ஜனார்த்தனம். “இந்தப் பையன், நம்ம திராவிட மணி தயாரிப்பு. அருமையாக மேடையில் பேசுகிறான்” என்று பதினோரு வயது சிறுவனாக, பெரியாருக்கு அறிமுகமானவர் தான் கி. வீரமணி.
கடலுாரில் இரண்டாம் வகுப்பு படிக்கும்போது,. பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், ராஜா வேடத்தில் சிறுவன் வீரமணியின் பேச்சைக் கேட்டு அதிசயித்த ஆசிரியர் திராவிட மணி, அதன் பிறகு அந்தச் சிறுவனுக்கு பேச்சுக் கலையை மேலும் தீவிரமாகக் கற்று கொடுக்கத் தொடங்கினார். பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கையில் ஈடுபாடு கொண்ட திராவிட மணி, அந்தச் சிறுவனுக்கும் பகுத்தறிவு பற்றி பாடம் எடுக்கத் தொடங்கினார். எழுதிக் கொடுத்து அதை மனப்பாடம் செய்யச் சொல்லி மேடையில் பேச வைத்து அழகு பார்த்தார். வார விடுமுறை நாட்களில், தான் செல்லும் பகுத்தறிவுக் கூட்டங்களுக்கு வீரமணியையும் உடன் அழைத்துச் செல்வார் திராவிடமணி. சிறுவன் மீது அதீத பிரியம் வைத்திருந்த ஆசிரியர் திராவிட மணி, சிறுவனின் இயற்பெயரான சாரங்கபாணி என்ற பெயரை வீரமணி என்று மாற்றினார். திராவிட மணியின் ஊக்கத்தில் பத்து வயதிலேயே பகுத்தறிவுக் கொள்கைகளை மேடைகளில் பட்டையைக் கிளப்பினார் வீரமணி.
தந்தை பெரியாரிடம் அறிமுகம்!
அதன் பிறகுதான் பெரியாரிடம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். கடலூரில் நடைபெற்ற மாவட்ட மாநாட்டில், பெரியார் முன்னிலையில் பேசினார். அதே மாநாட்டில் திராவிட இயக்கத்தின் தளபதியாக பவனிவந்த அண்ணாவும் கலந்து கொண்டார். அந்த மாநாட்டில், சிறுவன் வீரமணியின் பேச்சை ரசித்துக் கேட்ட அண்ணா, அதற்கு அடுத்து பேச எழுத்தார். தனது பேச்சை சிறுவனின் பேச்சில் இருந்தே துவக்கினார். “இங்கு பேசிய சிறுவன் காதிலே குண்டலம், நெற்றியிலே நீறு, கழுத்திலே ருத்ராட்சம் அணிந்து பேசியிருந்தால், இவரை இந்தக்கால ஞானப்பால் குடித்த திருஞானசம்பந்தராக ஆக்கியிருப்பார்கள்; இவர் பேசியதிலிருந்து இவர் உண்டதெல்லாம் ஞானப்பால் அல்ல. பெரியாரின் பகுத்தறிவுப் பால்தான்” என்று குறிப்பிட்டார். திராவிட இயக்கத்தின் திருஞானசம்பந்தர் என்ற பெயரை அவருக்கு முதலில் வழங்கியவர் அறிஞர் அண்ணாதான்.
சேலம் மாநாட்டில்…
ஆசிரியர் திராவிட மணி தனது மாணவனாக இருந்த வீரமணிக்கு, தொடர்ந்து ஊக்கம் தந்து, ‘திராவிட நாடு’, ‘குடிஅரசு’, ‘விடுதலை’ போன்ற பத்திரிகைகள் படிக்கச் சொல்லி வற்புறுத்துவார்.
அண்ணாவின் உரையும், பெரியாரின் பகுத்தறிவும் பிஞ்சு வயதிலேயே வீரமணியின் நெஞ்சில் ஆழப் பதிந்தது. 1944ஆம் ஆண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க சேலம் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில்தான் திராவிடர் கழகம் பிறந்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு தீர்மானங்கள் இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. பதினோரு வயது சிறுவனாக இருந்த வீரமணி, அம்மாநாட்டில் பேச வைக்கப்பட்டார். இதுதான் இன்றுவரை திராவிடர் கழகத்தை அவரால் உயிர்ப்புடன் கொண்டு செல்வதற்கு அடிப்படையாக அமைந்தது. அதன்பிறகு, முழுநேர இயக்கப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டே சிதம்பரம் பல்கலைக்கழகத்தில் ஹானர்ஸ் படிப்பில் தங்கப் பதக்கம் வாங்கினார். அதன்பிறகு வழக்குரைஞர் பட்டம் பெற்று சிறிதுகாலம் வழக்குரைஞர் பணியையும் பார்த்து வந்தார்.
முழு நேரப் பணி
ஒரு கட்டத்தில் பெரியாருடன் முழு நேரம் இருக்கத் துவங்கினார். 1959ஆம் ஆண்டு பெரியார் காரில் இந்தியா முழுவதும் 4,000 கி.மீ சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 1960ஆம் ஆண்டு திருச்சியில் கூடிய திராவிடர் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் வீரமணி பொதுச்செயலாளர் பொறுப்புக்கு வந்தார். அதன்பிறகு தொடர் சுற்றுப் பயணம், கட்சிக் கூட்டங்கள் என ஏகத்துக்கும் பரபரப்புடன் வலம் வந்தார். பெரியார் செல்ல முடியாத கூட்டங்களுக்கு வீரமணி சென்று வந்தார்.
திராவிடர் கழகத்தின் அதிகாரபூர்வ நாளேடான ‘விடுதலை’ நாளிதழின் ஆசிரியர் குத்தூசி குருசாமி விலகியதும் பெரியார் அந்த நாளேட்டை நிறுத்தும் முடிவுக்கு வந்தார். இயந்திரத்தையும், இடத்தையும் பலர் வாடகைக்கு கேட்டு வந்தார்கள். திடீர் என பெரியார் நினைவில் வீரமணி வர, தந்தை பெரியார், வீரமணியை அழைத்து, “விடுதலை நாளேட்டின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும்” கேட்டுக்கொண்டார். ஆசிரியர் வீரமணி அதன் பிறகு வாழ்விணையரோடு சென்னைக்கு வந்தார். அன்றுமுதல் இன்றுவரை ‘விடுதலை’ இதழில் எழுதிக் கொண்டிருக்கிறார். அதோடு, ‘உண்மை’, ‘பெரியார் பிஞ்சு’, ‘தி மாடர்ன் ரேஷனலிஸ்ட்’ என்ற இதழ்களுக்கும் ஆசிரியராக உள்ளார். எழுத்தும், பேச்சும் சிறுவயதிலேயே இவர் வசம் வந்தது. பெரியார் அறக்கட்டளை சார்பில் கல்வி நிறுவனங்கள் ஆரம்பித்து, அவை இன்று கல்விக் குழுமங்களாக வளர்ந்து நிற்கின்றன. பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் (நிகர்நிலை)வேந்தராகவும் உள்ளார். பத்து வயதில் பகுத்தறிவு மேடைகளில் பேசத் துவங்கிய இந்தக் குரல், இன்றும் ஆற்றல் வாய்ந்த சமூகநீதிக்கான முழக்கத்தை ஒலித்துக் கொண்டிருக்கிறது.
– சரவணா ராசேந்திரன்