திராவிடர் கழகத் தலைவர் – தமிழர் தலைவர் – ‘விடுதலை’ ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் பிறந்த நாள் இந்நாள்! (2.12.1933).
அகவை 92இல் இவரின் பொது வாழ்வு 82 ஆண்டு என்ற விகிதாசாரம் வேறு யாருக்கும் கிடைத்திராத பெரும் பேறாகும்.
அதுவும் தந்தை பெரியாரின் அடிச்சுவட்டைப் பின்பற்றி கடைசி வரை இத்தனை ஆண்டுகள் அப்பழுக்கின்றித் தொடர்ந்தவர் – தொண்டாற்றியவர் என்ற சிறப்பும் தமிழ் நாட்டு வரலாற்று மணி மகுடத்தில் கண் சிமிட்டுகிறது.
90 ஆண்டு ‘விடுதலை’க்கு 62 ஆண்டு கால ஆசிரியர் என்ப தும் உலக அளவில் இவருக்கே உரித்தான சாதனைச் சிகரமாகும்.
தந்தை பெரியார் வாழ்ந்த காலத்திலேயே திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளராகவும், ‘விடுதலை’ ஏட்டின் ஆசிரியராகவும் அறிவிக்கப்பட்டவர்.
‘‘சுயநலமில்லாது எந்தவித பொருள் ஊதியத்தையும் கருதாமல், பொதுத் தொண்டு செய்ய ஒருவர் வந்தார் என்றால் இதுபோல மற்ற ஒருவர் வந்தார், வருகிறார், வரக் கூடும் என்று உவமை சொல்லக் கூடாத ஒரு மாபெரும் காரியம் என்றே சொல்ல வேண்டும்’’ (‘விடுதலை’ 7.6.1964) என்று தந்தை பெரியார் கணித்து எடை போட்டுச் சொன்னது என்பது நமது தலைவர் ஆசிரியருக்கல்லால், வேறு யாருக்கும் இத்தகைய உளப்பூர்வமான பாராட்டும், மதிப்பும் கிடைத்திலது.
தந்தை பெரியார் தம்மீது நம்பிக்கை வைத்து எழுதிய ஒவ்வொரு சொல்லுக்கும், எந்த வகையிலும் ஊறு ஏற்படக் கூடாது என்ற எண்ணமும், செயலும் அவரை உறுதியாக ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கக் கட்டளையிட்டு விட்டது.
அவருக்குத் தேதி தெரியுமே தவிர கிழமை தெரியாது என்கிற அளவுக்கு ‘‘எம்பணி பெரியார் தொண்டுப் பணி செய்து கிடப்பதே’’ என்று கண்ணிமைக்காமல் கண்ணியத்துடன் 92 வயதிலும் ஓயாது உழைத்த வண்ணமே உள்ளார்.
இவ்வளவுக்கும் அவரது உடலில், உறுப்பில் மருத்துவ ரீதியாக கத்திப்படாத இடம் இல்லை என்று சொல்லும் அளவுக்கு உடல் நலப் பாதிப்புக் குறுக்கிட்டாலும் அவற் றையும் சந்தித்து, கழகக் களப்பணி, பிரச்சாரப் பணி, கல்விப் பணி, சிறைவாசம் என்று பூமிக்கிரகம் சதா சுற்றிக் கொண்டு இருப்பதுபோல் சுழலுகிறார் – சுற்றி உள்ளவர்களையும் கைப்பிடித்துச் சுழல விடுகிறார்.
திராவிடர் கழகம் ஆற்றும் பணி, மேற்கொள்ளும் பிரச்சாரம் என்பது சமூகப் புரட்சிக்கானது என்று மேம்போக்காகச் சொல்லப்பட்டாலும், அவையே அரசியலையும் தூய்மைப்படுத்தி, நாட்டுக்கான சரியான – தேவையான ஆட்சியை நிலை நிறுத்துவதற்குக் காரணியான உந்து சக்தியாக இருக்கிறது என்பதுதான் – ஊன்றிச் சிந்திப்பவர்களுக்குப் புலப்படாமல் போகாது.
தேர்தல் நேரத்தில் மட்டுமல்ல – எல்லாக் கால கட்டத்திலும் மக்களைச் சந்திப்பதும், பிரச்சார (மேடை, இதழ்கள், நூல்கள்) மழையைப் பொழிந்து கொண்டே ஆசிரியரும் இயக்கமும் இருப்பதும் தான் இதற்கான காரணமும் விளைச்சலுமாகும்.
தந்தை பெரியாரை உலகமயமாக்குவோம், உலகத்தைப் பெரியார் மயமாக்குவதுமான அவரின் கருத்து வெற்றுச் சொற்கள் அல்ல – அதற்கான அத்தனைப் பணிகளையும் அறிவியல் நோக்கில் உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்.
எடுத்துக்காட்டு பெரியார் பன்னாட்டு மய்யம்; தமிழ்நாடு அரசு தந்தை பெரியார் அவர்களின் படைப்புகளை 21 மொழிகளில் கொண்டு வருவதும் இந்த வகையில் பெரு வாய்ப்பும், அருந்துணையுமாகும்.
நூல்களை வெளியிடுவது என்பது ஓர் இயக்கமாகவே நடைபெற்று வருகின்றது. கழகம் மாநாட்டில் மட்டுமல்ல, சாதாரணமாக நடக்கும் பொதுக் கூட்ட மேடைகளிலும் நூல் வெளியீட்டு விழா என்பதை இயக்கத்தின் ஓர் அங்கமாகவே ஆக்கி விட்டார் ஆசிரியர் பெருந்தகையவர்கள்.
தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர் விருது’, பன்னாடுகளிலும், நிறுவனங்களிலும் வழங்கப்படும் ‘‘வாழ் நாள் சாதனையாளர்’’ விருதுகளும்,அவர்தம் தொண்டுக்குக் கிடைத்த அங்கீகாரங்களாகும்.
அரசியலிலும் அவர் கணிக்கும் தொலைநோக்குப் பார்வை மிக மிக முக்கியமானது; அதனால்தான் ஆர்.எஸ்.எஸ். அதனைச் சார்ந்த பிஜேபி போன்ற பிற்போக்கு அமைப்புகள் சேற்றைவாரி இறைத்தாலும் (அவை எதிர்பார்க்கப்படுவதுதான்) ஒரு பிரச்சினையில் திராவிடர் கழகத் தலைவரின் கருத்து என்ன? ‘விடுதலை’ என்ன எழுதுகிறது என்பதைக் கூர்மையாகக் கவனிக்கிறார்கள்.
தலைவர் ஆசிரியரின் தொலைநோக்குச் சிந்தனைக்கு ஒரு எடுத்துக்காட்டுப் போதுமானதாகும்.
35 ஆண்டுகளுக்கு முன் அவர் கொடுத்த எச்சரிக்கை மணி ஓசைதான் இது!
‘ஆர்.எஸ்.எஸ். நச்சு மரத்தின் வேர் ஒரு பக்கம் பரவி சமுதாயத்தை அழிப்பதற்குள் அதை அடையாளம் காட்டியாக வேண்டும். நமது அரசியல் கட்சித் தலைவர்கள் இது குறித்து வாளாயிருந்தால், மதவெறித்தனம் கொடி கட்டிப் பறந்து அரசியல் கட்சிகளுக்குப் பதில் மதவெறிக் கட்சிகளே ஆளும் நிலையை அவர்களது வோட்டு வங்கி மூலம் உருவாக்கும் ஆபத்து வரும் என்பதை உணரட்டும்!’ (தந்தை பெரியார் பிறந்த நாள் ‘விடுதலை மலர்’ 17.9.1989).
35 ஆண்டுகளுக்குமுன் திராவிடர் கழகத் தலைவர் தொலைநோக்கோடு சொன்னதை, அரசியல் அமைப்புகள் அக் கறையோடு கவனித்திருந்தால் – இப்பொழுது ஏற்பட்டிருக்கும் அவலம் நேர்ந்திருக்குமா – பாசிசம் தலைதூக்கி இருக்குமா என்பதைச் சிந்திக்க வேண்டும்.
வெறும் அரசியல் ரீதியாக மட்டும் மேம்போக்காக ஆர்.எஸ்.எஸ்., பிஜேபி மற்றும் சங்பரிவார்களின் போக்கை விமர்சிக்காமல் அதன் சித்தாந்த வேரில் கருத்து வெடிகுண்டை வீசி வருவது திராவிடர் கழகம் என்பது யாருக்குத்தான் தெரியாது?
பல தலைவர்களைத் தன் வயப்படுத்தும் சங்பரிவார்க் கும்பல் தந்தை பெரியாரிடம் நெருங்க அச்சப்படுவது ஏன்?
இங்குதான் தந்தை பெரியாரோடு மட்டுமல்ல; தொடர்ச்சி யாக அவர் கண்ட இயக்கத்திற்கு – தந்தை பெரியார் மறைவுக் குப்பின் தலைமையேற்ற நமது அருமைத் தலைவர் அன்னை மணியமமையார், ஆசிரியர் மானமிகு கி. வீரமணி ஆகியோரின் தனித் தன்மையான வழிகாட்டுதல்களே அடிப்படையான காரணங்கள் ஆகும்.
நமது பணிக்கு ஓய்வில்லை; தலைவர் ஆசிரியர் தலைமையில் முன்னிலும் வேகமாகப் பயணிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
அந்த வகையில் வெறும் இயக்கம் சார்ந்து மட்டுமல்ல; ஒட்டு மொத்தமான நமது இனத்தின் சார்பாகவும், உலகெங்கும் வாழும் மானுடநேயர்கள் பகுத்தறிவாளர்கள் சார்பாகவும் 92ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் தலைவருக்கு வாழ்த்துகளைக் குவிக்கிறோம். ‘‘வீரமணி வென்றிடுக! – வெற்றி மணி ஒலித்திடுக!’’ என்ற முத்தமிழ் அறிஞர் கலைஞர் வாழ்த்தையும் இணைத்திடுவோம்!