முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
சென்னை, டிச.2 தந்தை பெரியாரின் கொள்கை வழிச் சீர்மிகு சீடர் ஆசிரியர் அவர்களுக்குப் பிறந்த நாள் பரிசாக கோவையில் உருவாக்கப்பட உள்ள நூலகம் மற்றும் அறிவியல் மய்யத்திற்குத் தந்தை பெரியார் பெயரினை சூட்டிட உள்ளோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92 ஆம் ஆண்டு பிறந்த நாளுக்கு முதலமைச்சர் அவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அவ்வாழ்த்தின் விவரம் வருமாறு:
திராவிட இயக்கத்தின் வழிகாட்டும் ஒளிவிளக்கு!
திராவிட இயக்கத்தின் வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ்ந்து வரும் தனித்துவமான தலைவரும், பகுத்தறிவு, சமூகநீதி மற்றும் சமத்துவம் ஆகிய கொள்கைகளைத் தாங்கி வரும் அயர்விலா நாயகருமான ஆசிரியர்
கி.வீரமணி அய்யா அவர்களின் 92 ஆம் ஆண்டு பிறந்த நாளில் போற்றி மகிழ்கிறோம்!
ஜாதி அடிப்படையிலான அடக்குமுறைகளையும், மதம் சார்ந்த மூடநம்பிக்கைகளையும் ஒழித்திட துணிச்சலுடன் போராடியவர் தந்தை பெரியார் ஆவார். அவர்தம் கொள்கைகளுக்கு சிறுவயதிலேயே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் ஆசிரியர் அவர்கள். திராவிடர் கழகத்தின் தலைவர், தொடர்ந்து பொது வெளி செயல்பாட்டின்மூலம் அனைவரும் சமத்துவ நிலையினை அடைந்திட – சமூகத்தை அதிகாரமயப்படுத்திட, மனிதநேயம் மற்றும் பகுத்தறிவுச் சிந்தனைகளைப் பரப்பிடுவதில் வலுவான பணியினை வடிவமைத்து வழங்கி வருகிறார்.
தமிழ்ச் சமூகத்தினருக்கும், ‘திராவிட மாடல்’ ஆட்சியின் அடிப்படைக் கொள்கைகளுக்கும் அளவு கோலை நிர்ணயித்து, வருங்காலத் தலைமுறையின ருக்கும் பயன்படும் வகையில், அரிய பணியினை ஆற்றி வருகிறார்.
நம்மை அங்கீகரித்தும், பாதுகாத்தும் வருகிறார்
தமது குறிப்பிடத்தக்க வயதுமிகுந்த நிலையிலும், எளிதில் நம்ப இயலாத ஆற்றலையும், அர்ப்பணிப்பி னையும் இயல்பாகக் கொண்டு சுறுசுறுப்புடன் ஆசிரியர் அவர்கள், சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு, நாமெல்லாம் ஊக்கம் கொள்ளத்தக்க வகையில், சமுதாயப் பணி புரிந்து வருகிறார். 2024 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக அவர் ஆற்றிய உற்சாகம் ஊட்டிடும் பிரச்சாரங்களை அன்புப் பெருக்குடன் நினைவு கூர்கிறோம். ‘திராவிட மாடல்’ ஆட்சியின் உறுதிமிக்க ஆதரவாளரான ஆசிரியர் அவர்கள், இந்த ஆட்சிபற்றிய அடிப்படையில்லாத விமர்சனங்களை எதிர்த்து, அவரது மதிப்பிட முடியாத கருத்துகளால் நம்மை அங்கீகரித்தும், பாதுகாத்தும் வருகிறார்.
ஆசிரியர் அவர்களுக்குப் பிறந்த நாள் பரிசு!
இத்தகைய பெருந்தகைக்குத் தமிழ்நாடு அரசின் உயரிய ‘தகைசால் தமிழர் விருதினை‘ வழங்கியது நமக்குப் பெருமையும், நினைவில் நிலைத்திருக்கும் நிகழ்வுமாகும். தந்தை பெரியாரின் கொள்கை வழிச் சீர்மிகு சீடர் ஆசிரியர் அவர்களுக்குப் பிறந்த நாள் பரிசாக ஒன்றை அறிவிக்க விரும்புகிறேன். கோவையில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட உள்ள நூலகம் மற்றும் அறிவியல் மய்யத்திற்குத் தந்தை பெரியார் பெயரினை சூட்டிட உள்ளோம்.
தந்தை பெரியாரின் பெயரைச் சூட்டுவதே ஆசிரியர் அய்யா அவர்களுக்கு நாம் அளித்திடும் பிறந்த நாள் பரிசு. இந்தப் பரிசினை ஆசிரியர் அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுகிறோம்.
நல்ல உடல்நலத்துடன், நீண்ட நாள் வாழ்ந்து மானுடத்திற்குத் தமது சீரிய சமுதாயப் பார்வையுடன், திடமான அர்ப்பணிப்புடன் பல தலைமுறையினருக்கும் ஊக்கமளித்துத் தொடர்ந்து பணியாற்றிட ஆசிரியர் அய்யா அவர்களை வாழ்த்துகிறோம்!
– இவ்வாறு தனது வாழ்த்துக் கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.